வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள் !! எல்லா வருடமும் போல இந்த வருடமும் சிங்கையில் லிட்டில் இந்தியா தீபாவளி ஒளியூட்டு விழா தொடங்கி, பல்வேறு நிகழ்ச்சிகள், விழாச் சந்தைகள் என களை கட்டியது. பல்லின பன்மொழி நாடான சிங்கையில் தீபாவளி போன்ற முக்கிய விழாக்கள் மக்கள் மனங்களை ஒன்றிணைக்கும் பணியை செவ்வனே செய்துவருகின்றன.
வருடந்தோறும் நிகழும் “சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழா” வழமை போல அடுத்த மாதம் “இயற்கையும் நம் இயல்புகளும்” என்ற கருப்பொருளில் 2 வாரங்களுக்கு நடக்க இருக்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்களுடனான உரையாடல்களுக்கு சிங்கை வாசகர்கள் தயாராகி வருகிறார்கள். சிராங்கூன் டைம்ஸ் நிறுவனர் திரு. முஸ்தபா அவர்கள் தமது அறக்கட்டளை மூலம் இலங்கை தென்கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்விருக்கை நிறுவவும், இரண்டு விருதுகள், புலமைப்பரிசில் போன்றவை வழங்கவும் திட்டம் வகுத்திருக்கிறார். அது பற்றிய மேலதிக செய்திகள் அடுத்த மாதம் விவரமாக வெளிவரும்.
![](https://serangoontimes.com/wp-content/uploads/2024/06/Barcode.png)
மத்தியகிழக்கிலும், உக்ரைனிலும் அதிகரித்துவரும் சண்டைகளும் சச்சரவுகளும், அவை தொடர்பான உலநாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் பொதுமக்க்ளை கவலையில் ஆழ்த்திவருகின்றன. சரி தவறுகளைத் தாண்டி சாதாரண மக்களின் உயிரிழப்புகளும், உணவுக்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவும் மக்கள் அல்லாடுவது மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நிலைமையில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் என்று மக்கள் எதிர்நோக்குகிறார்கள்.
அனைத்திற்குமிடையில், முன்னாள் மூத்த அமைச்சர் திரு.ஈஸ்வரன் மீதான அதிக விலைமதிப்புள்ள பொருட்களை அன்பளிப்பாகப் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான வழக்காடல் முடிவிற்கு வந்து 12 மாதங்கள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பாகியுள்ளது. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமைச்சர் மீதான குற்றவியல் வழக்கும் இத் தீர்ப்பும் ஒரு வகையில் சிங்கை அரசின் ஊழல், இலஞ்சங்களுக்கு எதிரான தீவிரமான நிலைப்பாட்டை மறு உறுதி செய்து, இவை சகித்துக்கொள்ளவோ நீக்குப்போக்குக் காட்டவோ தகுதியற்றவை என்பதை நிறுவுகிறது என்றாலும், தமிழர் என்ற முறையில் கூடுதல் வருத்தமே.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை [email protected] முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.