கவிதை காண் காதை (பாதாள பைரவி)

0
76
கணேஷ் பாபு

எதிர் வீட்டில் இன்றும் கூட்டம் கூடி இருந்தது. இப்போதெல்லாம் இதுபோல அடிக்கடி நடந்து விடுகிறது. விஜயா அத்தையின் மகள் ராணி மீண்டும் தற்கொலைக்கு முயன்றுவிட்டாள். இம்முறை எலி மருந்தை உட்கொண்டு விட்டிருந்தாள். ஆட்கள் பரபரப்பாக இங்கும் அங்குமாக நடமாடிக்கொண்டிருந்தனர். தெருநாய்களின் கண்களில் கூட வழக்கத்தை மீறியதொரு கதிமாற்றம் தெரிந்தது. தெருப்பெண்கள் எல்லோருக்கும் அடுத்த சில நாட்கள் பேசுவதற்கான சுவாரஸ்யமான விஷயமொன்று கிடைத்திருப்பதால் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு ராணியின் வீட்டின்முன் கூடியிருந்தனர். இதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட கிழவிகளின் கூட்டம் ஒன்று, கைகளைக் கோர்த்து ஒப்பாரி வைத்து அழத் துவங்கியிருந்தது. அதுவரை சங்கடத்தால் குன்றிப்போய் நின்றிருந்த ராணியின் அப்பா, அடுப்பெறிக்க வைத்திருந்த தென்னை மட்டையை ஓங்கி தரையில் அடித்து, “இப்ப என்ன இங்க எழவா விழுந்திருச்சு, சும்மா வந்து ஒப்பாரி வக்கிறீக, எந்திருச்சு போறீங்களா இல்லயாம்மா?” என்று ஆங்காரமாகக் கேட்கவும், கிழவிகள் கூட்டம் சட்டெனக் கலைந்தது. தெருப்பெண்களும் சிறிது நேரத்தில் இடத்தைக் காலி செய்து போயினர்.

வீட்டினுள் இருந்த கயிற்றுக் கட்டிலில் ராணி அக்கா படுத்திருந்தாள். களைப்பாக இருந்தாலும் உள்ளுக்குள் அவள் எரிந்துகொண்டிருப்பது வெளியே தெரிந்தது. எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே கல்லூரியில் இருந்து வெளியேறிய சம்பத் டாக்டர் ஏதோவொரு ஊசியை ராணி அக்காவின் கையில் குத்திக்கொண்டிருந்தார். சம்பத் டாக்டரின் கதை தனியாகச் சொல்லப்படவேண்டியது. படிப்பைப் பாதியில் நிறுத்தியிருந்தாலும், காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண வியாதிகளைக் குணப்படுத்துமளவிற்கான மருத்துவத்தை ஞாபகம் வைத்திருந்தார். தெருவாசிகள் உடல்நலமற்றிருக்கும்போது அவர்கள் வீட்டுக்கே வந்து ஊசி போட்டு மாத்திரைகள் எழுதிக்கொடுப்பார். எந்த நேரம் கூப்பிட்டாலும் உடனே வந்துவிடுவார். கொடுப்பதை வாங்கிக்கொள்வார். அதிர்ஷ்டவசமாக அவர் கொடுக்கும் மருந்து வேலை செய்தது. கைராசிக்காரர் என்றும் அழைக்கப்பட்டார். உண்மைக்கும் போலிக்கும் இடையில் மெல்லிய கோடு வரைந்தார் போல ஊருக்குள் வலம் வந்துகொண்டிருந்தார். அவரது கையெழுத்து கூட மெய்யான டக்டருடையது போலத்தான் இருக்கும்.  ஒன்றும் புரியாது.

விஜயா அத்தை அழுதழுது முகம் வீங்கிக் கிடந்தார்கள். கட்டிய வீடு கண் முன் சிதைவது போல, பார்த்துப் பார்த்து உருவாக்கிய மகளது வாழ்க்கை உருக்குலைந்து கொண்டே வருவதை அவளால் பார்க்கச் சகிக்கவில்லை. பக்கத்து ஊரில்தான் ராணியைக் கட்டிக்கொடுத்திருந்தார்கள். கணவன் லாரி ஓட்டிக்கொண்டிருந்தான். மணவாழ்க்கை இனிக்கவில்லை. ஏதோவொரு மெல்லிய இடைவெளி அவர்களுக்குள் உருவாகிவிட்டது. அந்த இடைவெளிக்குள் விதி விளையாடியபடி இருக்கிறது. மணவாழ்க்கையில் உப்பைப் போல இருக்கவேண்டிய ஊடல், அவர்கள் இருவருக்கும் இடையே பெரியதொரு உப்பளமாக உருமாறிவிட்டது.  கணவனிடம் சண்டைபோட்டு அம்மா வீட்டிற்கு அடிக்கடி வந்துவிடுவாள் ராணி அக்கா. அடுத்த சில நாட்களில், அவளது கணவன் தர்ம சங்கடமான முகத்துடன் அவளை அழைத்துப் போக வருவான். முதல் சில நிமிடங்கள் வீட்டில் பெருங்கூச்சல் கேட்கும். பின் மெல்ல அடங்கிவிடும். மறுநாள் மாலை தலைநிறைய மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு, மெல்லிய புன்னகையுடன், ராணி அக்கா, கணவனோடு செல்லும் காட்சியைக் காண இயலும். ஆனால், அதற்கடுத்த மாதமே, ராணி அக்கா மீண்டும் தனது அம்மா வீட்டிற்குத் திரும்பிவிடுவார். மறுபடியும் அவளது கணவன் வந்து அழைத்துப் போவான். காரணங்கள் மாறியபடியும் காட்சி மட்டும் மாறாதபடியும் இது நிகழ்ந்துகொண்டிருந்தது.

காலப்போக்கில், சண்டைகளின் வீரியம் அதிகரித்தபடியே சென்றது. இப்போதெல்லாம், அம்மா வீட்டிற்கு வந்துவிடும் ராணி அக்காவை அழைத்துப் போக அவளது கணவன் வருவதில்லை. விஜயா அத்தைதான் வலுக்கட்டாயமாக தனது மகளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துப் போகிறாள். கடந்த முறை வீட்டில் எல்லோரும் கோயிலுக்குப் போயிருந்த வேளையில், ராணி அக்கா தூக்கில் தொங்க முயற்சித்தாள். உத்தரத்தில் சரியாக சேலையை மாட்டாததாலோ அல்லது உடலின் அதிக எடை காரணமாகவோ, முயற்சி பிசகிப் போய் கீழே விழுந்து மயங்கிக் கிடந்தாள். கோயிலில் இருந்து திரும்பிய விஜயா அத்தையும் அவளது கணவரும் அவள் கிடந்த கோலத்தைப் பார்த்துக் கதறியபடி ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அதற்கு அடுத்த நாளே ராணி அக்காவின் கணவன் ஓடோடி வந்து அவளை அழைத்துப் போனான். ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த ராணி அக்காவிடம், “ஏன் அடிக்கடி சண்டை போட்டு வீட்டுக்கு வந்திர்ற?” என்று அம்மா கேட்டபோது, “ஏன்னு தெரியலக்கா, உண்மையிலேயே காரணம்னு பெரிசா ஒண்ணும் இல்ல, மனசு ஒட்ட மாட்டேங்குது. ரெண்டு பேருமே சண்டை போடுறதுக்கு எப்பவும் தயாரா இருக்கோம். காரணம் எதுவும் இல்லன்னாலும் இப்படித்தான் சண்டை போட்டுட்டே இருப்போம்” என்றாள். அம்மா அவளைத் தனியே அழைத்துப் போய் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இது நடந்து சில வாரங்களிலேயே மீண்டும் இப்போது எலி மருந்தை உட்கொண்டு விட்டிருக்கிறாள். ஆனால், இம்முறை அவளது கணவன் அவளை அழைத்துப் போக வரவில்லை, விஜயா அத்தையும் தன் மகளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துப் போகவில்லை. மாறாக, தாயும் மகளும் தினமும் கோயிலுக்குப் போனார்கள். ஜோசியம் சொல்பவர்களைத் தேடி அவர்கள் சொன்ன பரிகாரங்களை ஒவ்வொன்றாகச் செய்தார்கள். ஏதோ கெட்ட ஆவி தனது மகளைப் பீடித்திருக்கிறது என்று நம்பிய விஜயா அத்தை, அவளை அருகில் இருந்த பள்ளிவாசலில் மந்திரிக்க அழைத்துப் போனாள். ஆனால், இப்படியே விட்டால் நிரந்தரமானதொரு பிரிவு ஏற்பட்டு விடும் என்று பயந்து போன இரு வீட்டுப் பெரியவர்களும் ஒரு நாள் கூடிப்பேசியதன் விளைவாக, ராணி அக்காவின் கணவன் அவளை மீண்டும் அழைத்துப் போனான். ஆனாலும், எவருக்கும் நம்பிக்கையில்லை, மீண்டும் சில நாட்களில் ராணி அக்கா திரும்ப வந்துவிடுவாள் என்று தெருவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

காலம் ஒரு மிகச்சிறந்த ரசவாதி. எந்த துக்கத்தையும் சரிசெய்யும் வல்லமை அதற்கு இருக்கிறது. ராணி அக்கா தனது அம்மா வீட்டுக்குத் திரும்ப வரவில்லை. விஜயா அத்தையும் அவளது கணவரும் சந்தோசமாகக் காணப்பட்டார்கள். தெருவில் சிலருக்கு சந்தோசமாகவும், பலருக்கு ஏமாற்றமாகவும் இருந்தது. சரி, ஒருவழியாக ராணி தனது கணவனுடன் இணக்கமாக வாழத் துவங்கியிருக்கிறாள் என்று நாங்கள் நம்பினோம். காலமாற்றத்தில், நாங்களும் வீடு மாற்றிக்கொண்டு வேறு தெருவுக்குப் போய்விட்டோம். சில வருடங்கள் கழிந்து, ராணி அக்காவையும் அவளது கணவரையும் ஒரு தீபாவளி நாளில், கோயிலில் பார்த்தோம். ராணி அக்கா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். துயரத்தின் ரேகைகளை அவளது முகத்தில் பார்க்க முடியவில்லை. இம்முறை அவளது கரங்களில் ஒரு குழந்தை இருந்தது. அம்மாவைப் பார்த்ததும் ஓடோடி வந்து கைகளைப் பற்றிக் கொண்டாள். “சண்ட சச்சரவில்லாம இருக்கீங்கல்ல”? என்று அம்மா கேட்கவும், “சந்தோசமா இருக்கோங்க்கா, கொழந்த வந்ததில இருந்து, எல்லாம் நல்லபடியா மாறிருச்சுக்கா, தெய்வமே கொழந்தையாப் பொறந்து எங்கள ஒண்ணு சேத்துருச்சுக்கா, இவன் பொறந்ததுல இருந்து அவரு சுத்தமா மாறிப் போயிட்டாருக்கா. நானுமே மாறிட்டேன்கா. இவன சுத்தியே எங்க வாழ்க்க இப்ப நகந்துகிட்டிருக்கு” என்றாள். “சந்தோசம்மா, உங்க மனசுல இருந்த இருட்ட இவன் தொரத்திட்டான்” என்று சொல்லியபடியே குழந்தையை வாங்கிக் கொஞ்சினார் அம்மா.

கண்டராதித்தனின் இந்தக் கவிதையை வாசித்தேன்.

வாரச்சந்தைக்கு காய்கறி

வாங்க வந்த பெண்ணிற்கு

நான்கைந்து பிள்ளைகள்

நாலும் நாலுதிசையை

வாங்கித்தர கைகாட்டின

அவள் கைக்குழந்தைக்கு

பொரியுருண்டை வாங்கித்தந்தாள்

பொடிசுகள் பின்னேவர

பொரியுருண்டை கீழே விழுந்து

பாதாளத்தில் உருண்டது

ஏமாந்த குடும்பம் எட்டிப் பார்க்க

பாதாள பைரவி மேலெழுந்து

குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி

நல்லசுவை நல்லசுவை என

நன்றி சொன்னது

கண்டராதித்தன்

எப்போதும் இறந்தவர்களின் பின்னே, இறைக்கப்பட்ட பொரியைத் தின்ன வரும் பாதாள பைரவி, முதன்முதலாக ஒரு குழந்தையின் கைப்பட்ட பொரியுருண்டையைத் தின்ன நேர்கிறது. மரணத்தையும், துக்கத்தையும், இழப்பையும், வாதையையுமே கண்டு பழக்கப்பட்ட அந்த தெய்வம் முதன்முதலாக குழந்தையை, வாழ்வை, வாழ்வின் சுவையை அறிந்து கொள்கிறது. வாழ்வின் ருசியை அறிந்து, நல்ல சுவை நல்ல சுவை என்று குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி நன்றி சொல்கிறது.

ராணி அக்காவின் குழந்தையும் அப்படித்தானே, தனது அம்மா மனதில் இருந்த, அப்பா மனதில் இருந்த இருள் ராக்கதனை, ஒரு நொடியில் விரட்டி விட்டதே. பாதாள பைரவிகளே, சற்று ஒதுங்கியிருங்கள். வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் மோசமானதாக இல்லை. இங்கே குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கிறார்கள்.

[email protected]