(வாசிப்பு) உள்ளத்தின் குரல் – பிரேம் ராவத்

முனைவர்.ராஜி ஶ்ரீனிவாசன்

“இரைச்சல் மிகுந்த உலகில் அமைதி சாத்தியம்”

இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியைக் காண்பது எப்படி என்று ஒருவர் வினா எழுப்பி அந்த வினாவிற்கான விடையாக ஒரு நூலை ஆங்கிலத்தில் HEAR YOURSELF என்ற தலைப்பிட்டு நம்மிடம் அளிக்கிறார். அவர்  நூலாசிரியர் ப்ரேம் ராவத். “உள்ளத்தின் குரல்” என்னும் இதன் தமிழ் பதிப்பின் மூலமாக வாசகர்களை எவ்வளவு தூரம் சிந்தித்துச் செயற்பட வைக்க முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.  ரமண மகரிஷி போன்ற பல மகான்கள் “நான் யார்” என்னும் வினாவை எழுப்பச் சொல்லி நம்மை சுய சோதனைக்கு உட்படுத்தச் சொன்னதாக நாம் வாசித்து அறிந்திருந்தாலும் சம காலத்திய எழுத்தாளர் ஒருவர் அதை ஆராய்ந்து எடுத்துரைக்கும்போது அதில் மீண்டும் ஆர்வம் பிறக்கிறது. நம்முள் இருக்கும் பேரமைதியுடன் ஒன்றியிருப்பதால் நமக்குத் தெளிவு, அளவிடமுடியாத மகிழ்ச்சி, பரிபூரண அமைதி, நிறைவு எனப் பல அதிசயங்கள் நிகழும். இப்படிப்பட்ட அமைதியே உண்மையில் நாம் என்று அழகாக ஒரு சிக்கலான நூல்கண்டின் நுனியிலிருந்து தம் நூலை விரிவுபடுத்துகிறார். 

நமது சுய மன அமைதியை  நோக்கிய பயணம் ஒரு அகப் பயணம்.  நம்மைத் தவிர யாருமே அந்தப் பயணத்தை செய்யமுடியாது என்பது நமக்குத் தெரிவதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இந்த “உள்ளத்தின் குரல்” நூலை வாசிக்கும் போது விவேகம், இரைச்சல் மற்றும் கவனச் சிதறல் பற்றிய புதிய பரிமாணங்களை உணர்கிறோம். இந்த நூலின் மிகவும் அழகான இன்னொரு அணுகுமுறை அறிந்து கொள்வதை ஊக்குவிக்கிறது. Knowing is encouraged as opposed to holding on to beliefs. பரபரப்பான வாழ்க்கையில் கடந்த காலமும் எதிர்காலமும் இணைந்து நிகழ்காலத்தை நரகமாக்காமல் நாம் நிகழ் கணத்தில் வாழ்வதைப் பற்றி நூலாசிரியர் கூறுவதைப் படித்த போது எனக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒவ்வொரு கணத்திலும் அனுபவித்து வாழ்வதைப் பற்றி வலியுறுத்துவதுதான் நினைவுக்கு வருகிறது. நாம், நமது நேரம் அனைத்தும் தொழில்நுட்பத்திற்கு முழுமையாக அடிமையாகிவிட்டதைப் பற்றிய விழிப்புணர்வை இந்த நூல் அதிகம் தூண்டுகிறது.  நூலாசிரியர் தொழில்நுட்பத்திற்கு எதிராக செயற்கையாக எதுவும் கூறாமல் இயல்பாக தொழில் நுட்பம் நமக்கு சேவை செய்ய வேண்டுமேயொழிய நாம் அதற்கு அடிமையானால் அது எவ்வளவு தூரம் நமது உள்ளத்தின் குரலை கேட்க விடாது என்பதை அழகாக எடுத்துரைக்கிறார்.  

என்னை மிகவும் கவர்ந்தது நூலாசிரியர் அலாவூதீனின் அற்புத விளக்கை நமக்குக் கிடைக்கும் வாழ்க்கையோடு ஒப்பிட்டது. இந்த நூலின் 42 மற்றும் 43ஆம் பக்கங்களில் அவர் அற்புதமாக நம் சிந்தனையைத் தூண்டுகிறார்.  நம்மிடம் அலாவூதினின் பூதம் தோன்றி இந்த அற்புத விளக்கை 2 மணி நேரம் மட்டும் நீங்கள் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த நேரத்திற்குள் நீங்கள் எது வேண்டுமானாலும் அந்த விளக்கிடமிருந்து சாதித்துக்கொள்ளலாம் என்று சொன்னால் “அடடா 2 மணி நேரம் மட்டுமா வைத்துக் கொள்ள முடியும்? இன்னும் அதிக நேரம் வைத்துக் கொண்டால் நிறைய சாதித்து விட முடியும் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்.  இல்லாவிட்டால் இப்போது நேரம் நன்றாக இல்லை, அடுத்த வாரம் இந்த விளக்கை பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்வோமா?” என்றெல்லாம் நூலாசிரியர் நம்மிடம் பேசுகிறார்.  நமது வாழ்வு என்னும் இந்த விளக்கைத் தேய்த்து தேய்த்து மெருகேற்றி நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று திரு.ராவத் அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார். கையில் அகப்பட்ட அற்புதத்தை நாம் நழுவவிட்டுவிடக் கூடாது என்னும் அவரது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டால் நமது வாழ்க்கையை வாழும் முறையையும் உணர்ந்து கொண்டு விடுவோம்.

நூலின் 215 மற்றும் 216ஆம் பக்கங்களில் மற்றவர்கள் அமைதியாக வாழ விரும்பவில்லை என்றால் தனிமனித அமைதியை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற நம் பலரின் சிந்தனைக்கு விடையளித்து வழிகாட்டுகிறார். அவசியம் இந்த நூலின் தமிழ்ப் பதிப்பை அனைவரும் வாசித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக திரைப்படத்தின் முன்னோட்டம் போல ஆவலை மட்டும் தூண்டிவிட்டு இதற்கு மேல் இந்த பகுதியைப் பற்றிய விளக்கத்தை நான் சொல்லப் போவதில்லை.  

தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என நூலாசிரியர் உட்தலைப்பிட்டு மகாபாரதத்து அர்ஜுனனின் தேர்ந்தெடுத்தலை அழகாக வெளிச்சமிடுகிறார். அன்பின் இயல்பை 249ஆம் பக்கத்தில் இருந்து அத்தியாயம் 9ல் மிக அழகாக விவரிக்கிறார்.  காரணமே தேவையில்லாத அன்பு முழுமையானது; எளிமையானது; நெருப்பைப் போன்று தூயது பிரகாசமானது’ நம்முள் நிறைந்து இருப்பது’ அது இந்தத் தருணத்தில் வாழ்கிறது. முதலில் நம்மை நாமே நேசியுங்கள் என மிக அழகாக வலியுறுத்தி நம் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து விடுகிறார்  நூலாசிரியர்.  

அடுத்ததாக நூலாசிரியர் தெய்வீகத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் என அத்தியாயம் 10இல் வாசகர்களை ஊக்குவிக்கிறார். உடனே இதற்கு மதச் சாயம் அடிக்க வேண்டாம். மதங்களைக் கடந்து மானுடத்தின் அடிப்படையான அற்புத குணத்தை நம்முள் வளர்த்துக் கொள்ளும் போது தெய்வீகத்தன்மையாக அது வெளிப்படுகிறது. நம் இருத்தலே பேரானந்தம் என்னும் மிகப் பெரிய உண்மையை ஆன்மீகம் மட்டுமல்லாமல் மானுடவியலும் கூறுகிறது. கருணை மூலம் எங்கும் நிறைந்துள்ளதுடன் ஐக்கியமாகுங்கள் சுதந்திரமாக இருங்கள் என்னும் நூலாசிரியரின் கோரிக்கையை ஆழமாக சிந்திக்க வேண்டும்.

rajisreenivasan21@29022020bk

சென்ற ஜனவரி 25ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை, தேசிய நூலக வாரியம், தமிழ்ப் பட்டிமன்ற கலைக்கழகம், MASTERS ACADEMY OF SPEECH AND TRAINING (MAST) Singaporeஇன் ஆதரவுடன் ‘நுண்ணறிவுக் கழகம்’ முதன் முறையாக NLB, Possibility அறையில் மேனாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் உலகத் தமிழ் மாமணியுமான இரா.தினகரன் அவர்களைச் சிறப்பு விருந்தினராகக் கொண்டு பிரேம் ராவத் அவர்கள் எழுதிய “Hear Yourself” என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் தமிழ் பதிப்பை “உள்ளத்தின் குரல்” என்று வெளியிட்டுள்ளனர். திரு.இரா.தினகரன் நூலின் சிறப்புகளை அழகாக எடுத்துரைத்தார்.  நூலைப் பற்றிய ஒரு நேர்காணலை The Serangoon Timesஇன் திரு.மஹேஷ் குமார் அவர்கள் திரு.ராவத்தின் பிரதிநிதியாக கனடா நாட்டிலிருக்கும் திருவாட்டி.ஜானகி அவர்களுடன் இணையவழி நடத்தினார். அருமையான வினாக்களைக் கேட்டு நூலின் சிறப்பை முன்னிறுத்தினார்.  அடுத்ததாக MASTல் இருந்து முனைவர்.ராஜி ஸ்ரீநிவாசனும், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் தலைவரும்  நூலாய்வு செய்தார்கள். நுண்ணறிவுக் கழகத்தின் தலைவர் திரு.ரமேஷ் மற்றும் திருவாட்டி.சிவபிரியா அவர்கள் அவர்களது குழுவினரோடு சேர்ந்து அழகாக வரவேற்பு நடனம், உணவு உபசரிப்பு முதலானவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதன் முறையாக ஒரு பொது நிகழ்ச்சியை இவர்கள் நடத்தினாலும் நிறைவாகச் செய்த பெருமை இவர்களைச் சாரும்.