நேர்காணல் தொகுப்பு: மணலி அப்துல் காதர்
மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்ப்பதோடு , தமிழ் முன்னேற்றத்திலும் சமுதயாம் கவனம் செலுத்த வேண்டும்
பேரா.முனைவர் அ. வீரமணி (1947) அவர்கள் சிங்கப்பூர் வானொலியில் 1971 – 1974 வரை பணிபுரிந்து பின்பு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளரானார். “சிங்கப்பூர் இந்தியர் மத்தியில் மாறிவரும் சாதி அமைப்பு
(changing caste structure amongst Singapore Indians) என்ற இவரது ஆய்வு சிங்கப்பூர் சமூக வரலாற்றில் மிகவும் கவனம் பெற்ற ஆய்வுக்களமாக அமைந்தது. சிங்கப்பூரின் தமிழர் சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களை தெளிவாக்கியது. அமெரிக்க பல்கலை.யில் முனைவர் பட்டமும் பெற்று சிங்கப்பூர், புருணை பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்தார். பல்வேறு கல்விப்புலத்தின் உயரிய விருதுகளையும், சிறப்புக்களையும் பெற்று பல ஆய்வுத்தொகுப்புகளை நூல்களாக வெளியிட்டுள்ளார்.
இவரது ஆய்வு தொகுப்பில் முக்கியமான நூல் ” சிங்கப்பூரில் தமிழும், தமிழிலக்கியமும்” குறிப்பிடத்தக்கதாகும். சிங்கப்பூர் இளையர் மன்றத்திற்கு அடித்தளமிட்டு அதனை உருவாக்கி வளர்த்ததில் இவருக்கு பெரும்பங்குண்டு. தற்போது தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலையில் அயலகத்தமிழ்த்துறையில் வருகைதரு பேராசிரியராக உள்ளார்.
சிராங்கூன் டைம்ஸ் இதழுக்காக அன்மையில் எடுத்த சிறு நேர்காணல்.
1.பன்னெடுங்காலமாக சிங்கப்பூர் சமுதாய தளத்தில் தாங்கள் ஆற்றிய பணியும், கலாச்சார பண்பாட்டு செயல்பாடுகளும் அதன் நோக்கில் வெற்றியடைந்ததாக தாங்கள் எணணுகிறீர்களா? அப்பணிகள் தங்களுக்கு திருப்தியை தருகிறதா?
தங்கள் கேள்வி எனது சிந்தனையில், பல வகையான பதில்களை உருவாக்கி உள்ளது.
எனது மூதாதையர் சிங்கப்பூருக்கு 1896-இல் குடியேறினர். பல தலைமுறைகளாக அவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்து, தமிழகத் தொடர்பை அறவே இழந்து விட்டனர். நானும் அவ்வாறுதான். எனது அனைத்து கல்வியும் சிங்கப்பூரில் பெற்றதாக உள்ளது. உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்று முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். அதோடு இந்தியா தவிர மற்ற ஏனைய நாடுகளில் கல்விப் பணியும் ஆராய்ச்சிப் பணியும் மேற்கொண்டுள்ளேன். குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் எனது பெயர் பல நிலைகளில் முன்வைக்கப்படுகிறது.
இதுவரை நான் கூறியது எனது பணி சார்ந்த வாழ்க்கை. சிங்கப்பூரில் தமிழ் ஒரு ஆட்சி மொழியாக உள்ளது. தமிழ் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் இடம்பெற பலர் பாடுபட்டுள்ளனர். அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பள்ளிக்கூட நாட்களில் என் மனதில் எழுந்தது. 1965-லிருந்து உயர்நிலைப் பள்ளியில் தொடங்கிய தமிழ்ப் பணியானது, பின்னர் பல்கலைக்கழகம், சமுதாய அமைப்புகள் என விரிவடைந்து, இன்று பல பலன்களை சிங்கப்பூரில் ஏற்படுத்தி உள்ளது. பட்டக் கல்வி படித்தவர்கள், வாழ்க்கையில் நன்கு உயர்ந்தவர்கள், தமிழை முன்வைத்து செயல்பட்டால்தான் சிங்கப்பூரில் தமிழ் வாழும் – மலரும் என்ற சிந்தனை கொண்ட சிங்கப்பூர்த் தமிழர்களில் நானும் ஒருவன். காலம் தோறும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த சிங்கப்பூரில் பயின்ற இளைஞர்களைக் கொண்டு பல இயக்கங்களை நான் நடத்தி வந்துள்ளேன். அவை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவற்றில் சேர்ந்து பணியாற்றினர். இதில் ஒன்றை நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் அனைத்து இன மக்களும் ஆங்கில மொழி வழியாகத்தான் தங்கள் கல்வியை பெறுகின்றனர். தாய் மொழிகளாக தமிழ், சீனம், மலாய் ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. தமிழர்களின் குழந்தைகள், தமிழை தங்கள் தாய் மொழியாக, ஒரு பாடமாக பயின்று வருகிறார்கள். அதைப்போலவே பெரும்பான்மையாக உள்ள சீனர்கள் சீன மொழியை பயின்று வருகின்றனர். மலாய் காரர்கள் மலாய் மொழியை பயின்று வருகின்றனர்? ஆகையால் எனது பணி, எனது ஆராய்ச்சி, எனது வேலை அனைத்தும் ஆங்கில மொழி வழியாக சிங்கப்பூரில் செயல்படுத்தப்பட்டாலும், எனது வேலை நேரம் போக, ஓய்வு நேரம் என்று சொல்லுகிறோமே, அது போன்ற நேரங்களில், வார இறுதிகளில் தமிழ் மொழி சார்ந்த பணிகளையும், தமிழர் சமுதாயப் பணிகளையும் நான் ஆற்றி வந்துள்ளேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகச் சிறந்த திட்டங்களை அமுல்படுத்தி, தமிழையும் தமிழரையும் சிங்கப்பூரில் மேம்படுத்தி வந்திருக்கிறேன். இது எனக்கு உள்ளத்தில் மிகவும் உன்னதமான உணர்வை கொடுத்துள்ளது. 1965-இல் தொடங்கிய இந்த பணி எதிர்வரும் 2025-ல் 60 ஆண்டு காலத்தை முடிவுக்கு கொண்டு வரும்.
2.சிங்கப்பூர் கல்வி முறையில் மரபான கல்வி அமைப்பில் சில விமர்சனங்கள் தங்களுக்குண்டு என்பதை அறிந்தோம். அவைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு தற்போது புத்தாக்க செயல்பாடுகள் ஏதும் இருக்கிறதா?
சிங்கப்பூரின் கல்வித் திட்டம், பாரம்பரிய மொழிக் கல்வியில் உள்ள நல்ல பண்புகளை பாதுகாக்கிறது. அதே வேளையில், வளர்ந்த நாடுகளின் மொழி வளர்ச்சித் திட்டத்தில் உள்ள பல நற்கூறுகளை கல்வியில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் கல்வி என்பது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கற்பிக்கப்படுகிறது. இந்த சூழலில் அறிவியல், கணிதம் சார்ந்த அறிவார்ந்த துறைகளில், வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் பல கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. தாய் மொழிகளான தமிழ், சீனம், மலாய் போன்ற மொழிகளில் அந்தந்த நாடுகளில் உள்ள சிறந்த மொழிக் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டாலும், சிங்கப்பூரின் பல்லின சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், பல சிந்தனைகளும் கோட்பாடுகளும் கற்பிக்கப்படுகின்றன. ஆகையால் தமிழகத்தில் கற்பிக்கப்படும் தமிழ் மொழிப் பாடத்திட்டத்தை சிங்கப்பூரில் பின்பற்றுவதில்லை. சிங்கப்பூரில் தமிழ் மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதால் தமிழில் பேசுவதற்கு மாணவர்கள் மிகவும் ஊக்கம் தரப்படுகின்றனர். அதாவது தமிழை ஒரு பாடமாக படிக்கும் மாணவர்களில் சுமார் 10 விழுக்காட்டினர் தமிழ் மொழியில் ஆழ்ந்த சிந்தனைகளில் எழுதக்கூடிய ஆற்றல் உடையவர்கள். ஏனையோர் தமிழை சரளமாக பேசும் மொழியாக வாழ்நாள் முழுவதும் பின்பற்றினால் போதும் என்ற சிந்தனை சிங்கப்பூரில் உள்ளது. வாழ்க்கைக்கு ஏற்ற சரியான கல்வியை ஆங்கிலம் வழி கற்பதில் கவனம் செலுத்துவதால், இந்த முறை சிங்கப்பூருக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் தமிழை தாய் மொழியாக படிக்கும் மாணவர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும், தமிழர்களிடம் தமிழில் உரையாட முடியும். அதேபோல உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களிடமும் அவர்களால் தமிழில் உரையாட முடியும். சிங்கப்பூரின் கல்வி முறை மிகவும் முன்னோக்கிய ஒன்றாக இருப்பதால் இது சாத்தியமாகிறது.
3.அரை நூற்றாண்டு கால சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்த தங்களின் ஒரு வரலாற்று ஆய்வுப்பார்வையின் நீட்சியாக சமகால சிங்கப்பூர் இலக்கியம் அதன் வளர்ச்சி, போக்குகள் குறித்த தற்போதைய பார்வை என்ன?
இந்த கேள்வி தொடர்பாக 1996-ஆம் ஆண்டு “சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ் மொழி” என்ற நூலை நான் வெளியிட்டுள்ளேன். அத்துடன் நான் முன் நின்று மதியுரை வழங்கிய பல அமைப்புகள் ஆண்டு தோறும் ஆய்வரங்க மாநாடுகளை நடத்தி சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் இடத்தையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளன. சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சி என்பது, தமிழ் இலக்கியத்தை அதன் உள்ளார்ந்த ஆத்மீக சிந்தனையாக கொண்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதே சமயத்தில் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்ப்பதோடு தமிழர் முன்னேற்றத்திலும் சமுதாயம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் பல காலகட்டங்களில் பல திட்டங்களை அமலாக்கம் செய்துள்ளேன்.
கடந்த 30 ஆண்டுகளில், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பலர் சிங்கப்பூரில் குடியேறி, குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். இவர்களுக்கு முன்னர் சுமார் 1940களில் இருந்து பலர் சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என பல துறைகளில் அவர்கள் பங்காற்றி உள்ளனர். புதிதாக வந்தவர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈடுபடும்போது அவர்கள் அதனை தங்கள் அடையாளத்தை முன் வைக்கச் செய்வதாக நான் உணர்கிறேன். அவர்கள் முடிந்த அளவுக்கு சிங்கப்பூர் சூழலில் தங்கள் படைப்புக்கள் அமைய வேண்டும் என்று முயன்று வருகின்றனர். அவர்கள் இந்த நாட்டின் அரசியல் – சமூக மாற்றங்களில் அதிகம் ஈடுபடாததால், இவர்கள் படைக்கும் படைப்புகளில் வரலாற்றுச் பின்னணிகள் இருந்தாலும் சிங்கப்பூரின் உயிர் துடிப்பு வருவதற்கு வழியில்லை என்று நான் நம்புகிறேன். இன்றைய நிலையில் சிங்கப்பூர் அரசு பலவகையான நிதி உதவிகளின் வழி இந்த புதிய எழுத்தாளர்களின் எழுத்தாக்கத்தை வளர்த்து வருகிறது. பலர் சிங்கப்பூரில் இளைஞரை தமிழ் இலக்கியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றின் முடிவுகள் எதிர்காலத்தில் தான் உணரப்படும்.
4.தென்கிழக்காசியாவில் தமிழ் வளர்ந்ததே வாணிபத்தால்தான் என்ற தங்களின் பார்வை நெடுங்கால வரலாற்று காலங்களோடு தொடர்புடையது . தற்போதய காலகட்டத்தில் அதன் வளர்ச்சித்தடம் சமகால அறிவு தலைமுறையோடு பொருந்திப்போகிறதா? ஒரு வணிக சமூக வளர்த்தெடுத்த தமிழ்ப்பணிகள் இப்போதைய தலைமுறையினரால் தொடரப்படுகிறதா?
காலனித்துவ நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் மொழி தென்கிழக்கு ஆசியாவில் மதிக்கத்தக்க வர்த்தக மொழியாக இருந்தது உண்மைதான். ஆனால் 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவில் குடியேறிய தமிழர்கள் மத்தியில் தமிழை வளர்த்தது பொருளாதாரத்தில் நடுநிலையில் இருந்தவர்களும் கடந்த காலங்களில் தமிழகத்தில் தமிழை எழுதப் படிக்கத் தெரியாமல் இங்கு குடியேறியவர்களும்தான். அவர்கள் தமிழை வளர்க்க வேண்டும் என தமிழ் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் ஆசிரியர்களை வரவேற்று தமிழை தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள். இக்காலத்தில் கூட தென்கிழக்கு ஆசியாவில் வழங்கப்படும் தமிழுக்கும் வர்த்தகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தென்கிழக்கு ஆசியாவில் வர்த்தக மொழி என்றால் அது சீனம், ஆங்கிலம் பின்னர் அந்தந்த நாடுகளில் உள்ள தேசிய மொழிகள் என்றுதான் நாம் கூற முடியும். தமிழ் மொழி வர்த்தக மொழியாக இன்று தமிழ் பேசுவோர் மத்தியில்தான் புழங்கப் படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் எந்த நாட்டுக்கு செல்கின்றோமோ அந்த நாட்டின் தேசிய மொழியில் வர்த்தகம் நடைபெறுகிறது.
5.தமிழ்நாட்டில் கலை இலக்கிய செயல்பாட்டிற்கும், சங்க இலக்கியம் உள்ளிட்ட செம்மொழி இயக்க செயல்பாட்டிற்கும் ஒரு முன்னோடி தளம் தொடர்ந்து வருகிறது. அதுபோன்ற ஒரு இயக்கம் சிங்கப்பூரிலும் அமைந்திருக்கிறதாக காணுகிறீர்களா…
சங்க இலக்கியம் தழுவிய பல அமைப்புகள் சிங்கப்பூரில் தோன்றி வளர்ந்துள்ளன. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முதலானவை சங்க இலக்கியத்தை முன்வைத்து பல நிகழ்வுகளும் மாநாடுகளும் நடத்தி வருகின்றன. ஏனைய பல அமைப்புகளும், அண்மைய ஆண்டுகளில் சங்க இலக்கியத்தைப் பின்பற்றி பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க மனிதர் திரு கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘தமிழ் இலக்கியப் பொழில் “ என்ற ஒரு அமைப்பை தோற்றுவித்து மாதம் தோறும் இணையம் வழியாகவும் நேரடியாகவும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதில் அவர் முழுக்க முழுக்க சங்க கால இலக்கியங்களையே முன்வைத்து செயல்பட்டு வருகிறார். மேலும் பலர் தமிழகத்தில் உள்ள சங்ககால இலக்கியத்தை முன்வைத்து செயல்படும் இயக்கங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர் . அத்துடன், சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் முதலான இடங்களில் சங்க இலக்கியத்தை முன்வைத்து செயல்படும் பல அமைப்புகளுடன் சிங்கப்பூர் தமிழர்கள் சங்க இலக்கியத்தை ரசிப்பதோடு படித்தும் பயன் பெற்றும் வருகின்றனர்.
6. கடந்த 10 ஆண்டுகளில் தாங்கள் பாராட்டத்தக்க பல நூல்களை வெளியிட்டு இருக்கிறீர்கள். அவற்றில் சிலவற்றை இங்கு எடுத்துக் கூற முடியுமா?
ஆங்கிலத்தில் பல தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளேன் அவை பெரும்பாலும் சிங்கப்பூர் உட்பட இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் வரலாற்றைப் பற்றியவை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழை முன்வைத்து பல நூல்களை வெளியிட்டுள்ளேன். சிங்கப்பூர் 2019-இல் தனது 200-வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடியது. அந்த சமயத்தில் “சிங்கப்பூர்த் தமிழர்கள் இருநூற்றுவர்” என்ற நூலை வெளியிட்டு தமிழுக்கும் தமிழருக்கும் சிங்கப்பூருக்கும் பணியாற்றிய 200 தமிழர்களை பாராட்டி உள்ளேன். அதன் பின்னர் 1880 களுக்கும் 1940 களுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிங்கப்பூரில் வாழ்ந்த முக்கிய தமிழர்களை பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளேன். அதன் பெயர் ‘மலாயா மான்மியம்”. அந்த காலகட்டத்தில், இன்றைய மேற்கு மலேசியா சிங்கப்பூர் முதலான இடங்களை மலாயா என்று அழைத்தனர். நான் மதியுரைஞராக உள்ள சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் என்ற அமைப்பு 2017-இல் தனது அறுபதாவது ஆண்டு விழாவை கொண்டாடியது. அதன் 60 ஆண்டுகால வெளியீடுகளை ஒன்று திரட்டி நூல் ஒன்றை வெளியிட்டுள்ளேன். 2022&ஆம் ஆண்டில், “சிங்கப்பூர் தமிழர் இருநூற்றுவர்’ என்ற நூலின் இரண்டாவது தொகுப்பினை வெளியிட்டுள்ளேன். அத்துடன் 1977-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வந்த பல ஆய்வரங்க மாநாட்டுத் தொகுப்புகளை தமிழில் நூற்களாக வெளியிட்டுள்ளேன். எனது வாழ்நாள் முழுவதும் எந்த அமைப்புக்கும் நான் தலைவராக பணியாற்றியது இல்லை. நான் உதவிய எல்லா சமூக அமைப்புகளிலும் நான் மதியுரைஞர் என்ற பெயருடன் இளைஞரை முன்வைத்து மாபெரும் திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் வெளியீடுகளையும் சாதித்து வந்திருக்கிறேன். இதற்கு சிங்கப்பூர் தமிழ் சமுதாயத்தில் உள்ள பல செல்வந்தர்களைப் பாராட்டுகிறேன். என்னோடு இணைந்து செயல்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞரையும் நண்பர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் எனது பணிக்கு அவ்வப்போது நிதி ஆதரவு தந்து நான் முன்வைத்த இளம் தலைவர்களையும் அவர்கள் பாராட்டி வந்துள்ளனர். இந்த நூல் வெளியீடுகளால், சிங்கப்பூரில் தமிழ் மொழி வரலாறு, தமிழர் வரலாறு முதலானவை ஒரு முழுமையான பார்வையைப் பெற்றுள்ளன என்று நம்புகிறேன். இது எதிர்காலத்தில் சிங்கப்பூர் தமிழர் வரலாற்றுக்கு மிகவும் பயனுள்ள ஆதாரங்களாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.