நேர்காணல் தொகுப்பு: மணலி அப்துல் காதர்
கானாநாட்டு எழுத்தாளர்களுக்கு கலை உணர்வை தூண்டும் சிங்கப்பூர்
ஜெரோம் மசமாகா (Jerome Masamaka) கானா நாட்டின் கவிஞர் மற்றும் கல்வியாளர். CreativeWritingஇல் முனைவர் பட்டம் பெற்றவர். இவரது கவிதை தொகுப்பு Under the Tattered Roof (2023) புதுடெல்லி Red River பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் சமீபத்திய இடர்பாடுகளையும் இயற்கையின் புதிரான அம்சங்களையும் தனது கவிதையின் பேசுபொருளாக்கி இத்தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது பல ஆய்வுகளில் சுற்றுச்சூழல் இலக்கியம் மற்றும் பின் காலனித்துவ இலக்கியம் குறித்த களங்கள் மிக முக்கியமானதும் வரலாற்றுப் பூர்வமானதும் கூட. நவம்பர் மாத இரண்டாம் வாரத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழா (Singapore Writers Festival 2024) நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கும் ஜெரோம், பல அரங்குகளின் வெவ்வேறு தலைப்புகளின் குழு விவாதங்களில் பங்கேற்கிறார். கவிதை மற்றும் ஆய்வு புலத்தில் மிகவும் கவனிக்கப்பட்டு வரும் இவர், மேற்கு ஆப்பிரிக்காவில் கானா நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 70 க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள், மூன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட கானா நாட்டில் அடிக்கடி நிகழும் இயற்கை இடர்பாடுகளில் தன் வாழ்வும் சிதிலமாகும் பதிவுகளையே தன் கவிதையின் குரலாகவும் பல்வேறு ஆய்வுகளின் பதிவாகவும் எழுப்புகிறார். Singapore Writers Festivalக்கு வருகை தரும் இவர் மிகவும் மகிழ்ச்சியுடன் நம்முடன் உரையாடினார். நாம் முன் வைத்த கேள்விகளுக்கு விரிவான பதில்களையும் சிறப்பாகப் பதிவு செய்தார்.
இலக்கியம் அந்த நாட்டிலுள்ள பல்வேறு இனக்குழுக்களின் குரலைப் பிரதிபலிக்கிறதா?
பெரும்பான்மையான இனக்குழுக்களைப் பொறுத்தவரையில் இது உறுதியாகப் பிரதிபலிக்கிறது. அது இன்றைய மிகப்பிரபலமான கானா நாட்டு எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கிறது. கானாவில் உள்ள சில சிறுபான்மை இனக்குழுக்கள் சமகால இலக்கியப் படைப்புகளில் சிறிய அளவில் அல்லது இல்லை என்னும் அளவுக்கே உள்ளன. ஆனாலும் கானா நாட்டு இலக்கியத்தை வடிவமைப்பதில் மூன்று பெரும்பான்மை இனக்குழுக்கள் உள்ளன: Eves, Kofiawoonoor இனக்குழுக்களின் Kofi Anyidoho போன்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுடன் Fantes (Ama Ato Aidoo, Ayikwer Armah, Kwesi Braew, Ashantis Abena Busia, Benjamin Kwakye) கானா இலக்கியத்தை பிரநிதித்துவப்படுத்தலாம். எனவே நாம் கானா நாட்டு இலக்கியங்களைப் பற்றிப் பேசும்போது இந்த இனக்குழுக்கள் முன்னிலையாக இருக்கின்றன. நான் EWE இனக்குழுவை சார்ந்தவன்.
கானா நாடு 70க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ள நாடு என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த பல்வேறுபட்ட இனக்குழுக்களைச் சேர்ந்த எழுத்தாளர்களால் உருவாக்கப்படும் இலக்கியத்தில் உள்ள தனித்தன்மையான பண்புகள் பற்றி விரிவாகக் கூறுங்கள்.
மிகவும் அதிக எண்ணிக்கையிலான இனக்குழுக்கள் இருந்தபோதிலும், முன்னிலை வகிப்பவை சிறுபான்மையானவற்றை உட்படுத்திக் கொள்பவையாக உள்ளன. நான் முன்பே குறிப்பிட்டவை போலான பெரிய இனக்குழுக்கள் பல சார்குழுக்களைப் பெற்றுள்ளன. முன்னிலை நிற்கின்ற இனக்குழுக்கள் மட்டுமே தங்கள் இலக்கியப் படைப்புகளில் அங்கீகரிக்கத்தக்க இனப் பண்புகளைப் பெற்றுள்ளன. EWE எழுத்தாளர்கள் தங்களின் பாரம்பரிய வாழ்மொழி கவிதைகளைப் பிரதிபலிக்கும் தனித்துவ வகையான கவிதைகளுக்கு மிகவும் நன்கு அறியப்பட்டவர்கள். பாரம்பரிய EWE கவிதைகளின் சில உட்பிரிவுகளாக உள்ளவை இவை: அஞ்சலிக் கவிதை மற்றும் மரபுமீறிய கவிதை, ஃபேன்டெஸ் மற்றும் அஷான்டிஸ் படைப்புச் சாதனை கவிதை மற்றும் சமூக அரங்கில் வலுவான பாரம்பரியத்தைப் பெற்றுள்ளன. சமகால கானா நாட்டு இலக்கியம் பாரம்பரிய அழகியல் வழிமுறைகளை தனித்துவ இலக்கிய படைப்புகளுக்குள் இணைக்க அல்லது மறுசீரமைக்க முயல்கிறது.
கானா நாட்டு இலக்கியத்தில் கலையுணர்வு மொழி என்பது வெளிப்படையான இனத் தாக்கத் தளங்களுள் ஒன்றாகும். கானா நாட்டு எழுத்தாளர்கள் தங்கள் இன மொழிகளின் சொற்கள், குறியீடுகள், கருத்துருக்கள், பழமொழிகள் போன்றவற்றை அடிக்கடி பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இந்த உள்நாட்டு மொழியியல் ஆதாரங்கள் இலக்கிய படைப்புநிலையாக எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டோ அல்லது மொழிபெயர்க்காமல் அப்படியே புகுத்தப்பட்டோ உள்ளன.
புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர், சினுவா அசெபே, இந்த கலையுணர்வு நிலைப்பாட்டை “ஆங்கில மொழியை உள்நாட்டு நிலைக்கேற்ப ஆக்குதல்” என்கிறார். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “என்னுடைய ஆப்பிரிக்க அனுபவத்தின் கனத்தை ஆங்கில மொழி சுமந்து கொள்ள முடியும் என்று நான் உணர்கிறேன். ஆனால் இது தன்னுடைய மூதாதையரிடம் இருக்கும் முழுமையான வெளிப்பாட்டோடு ஆனால் புதிய ஆப்பிரிக்க சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு புதிய ஆங்கிலமாக இருக்க வேண்டும்”.
அசெபே குறிப்பிட்டுப் பேசுகின்ற புதிய ஆங்கிலம் இன மொழியியல் வடிவங்களை கலையுணர்வு நிலைப்பாட்டைத் தங்கள் எழுத்துக்களில் புகுத்துகின்றதைப் பற்றிப் பேசுகிறது. நைஜீரிய எழுத்தாளர்களைப் போலவே கானா நாட்டு எழுத்தாளர்களும் கூட தங்கள் இனத்து மொழிகளைச் சார்ந்து இருக்கிறார்கள். அதன்வழியே அசெபே குறிப்பிட்டுப் பேசிய “புதிய ஆங்கிலம்” கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உட்பொருளைப் பொருத்த வரையில், சமகால கானா நாட்டு எழுத்தாளர்கள் சமூக அரசியல் பிரச்சனைகள், சரியில்லாத அரசு நிர்வாகம், பாரம்பரிய மதிப்பீடுகள் இழப்பு போன்றவற்றிற்குத் தீர்வு காண்பதில் நையாண்டித்தன்மை கொண்டவர்களாக இருக்க முயற்சிக்கிறார்கள். கானா நாட்டு எழுத்தாளர்களும் கூட காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உலகப் பார்வையை தங்கள் வாசகர்களை எச்சரிப்பதற்கான மேல்நிலைக் குறிக்கோள்களோடு மேற்கத்திய பண்பாட்டு தாக்கத்தின் அழிவுத் தன்மையை முன்வைத்து எச்சரிக்க முயற்சிக்கிறார்கள்.
பொதுவாக ஆப்பிரிக்க இலக்கிய படைப்பாளர்களின் செல்வாக்குதான் கானா நாட்டு இலக்கியத்தில் ஊடுருவி இருக்கிறதா?
இந்தக் கேள்வியை நான் விரும்புகிறேன். கானா நாட்டு இலக்கியம் ஆப்பிரிக்க இலக்கியத்தின் முக்கியமான சார்குழுவாக இருக்கிறது. அத்தோடு கூட கானா நாட்டு எழுத்தாளர்களின் பொதுவான கலையுணர்வு போக்குகள் நைஜீரியா, செனகல், கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாட்டு எழுத்தாளர்களின் போக்குகளைப் பிரதிபலிக்க முயற்சிக்கின்றன. 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளிலான ஆப்பிரிக்க இலக்கியத் தோற்றத்திலிருந்து, ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் அடிக்கடி ஒருவர் மற்றவர்களோடு சகோதரத்துவ உணர்வும் மேம்பாட்டுத் தாக்க உணர்வும் கொண்டிருக்கின்றனர்.
இந்த எழுத்தாளர்களை ஒன்றுபடுத்த பல்வேறு பன்னாட்டு மாநாடுகள் நடந்திருக்கின்றன. 1962ஆம் ஆண்டில் உகாண்டாவில் நடைபெற்ற மாநாடு அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் ஒன்றாகும். அதிலும் அதன்பிறகு நடைபெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் மாநாடுகளிலும் பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களை பாதித்த அடிப்படை முக்கியத்துவ பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அத்தோடு கூட ஒட்டுமொத்த கண்டம் தழுவிய இலக்கியச் சூழ்நிலை கானா நாட்டு எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் எழுத்து வழிமுறைகளைப் பாதித்தது.
மேற்கத்திய தாக்கம் கானா நாட்டு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அடிக்கடி சொல்லப்படுகிறது. இந்த நிலைப்போக்கு காலப்போக்கில் மாறிவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
வெகுகாலத்திற்கு முன்பாகவே கானா நாட்டு அழகியல் நோக்கிய நிலைக்கான மாற்றம் தொடங்கி விட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் கானா நாட்டு எழுத்தாளர்கள் ஆப்பிரிக்க மையமான அழகியல்களில் அதிகமான கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அதாவது எழுதும் முறைகளில், உள்ளீட்டுப் பொருள்களில் அதிகாரமுள்ள உள்நாட்டு பண்புகளில் கவனம் செலுத்தினர். இப்போதிருந்து பல பத்தாண்டுகளாக, கானா நாட்டு எழுத்தாளர்கள் மேற்கத்திய மாதிரி எழுத்தை அப்படியே பிரதிபலிப்பதில்லை என்ற முயற்சியை பரிசோதிக்கத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக அவூனோர் மற்றும் அனையிடோஹோ, ஈவே வாய்மொழி கவிதையை மறுசீரமைப்பு செய்தனர். எஃபுவா சதர்லாந்த் மற்றும் அமா அடா அய்டூ, பாரம்பரிய நிகழ்த்துக்கலை அரங்கைத் தம் நாடகங்களில் பின்பற்றினர். மற்றும் அயி க்வேய் அர்மாஹ் விமர்சகர்கள் மேற்கத்திய நாவல் முறையிலிருந்து மாறுபட்டதான முறையில் என்று குறிப்பிடும் ஒரு நாவலைப் படைத்து பரிசோதித்தார். கானா நாட்டு இலக்கியத்தைப் பொறுத்தவரையில், உண்மையில் மேற்கத்திய இலக்கியத்தின் தாக்கத்திலிருந்தும், உள்ளடக்கத்திலிருந்தும் விலகிச் செல்லும் போக்கு தொடரும்.
இலக்கிய உலகில், பல படைப்புகளுக்கு நாட்டார் இலக்கியம் (Folklore) என்ற அடையாளக் குறியீடு இருக்கிறது. அதுபோல உங்கள் கானா நிலத்தில் அப்படி உங்கள் மண் படைத்த இலக்கியத்தின் வகைப்பாடு இருக்கிறதா?
இப்படி அழைக்கப்படும் பல உள்நாட்டு பண்பாடுகளைப் போலவே நாட்டார் இலக்கியம் என்பதும் கானா நாட்டுக்கு விநோதப் புதுமையான கருத்துரு அல்ல. காலனிய குறுக்கீட்டிற்கு முன்னர், கானா நாட்டு இலக்கியம் வாழ்மொழி வழியானதாகவும் கூட்டு நிகழ்வாகவும் சமுதாய மக்கள் விரும்பி ஏற்றதாகவும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக, முன்பயிற்சி இன்றித் திடீரெனவும் நடத்தப்பட்டு வாய்மொழியாகக் கொண்டு சேர்க்கப்பட்டது. அந்தக் கருத்தில், இலக்கியம் என்பது சமுதாய “நாட்டுப்புற” செயல்பாடாக இருந்தது. அதன் சமகால மறுசெய்கையில் நாம் தொகுப்பாக கானா நாட்டு இலக்கியம் என்று இப்போது பெயர் சூட்டுகிறோம். “நாட்டுப்புறத்தன்மை” அம்சங்கள் இன்றும் அதற்கு பொருந்தக் கூடியதே.
என்னைப் போன்ற கானா நாட்டு புதிய எழுத்தாளர்கள் தங்கள் கலை முயற்சிகளில் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாய்வழிக் கவிதை மற்றும் சமுதாய அரங்கம் பிரபலமடைந்து கொண்டு வருகின்றன. கானா நாட்டு இலக்கியக் காட்சி வெளியில் நிகழ்த்துக்கலை இலக்கியத்தில் இலக்கிய எழுத்துக்களை மட்டுமே உருவாக்குவதில் கலைஞர்கள் திருப்தி அடையவில்லை. நான் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் புதிய நிகழ்த்துகலை இலக்கியத்தில் கலைஞர்கள் உண்மையான பார்வையாளர்கள் முன்னே தங்கள் நிகழ்வை நடத்துகிறார்கள். காணொலி வடிவத்திலும் பதிவு செய்கிறார்கள். இந்தக் கருத்தில் “நாட்டுப்புற” பண்பு இன்னும் கானா நாட்டு இலக்கியத்தில் நிலைத்துள்ளது. கானா நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் என்னுடைய கவிதைகளை பல்வேறு அரங்குகளில் வழங்கி உள்ளேன். இத்தகைய நிகழ்வுகளில் சிலவற்றில் காணொலி உபகரணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இசை முறை உதவியுடன் நிகழ்த்தினேன். இந்தச் சூழலில் நான் வெறும் ஒரு கவிஞன் மட்டுமல்ல. நான் ஒரு நிகழ்த்துகலைக் கவிஞன். இத்தகைய வகையான இலக்கிய வெளிப்பாடுகளில் நாட்டுப்புறத் தன்மையை நான் காண்கிறேன்.
உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மேற்கத்திய தாக்கம் படைப்புகளில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
இல்லை. படைப்புகள் எங்கு படைக்கப்பட்டன என்ற வேறுபாடில்லாமல் உயர் தகுதி மிக்கவற்றிற்கு உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதனால்தான் உலக இலக்கியத்தின் மைல்கல் பதித்த படைப்புகள் ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா போன்ற பல பண்பாடுகளின் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய படைப்புகள் உலக இலக்கியத்தில் உள்ளன. உலகின் தென்பகுதி எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக மேற்கத்திய எழுத்தாளர்களைப் போலவே எழுத வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் மனதைக் கவர்ந்த மேற்கத்திய வடிவங்களில் இருந்து சிறந்த அம்சங்களை எடுத்துக் கொள்ளமுடியும்.
மேற்கத்திய தாக்கம் என்ற கருத்து அதிகமாக நம்முடைய கலந்துரையாடலில் இடம் பெற்றதால் அது எதைக் குறிப்பிடுகிறது என்பதை என்னுடைய பின்புலத்திலிருந்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். எழுத்தில் அப்படிக் கூறப்படும் மேற்கத்திய எழுத்துத் தரம் மூலமானதும் ஒரே மாதிரியானதுமான ஐரோப்பிய அல்லது அமெரிக்க இலக்கிய இயக்கத்தைப்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐரோப்பிய கலாச்சாரத்திலிருந்து வந்த சிறந்த இலக்கியச் செயல்பாடுகள், உலகின் இலக்கிய நயமுள்ள ஆதாரங்கள் மற்றும் பிற உள்நாட்டு கலாச்சாரங்கள் ஆகியவற்றிலிருந்து மேம்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த ஒரு கலவையை அது உருவாக்கியது. மேற்கத்திய இலக்கியத்தின் இலக்கியத்தரம் வாய்ந்த மூலங்களைப் பற்றி மிக அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் ஆசிய,உள்ளூர் அமெரிக்க, நாடுகளின் தாக்கம் மேற்கத்திய எழுத்துக்களில் காண்ப்படுவது பற்றி அதிகமாகப் பேசப்படுவதில்லை.
ஆகவே, மேற்கத்திய எழுத்துத் தரத்தின் சில வடிவங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கலாம். ஏனென்றால் அவை காலங்கள் கடந்தும், உலக பகுதிகளைக் கடந்தும், பல்வேறு பகுதி கலாச்சாரங்களின் கலைஞர்களிடையே எதிரொலித்தமையாலும்தான். உதாரணமாக, இயற்கை பற்றிய இசைக்கவிதை அல்லது விலங்குகள் மற்றும் பேய்வகை பாத்திரங்கள் கொண்ட சிறுவர் கதைகள் மேற்கத்திய உலகில் மேம்பட்டு இருந்தாலும் அவை இப்போது உலகளாவிய தகைமை கொண்டுவிட்டன.
உங்கள் கேள்விக்கு மீண்டும் வருவோம். மேற்கு அல்லது கிழக்கு, வடக்கு அல்லது தெற்கு எங்கிருந்து வந்தாலும் அழகியல் வகைகளை ஏற்றுக் கொள்வதில் உண்மையில் எந்தக் குற்றமும் இல்லை என்றே நான் கூறுவேன். பல்வேறுபட்ட கலாச்சார மக்களின் உணர்வு இணைப்பாகவும் இருக்கும் ஒரு வழியை கலை பெற்றிருக்கிறது. கானா நாட்டில் உள்ள நாங்கள் இலக்கியத்தரம் மிக்க படைப்புகள், ஷேக்ஸ்பியர், இடைக்கால இலக்கியம் போன்றவற்றையும் எங்கள் சொந்த இலக்கிய பாரம்பரிய படைப்புகள் போலவே எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் இலக்கியம் இந்த உயர்ந்த பாரம்பரியங்களின் மாதிரிகளை உள்வாங்கிக் கொண்டு விட்டது. ஆகவே அப்படித்தான் வளர்கிறது. இருப்பினும் உங்களிடம் இந்த கேள்வி எழுந்ததில் பிரச்சனை என்னவென்றால், மேற்கத்திய வகையல்லாத கலாச்சாரங்களை குறிப்பாக ஆப்பிரிக்காவைச் சார்ந்த கலை செயல்பாடுகளை மேற்கத்தியர்கள் இணைத்துக் கொள்வதில் காட்டும் தயக்கமே.
ஆனால் அண்மைக்காலங்களில், மேற்கு நாடுகள் அல்லாத கலாச்சாரங்களின் தரம் வாய்ந்த படைப்புகளை மேற்கு ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது. பல்வேறுபட்ட பின்புலத்திலிருந்து வரும் எழுத்தாளர்கள் மேற்கின் கண்ணைக் கூசும் பகட்டை அலசிப்பார்ப்பதை விட்டு விட்டு அழகியல் உறுதிப்பாட்டில் நிலைத்திருப்பதில் உண்மையாளர்களாகத் திகழவேண்டியது அவசியம்.
உங்கள் சொந்த மண்ணின் அடையாளத்தை தனித்துவமாகப் பிரதிபலிக்கும் படைப்புகள் தாங்கள் உருவாக்கி உள்ளீர்களா?
நான் கானாவில் எழுதிக் கொண்டிருந்ததற்கும் இப்போது ஆஸ்திரேலியாவில் எப்படி எழுகிறேன் என்பதற்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கிறது. 2018ஆம் ஆண்டு படைப்பாக்க எழுத்தியலில் நான் ஒரு ஆய்வைத் தொடர்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன். கானாவில் என்னுடைய எழுத்து கானா நாட்டுக் கவிதைப் பண்புகளைத் தாங்கியிருந்தது. நாட்டில் வேகமாக வீழ்ச்சி அடைந்துவரும் சமூக – அரசியல் மற்றும் பண்பாட்டு நீதி மதிப்பீடுகள் பற்றியே பெரும்பாலும் நான் கானா நாட்டில் எழுதிய கவிதைகள் பேசின. கானா மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நிலவிய விலகிச்செல்லும் போக்கினைத் திட்டுவதற்காக அறிவுரை கூறும் சமூக விமர்சகரின் ஒரு கிண்டலான தொனியை நான் பின்பற்றினேன். நானும் அவூனோர் மற்றும் அனைய்டோஹோ ஆகியோரின் அதே இனக்குழுவைச் சேர்ந்தவன் என்பதால் அவர்களின் படைப்புகளில் பாரம்பரிய EWE வாய்மொழிக் கவிதையில் மாற்றத்திற்காக ஏற்ற கலை பரிசோதனை முயற்சிகள் என்னை ஆட்கொண்டன. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் என்னுடைய படைப்பாக்க எழுத்தியல் பயிற்சி மற்றும் புதிய மேற்கத்திய தாக்கங்கள் என்னுடைய கலைக்கான உத்திகளில் வாய்ப்பை விரிவுபடுத்தின.
தங்களது “Under the Tattered Roof “ (சிதைந்த கூரையின்கீழ்) என்ற கவிதைத்தொகுப்பில் அடங்கியுள்ள பேசுபொருள் என்ன?
காலநிலைப் பிரச்சனைக்கும் அதன் அபாயத்திற்கும் காணவேண்டிய அவசரமான உடனடி தீர்வுக்கான அவசியம் என்பதே அதன் அடிப்படை உள்ளீட்டுச் செய்தி. உலகெங்குமுள்ள பல நோக்கர்கள் குறிப்பிட்டிருக்கும் அண்டவெளி சூழ்நிலை வீழ்ச்சி என்பதை கவிஞர்களும் கூட தவிர்க்க முடியாது. தட்ப வெப்ப காலநிலை மாறுபாடு என்பதைப் பொருத்தவரை நைஜீரிய – பிரிட்டிஷ் எழுத்தாளர் பென் ஓக்ரி எழுத்தாளர்களுக்கு இப்படிக் கூறுகிறார்: “இவைதான் கடைசி விஷயங்கள் என்பதுபோல இப்போது எழுதவேண்டும். நம்மில் எவரும் எழுத வேண்டும். மனிதர்களின் கதையில் இவையே கடைசி நாட்கள் என்பதுபோல் எழுதவேண்டும்“
நான் கானா நாட்டின் சுற்றுச்சூழலால் பாதிப்பு அடையக்கூடிய இனத்திலிருந்து வந்தவன். கடல் அரிப்பு எங்கள் சொந்த ஊரின் பெரும்பகுதியை அழிக்கிறது. புவி வெப்ப மயம் எங்கள் மீது நேரடி பாதிப்பைக் கொடுக்கிறது. ஆகவே சீதோஷ்ண மாறுபாட்டின் விளைவுகளால் எனது பார்வையில் இந்த உலகின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இந்தக் கவிதைத் தொகுதி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எண்ணி கோபம், விரக்தி, பயம், எச்சரிக்கை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்தக் கவிதை கூட இயற்கையின் புதிரான அம்சங்களைப் பாராட்டிப் போற்றுகிறது. அந்த விஷயங்களில் அவற்றின் பாதுகாப்பிற்காக நாம் செய்ய வேண்டிய தேவைகளை எடுத்துக் கூறுகிறது.
இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது மேற்கத்திய தாக்கம் மற்றும் தங்களின் தற்போதைய மேற்கத்திய வாழ்வுமுறையினால் உருவானதா?
மேற்கத்திய காலனித்துவத்தின் எச்சமே ஆங்கிலமொழி என்பது நிச்சயமானது. ஆனால் ஆங்கிலத்தையோ பிரெஞ்சு மொழியையோ பயன்டுத்துவது மட்டுமே மேற்கத்திய தாக்கத்தின் போதுமான அடையாளமாக அமையாது. அசெபே மற்றும் ஆப்பிரிக்க அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் காலனித்துவ மொழிகள் இப்போது ஆப்பிரிக்க மொழிகளாக வலுவாக உள்ளன என்று வாதிட்டுள்ளார்கள். இப்போது ஆப்பிரிக்காவில் அவை முன்னணி மொழிகளாக உள்ளன. நான் கானா நாட்டு உள்ளூர் மொழிகளைப் பேசுகிறேன். ஆனால் அவற்றை விட நான் ஆங்கிலத்தில் அதிகத் திறன் பெற்றுள்ளேன். என்னால் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுத முடியும். நான் முன்பு பேசிய புதிய ஆங்கிலத்தோடு மிகவும் முக்கியமானதாக, நாங்கள் பல்வேறு உள்ளூர் வகையான ஆங்கிலத்தை உருவாக்கியுள்ளோம்.
என்னுடைய நூலில் உள்ள சில கவிதைகளில் உவமை, உருவகம், வடிவமைப்பு அலங்காரம் என்பவற்றுக்கு கானா நாட்டு பல்வகை ஆங்கில சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய பன்னாட்டு வாசகர்கள் இவற்றைக் கண்டு கொள்வார்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே நூலின் கடைசிப் பகுதியில் சில கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைத்தொடர்பு மொழியின் தன்மை பற்றி விளக்கியுள்ளேன்.
”அதிகாலையில் திமிங்கல சூப்” (Whale Soup at Dawn) என்ற ஒரு கவிதை இந்த நூலில் உள்ளது. இது 2018ஆம் ஆண்டில் திமிங்கல வேட்டையை மீண்டும் கொண்டு வந்த ஜப்பானிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவிதை இது. ஆப்பிரிக்க முதியோர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல பல வரிசையான பொன்மொழிகள் மூலம் நான் அந்தக் கவிதையில் என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன்.
பருவநிலை மாற்றம் என்பது முக்கியமாக மேற்கத்திய நிலையில் சுட்டுவதுதானே என்று ஒருவர் வாதிடக்கூடும். ஆனால் அது ஒரு உலகளாவிய பிரச்சனை. ஆகவே நான் ஒரு பன்னாட்டுக் குடிமகனாகவே எழுதியுள்ளேன். அது ஒரு மேற்கத்திய முறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் சொந்த நாட்டிலிருந்து நீங்கள் மிகவும் குறிப்பாகப் பாராட்டும் ஏதாவது இலக்கியப் படைப்பை அடையாளம் காட்ட முடியுமா? அதன் ஆசிரியர் மற்றும் அது எதைப்பற்றியது என்று கூறமுடியுமா?
எனக்கு கானா பல்கலைக் கழகத்தில் ஆங்கிலமும் படைப்பாக்க எழுத்தியலும் கற்பித்த கோஃபி அவூனோர் மற்றும் கோஃபி அனைய்டோஹோ ஆகிய இருவரும் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளார்கள். ஈவே பண்பாட்டுப் பின்புலம் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஆகவே அவர்களின் ஈவே வாய்மொழி கவிதை ஆங்கிலத்தில் மீட்டுருவாக்கத்தை மிகவும் பாராட்டினேன். நான் மதிக்கும் மற்றொரு எழுத்தாளர் அயி க்வெய் அர்மாஹ். அவர் கானா நாட்டின் முன்னோடி நாவலாசிரியர். ஆப்பிரிக்க சிந்தனை முறை மற்றும் ஆப்பிரிக்க வாழ்வு முறை ஆகியவற்றை காலனித்துவ நிலையிலிருந்து விடுவிக்கும் அவரது கலைப்படைப்பை நான் மிகவும் வியந்து போற்றுகிறேன்.
கானா நாட்டு இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
என்னைப் பொறுத்த வரையில் அயி க்வெய் அர்மாஹ்வின் (1978) “இரண்டு ஆயிரம் பருவகாலங்கள்” (Two thousand Seasons) என்ற படைப்பு மிகச்சிறந்ததாக இருக்கிறது. ஏனென்றால் ஆப்பிரிக்க மக்களையும் பகுதிகளையும் மிகச்சிறந்த கருப்பொருளாகக் கொண்டு ஊக்கமூட்டும் கலை வடிவத்தில் உருவாக்கியுள்ளார். வட ஆப்பிரிக்காவின் தொடக்கம் தொடங்கி இன்றைய தெற்கு கடற்கரை குடியிருப்புகள் வரையிலான ஆப்பிரிக்கர்களின் ஒரு ஆயிரம் ஆண்டு பழமையான ஆப்பிரிக்க ஆட்சியை தேடிக் கண்டுபிடித்து நாடக முறையில் உருவாக்கியுள்ள ஒரு நாவல் இது. இது ஒருகாலத்தில் விரிவான கல்வி முறை மற்றும் பண்பாட்டு இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட பழமையான ஆப்பிரிக்க ஆட்சிமுறைகள் பற்றி கூறுகிறது. ஒருகாலத்தில் சக்தி வாய்ந்த ஆப்பிரிக்க ஆட்சிகள் எவ்வாறு சமுதாயத் தலைவர்களின் மனநிறைவு மற்றும் அதிகப்படியான நாட்டுப்பற்று ஆகியவற்றால் எவ்வாறு வீழ்ச்சி அடைந்தன என்பதை இது எடுத்துக் கூறுகிறது. இது நல்லதொரு ஆராய்ச்சி நாவல். இதில் எழுத்தாளர் மேற்கத்திய கல்விமுறை ஒதுக்கி வைத்த நம்முடைய வரலாறுகளை நாடக வடிவாக்குவதற்காக ஆப்பிரிக்கா முழுவதிலும் பயணம் செய்து பழமையான எகிப்திய குறியீடுகளைக் கற்றுள்ளார்.
கானா நாட்டு இலக்கியம் எப்போதாவது நோபல்பரிசு அல்லது புக்கர் பரிசு போன்ற உலகளாவிய பாராட்டுகளை பெற்றிருக்கிறதா?
இதுவரை நோபல் பரிசு பெறவில்லை. புக்கர் பரிசும் எதுவும் பெற்றதாக நான் கருதவில்லை. இருப்பினும் காமன்வெல்த் எழுத்தாளர் பரிசு (Commonwealth Writers Prize and Langston Hughes Prize) மற்றும் லாங்ஸ்டன் ஹ்யூஸ் பரிசு போன்ற பன்னாட்டு இலக்கிய விருதுகளை எங்கள் எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.
உங்கள் சமகாலப் படைப்புகள் உங்கள் நிலத்தின் அரசியல் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசியுள்ளனவா?
நிச்சயமாக. இப்போது சில காலம் முன்பு கானா நாடு ஒரு இருண்ட சமூக அரசியல் தடையைப் பெற்றிருந்தது. 1990 களில் வாக்குரிமை ஜனநாயகம் வேர் கொண்டதால் அரசியல் என்பது நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் பெரும்பாலோர் ஊழல்வாதிகளாகவும், சுதந்திர ஆப்பிரிக்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் மறைமுகமானவர்களகவும் ஆர்வமற்றவர்களாகவும் இருந்தனர். நாட்டின் தொலைநோக்கில் மிகுந்த அக்கறையின்மை இருந்தநிலை பல கானா நாட்டு எழுத்தாளர்களை விரக்தி அடையச் செய்தது. முந்தைய தலைமுறை கானா நாட்டு எழுத்தாளர்களைக் குறிக்கோளாக எடுத்து என் தலைமுறை சேர்ந்த எழுத்தாளர்கள் கானா நாட்டு மதிப்பீடுகளில் மதம், அரசியல், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றில் இருந்த நேர்மையின்மை மற்றும் சுயநலம் ஆகியவற்றால் எல்லா தளங்களிலும் ஏற்பட்ட விரைவான வீழ்ச்சிகளைப் பற்றி எழுதினோம். நான் கானா நாட்டின் வாழ்க்கை எனக்குக் கனவுபோல் ஆகிவிட்ட நிலையில் அதைப்பற்றி நானும் எழுதினேன்.
சிங்கப்பூரில் நடைபெறும் எழுத்தாளர்கள் விழாவில் (Singapore Writers Fastivel) நீங்கள் கலந்து கொள்கிறீர்கள். இந்த நிகழ்வைப் பற்றி தங்கள் எண்ணங்கள் யாவை?
இது ஒரு முக்கியமான இலக்கிய விழா. அதன் பங்கேற்பில் நான் கவுரவப்படுத்தப்பட உள்ளேன். இது எனக்கு முதல் முறை. எதிர்காலத்திலும் கலந்து கொள்வேன் என்று நம்புகிறேன். நான் கருத்துப் பட்டியலை குறிப்பாக நான் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கானவற்றை விரும்புகிறேன். இயற்கை பற்றிய கவிதை ஒன்றிலும் நம்பிக்கை பற்றிய மற்றொன்றிலும் நான் கலந்து கொள்வேன். இப்போதிருந்து சிலகாலம் வரை என்னுடைய படைப்பாக்க மற்றும் அறிவுசார் படைப்புகளில் இலக்கியத்தில் இயற்கைபற்றிய பிரதிநிலைப்படுத்தல் இருப்பதை நான் கவனப்படுத்துகிறேன். என்னுடைய கிருத்தவ நம்பிக்கையை உறுதியாக பற்றியிருப்பதால் மத நம்பிக்கைக்கும் கவிதைக்குமுள்ள ஒற்றுமையை முன்வைக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைப் போன்ற வியத்தகு எழுத்தாளர்கள், இதழாளர்கள் ஆகியவர்களோடு சகோதரத்துவத்தைப் பேணிக்காக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
சிங்கப்பூர் இலக்கியம், கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றோடு உங்கள் எழுத்துக்களுக்கு ஏதாவது தொடர்பு மற்றும் வாசிப்பு உறவு இருக்கிறதா?
கானா மற்றும் சிங்கப்பூர் இரண்டுமே காலனித்துவத்தின் வரலாறு கொண்டவை. அது இரண்டு இலக்கியப் படைப்புகளையும் காலனியாதிக்கத்துக்கு முந்தைய ஒரே இடத்தில் வைத்திருக்கிறது. நான் எழுதியுள்ள சில பிரச்சனைகள் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் கூட முக்கியமானவையே. ஒரு எழுத்தாளன் என்ற முறையில், என் நாட்டில் உள்ள மேற்கத்திய ஏகாதிபத்திய நடவடிக்கைகள் பற்றி கவலை கொண்டுள்ளேன். நான் இனப்பாகுபாடு மற்றும் அதன் அழுத்தம் பற்றி எழுதுகிறேன். சுற்றுச் சூழலை நான் விரும்புகிறேன். இவையெல்லாம் சிங்கப்பூர் இலக்கியத்தில் பொதுவான கருத்துக்களே. அண்மைக் காலமாக நான் சிங்கப்பூர் இலக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன். நான் மேடலீன் லீ (Madeleine Lee) அவர்களின் கவிதைகளை விரும்புகிறேன். அவர் எப்படி அக்கம்பக்கத்தில் உள்ள சாதாரண மனிதரல்லாதவற்றிற்கும் அழகியல் வாழ்வுக்காட்சியை வழங்குகிறார் என்பதை எண்ணி விரும்புகிறேன். சிங்கப்பூர் போன்ற மிகப்பெரிய நகரங்களில் வசிப்போர் எண்ணிப்பார்க்க முடியாத நிலையில் அவர் தன்னுடைய கலையுணர்வு கவனத்தை அந்த பூச்சிகளுக்கும் சிறு உயிரினங்களுக்கும் கொடுப்பதில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. நானும் கூட பூச்சிகள், விலங்குகள், பறவைகள் பற்றி எழுத விரும்புகிறேன். நான் லீ அவர்களின் கவிதைகளில் மிகச்சிறந்த நெருக்கத்தை உணர்கிறேன். கானா நாட்டு எழுத்தாளர்கள் இத்தகு கலையுணர்வு சிங்கப்பூரில் தூண்டப்படுவதை உணர முடியும்.