(கட்டுரை) நார்சிசம் அறிவோம்

0
845

நார்சிசம் என்ற வார்த்தை தற்காலச் சூழலில் எல்லோரும் வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் கேட்டிருப்போம். நார்சிசத்தின் உருவாக்கம் என்பது கிரேக்கத் தொன்மத்தில் இருந்து நமக்குக் கிட்டுகிறது. நார்சியஸ் என்ற அழகான ஆடவர் ஒருவர் தான் பேரழகன் என்கிற மிதப்பில் நாட்டில் உள்ள எந்தப் பெண்ணின் காதலையும் நிராகரிப்பவனாகவும், இறுதியில் கிரேக்க பெண் கடவுள் ஒருவரின் காதலை நிராகரித்தன் பலனாகத் தன்னைத்தானே காதலிப்பதெனும் சாபத்துக்கு ஆட்படுவதில் ஆரம்பிக்கிறது என்கிறது கிரேக்க தொன்மம். பின்னர், உளவியலாளர்களான ஹேவ்லாக் எலிஸ், ஒட்டோ ராங்க் மற்றும் சிங்மண்ட் ப்ராய்டு போன்றோர் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் மேலும் இது குறித்து அறியத்தந்தனர்.

நார்சிச ஆளுமைக் கோளாறு (Narcissistic Personality Disorder NPD) எனும் உளவியல் குணக் குறைபாடானது இன்று பலரையும் பீடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த குறைபாடு 1980ஆம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாக மருத்துவத்தில் அங்கீகரித்தார்கள்.

இந்தக் கோளாறு உள்ளவர்கள் குறித்தான விழிப்புணர்வு மக்களிடையே போதிய அளவு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆயினும் பலரும் இந்தச் சொல்லாடலை வெகு எளிதாகப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் இவ்வுளவியல் குறைபாடு உள்ளவர்கள் ஏன் அதற்கு உள்ளாகிறார்கள் என்பது அறிந்து கொள்வது முக்கியம். சிறு வயதில் மிகக் கண்டிப்பான பெற்றோரால் ஏற்பட்ட அவமதிப்பும் அவமானப்படும் சூழலும் நார்சிசம் என்ற குணச்சிக்கல் உருவாகக் காரணமாக அமைவதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். மேலும் மரப்பணுவுடன் தொடர்புடையதாகவும், சந்ததிகளுக்கு மரபு ரீதியாக கடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட மாறுதல் சிந்தனை மற்றும் நடத்தையில் மாற்றத்தைக் கொடுக்கும் எனவும், புறச்சூழல்களும் இதற்குக் காரணமாக அமைவதாகவும் மருத்துவத்துறை கண்டறிந்திருக்கிறது.

நார்சிசத்தில் பாதித்தவர்கள், தன்னைப்பற்றிய அதிகப்படியாகப் பெருமை கொள்பவர்களாகவும், பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாதவராகவும், தன்னை மட்டுமே பிறர் தொடர்ந்து புகழவேண்டும் என எதிர்பார்ப்பது போன்ற அறிகுறிகள் பிரதானமானமாகக் கொண்டிருப்பர். மேலும், கற்பனையான அளவிற்கும் அதிகமான வெற்றிகள் நோக்கி சிந்தித்தல், கனவு காணுதல், அவர்களே உலகத்தில் தலைசிறந்தவர்கள் என கருதிக்கொள்ளுதல், பொறாமை, பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வது, ஏளனமாக நடத்துவது, சிறுமைப்படுத்துவது(gaslighting) போன்ற செயல்பாடுகளையும் குணங்களையும் கொண்டிருப்பார்கள்.

Should I stay or should I go என்ற புத்தகத்தில் நூலாசிரியர் Dr. ரமணி துர்வசுலா கீழ்கண்ட கேள்விகள் மூலம் நாம் NPD இருப்பவரை அறியலாம் எனத் தந்திருக்கிறார். 

உங்களின் வாழ்க்கையை துணை கீழ்கண்ட குண நலன்களோடு இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். ஆம் அல்லது இல்லை என்ற இரு வார்த்தைகளை ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் குறித்துக்கொள்ளுங்கள். 

NPD கண்டறியும் வழிகள்:

  1. உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் நடப்பவராகவும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிய சிரமப்படுபவராக இருக்கிறாரா?
  2. உங்கள் வாழ்க்கை துணை தனது வாழ்க்கை, சாதனைகள், மற்றும் வேலைப்பற்றிய விஷயங்களை மிகைப்படுத்தி அல்லது மிகவும் பெரிதாகப் பேசுகிறாரா? உங்கள் துணைக்கு அதிகமான அகங்காரம் இருக்கிறதா, மற்றவர்களை விடத்தான் மிக உயர்ந்தவர் என்று உறுதியாக நம்புகிறாரா?
  3. உங்களின் துணை, வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் தனக்குச் சிறப்பான வரவேற்பும் மரியாதையும் தரப்பட வேண்டுமென விரும்புவராக இருக்கிறாரா? அவர் அதற்கு மெத்தத் தகுதியுடையவராகத் தன்னைக் கருதுகிறாரா? ஒருவேளை, அந்த சிறப்பான தனித்த கவனிப்பு அவருக்கு வழங்கப்படவில்லையெனில் கோபமடைகிறாரா?
  4. தனது தேவைகளை நிறைவேற்றப் பிறரது உணர்வுகளை முற்றிலுமாகக் கவனத்தில் கொள்ளாமல், அவர்களை தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்த சூழ்ச்சித்திறனுடன் கையாளுதல் (manipulate) செய்பவராக இருக்கிறாரா?
  5. இருக்கும் சூழலுக்குப் பொருத்தமற்ற வித்தில் அதிகப்படியான கோபத்தை மிக வேகமாக அடைபவராகவும், அதிகாரம் கொள்பவராகவும் இருக்கிறாரா?
  6. அடிக்கடி மற்றவர்கள் அவருக்கு தீங்கு செய்ய முயற்சிக்கிறார்கள் அல்லது அவரைப் பயன்படுத்த நினைக்கிறார்கள் என்று நினைக்கிறாரா?
  7. விமர்சனங்களை எளிதாக ஏற்றுக்கொள்பவராக இருக்கிறாரா? அல்லது சிறு விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்காப்புத் தன்மை கொண்டும் கோபமுடனும் இருக்கிறாரா?
  8. உங்களின் நட்புகள், உறவுகள், வெற்றிகள் மற்றும் புதிய வாய்ப்புகளைப் பற்றி அடிக்கடி பொறாமை கொண்டிருக்கிறாரா?
  9. தவறான செயல்களைச் செய்யும்போது, அவற்றிற்காகக் குற்றவுணர்வின்றியோ அல்லது அவை அறமற்ற  செயல்கள் என்று புரிந்துகொள்ளாமலும் இருக்கிறாரா?
  10. தொடர்ந்து பாராட்டுக்காகவும்  மற்றும் அங்கீகாரத்திற்காகவும் (உதாரணமாக, பாராட்டுகள், விருதுகள், மரியாதைகள்), ஏங்குகிறாரா? மற்றும் அவற்றை பெறுவதற்காக (உதாரணமாக, சமூக ஊடகங்களின் மூலம் அல்லது தனது சாதனைகள் பற்றி எப்போதும் கூறுவதன் மூலம்) அதை தேடுகிறாரா?
  11. அடிக்கடி பொய் சொல்பவராக இருக்கிறாரா, முக்கியமான விவரங்களை வெளியிடாமல் இருப்பாரா, அல்லது தொடர்பற்ற, இடைவெளிகளுடன் துண்டுகளாகத் தகவல்களைத் தருகிறாரா?
  12. ஒரு திறமையான நாடகக்காரராக இருக்கிறாரா? அவர் செயல்பாடுகள் அனைத்தையும் காட்சிப்படுத்துபவராகவும், அதில் கொண்டாட்டங்கள், அவர் ஓட்டும் கார், போகும் இடங்கள், மற்றும் பிறரிடம் தனது வாழ்க்கையை எப்படி காட்சிப்படுத்துகிறாரென்பது உள்பட?
  13. உங்கள் வாழ்க்கைத் துணை தொடர்ந்து தனது உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்துகிறாரா (உதாரணமாக, உங்கள் மீது கோபமாக இருப்பது போல் உங்களை குற்றம்சாட்டுவது அல்லது  எப்போதெல்லாம் அவர் வாழ்க்கை குழப்பமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உங்களை அதற்காகச்சாடி குற்றம்சாட்டுவது)?
  14. வெற்றி மற்றும் பொருளாதாரத்தில் பேராசைப்படுகிறாரா? மேலும் அதிகமாகப் பொருட்கள் மற்றும் பணத்தை அடைவதற்காக எவ்வளவு கீழ்மையான செயல்களையும் செய்யத் துணிபவராக இருக்கிறாரா?
  15. உங்களின் உணர்ச்சியை உணராமலும், உங்களிடமிருந்து உணர்வுப்பூர்வமாகத் தொடர்பற்றும் தொலைவாகவும் இருக்கிறாரா? குறிப்பாக நீங்கள் கடுமையான உணர்வுகளை அனுபவிக்கும் அல்லது காட்டும்போதும், அவர் நீங்கள் அனுபவிக்கும் உணர்வுகளுடன் தொடர்பு கொள்ளாமல் தொலைந்துவிடுகிறாரா?
  16. அடிக்கடி உங்களை இரண்டாவது முறையாகக் கேள்வி கேட்கிறாரா அல்லது உங்களைச் சந்தேகிக்கிறாரா, அதற்காக நீங்கள் “வெகு கொந்தளிப்பாக” உணர்கிறீர்களா?
  17. தனது நேரம் அல்லது பணத்தைச் சிக்கனமாகச் செலவிடுகிறாரா?  தனக்குப் பிடித்தவற்றிற்கு என்றால் மட்டும் அளவின்றி செலவழிப்பவராக இருக்கிறாரா?
  18. பொதுவாகப் பொறுப்பைத் தவிர்க்கிறாரா மற்றும் தனது தவறுகளுக்காக மற்றவர்களை விரைவாக குற்றமாக்குகிறாரா? தனது நடத்தைக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதற்குப் பதிலாக தனது மறுமொழி மற்றும் பாதுகாப்புக்காக மட்டுமே கவனம் செலுத்துபவராக இருக்கிறாரா?
  19. தன் தோற்றத்துடன் அல்லது இவ்வுலகத்தில் எப்படி காட்சியளிக்கிறார் என்பதில் அதிக கவனமும் அதில் பெரிதும்  மயக்கமும் கொண்டவராக இருக்கிறாரா(உதாரணமாக, ஒப்பனை, உடைகள், தன் அலங்கரிப்புகள்)?
  20. இவர் கட்டுப்படுத்துபவராக இருக்கிறாரா? உங்கள் நடத்தையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறாரா? தன்னைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் திட்டத்தில் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்கான அவசியத்தில் மிகுந்த ஏக்கமும் கட்டாயமாகச் செய்யத்துணியும் உணர்வும் கொண்டவரா?
  21. அவரின் மனநிலை, நடத்தைகள் மற்றும் வாழ்க்கைச்செயல்பாடுகள் கணிக்க இயலாததாகவும் மற்றும் தொடர்புகளற்று இடைவெளிகளுடன் கூடியதாகவும் இருக்கிறதா? நீங்கள் அடிக்கடி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அறியாமல் இருக்கிறீர்களா?
  22. அடிக்கடி உங்களை மற்றும் பிறரைப் பயன்படுத்துபவராக இருக்கிறாரா? உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் தனது தேவைகள்  நிறைவேற்றப்படும்வரைப் பயன்படுத்தக்கிட்டிய வாய்ப்பாக நினைப்பவராகவும், அது எவ்வகையில் உங்களுடைய, மற்றும் பிறருடைய நேரம் மற்றும் தொடர்புகளைத் சிரமத்திற்குள்ளாக்குமென்பதைக் கண்டுகொள்ளத் தவறுபவராகவும் இருக்கிறாரா?
  23. பிறர் தோல்வியடைவதை ரசிக்கிறாரா? குறிப்பாக அந்த நபர் பொதுவாக அவருக்கு மேலாகச் செயல்பட்டவரெனும் பட்சத்தில் அந்த நபரின் வாழ்க்கை அல்லது வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி அடைபவராக இருக்கிறாரா?
  24. தனியாக இருப்பதற்கும் தனியாக நேரத்தைச் செலவிடுவதற்கும் கடினமாக உணர்பவராக இருக்கிறாரா?
  25. பிறருடன் பலவீனமான எல்லைகளை வைத்திருக்கிறாரா? அவர் நண்பர்களுடனும், வேலையிடத்திலும் தவறான உறவுகளைக் கொண்டிருப்பதுடன், இது உங்களுக்கு ஏற்கும்படி இல்லை என்று கூறிய பின்பும் அதை தொடர்பவராக இருக்கிறாரா?
  26. உங்களின் துணை, எப்போதேனும் உடல் ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ வேறு தொடர்பில் இருந்து உங்களை ஏமாற்றியிருக்கிறாரா?
  27. உங்கள் வாழ்க்கைத் துணை நீங்கள் பேசும் பொழுது கவனமாக செவிமடுப்பவராக இருக்கிறாரா? நீங்கள் பேசும் போது  கொட்டாவிவிடுதல், தனது அலைபேசியைச் சோதிக்கவோ அல்லது சுற்றிலும் உள்ள காகிதங்கள் மற்றும் வேலைகளில் கவனம் செலுத்தவோ செய்கிறாரா?
  28. வாழ்வில் சில விசயங்கள் சரியாக நடக்காதபோது, கடும் அழுத்தத்தால் எளிதில் உடைபவராகவும் அதிகம் உணர்வுப்பூர்வமாக மாறியவராகவும் இருக்கிறாரா? முக்கியமாக கடும் மனஅழுத்தம் இருக்கும் சமயங்களில் அதை சமாளிக்க முடியாமல் மிகவும் பாதிப்படைகிறாரா?
  29. அடிக்கடி முறையானத் தொடர்பு மற்றும் மரியாதையை பரிசீலிக்காமல் இருக்கிறாரா? (உதாரணமாக, தாமதமாக வருவேன் என்று தெரிவிக்காமல் இருப்பது அல்லது தன்னிச்சையாகச் சேதமளிக்கும் மற்றும் கவனிக்காத செயல்கள் அல்லது வார்த்தைகளைச் சொல்லுவது )
  30. உங்கள் வாழ்க்கைத் துணை தனது தோற்றம் அல்லது பாலியல் வர்ணனை மூலம் அடிக்கடி கவனம் பெறுகிறாரா? அவர் பிறரிடம் எளிதில் காதல் வயப்படுபவரா அல்லது உங்களுடனான உறவினைத் தவிர்த்து, பிறருடன் அந்தரங்கமாகப் பேசுவதை, வார்த்தைகள், செயல்கள், சமூக ஊடக பதிவுகள் அல்லது குறுஞ்செய்திகளின் மூலம் அடிக்கடி செய்பவராக இருக்கிறாரா?

மேற்சொன்ன 30 கேள்விகளும் துணையை நோக்கி எழுப்பப்பட்டவை எனினும் யாரை நீங்கள் நார்சிஸ்டாக நினைக்கிறீர்களோ அவர்களையும் நினைத்து இக்கேள்விகளைக் கேட்டுப்பார்க்கலாம். மொத்தம் 15 அல்லது அதற்கு மேல் “ஆம்” என்றே உங்கள் பதில் இருந்தால் நீங்கள் நினைக்கும் நபர் நார்ஸிஸ்டாக இருக்கலாம். 20 அல்லது அதற்கு மேல் எனில் அவர் நார்சிஸ்ட்தான் என உறுதிப்படுத்திக்கொள்ளலாம். 

இது பெரும்பாலும் குண நலப்பிரச்சனை என்பதால் இவர்களை மாற்றுவது என்பது இயலாத காரியம். இயன்றளவு இவர்களிடமிருந்து தூரமிருப்பதும், இவர்களின் இந்த நிலைக்குக் காரணமாகச் சொல்லப்படும் ஆழ்மன பாதுகாப்பின்மை உணர்வை கருணை கொண்டு காண்பதும் நாம் செய்ய வேண்டியவை. அவர்களிடம் இல்லாத புரிந்துகொள்ளலை நாம் அவர்களிடம் காட்டினாலும் எதுவும் மாறுவதுல்லை என்பதே கசப்பான உண்மை. நம் மனதைப் பலமானதாகவும், நம்மை சிறுமைப்படுத்தும் ஒவ்வொரு முறையும் இவர்களின் பேச்சைக் காதில் வாங்காமல் மனதில் ஏற்றாமல் இருப்பதே நமக்கு நிம்மதியைத் தரும். 

இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உளவியல் நிபுணர்களை அணுகினால் இவர்களைக் கையாளும் முறையை நமக்குக் கற்றுக்கொடுப்பார்கள். ஒருவேளை இக்குணக்குறைபாடு உள்ளவர்களே விரும்பி, நல்ல மனநல மருத்துவரை அணுகினாலும் முற்றிலும் இவர்களை குணப்படுத்த இயலாது என்றே ஆய்வுகள் கூறுவதாக Should I stay or should I go-வில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

mpriya.be@gmail.com