நேர்காணல் தொகுப்பு: மணலி அப்துல் காதர்
![](https://serangoontimes.com/wp-content/uploads/2024/09/Manali_abdul_kadar.jpg)
“The Vegetarian நாவல் உண்பதற்கான விடுதலையையும், ஒரு பெண்ணின் மீதான வன்முறையையும் காட்டுகிறது”
அண்மையில் 2024 ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் தென்கொரியர் ஹான்காங் (1970) அவர் எழுதிய The Vegetarian நாவல் நோபல் பரிசை தட்டிச் சென்றது. ஹான்காங் அவர்கள் 1970ல் பிறந்து 1993ல் சிறந்த எழுத்தாளராக அறிமுகமானவர். யி சாங் இலக்கிய விருது, மான்ஹே இலக்கிய விருது, சர்வதேச புக்கர் விருது. 2024ல் நோபல் பரிசு பெற்ற இவர் சியோல் கலைக்கல்லூரியில் “படைப்பாக்க எழுத்துத்துறையில்” பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது ஐந்து நாவல்களில் ஒன்றான The Vegetarian நாவலை ஆங்கிலத்தில் டெபேரா ஸ்மித் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். 2016 ஆம் ஆண்டில் இந்த படைப்பு “மேன் புக்கர்” விருதை பெற்றிருக்கிறது. சைவ உணவுக்கு மாறுவதன் முலம் கட்டுப்பாடு மிகுந்த கொரிய சமுக வழக்கங்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் ஒரு மணமான பெண் அதன் காரணமாகவே அவளது கணவரின் பாலியல் வக்கிர நடவடிக்கைகளுக்கு உள்ளாகுவதையும் இந்த நாவலின் மையமாக படைத்திருக்கிறார். புக்கர் பரிசு வென்ற போது பரிசுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்காணல் நிகழ்விலும் அதன் பிறகு கொரிய அமெரிக்க எழுத்தாளர் கிறீஸ்லீ எடுத்த நேர்காணலும் இங்கே சிராங்கூன் டைம்ஸ் வாசகர்களுக்கு இரண்டு பகுதிகளாக தொகுத்து வழங்குகிறோம். இந்த நேர்காணலை தமிழ்ச்சூழலில் பதிவு செய்த தோழர்கள் நன்மாறன் திருநாவுக்கரசு, அவை நாயகன் ஆகியோருக்கு நன்றிகள்.
நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?
எழுவது என்பது எனக்கு ஆன்ம விசாரணை போன்றது. நான் விடையைக் காண முயற்சிப்பதில்லை. ஆனால் விசாரிப்பை முழுமையாக்க அல்லது என்னால் முடிந்த அளவுக்கு அந்த விசாரணைக்குள்ளேயே நீடித்திருக்க எழுதுகிறேன். ஒரு வகையில் புனைவெழுதுதலை முன்னும், பின்னும் இசைந்தாடுதலுடன் ஒப்பிட முடியும். அவைகள் உங்கள் உள்ளத்தில் கொந்தளிப்பையும் அமைதியையும் உண்டாக்கும்.
நீங்கள் எப்படி எழுத்தாளர் ஆனீர்கள்?
இலக்கியங்களால் சூழப்பட்டது என் இளமை பருவம். தந்தை ஓர் எழுத்தாளர். அறைகலன்கள் கூட இல்லாத சிறு வீடு எனது. அதனாலேயே அடிக்கடி வீடு மாற்றிக்கொண்டிருப்போம். என் தந்தைக்கு நூல்கள் சேகரிப்பதில் பெரும் விருப்பம். முலை முடுக்கெல்லாம் புத்தகங்கள் குவிந்து கிடக்கும், கதவு, ஜன்னல் தவிர. விடுதலை உணர்வோடு வாசிக்க ஆரம்பித்தேன். சவாலான நூல்களையும் மகிழ்ச்சியோடு வாசிக்க முடிந்தது. வாசிப்பை விரும்புகிறேன் என்பதும் புரிந்தது. அதனால் எழுத்து இயல்பாகவே தொடர்ந்து விட்டது. நான் யார்? எனது நோக்கம் என்ன? மனிதர்கள் ஏன் சாகவேண்டும்? மரணத்திற்கு பின் எங்கே போவார்கள்? என்பது போன்ற என் இளமைக்கே உரிய கேள்விகள் எழுந்து அழுத்த மீண்டும் புத்தகங்களுக்குள் சரண் புகுந்தேன். அங்கு எனக்கு விடை கிட்டவில்லை. எழுதுவதற்கு அதுதான் என்னை ஊக்குவித்தது. எழுத்தாளராக முடியும் என்பதையும் காட்டியது. அதுவும் கேள்விகளுக்குத்தான், பதில்களுக்கு அல்ல.
The Vegetarian நாவல் முதலில் முன்று குறுநாவல்களாக எழுதப்பட்டு பின்பு ஒரே நூலாக மாற்றப்பட்டது. இந்த ஆக்கத்தை குறித்து உங்களால் பகிர்ந்துகொள்ள முடிந்தால் சிறப்பாக இருக்கும்?
நல்லது. 1997ல் நான் The fruit of my Woman என்ற சிறுகதையை எழுதினேன். அது ஒரு பெண் தாவரமாக மாறுவதை பற்றிய கதை அவளுடன் வாழ்ந்து வரும் மனிதன் அவளை அவர்களின் குடியிருப்பு பலகணியில் உள்ள தொட்டியில் வைப்பான். அவளுடன் சேர்ந்து வாழ்ந்த காலக்கட்டத்தில் அவளை புரிந்து கொள்வதில் சிரமம் அடைவான்.
ஆனால் அவள் சில கனிகளை இலையுதிர் காலத்தின் முடிவில் விளைவித்தாள். ஜன்னல் சட்டத்தில் சாய்ந்தவாறு அவன் கைகளில் ஏந்திய அக்கனிகளை பார்த்தபடி அவள் அடுத்த ஒரு வசந்த காலத்தில் மீண்டும் மலர்வாளா என்று வியப்படைவான். இந்த கதை வெளியானவுடன் இது இத்துடன் முடியவில்லை என்ற உணர்வு ஏற்பட்டது. அதை மீண்டும் மாற்றி எழுதிட விரும்பினேன். பின்னர் The Vegetarian நாவலை எழுதும் போது அது தீவிரமிக்கதாகவும், வேதனை மிகுந்ததாகவும் மாறி இருப்பதை உணர்ந்தேன். இதை நான் 2003ல் எழுதத் தொடங்கி முன்று பாகங்களாக முன்று வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியிட்டேன். முன்றாவது பாகத்தை 2005ல் வெளியிட்டேன்.
சர்வதேச புக்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் கொரியர் நீங்கள் தான், வெற்றியை எப்படி உணர்ந்தீர்கள்? உங்களது வெற்றியின் மூலம் கொரிய புனைவுகளுக்கு அதிக கவனம் கிடைப்பதாக நினைக்கிறீர்களா?
நான் The Vegetarian நாவலை 2003-2005 ஆண்டுகளுக்கிடையே எழுதினேன். 2016ல் அது புக்கர் பரிசை வென்றது. புக்கர் பரிசு பெற்ற பின்னர் தான் எனது மற்ற படைப்புகளான Human Acts, The White Book, Greek Lesson போன்றவைகள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. தற்போது கொரிய எழுத்தாளர்களின் பல்வேறு படைப்புகள் மென்மேலும் மொழி பெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் பதிப்பு செய்யப்படுகின்றன. கொரிய இலக்கியங்களில் நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகியிருக்கின்றனர். இந்த நிகழ்வுகள் புக்கர் பரிசு வென்றதன் தொடர்புடையதாகத் தான் தோன்றுகிறது.
உங்கள் நாவல் 1997ல் வெளியான The Fruit of My Woman சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. அதை ஒரு முழு நாவலாக்க உங்களுக்கு எது ஊக்கமளித்தது?
The Fruit of My Woman எழுதிய பிறகே அந்தக்கதையின் இன்னொரு வடிவத்தையும் எழுத வேண்டுமென்று எண்ணினேன்.The Vegetarian நாவலில் தான் அதனை செய்ய முடிந்தது. இந்த நாவலின் முதல் பகுதி அசல் கதையின் பல சுவடுகளை தக்க வைத்துள்ளது. The Vegetarian இன்னும் இருண்மையானது. அதிதீவரமானது. வலி நிறைந்தது. The Fruit of My Woman ல் நிகழ்வது போல அமானுஷ்யங்கள் எதுவும் கிடையாது. கதாப்பாத்திரங்களும் குரூரமான யதார்த்தத்தின் மத்தியில் அழிவை நோக்கி அமிழ்கின்றன.
The Vegetarian நாவல் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாவலுக்கான எதிர்வினை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக இருந்ததா? அவைகள் ஏற்படுத்திய அதிர்வுகள், எதிர்வினைகள் பற்றி…
எனது படைப்பு வெவ்வேறு கலாச்சாரங்களுக்கிடையே நுண்ணிய வேறுபாடுகளுடன் வாசிக்கப்பட்டு விளக்கம் கொள்வது ஆவலை தூண்டுகிறது. இதை விட ஆச்சர்யம் இந்த நாவல் எல்லா இடங்களிலும் பெண் வாசகர்களால் அதிகம் அரவணைக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட்டதுதான்.
உங்கள் படைப்பு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதில் குறிப்பிட்ட அளவிலான சர்ச்சைகள் இருந்ததாக சொல்லப்பட்டது. அதன் அனுபவம் எப்படி இருந்தது?
பலரும் வெளிப்படுத்திய மொழிபெயர்ப்பாளர் முலப்பிரதியை மதிப்பிழக்க செய்தார். அசலை விட முற்றிலும் மாறுபட்ட படைப்பாக உருவாக்கினார் என்பதை நான் நம்பவில்லை. மேலும் மொழியாக்கம் அதன் இழப்பையும் புத்தாய்வையும் உள்ளடக்கிய மிகவும் கடினமான சிக்கலான செயல்பாடாகும். கலாப்பூர்வமான தன்மை, கவித்துவ இறுக்கம், நுணுக்கம், அர்த்த அடுக்குகள், மூலமொழியின் கலாச்சார சூழல் போன்றவைகள் அந்த மொழியில் மட்டுமே சாத்தியமான அனைத்தும் வேறு மொழிக்கு மாற்றம் அடையும்போது தவிர்க்க முடியாமல் இழப்பை சந்திக்கின்றன. மொழிபெயர்ப்பில் கண்டறியப்பட்ட பிழைகளை எனக்குமின்னஞ்சல் முலம் பலர் தெரிவித்தனர். மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு வாக்கியத்தையும் தளரா உழைப்புடன் தான் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
The Vegetarian அழகுடன் திகிலை ஒன்றிணைக்கிறது. இந்த கதை சில இடங்களில் குரூரமான அதிர்ச்சிகரமான உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறை காட்சிகளை கொண்ட மரணத்தின் அறிகுறி ஆகியவற்றை பற்றியதாக இருக்கிறது. இதுபோன்ற இருண்ட கருப்பொருள்களையும் மனித நடத்தைகளையும் எழுதுவதற்கு எது உங்களை அழைத்துச் சென்றது?
உலகை பற்றியும், மனிதநேயம் பற்றியும் நான் கொண்டிருக்கும் கேள்விகளை முன்று பிரிவுகளாக இரண்டு சகோதரிகள் தனிமையில் அழுவதை பற்றியதாக முன்வைக்க விரும்பினேன். ஒருத்தி மனித இனத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்த விரும்பி இறைச்சி சாப்பிட மறுக்கிறார். தான் தாவரமாக மாறிவிட்டதாக நம்புகிறாள். மற்றொருத்தி தன் சகோதரியை மரணத்திலிருந்து காப்பாற்ற விரும்பி சச்சரவில் உழன்று தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்கிறாள். நான் நாவல்கள் எழுதும் போது என்னை எழுத தூண்டிய கேள்வியின் எல்லையை அடைய முயற்சிப்பேன். விடையை அல்ல. மனிதனாக இருப்பதன் அர்த்தம் குறித்த எனது கேள்விகளை தவிர்க்க முடியாமல் அத்தகைய தீவர காட்சிகள் படிமங்கள் ஊடாக செல்ல நேரிடுகிறது.
காட்சி படிமவியல், தொடர்ந்து சம்பவிக்கும் உருவக கூறுகளும் இந்த கதையில் அடங்கியுள்ளன. இவைகளை கதையில் எழுத வேண்டுமென்ற நோக்கம் இருந்ததா அல்லது இயல்பாக உருவானதா?கதையில் இவைகள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன?
நான் புனைவு எழுதும் போது உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். செவிப்புலன். தீண்டுதல், காட்சிப்படலங்கள் போன்ற தெளிந்த உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த உணர்வுகளை மின்னோட்டம் போன்று என் வாக்கியங்களுக்குள் புகுத்துகிறேன். விநோதமாக என் வாசகர்கள்அந்த மின்னோட்டத்தில் புரிந்து கொள்கின்றனர். அந்த இணைப்பின் அனுபவம் ஒவ்வொரு முறையும் எனக்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
The Vegetarian நாவல் மீது பல விமர்சகர்களும் அதை கொரிய சமூகத்தின் மீதான, ஒழுக்கத்தின் மீதான, ஆணாதிக்க நெறிமுறைகள் மீதான வரம்பு மீறல் தன்மை கொண்ட விமர்சனமாகவும், நீதியை பேசும் கதையாகவும் உணர்ந்தார்கள். இந்த நிலையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
ஆணாதிக்கத்துக்கு எதிரான நீதிக்கதையாக இந்த நாவலை வாசிக்கலாம் என்பதனை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் இது கொரிய சமூகத்துக்கு மட்டுமே உரித்தானதல்ல. இது உலகளாவியது. நான் குறிப்பாக கொரிய சமூகத்தை மட்டும் உருவகப்படுத்த முயலவில்லை.
புக்கர் பரிசு மட்டுமல்லாமல் யி சாங் பரிசையையும், The Vegetarian வென்றது. விமர்சன ரீதியான பாராட்டுகள், உலகின் சிறந்த புத்தகங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றது, இவைகள் அதற்கடுத்த எழுத்து நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
The Vegetarian ஐ எழுதுவதற்கு நான் செலவிட்ட மூன்று ஆண்டுகளும் எனக்கு கடினமான நாட்கள். அந்த நாவல் ஒரு நாள் இத்தனை வாசகர்களை சென்றடையும். என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. அந்நேரத்தில் நாவலை முடிக்க முடியுமா என்றும், எழுத்தாளராக பிழைக்க முடியுமா என்றும் நம்பிக்கையின்றி இருந்தேன். என் விரல்களில் வீக்கம் ஏற்பட்டு துன்புற்று வந்தேன். அதனால் நான் முதல் இரண்டு பகுதிகளை நிதானமான வேகத்தில் எழுதினேன். தாளில் வழுக்கிக்கொண்டு செல்லும் மிருதுவான முனையுடைய பேனாவை பயன்படுத்தி எழுதினேன். இரண்டு பால்பாய்ண்ட் பேனாக்களை தலைகீழாக பிடித்தபடி இறுதி பாகத்தை தட்டச்சு செய்து முடித்தேன். எப்படியோ என் வாழ்க்கையின் அந்த காலக்கட்டத்தை கடந்து வந்து நாவலை நிறைவு செய்தேன். The Vegetarian நாவலின் கடைசி காட்சியில் யேங் ஹேயின் சகோதரிமருத்துவ ஊர்தியில் அமர்ந்தபடி சாளரத்தின் ஊடாக பதிலுக்காக காத்திருப்பது போல எதையோ வெறித்து பார்ப்பார். உண்மையில் முழு நாவலும் பதிலுக்காக காத்திருப்பது போலவும் எதையோ எதிர்பார்ப்பது போல உணர்கிறேன். பொதுவாக ஒரு நாவலை எழுதி முடித்த பிறகு என்னிடம் மிச்சம் இருக்கும் கேள்விகள் அடுத்த நாவலை எழுதுவதற்கு என்னை உந்தித்தள்ளும்.
உங்களது The Vegetarian மற்றும் Human Act நாவல்களில் பலவந்தமான அமைதியை குலைக்கும் வன்முறை மற்றும் கோரமான காட்சிகள் வருகின்றன. இந்த காட்சிகளை எழுதும் போது உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது?
இந்த இரண்டு நாவல்களும் மனித வன்முறையையும் மேன்மைக்கான சாத்தியங்களையும் வலியோடு அணுகுகிறது. வன்முறை காட்சிகளை விபரிப்பது எனக்கு மிகக்கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும், அதன் வழியே ஊடுருவித்தான் மனிதனாய் இருப்பது குறித்தான என் கேள்விகளை அலசி ஆராய வேண்டியிருந்தது.
“மனிதர்கள் அச்சமூட்டுபவர்கள் அவர்களில் நானும் ஒருத்தி”
மனிதர்கள் அச்சமூட்டுபவர்கள் அவர்களில் நானும் ஒருத்தி என்று தாங்கள் கூறியதாக மேற்கோள் காட்டப்படுகிறது. அதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
1980 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வாங்சு கிளர்ச்சி/படுகொலைகள் அதன் சாட்சியங்களை ஏற்படுத்தும் விதமாக புகைப்பட புத்தகங்கள் ரகசியமாக அச்சிட்டு சுற்றுக்கு விடப்பட்டன. என்னுடைய தந்தையின் புத்தக அலமாறியில் அதுபோன்ற ஒரு புகைப்பட புத்தகத்தைக் கண்டேன். அது ஒரு வகையில் என் வாழ்வை தீர்மானித்த அனுபவமாக மாறியது. அந்த புகைப்பட புத்தகம் ஏராளமான இறந்தவர்களின் முகங்களையும், அதில் ஆழமான காயங்களையும் கண்டேன்.புகைப்பட புத்தகத்தின் இறுதி பகுதியை நான் அடைந்த போது மனிதர்கள் அச்சமூட்டுபவர்கள் என்று நான் நினைத்துக்கொண்டேன்.
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தனிமை என்பது தனது படைப்புகளில் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருவதாக குறிப்பிடுவார். ஓர் எழுத்தாளராக மனிதப்பிறவியாக இதுபோன்ற கருத்துக்களும், ஊடாடட்டங்களும் வந்து நம்மை வந்து ஆட்டிப்படைக்கின்றன என நம்புகிறேன். இதைத் தொடர்ந்து ஆராய்வதற்கான ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கிறதா?
நுட்பமான கேள்வி இது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் என் முதல் நாவலை எழுதினேன். எது என்னை எழுதத் தூண்டியதோ, உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்ததோ, எதை எழுத முடியாதோ அதை எழுதினேன். ஆனால், எழுதத் தொடங்கிய பின் என்னை எது தொந்தரவு செய்ததோ, எதையெல்லாம் பற்றிப்பிடித்திருந்தேனோ அவற்றை பிறகும் தொடர முடியும் என்பதையும் ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். ஏதோ ஒன்றை பற்றி மட்டுமல்ல, மனித வன்முறை என்பதன் மீதான கேள்விகளுக்கு நான் திரும்ப வேண்டியதுதானே என்ற கேள்வியை அது எழுப்பியது. வன்முறை என்பது மனிதப்பண்பாக இருக்கிறது என்றாலும், அது இன்னொரு மனிதப்பிறவியால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதுபோன்ற துன்பங்கள் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன.
ஒரு பிரபல விமர்சகர் உங்கள் படைப்புகளை வாசிப்பதற்கு ஒரு வேறுபட்ட மனநிலை இருக்க வேண்டும் என்கிறார். இதுபற்றி…
எனது நாவல்கள் மனித துயரங்களை நேரடியாக ஆராய்கின்றன. வெட்கித் தலை குனியாமல் அதன் ஆழங்களுக்கு செல்ல முற்படுகின்றன. ஒருவரின் பின்புலமாக இருக்கும் உண்மையை ஆய்வது என் போக்கு. ஆகவே, 1980 படுகொலை சம்பவங்களை பற்றி எழுதும் அதில் உள்ள சோகங்களை நான் விவரிக்கும்போது அந்த அனுபவத்தை உணர்வதற்கு ஒரு விதமான மனநிலை தேவை என்பதை அவர் கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மொழிக்கும், உங்களுக்குமான படைப்பு ரீதியான உறவை அறிந்துக் கொள்ள விரும்புகிறோம்…
இருபது ஆண்டுகளாக நான் எழுதிய கவிதைகளை நூலாக்கினேன். அதில் சொற்களும் காட்சி உருக்களும் இவ்வகையில் தெரிபவை. தனிப்பட்ட முறையில் மொழி என்பது எளிதில் கையாள இயலாத ஒரு கருவி என்றே நினைக்கிறேன். சில நேரங்களில் அதனால் முடியாமலும் போகலாம். இன்னும் சில சமயங்களில் நாம் சொல்ல வேண்டியதை வெற்றி கரமாக அது கடத்திவிடும். ஆயினும், அதை துல்லியமானது என்று அழைக்கவும் முடியாது. அதற்கும் மேலாக அது தோல்வியைத் தழுவும் எனத் தெரிந்திருந்தாலும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். ஏனென்றால், என்னிடம் இருக்கும் கருவி அது ஒன்றுதான். எழுத்தில் நான் தோற்கும்போது ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்.
கொரிய படைப்புலகம், எழுத்தாளர்கள் பால் பேதம் பற்றி…. உங்களுக்கு வேறு கண்ணோட்டம் இருக்கிறதா?
பெண் என்பதற்காக நான் எங்கும் பாகுபாடாக நடத்தப்படவில்லை. இது கொரியாவில் சாதாரணம். இன்னொரு காரணம் திறமையான பெண் எழுத்தாளர்கள் அதிகம் என்பதால் இலக்கிய உலகம் அவர்களை விடுவித்து இயங்காது சரிந்துவிடும். பிற நாடுகளில் காணமுடியாத அளவுக்கு கொரிய இலக்கிய உலகில் பாலின சமத்துவம் மதிக்கத்தக்கதாக இருந்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனினும், இதர கலைத்துறைகளில் அது வேறுபட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக உள்ளுர் திரைப்படத் தொழில் மிகவும் பழமையின் மாதிரியாகஇருக்கிறது. கொரிய திரைப்பட உலகை இன்னும் ஆண் இயக்குனர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். இதைப்பற்றியும் நான் சிந்தித்தாக வேண்டும்.