(நிகழ்வு) – உலகைத் தமிழுக்கும் – தமிழை உலகுக்கும்

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2025

மணலி அப்துல் காதர்

மூன்றாவது சர்வதேச புத்தகக்காட்சி (ஜனவரி 16-18) சிறப்புமிகு செயல்திட்டங்களுடன் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் எந்த மாநிலமும் முன்னெடுக்காத அறிவின் சாளரங்களை எல்லைகள் கடந்த திசைகளிலிருந்து தமிழ்நாடு அரசு திறந்து வைத்திருக்கிறது. “உலகைத் தமிழுக்கும்; தமிழை உலகுக்கும்” (Bringing the Word to Tamil; Taking Tamil to the world) என்ற உயரிய நோக்கில் அறிவுசார் கொண்டாட்ட நிகழ்வாக இப்புத்தகக்காட்சி முன்னெடுக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சர்வதேச புத்தக காட்சியில் 24 நாடுகள் பங்குபெற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது சர்வதேச புத்தகக்காட்சியில் 40 நாடுகள் பங்குபெற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. இந்த ஆண்டில் 60 ற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்புலக ஆளுமைகளும், இலக்கிய முகவர்களும் கலந்து கொண்டனர். ஒரு மாநிலத்தில் நடக்கும் நிகழ்வா? அல்லது இந்திய நாட்டின் தலைநகரத்தில் நடக்கும் நிகழ்வா? என்று வியக்கும் வண்ணம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இந்த புத்தக காட்சியில் 78 அரங்குகள் உலகத்தரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. மேலும் சிறார்களுக்காக 3 அரங்குகள்  சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. ஆண்டுதோறும் ரூபாய் மூன்று கோடி தமிழ்நாடு அரசால் மொழிப்பெயர்ப்பு நல்கையாக வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிதி நல்கையை பயன்படுத்தி 166 தமிழ்நூல்கள் 32 மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களை, தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழர் பண்பாட்டை ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் மூலம் உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பணியை Oxford University Press, Penguin Random House, Harber Haullings, Hachette, Bloomberg, RoutLedge போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்கள் மூலமாக வெளியிடப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கு கிடைத்திருக்கிற உலகளாவிய சிறப்புகளில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு 2025 மூன்றாவது புத்தகக்காட்சியில் தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1005 ஒப்பந்தங்களும், அயலக மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக அரபு மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்சு மொழிக்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழிக்கு 28 ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சென்னை பன்னாட்டு புத்தக காட்சி தூதர் விருதுகள் PWB Global, Ambassador, Asian Publishing Association, African Publishing Network, Francophone போன்ற அமைப்புகளுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன. இந்த சர்வதேச புத்தககாட்சியின் மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் தங்கள் படைப்புகளை உலகத்தின் உச்சியில் அமரவைக்கும் அரிய வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இந்த நிகழ்வுகள் நமக்கு உதவுகின்றன.