அதுவொரு மிகப் புராதனமான கட்டிடம்.கரியநிறம் ததும்பும் கடலின் சாயலில் அதன் சுவரடுக்குகள், பார்க்கும் போதே மனஅடுக்குகளில் அலைபோல அடித்துக் கொண்டிருந்தன. சாயலில் அதுவொரு கடல் நகரத்தின் கோட்டை அரண்மனையை ஒத்திருந்தது. தன் கொள்ளை அழகால் கண்களைக் கவர்ந்து கொண்டிருந்த அந்த புராதனக் கட்டிடத்தினுள் ஒரு பேக்கரி இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அதன் வித்தியாசமான புறஅழகு எனக்குள் ஏன் ஒரு மலரைப்போல மலர்கிறது… என யோசனையுடன் எப்போதும் போல் தேவையான பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு காசாளரிடம் பணம் செலுத்த திரும்புகையில் தான் அதைக் கவனித்தேன். திராமிசூ எனும் இத்தாலியன் டெசர்ட்டை என்னை நோக்கி நீட்டியது. உனக்குப் பிடித்ததுதானே சாப்பிடு என்பதுபோல் இருந்தது அதன் செயல். இந்த பேக்கரியில் திராமிசூ கிடைக்கிறது என்பதே பெரிய ஆச்சர்யம். அதைவிட பெரிய ஆச்சர்யம், அங்கு கடலைப்போல ஒரு பெரிய யானை அசைந்தபடி நிற்பது. இத்தனை நாட்களாக இங்கு வந்து போயிக்கொண்டிருக்கும் நான் இப்போதுதான் முதன்முறையாக யானையைப் பார்க்கிறேன்.
யானை தன் துதிக்கையால் என்னை அரவணைத்து கழுத்து, தோள், நெற்றிவகிடில் பதியும் குங்குமப்பாதையென மௌத்ஆர்கனில் ஊதி இசை எழுப்புவதுபோல காற்றில் வளைத்துக் கொண்டு என்னைக் கொஞ்சியது. ”இப்போது மட்டும் என் கண்ணுக்கு தெரிகிறாயே! இவ்வளவு நாட்களாக இந்த புராதனக் கட்டிடத்தில் எங்கிருந்தாய்?” என அதன் முன் நெற்றியை தடவிக் கொடுக்க, கண்களை மூடிக்கொண்டு தலையை ஆட்டி ரசித்தது. ”நேரமாகிறது நான் கிளம்புகிறேன்” என்று சொல்லவும், என்னை விட்டு போகாதே என்பதுபோல் துதிக்கையால் ஒரு சுற்றுச் சுற்றி ஒரு கொடி போல என்னை இறுக அணைத்துக் கொண்டது. அந்தப் பேருருவின் பிடியிலிருந்து இலாவகமாக நழுவி மெல்ல அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டு வெளியேறினேன். இருந்தும் அதன் பிளிறல் என்னைத் தொடர்ந்தது. இன்னதென்று சொல்லத் தெரியாத வினோத இருளெனப் பரவும் யானையின் நினைவுகள் அந்தி வானிலாடுகிறது. பூங்கா, சாலை, தெரு கடந்து வீட்டிற்கு வந்தும் யானையின் நினைவாகவே இருந்ததால் மறுநாளும் அதைப் பார்க்க புராதன கட்டிடத்தின் பேக்கரிக்கு சென்றேன்.
நேற்றைப் போலல்லாமல் இன்று பெரிய கனமான சங்கிலியால் அதன் காலைத் தூணில் கட்டிப் போட்டிருந்தார்கள். தூணிற்கும் வாடிக்கையாளர்கள் நின்று பண்டங்கள் வாங்கும் இடத்திற்குமிடையே பத்தடி தூரம் இடைவெளியும் தடுப்பும் இருந்ததால் நேற்றைப்போல யானையைத் தொட்டுப்பேச முடியவில்லை. அதனாலும் என்னைத் தொட்டுக் கொஞ்ச முடியவில்லை. ஆனாலும் தன் துதிக்கையை நீட்டிக்கொண்டு என்னைத் தொட்டுவிட மாட்டோமா எனத் தவிக்கிறது. நானும் தடுப்பைத் தாண்டி கையை நீட்டி அதைத் தொடமுடியாமல் கதறுகிறேன். யாராவது அதன் காலில் கட்டியிருக்கும் சங்கிலியை கழட்டி விடுங்களேன் என அங்கிருக்கும் எல்லோரையும் பிம்பத்தில் மறைந்திருக்கும் ஒரு மனுசி கெஞ்சுகிறாள்.
புனிதக்கதையில் ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்குமிடையே ஓடும் யுவதிபோல யானையின் கால்சங்கிலியை கழற்றத் தவிக்கும் அவளின் கெஞ்சலை யாரும் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. நான் தவித்துப் பார்க்கிறேன். அந்த பேக்கரியில் அவரவர்கள் அவரவரின் வேலையிலேயே கவனமாக இருந்தார்கள். கண்ணீரும் கதறலும் அங்கிருக்கும் யாரையும் கரைக்கவில்லை. திடீரென பணியாளர்கள் இருவர் வந்து பிம்பத்தில் கதறிய அந்த யுவதியை வலுக்கட்டாயமாக பேக்கரிக்கு வெளியே இழுத்து வருகிறார்கள். ஒருமுறையாவது அதைத் தொட விடுங்கள் போய்விடுகிறேன் என்ற அவளின் கதறலுக்கு மறுமொழியாக வந்த பிளிறலில் அந்தக் கட்டிடமே அதிர்ந்து அதன் பெருஞ்சுவர் ஒன்று சீட்டுக்கட்டுப்போல சரிகிறதைக் கண்டு நான் நடுக்கமுற்ற நேரத்தில்…
தொடர்ந்து அழைத்த அலைபேசி சத்தத்தில் பதறி எழுந்தவளுக்கு, அது அலைபேசி சத்தமா? அல்லது யானையின் பிளிறலால் சுவர் உடைந்து சிதறும் சத்தமா? என்று சிறிது நேரம் குழம்பியது. கண்களின் ஓரம் வழிந்திருந்த கண்ணீரின் ஈரமும்,உடலிலிருந்த அதிர்வும், அருகில் உறக்கத்திலிருக்கும் கணவரும், எது கனவு? எது நிஜம்? என்று புரியாமல் பிரமை பிடித்தவள்போல் அமர்ந்திருந்தேன். திடீரென யோசனை வந்தவளாக கட்டிலருகிலிருந்த அவரின் கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன்
மணி அதிகாலை 5:30 எனக் காட்டியது. சிங்கப்பூர் எண்ணில் மிஸ்டுகால் ஒன்றும் இருந்தது.
ஆக, இந்த அழைப்புதான் யானைக் கனவு அறுபடக் காரணம்.
கனவா அது!?
மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமல்லவா… சிறுவயதிலிருந்து ஒருமுறை கூட இப்படியொரு அசாத்தியமான கனவு வந்ததில்லையே… இன்று மட்டும் ஏன்?… உள்ளுணர்வுதான் கனவாக வரும் என்பார்களே… இந்தக் கனவு எனக்கு எதை உணர்த்துகிறது?
விடை தெரியாத கேள்விகள் தான் எப்போதும் நம்மை சூழ்ந்துள்ளன என எண்ணியபடி எழுந்து முகம் கழுவி, அவருக்கு டீயும் எனக்கு காஃபியும் போட்டு எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தபோது, யாருடனோ அலைபேசியில் பேசி முடித்து வந்தமர்ந்தார்.
”இந்த நேரத்துல யாரது…எதுவும் முக்கியமான விசயமா… ?”
”சிங்கப்பூரிலிருந்து டேவிட் பேசினான்.” டீ குடித்துக் கொண்டு அவர் வெகு சாதாரணமாகவே அந்தச் செய்தியை என்னிடம் சொன்னார். எனக்குதான் குடித்துக் கொண்டிருந்த காபி உள்ளே இறங்கவில்லை.
புக்கிஸ் ஜங்சனில் உள்ள இத்தாலிய உணவகத்தில்தான் முதன்முதலாக நான் கேர்ரியை சந்தித்தேன். கேர்ரியும், கணவரும் அதன் தலைமை சமையல் பொறுப்பில் இருந்தார்கள். ஒவ்வொரு ஞாயிறும் புக்கிஸ் மார்க்கெட்டில் நம்ம ஊரில் உள்ளதுபோல வாரச்சந்தை கூடும். சிங்கப்பூரிலேயே விலை மலிவாக மனதுக்கு நிறைவாகப் பொருட்கள் கிடைக்கும் இடம் என்பதால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் என்று கூட்டத்திற்கு குறைவிருக்காது.
இந்தோனேசியாவின் பாத்தாம் என்ற ஊரிலிருந்து தினமும் சிங்கப்பூருக்கு ஃபேரி எனும் சிறிய வகை கப்பல் போக்குவரத்து இருக்கும். அதில் பாத்தாமைச் சேர்ந்த இந்தோனேசிய வியாபாரிகள் ஒவ்வொரு வாரமும் நடக்கும் புக்கிஸ் சந்தையிலிருந்து பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். போலவே கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா நாடுகளிலிருந்தும் பயணிகள் புக்கிஸ் சந்தைக்கு வந்து செல்வார்கள்.
இரண்டு வயதான மகளை அழைத்துக்கொண்டு புக்கிஸ் மார்க்கெட்டில் ஏதாவது பொருட்கள் வாங்க, சும்மா வேடிக்கை பார்க்க என்று கொஞ்ச நேரம் சுற்றி விட்டு, சாப்பிட அந்த இத்தாலிய உணவகத்திற்கு வந்து விடுவோம். அங்கு வெண்ணெயைப் போன்ற மிருதுவான க்ரீமுக்குள் காபி டிகாஷனில் ஊற வைக்கப்பட்ட ரொட்டி துண்டை நடுவில் வைத்து தயாரிக்கப்படும் ‘திராமிசூ’ எனப்படும் டெசர்ட் மகளுக்கும் ஆலிவ் எண்ணெயில் பூண்டு, மிளகாய், இறால் போட்டு செய்யப்பட்ட பாஸ்தா எனக்கும் விருப்ப உணவுகள். அப்படி ஒருநாள் வரும்போதுதான் உணவகத்தின் உள்ளேயிருந்து எங்களை நோக்கி ஆறடிக்கும் அதிக உயரமும் பருமனும் கொண்ட ஒரு உருவம், வாய்கொள்ளாத சிரிப்புடனும் வெட்கத்துடனும் வந்து ”ஹாய்” என்றது.
“இவர் எங்கள் செஃப் கேர்ரி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார், வேலையில் சேர்ந்து ஒரு வாரமாகுது” என்று எங்களுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார்.
வாரவிடுமுறை நாள் என்பதால் உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும், இவர் தன் வேலையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாதவர் என்பதால்
கேர்ரியை அறிமுகப்படுத்தியவுடனே உள்ளே சென்று வேலையில் மூழ்கி விட்டார். ஆனால் கேர்ரி அந்த இடத்தை விட்டு அகலாமல் தொடர்ந்து எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். எனக்குதான் அவரின் ஆங்கிலம் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. அங்கு சீனர்கள் பேசும் உடைந்த ஆங்கிலத்தைக் கூட புரிந்து கொண்ட எனக்கு இவரின் மொழி புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது.
இரவு நாங்கள் அங்கிருந்து வீட்டிற்கு வந்ததும் கேட்டேன்.
“கேர்ரி பேசுவது ஆங்கிலம்தானே… ஏன் புரிந்துகொள்ள ரொம்ப சிரமமாக இருக்கிறது?”
”தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ்தான் பேசறோம் இருந்தாலும் சென்னைத்தமிழ்,மதுரைத் தமிழ், கொங்கு தமிழ் என்று ஒவ்வொரு வட்டாரத்திலும் பேச்சுவழக்கு வித்தியாசப்படுது இல்லையா?!
அதுபோலத்தான் வெள்ளைக்காரர்கள் எல்லோரும் ஒரே மாதிரி ஆங்கிலம் பேசுவதில்லை. நாட்டிற்கு நாடு வித்தியாசப்படுவதுபோல, ஆஸ்திரேலியா போன்ற ஒரே நாட்டிற்குள்ளேயும் பேச்சுவழக்கு மாறுபடும். கேர்ரி ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். அதனால் அவன் பேசும் ஆங்கிலம் முதலில் கேட்க புரியாமல் இருக்கலாம். தொடர்ந்து அவனிடம் பேசும்போது சுலபமாக புரிந்துகொள்ளலாம்” என்றார்.
அடுத்தடுத்த இயல்பான சந்திப்புகளின் உரையாடலில் கேர்ரியின் மொழி வசப்பட்டது. ஆரம்பத்தில் மகள் கேர்ரியின் பிரமாண்ட உருவத்தைப் பார்த்து மிரண்டாள். நாட்பட ”கேர்ரிய எப்போ பார்க்க போகலாம்” என்று அவளே கேட்குமளவிற்கு பாப்பாவின் நம்பிக்கைக்குரிய நட்பாக மாறினார். எனக்கோ முதன்முதலில் பார்க்கும்போதே கள்ளங்கபடமில்லா அந்தக் கண்களும் முகமும் ஒரு குழந்தையின் விஸ்வரூபம் போல்தான் தோன்றியது. சந்தித்த பல நேரங்களிலும் செயல், பாவனை, மொழி என எல்லாவற்றிலும் கேர்ரி கண்டம் கடந்த ஜீவன்களின் அன்பைப் பெற எடுத்த பலமுயற்சிகளும் அற்புதம் என்றால் சரியாகத்தான் இருக்கும்.மனிதர்களாகிய நாம் அன்பைப் பெறுகிறோம் அன்பை வழங்குகிறோம். அதுவொரு குறுகிய சுற்றுப்பாதையில் சற்றென கடந்துவிட விரும்புகிறோம். ஆண், பெண், மதம், சாதி, வர்க்கம் என எண்ணிலடங்காத வஞ்சகக் கோடுகள் அன்பின் இடையே முளைத்துவிடுகின்றன. கேர்ரி இது எதையும் அறியாத குழந்தையின் மனம் கொண்ட பேருருவம். அதன் நிமித்தமாக பாப்பா குட்டியானை என்று சொல்லும் போது இரகசியமாக நகைத்துக் கொண்டாலும், அந்த நகைப்பிலிருந்தே கள்ளம் கபடமற்ற அன்பின் பிரவாகமாக கேர்ரி உருக்கொண்டிருந்தான். எல்லோரும் இணைந்திருக்கும் பொன்மாலைப் பொழுதுகளில் கேர்ரி அவன் மொழியில் சொல்லிச் செல்லும் விடுகதைகள் ஆனந்த அனுபவமாக இப்போதும் மனசெங்கும் மலர்கிறது. மலர் என்றதும் நான் நினைவு கொள்கிறேன். ஒருமுறை ”நீங்கள் சிரிக்கும்போது பன்னீர் ரோஜா போல இருக்கிறீர்கள்” என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் கேர்ரிக்கு தரையில் கால்பாவவில்லை. ‘ஒரு சொல் ஒரு மனிதனை பறவையாக்கிவிடும்’ என்பதை அன்றுதான் உணர்ந்தேன். உண்மையில் பறந்து பறந்து களைப்புற்ற கேர்ரியின் உச்சபட்ச வெட்கத்தை அன்றுதான் கண்டு ரசித்தேன்.
கேர்ரி அவருடன் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் என்று அனைவர் மீதும் அன்பானவர். தனித்தனியாக அவரிடம் அன்பு இல்லை.பொத்தாம் பொதுவாக அன்பைக் குவித்து வைத்திருந்தவர். அவ்வாறாகவே என் மீதும் குழந்தையின் மீதும் அபரிமிதமான அன்பாக இருந்தார். குரோதம் வன்மமெல்லாம் அந்த மனதிற்கு வெகுதூரத்தில் இருந்தது.
அம்மா,அப்பா,சகோதரர்கள் பற்றி, பள்ளி,கல்லூரி காதல்கள் என என்னைப் பார்த்ததும் பேசவென்றே ஏதாவது கதைகளோடு காத்திருப்பார். பலநேரங்களில் பேச்சு புக்கிஸில் பெருக்கெடுத்த நதிபோல ஓடியது. நதி ஓடினால்தானே அழகு பெறும்.
பேசிக்கொண்டிருக்கும் தருணமொன்றில் ”நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை” என்று கேட்டுவிட்டேன்.
சற்றும் தாமதிக்காமல் ”உன்னைப்போல ஒரு இந்தியப்பெண் கிடைத்தால் சொல் உடனே திருமணம் செய்து கொள்கிறேன். உனக்குத் திருமணமாகிவிட்டது இல்லையென்றால் ஒரு பூங்கொத்துடன் மண்டியிட்டு என்னைத் திருமணம் செய்துகொள் என்று கேட்டிருப்பேன்” என்ற பதிலில் குடித்துக்கொண்டிருந்த கோக் புரையேறியது. நல்லவேளை இதைச் சொல்லும்போது அவர் பக்கத்தில் இல்லை. அவர்களுக்கு இது சகஜமான உரையாடல்தான். ‘மனிதர்கள் மொழியை பிரதேசங்களுக்கொன்றாக நிலை நாட்டியிருக்கிறார்கள். எனவே மனிதர்கள் மெல்ல மெல்ல மொழியில் வன்மம் கொள்கிறார்கள்.’
ஏற்கனவே எங்களைப் பார்த்ததும் கேர்ரி தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு, ஒரு குழந்தையைப்போல் ஆரவாரமாக ஓடிவந்து கிளம்பும்வரை உடனிருந்து உரையாடிவிட்டு செல்வது இவருக்கு மிகுந்த மனக்கடினத்தை கொடுத்தது என்பதை அவரது முகத்திலும், சில நேரங்களில் வார்த்தைகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.
அடுத்து வந்த ஞாயிறில் எதிர்பார்த்தபடி நேரடியாகவே சொல்லிவிட்டார். ”இனி நீ அங்கு வரக்கூடாது, நீ வருவதால் எங்கள் வேலை கெடுகிறது. அவன் வேலை செய்யாமல் என்மேல் இருமடங்கு வேலையை ஏற்றி விடுகிறான். உங்களுக்கு தேவையான உணவை நானே எடுத்து வந்து கொடுத்து விடுகிறேன்.”
தொடர்ந்து மூன்று வார விடுமுறையிலும் புக்கிஸ் பக்கம் செல்லாமல் தோபாயோ,லிட்டில் இந்தியா என்று மகளை அழைத்துக்கொண்டு சென்று வந்தேன். நான்காவது வாரத்தில் லிட்டில் இந்தியாவிலிருந்து நடந்து போகும் தூரத்தில் இருக்கும் புக்கிஸ் எங்களை அழைத்துக் கொண்டது. மூன்று வருட சிங்கப்பூர் வாழ்வில் மனதிற்கு நெருக்கமான பகுதியாக புக்கிஸ் இருந்தது. அதுவும் கேர்ரி வந்தபிறகு அதீதமான அன்போடு அங்கே நமக்கோர் நட்பும் காத்திருக்கிறது என்ற ஆவலும் சேர்ந்து கொண்டது. ஆனால் காலமும், சூழலும், சமூக அமைப்பும் எவ்வளவு குரூரமானது என்பதை, அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த அழகிய மனங்களை உடைக்கும்போது தான் உணர முடிகிறது.
அவர் பணிபுரியும் இத்தாலிய உணவகத்திற்கு செல்லாமல், புக்கிஸ் மார்க்கெட் பக்கம் மட்டும் சுற்றி விட்டு வந்துவிடலாமென கிளம்பினோம். உணவுக்கடைகள் வரிசையில், தாய் அரிசிமாவில் தேங்காயும் சர்க்கரையும் உள்ளே வைத்து நம்ம ஊர் கொழுக்கட்டை போலயிருக்கும் ஒரு பதார்த்தத்தை விற்பார்கள். தூரத்தில் வரும்போதே அதன் வாசம் நாசி நிறைக்கும். அதை வாங்கி உண்டு கொண்டே, பாப்பாவை ஸ்டாலரில் அமர வைத்து தள்ளி கொண்டு வேடிக்கை பார்த்தவாறு நடந்தவளுக்கு, பின்னாலிருந்து ஒரு குரல் பெயர் சொல்லி அழைத்தது. இங்கு நமக்கு தெரிந்தவர்கள் யார் இருக்கப் போகிறார்கள்… என எண்ணியவாறு திரும்பினால் கேர்ரி ஓட்டமும் நடையுமாக மூச்சிரைக்க வந்து கொண்டிருந்தார்.
”இன்று இங்கு நீங்கள் வருவீர்களென என் உள்ளுணர்வு சொல்லியது. அதனால்தான் வெகுநேரமாக இந்த சந்தையை சுற்றிவந்து கொண்டிருக்கிறேன். ஏன் இப்போதெல்லாம் உணவகம் பக்கம் வருவதில்லை…ஒவ்வொரு வாரமும் உங்களிருவருக்கும் ஸ்பெசலாக திராமிசூ செய்து வைத்து காத்திருந்தேன்.
இன்றும் கூட…”
பதில் சொல்ல முடியாமல் சட்டென கலங்கிய கண்களை மறைக்க வேறு பக்கம் பார்த்தேன்.
“என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்தவாரத்தில் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதால் உன்னிடம் நேரில் சொல்லி விடைபெற நினைத்தேன்.”
”எத்தனை நாள் விடுப்பில் செல்கிறீர்கள்… திரும்ப எப்போது வருவீர்கள்…”
”இனி இங்கு வரும் எண்ணமில்லை. சொந்த ஊரில் புதிதாக உணவகம் தொடங்கும் திட்டமிருக்கிறது. அதற்காகவே செல்கிறேன். ஆனால் இந்தியா வருவேன். எனக்காக பெண் பார்த்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாய் அல்லவா…”
சிரித்துக்கொண்டே கண்ணசைத்தவாறு கேர்ரி கேட்க அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த என்னையும் அந்த சிரிப்பு தொற்றிக்கொண்டது.
கேர்ரி, “உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் சொல்…?”
”அதெல்லாம் எதுவும் வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே… அருகிலிருந்த கடைக்குள் நுழைந்து பாப்பாவிற்கு பார்னி பொம்மை வைத்த முதுகுப்பையும், எனக்கு ஒரு கைக்கடிகாரமும் வாங்கி வந்து கொடுத்து, ”என் நினைவாக இந்தப் பொருள் உன்னிடம் இருக்கட்டுமே” என்றவரிடம் மறுக்க முடியவில்லை.
”நானும் உங்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணுமே… என்ன வேண்டும்…”
”நீதான் எனக்கு பெண் பார்த்து தரப் போகிறாயே!! அதை விட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்…” என்றவாறே வெட்கத்தில் சிவந்த கேர்ரியின் முகம் எனக்கு பன்னீர் ரோஜாவாக காட்சியளித்தது. கேர்ரி உண்மையில் அவருக்கு ஒரு இந்திய பெண்ணை நான் கண்டுபிடித்துக் கொடுப்பேன் என நம்பியிருக்கிறார். நம்மிடம் எத்தனைச் சொற்கள் வேடிக்கையாகக் கிடக்கின்றன.
புக்கிஸ் ஜங்சனுக்குள் நுழையும்வரை பத்து முறையாவது திரும்பிப் பார்த்து கையசைத்துச் சென்ற கேர்ரியை அன்றுதான் கடைசியாகப் பார்த்தது. பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன.
அதிகாலையில் கணவருக்கு வந்த அலைபேசி அழைப்பின் செய்தி, காலத்தை சிறிது நேரம் பின்னோக்கி நகர்த்தி விட்டது.
இப்போதெல்லாம் எந்த மரணச்செய்தியை கேட்டாலும் சாதாரண செய்தியாகவே கடந்து போகிறேன். எல்லா மரணங்களும் நம்மை பாதிப்பதில்லை. அபூர்வமாக சில மரணங்கள் நம் அகத்தை அசைத்துப் பார்த்துவிடுகின்றன.
மனம் நிலையில்லாமல் தவித்திருக்க, காட்சிகள் மறுபடியும் மறுபடியும் நகரும் நிலைப்பில் எவ்வளவு நேரம் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன் எனத் தெரியவில்லை. வருத்தங்கள் இந்த வாழ்வு முழுவதும் இருக்கின்றன. தனித்தனியாக எதைச் சொல்ல…நேற்றைய வருத்தங்களை இன்றைய வருத்தங்கள் கொண்டு நிரப்புகிறோம். காட்சிகள் மெல்ல மெல்லக் கரைகின்றன. எழுந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பால்கனி கதவைத் திறந்தேன்.
நீண்ட நாட்களாக பூக்காமல் இருந்த பன்னீர் ரோஜா செடி இன்று பூத்திருக்கிறது. அண்ணாந்து ஆகாயத்தைப் பார்க்கிறேன். மேகம் ஒரு மரித்த யானையைப் போலக் கிடக்கிறது. அது புராதனக் கட்டிடத்தில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட யானையின் சாயலில் தெரிகிறது.
புனிதக் கதையில் வருவதுபோல யுவதி ஒருமலைக்கும் இன்னொரு மலைக்குமிடையே இப்போதும் ஓடுகிறாள். எல்லா ஓட்டங்களையும் யுவதிகளிடம் கட்டிவிடுகின்றன புனிதக் கதைகள். அடிவானில் மையம் கொண்டிருந்த மரித்த யானை சித்திரத்தின் முகத்தை இப்போது உற்றுப் பார்க்கிறேன். அந்த முகம் கேர்ரியுடையது.