நேர்காணல்

0
575
கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் அருண் மகிழ்நன், துணை ஆசிரியர்கள் அழகிய பாண்டியன், சிவானந்தம் நீலகண்டன் ஆகிய மூவருடனும் நடந்த நேர்காணலின் சுருக்கம். அழகிய பாண்டியன், தேசிய நூலக வாரியத்தில் தமிழ்ப் பகுதிக்குத் தலைவராக இருக்கிறார். அருண் மகிழ்நன், சிவானந்தம் நீலகண்டன் ஆகிய இருவரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்தவர்கள். தேசிய நூலக வாரியமும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் இணைந்து இக்கலைகளஞ்சியத்தை உருவாக்கி வருகின்றன.

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சிய உருவாக்கத் திட்டம் 2022இல் அறிவிக்கப்பட்டதும் அவ்வாண்டு ஜூலையில் தி சிராங்கூன் டைம்ஸ் உங்களுடைய ஒரு விரிவான நேர்காணலை வெளியிட்டது. இவ்வாண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி கலைக்களஞ்சியம் வெளியாகும் என அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட அனைத்தையும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சாதிக்க இயன்றதா?

பதிவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சாதிக்க முடியவில்லை. அதற்கான காரணங்கள் பல. ஒரு காரணம், தேவையான செய்திகள் எளிதாகக் கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் குறித்த பதிவுகள். சில அமைப்புகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களே தெரியவில்லை. வேறுசில அமைப்புகளின் வரலாறு அவற்றினிடமே முழுமையாக இல்லை. மற்றொரு காரணம், செய்திகள் கிடைப்பதற்கு ஆகும் காலம். நாம் ஒரு வாரம், கூடப்போனால் இரண்டு வாரங்கள் ஒதுக்கலாம். ஆனால், மாதக்கணக்கில் செலவழிப்பது நம்மால் முடியாது. அதனால், வாய்ப்புக் கொடுத்து, தரவேண்டிய செய்திகளைக் குறித்த நேரத்தில் தரவில்லை என்பதற்காக விட்டுவிட்டோம். மூன்றாவதாக, எங்களுடைய சொந்த வேலைகள். முழுநேரமாக நாங்கள் எல்லோரும் செய்திருந்தால் நிச்சயமாக நினைத்ததுபோல் செய்திருக்க முடியும். எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறோம். கலைக்களஞ்சியத்தின் முதற்கட்ட வெளியீட்டில் 300இல் இருந்து 400 பதிவுகள் இருக்கும்.

பதிவுகளின் தரத்தைப் பொறுத்தவரை திட்டமிட்டதை அனேகமாகச் சாதிக்க முடிந்துள்ளதாகவே நினைக்கிறோம். முதல் வரைவை எழுதித் தந்தவர்களிடம் தொடங்கி, சுருக்கம், செறிவாக்கம், மொழிபெயர்ப்பு, தேவையான இடங்களில் நிபுணர் ஆலோசனை, படங்கள் சேர்ப்பு, மேல்விவர இணைப்புகள் சேர்ப்பு, மெய்ப்பு என ஒவ்வொரு பதிவும் பலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது. தரம் நன்றாக இருந்தால் அது அனைவருக்கும் சென்றுசேரவேண்டிய பாராட்டு. குறைகளிருந்தால் அது ஆசிரியர் குழுவுடையதே. ஒரு வலுவான அடித்தளத்தை முதல் கட்டத்தில் அமைக்க விரும்பினோம். அது சாத்தியமாகியிருக்கிறதா என்பதைக் கலைக்களஞ்சியம் வெளிவந்ததும் பயனாளர்கள்தாம் பார்த்துச் சொல்லவேண்டும்.

உங்களுடைய மிகப்பெரிய சவால்கள் எவை?

முன்மாதிரி இல்லாத கன்னிமுயற்சி என்பதால் சவால்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு செல்லும். இரண்டு குறிப்பான சவால்களை இங்கே சற்று விளக்க நினைக்கிறோம். 

முதலாவது சவால், இது குடிமக்களின் கலைக்களஞ்சியம். வல்லுநர்களின் கலைக்களஞ்சியம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். குடிமக்களை வைத்து ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்கவேண்டும் என்றால், அதில் பலவிதமான இடர்ப்பாடுகள் உண்டு. ஒன்று செய்திகளைச் சரிபார்ப்பதிலுள்ள சிக்கல். கிடைக்கின்ற செய்திகளை, நாங்கள் மறுபரிசீலனை செய்து, அதுதான் உண்மை என்று நிர்ணயித்து, அதன்பிறகு பதிவு செய்ய முடியாது. அதற்கான வளங்கள் நம்மிடம் இல்லை. இருப்பினும் ஏற்கெனவே கிடைத்துள்ள, ஒன்றுக்கொன்று தொடர்புடைய சில ஆதாரங்களை வைத்துப் பார்த்து நம்பலாம் என்று முடிவு செய்ததைத்தான் பதிவு செய்திருக்கிறோம். ஒருவேளை பிழைகள் நேர்ந்திருந்தால், மின் தளத்தில் இருப்பதால், தவறுகளை யார் எப்போது தகுந்த ஆதாரத்துடனோ காரணங்களுடனோ சுட்டிக்காட்டினாலும் உடனடியாக தேவையான மாற்றங்களைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மற்றொரு முக்கியச் சவால் தன்னார்வலர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது. ஒருபக்கம் இத்தனை பேர் கூடிவந்து இந்தத் தேரை இழுப்பது மிகப்பெரிய ஆதாயம். அதில் சந்தேகமே கிடையாது. இல்லையென்றால், இதுபோன்ற முயற்சிகளில் நாம் இறங்கவே முடியாது. ஆனால், அதன் மறுபக்கம் என்னவென்றால், அவர்களுக்கு எப்போது முடியுமோ, எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத்தான் அவர்களால் செய்ய முடியும். ஆகையால், அவர்களை எல்லாம் அரவணைத்து, அவர்களிடமிருந்து நமக்குத் தேவையான செய்திகளையும் பணிகளையும் பெறுவது என்பது ஒரு பெரிய சவாலாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கடந்த இரண்டரை ஆண்டுகளில், நம் தமிழ்ச் சமூகம் இந்த முயற்சிக்குக் கொடுத்திருக்கிற ஆதரவு மிகப்பெரிய ஆதரவு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆங்கிலம்-தமிழ் இருமொழிக் கலைக்களஞ்சியம் என்பதால் இந்தக் கேள்வி. தமிழ்ப் பண்பாட்டுப் பின்புலம் அற்றோர் ஆங்கிலத்தில் வாசிக்கும்போது அவர்களுக்கு உதவும் வகையில் சில பின்புல விளக்கங்கள் பதிவுகளில் இருக்குமா?

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறோம். இரண்டு மொழிப் பதிவுகளும் ஒன்றையொன்று தழுவி இருக்குமே ஒழிய, ஒன்று மற்றதன் முற்றான மொழிபெயர்ப்பாக இருக்காது. ஆங்கிலப்பதிவில், தமிழையோ தமிழ்ச் சமூகத்தையோ அறியாத ஆங்கில வாசகர்களுக்கு எது பிடிபடுமோ அதைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். எடுத்துக்காட்டாக, தமிழர் சீர்திருத்தச் சங்கத்தைக் குறித்த பதிவில் நிறைய செய்திகளைக் கூறியிருக்கிறோம். கலைக்களஞ்சியத்தின் சராசரிப் பதிவைக் காட்டிலும் அது பத்து மடங்கு நீளமானது. ஏனெனில், சங்கத்தைப் பற்றி ஒரு முழுமையான வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை. ஆகவே, தமிழ்ப்பதிவில் எவ்வளவுக்கெவ்வளவு விவரங்களைச் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் அதே பதிவின் ஆங்கில மொழிபெயர்ப்பு அத்தனைச் செய்திகளையும் உள்ளடக்காது. ஆனால், அந்த அமைப்பைப்பற்றி பொதுவான அறிமுகம் நிச்சயமாக இருக்கும். இதுதான் அந்த வேறுபாடு. 

இன்னொரு வேறுபாடு, தமிழில் எழுதும்போது திருவள்ளுவரோ ஔவையாரோ பாரதியாரோ யாரென்று விளக்கிச் சொல்லவேண்டிய தேவையில்லை. ஆனால், ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்குத் தேவைப்படும் என்பதால் பெயருக்குப்பின்னோ முன்னோ அன்னாரின் காலம், பங்களிப்பு போன்ற முக்கியமான தகவல்களை ஓரிரு வரிகளில் சேர்த்துப் பதிவு செய்திருக்கிறோம்.

இதுவரை பரவலாகக் கேள்விப்பட்டிராத சுவையான தகவல்கள், ஆர்வமூட்டும் வரலாறுகள் கலைக்களஞ்சியத்தில் உண்டா? தி சிராங்கூன் டைம்ஸ் வாசகர்களுக்காக ஓர் எடுத்துக்காட்டை நீங்கள் பகிர முடியுமா?

அதிகம் கேள்விப்பட்டிராத செய்திகள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் இதழ்கள் ஆகிய மூன்றைக் குறிப்பிடலாம். 

‘சிங்கப்பூரின் 150 ஆண்டுகாலக் கல்வி’ என்று ஒரு பெரிய புத்தகமே வெளிவந்தது. அதில் தமிழ்க் கல்வி பற்றிய குறிப்புகள் இருந்தாலும் தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி போதுமான அளவுக்கு இதுவரைக்கும் விவரிக்கப்படவில்லை. இப்போது ஓரிருவர் அதைப்பற்றி நூல் வெளியிட உள்ளனர். அவர்களுள் ஒருவரான முனைவர் கே. சண்முகம் எங்களுக்கு உதவினார். அவருடைய உதவி இல்லாமல் அந்தப் பதிவை அத்தனை விரிவாக எழுதி இருக்கவே முடியாது. தமிழ்ப் பள்ளிகளின் விவரங்களை அவர் ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்ததனால் முதல் வரைவை அவரிடம் பெற்று அதை இன்னும் பத்துப்பேருக்கு அனுப்பி மேலும் தகவல்கள் சேர்க்க முடியுமா என்றெல்லாம் பார்த்து அந்தப் பதிவு உருவாகி இருக்கிறது.  

ஆனால், எங்களை உலுக்கிப் போட்டது தமிழ்ப் பள்ளிகள் பட்டியலின் நீளமன்று. அவ்வளவு ஏழ்மையான சூழலில், அன்றாடங்காய்ச்சிகள் தங்களுடைய பிள்ளைகள் எப்படியாவது பள்ளிக்கூடத்துக்குப் போகவேண்டும், எப்படியாவது தமிழ் படிக்கவேண்டும் என்று படாதபாடுபட்டு, பள்ளிக்கூடம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள் அல்லவா அந்த அளப்பரிய சாதனைதான் கலைக்களஞ்சியம் வெளிக்கொணரும் சுவையான, ஆர்வமூட்டும் வரலாறு. எங்களுடைய முதற்கட்ட நோக்கம் தமிழ்ப் பள்ளிகளின் பெயரையாவது பதிவு செய்யவேண்டும், ஒரு சில செய்திகளையாவது சேர்க்கவேண்டும் என்பதுதான். அடுத்தடுத்து செய்திகள் வரவர, அதனை விரிவாக்கிக்கொண்டே போகலாம். 

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்று ஒன்று நடந்தது. தமிழ் எழுத்துகளில் றா, னா, லை உள்ளிட்ட 13 எழுத்துகளை முன்பு இருந்ததைப்போல் இப்போது நாம் எழுதுவதில்லை. அதற்கு சிங்கப்பூரர் ஒருவர் 1930களில் பங்களித்திருக்கிறார். அவருடைய பெயர் அ.சி. சுப்பய்யா. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத்தில் கிருபானந்த குமார் என்பவர் சுப்பய்யாவைக் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். அந்த ஆய்வைத் தேடிப்பிடித்ததில் பல தகவல்கள் கிடைத்தன. தமிழ்க் கற்பித்தல் துறையில் முக்கியமான ஆளுமையான ச. தெய்வநாயகம் அந்த 13 எழுத்துகளையும் எப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது என மாணவ ஆசிரியர்களுக்கு ஒரு பாடமே நடத்தியிருக்கிறார். இதுபோல் பல சுவையான தகவல்கள் இருக்கின்றன.

அடுத்ததாகத் தமிழ் இதழ்களைப் பொறுத்தமட்டில், எத்தனை நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், இதர சஞ்சிகைகள் இங்கு தோன்றி மறைந்திருக்கின்றன என்பது மிகச் சுவையான வரலாறு. சிங்கப்பூர் இதழ்கள் பற்றி முனைவர் கோட்டி முருகானந்தம் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டிருக்கிறார். பாலபாஸ்கரனும் தம் ஆய்வை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அவர்கள் பதிவு செய்திருக்கும் தகவல்களைக்கொண்டு அவ்வரலாற்றைக் கலைக்களஞ்சியத்தில் சுருக்கமான பதிவுகளாகச் சேர்த்திருக்கிறோம். சில கையெழுத்துப் பத்திரிகைகள் குறித்த செய்திகளும் உண்டு. செய்திகள் மட்டுமின்றி, தேசிய நூலக வாரியத்தின் சேமிப்பிலிருந்து, இதுவரை ஆய்வாளர்களைத் தவிர பொதுமக்கள் பலரும் பார்த்திராத தமிழ் இதழ்களின் அட்டைகளைத் தேடிப்பிடித்து அவற்றைக் குறித்த பதிவுகளில் இணைத்திருக்கிறோம். அப்படங்கள் நமக்குப் பாடங்களாகவும் இருக்கின்றன. ஏனெனில், இத்தனை பத்திரிகைகள் வந்தன என்பது பெருமையாக இருந்தாலும் அத்தனை பத்திரிகைகளும் மடிந்துபோயின என்பது வருத்தத்துக்கு உரியது.  

தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தத் தொழில்நுட்பம் கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கு உதவியதா? கலைக்களஞ்சியத்தில் இடம்பெற உள்ள நூற்றுக்கணக்கான பதிவுகளால் தமிழ் செயற்கை நுண்ணறிவு உலகம் பயன் பெறுமா?

கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தோம். முதன்முதலில் ‘கூகல்’ மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியபோது அதனால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது என்கிற முடிவுக்கு வந்தோம். ஆனால், இப்போது பல பதிவுகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கோ தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கோ முதல் கட்டமாக மொழிபெயர்க்க, கூகல், சாட் ஜிபிடி (Chat GPT) உள்ளிட்ட ஏதேனும் ஓர் இயந்திர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகிறோம். மொழிபெயர்ப்புக்கு ஆகும் நேரம் கணிசமாகக் குறைகிறது. கலைக்களஞ்சிய மொழிபெயர்ப்பைச் சாதாரண மொழிபெயர்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். இது பண்டிதர் மொழியோ இலக்கியமோ அல்ல. கிட்டத்தட்ட நேரடி மொழிபெயர்ப்பு என்பதால் செயற்கை நுண்ணறிவு நன்கு பயன்படுகிறது. 

செயற்கை நுண்ணறிவும் கலைக்களஞ்சியப் பதிவுகளைப் பயன்படுத்திப் பலனடையக்கூடும். முதலில், ஒரு லட்சம் சொற்களைத் தாண்டிய ஒரு பெரும் மொழித் தொகுப்பை நாம் உருவாக்கியிருக்கிறோம். இரண்டாவது, எப்படி எழுதுவது என்பதற்கும் நாங்கள் சில வரைமுறைகளை உருவாக்கியிருக்கிறோம். தமிழ் இலக்கணம், இயந்திரக் கற்றல் இரண்டிலும் புலமையுள்ள தமிழ்நாட்டுப் பேராசிரியர் என். தெய்வசுந்தரம் எங்களுக்கு இதில் வழிகாட்டுகிறார். கலைக்களஞ்சியப் பதிவுகளிலிருந்து செயற்கை நுண்ணறிவு மொழிசார்ந்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, எண்ணும் எழுத்தும் சந்திக்கிற இடத்தில் ஒரு கோடு போட்டு அவற்றைப் பிரித்துக் காட்டவேண்டும்; 2009-இல் என்று எழுதினால் இயந்திரம் எண்ணையும் எழுத்தையும் பிரித்துப் படிக்கக் கற்றுக்கொள்ளும். பிறகு அது நமக்கு மொழிபெயர்க்கும்போது சரியாகச் செய்யும். அந்த வகையில், நம்மிடமிருந்து செயற்கை நுண்ணறிவும் இயந்திரத்திடமிருந்து நாமும் பயன் பெறலாம்.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை வேறு ஏதேனும் புதுமையாகச் செய்திருக்கிறீர்களா? 

‘டூல் டிப்’ (tool tip) என்றழைக்கப்படும் ஒரு தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தித் தமிழ்ப் பதிவுகளில் ஒரு புதுமையைச் செய்துள்ளோம். கலைக்களஞ்சியத்தில் ஒலிபெயர்ப்பாகவோ மொழிபெயர்ப்பாகவோ இடம்பெறும் பல ஆங்கிலச் சொற்கள், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள விதத்தை உடனடியாக அங்கேயே தெரிந்துகொள்ள அவ்வசதி உதவியாக இருக்கும். 

எடுத்துக்காட்டாக, ‘தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமை’ என்ற சொற்கள் வரும்போது அதன்மேல் ‘கர்சரை’ வைத்தால்போதும் ‘Intangible cultural heritage’ என்னும் ஆங்கிலப்பதம் தெரியும். ஒலிபெயர்ப்பும் அப்படியே. ‘ஜாமிஆ சூலியா வகஃப்’ என்னும் சொற்களின்மேல் சுட்டியைக் கொண்டுசென்றால் ‘Jamae Chulia Waqaf’ என்று தெரியும். வாசிப்பவருக்கு இந்த இடத்தில் ஐயமோ குழப்பமோ ஏற்படலாம் என்று நாங்கள் கருதிய இடங்களிலெல்லாம் இந்த டூல் டிப் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.

கைபேசிதான் இணைய உலாவியாக இன்று அதிகம் பயன்படுத்துகிறார்கள். கலைக்களஞ்சியத்தை ஒரு கைபேசிச் செயலியாக வெளியிடுவீர்களா?

செயலியாக வெளியிடும் திட்டம் இல்லை. ஆனால் தேசிய நூலக வாரியத்தின் தளத்தில் கிடைக்கவுள்ள சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தை கைபேசி, கணினி, கணித்தட்டை உள்ளிட்ட எந்தச் சாதனத்தின் மூலமாகவும் இலகுவாகப் பார்க்க முடியும். வாசிக்கப் பயன்படும் கருவிகளுக்கேற்ப சிறுசிறு மாற்றங்களுடன் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கலைக்களஞ்சிய உருவாக்கக்குழு அரும்பாடுபட்டுக் கற்றுக்கொண்டவற்றை அடுத்தடுத்த தலைமுறை ஆசிரியர் குழுவுக்கு எவ்வாறு கையளிக்கப் போகிறீர்கள்? 

நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை விளக்கங்களுடன் விதிகளாகப் பதிவுசெய்து வருகிறோம். ஏற்கெனவே 50 விதிகளை உருவாக்கி இருக்கிறோம். அப்பட்டியல் மேலும் நீளத்தான் போகிறது. அவ்விதிகள் எப்படிப்பட்டவை என்பதற்கு மூன்று எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

முதலாவதாக, இலக்கண ஆசிரியர்களுக்கு இடையேகூட சந்திப்பிழை குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. குறிப்பாக, தமிழ்மொழிச் சொல்லும் பிற மொழிச் சொல்லும் இணையும் இடத்தில் சொற்புணர்ச்சி குறித்து இருவேறு கருத்துகள் இருக்கின்றன. எனவே, அந்த இடத்தில் கலைக்களஞ்சியத்துக்காக ஒரு முடிவை எடுத்து அதை அனைத்துப் பதிவுகளிலும் பின்பற்றுகிறோம். மாணவர்கள் கலைக்களஞ்சியத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று நினைத்து இவ்விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். 

அடுத்ததாக, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவது. எடுத்துக்காட்டாக, ‘வரவேண்டும்’ என்பதை ‘வர வேண்டும்’ என்று இடைவெளிவிட்டு எழுதவேண்டுமா அல்லது ‘வரவேண்டும்’ என்று சேர்த்துத்தான் எழுத வேண்டுமா? அதற்கு என்ன இலக்கணம்? அனைத்தையும் பரிசீலித்து ஒரு முடிவை எடுக்கிறோம். 

மூன்றாவதாக, ராமர் என்று எழுதுவதை ஒரு பிரிவினர் ஏற்பதில்லை; இராமர் என்றுதான் எழுதவேண்டும் என்பார்கள். கலைக்களஞ்சியத்தில் ராமர் என்றே எழுதியிருக்கிறோம். சிலபேர், “நீங்கள் ஏன் சிராங்கூன் சாலை என்று போடாமல் சிராங்கூன் ரோடு என்று போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கக்கூடும். பிரச்சினை என்னவென்றால், இந்த நாட்டில் ரோடு மட்டுமின்றி, அவென்யூ, ஸ்ட்ரீட், வாக், கிரசென்ட், ரைஸ் இப்படியாக ஒரு சிறிய பேட்டைக்குள்ளேயே சாலைகளுக்குக் கிட்டத்தட்ட 20 விதமான பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பு கிடையாது. ஆகையால், நாங்கள் ரோடு உட்பட சாலைகளின் அனைத்துப் பெயர்களையும் ஒலிபெயர்ப்பு செய்வது என முடிவெடுத்தோம். 

இதுபோன்ற முடிவுகளை நாங்கள் மிகத் தீவிரமாகப் பலபேருடன், குறிப்பாகத் தமிழ் அறிஞர்களுடன், கலந்து ஆலோசித்துச் செய்திருக்கிறோம். எது இந்த நாட்டில் அதிகமாகப் புழங்கப்படுகிறதோ, அதிலும் ஊடகங்களில் எது அதிகமாகப் புழங்கப்படுகிறதோ அதையொட்டிப் பயன்படுத்த முடிவு செய்தோம். இது வாழும் கலைக்களஞ்சியமாகத் தொடரப்போகிறது என்பதால் இதே அளவு கறார்த்தன்மை தொடரவேண்டும். இல்லையென்றால், குழப்பங்கள் உருவாகி வெகுவிரைவில் மொத்த உழைப்பும் வீணாகிவிடும். 

இந்தத் திட்டத்தில், உங்களுக்குக் கிடைத்த ஒத்துழைப்பையும் ஏமாற்றத்தையும் விகிதாச்சாரத்தில் பிரிக்கவேண்டும் என்றால் எப்படிச்சொல்வீர்கள்?

ஒத்துழைப்பு 90 விழுக்காடு, ஏமாற்றம் 10 விழுக்காடு. முதலில் தேசிய நூலக வாரியம் அளித்துள்ள ஒத்துழைப்பு நம் தமிழ்ச் சமூகம் மிகவும் போற்ற வேண்டிய விஷயம். அரசாங்கத்திற்கு ஒரு கடமை இருக்கிறது, தமிழ் மொழியில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவர்களுடைய ஒத்துழைப்பு வெறும் பெயரளவுக்கு இல்லை. தமிழர்களாகிய நமக்கு எந்த அளவுக்கு இதில் ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவு ஆர்வம் அவர்களுக்கும் இருக்கிறது. அதோடு, தொழில்திறனுடன் (professionalism) தமிழர் அல்லாதவர்களும் நூலக வாரியத்தில் நமக்கு உதவியிருக்கிறார்கள். அதை நாம் நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.

தேசிய நூலக வாரியத்தைப் பொறுத்தவரைக்கும் இரண்டு மொழிகளில் ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்கப்படுவது இதுதான் முதல் தடவை. ஒரு கன்னிமுயற்சியை நாம் முன்வைக்கும்போது பல்வேறு காரணங்களைக்காட்டி அதைத் தட்டிக்கழிப்பதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும், அப்படிச் செய்யாமல், ஆர்வத்தோடு அவர்கள் நமக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகம் அதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

ஏமாற்றத்தைப் பொறுத்தவரையில், சில சமூக அமைப்புகள் அவற்றின் தலைமைத்துவத்தினால் சில ஏமாற்றங்களை அளித்தன. ஆனால், அது மிகமிகக் குறைவு.

உங்களுடைய திட்டங்கள் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிற எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்தத் திட்டத்தையும் அப்படிக் கூறலாமா? 

இந்தக் கன்னிமுயற்சியை ஒரு சுயமதிப்பீட்டில் பார்த்தால், இதுதான் எங்களுடைய ஆகச்சிறந்த உருவாக்கம் என்று சொல்ல முடியாது. கடந்த இரண்டரை ஆண்டுகால அனுபவத்தில் இன்னும் சிறப்பாக செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பது எங்களுக்கே நன்றாகத் தெரிகிறது. அடுத்து வருகின்ற ஆசிரியர்கள், நிச்சயமாக இதை இன்னும் மேம்படுத்த இயலும். 

‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’விலேயே அதன் முதல் பதிப்புக்கும் இப்போதுள்ள வடிவத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. மேலும் அதில் 1000 பேர் எழுதியதும் 1000 விதமாகத் தெரியும். எழுதியவர் பெயரைப் பதிவில் போட்டிருப்பார்கள். ஆனால் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தில் இது இன்னார் எழுதியது என்பதே கிடையாது. ஒவ்வொரு பதிவுக்கும் கீழே சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்கிற பெயர் மட்டும்தான் இருக்கும். அதோடு எந்தப்பதிவை எடுத்தாலும் அது ஒரே ஆள் எழுதியதுபோல் சீரான நடையில் இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டோம். 

எடுத்த எடுப்பிலேயே “இதுமாதிரி வேறு யாரும் செய்ய முடியாது, நாங்கள் செய்துவிட்டோம்” என இறுமாப்பு கொள்ள இடமில்லை. நாங்கள் செய்த தவறுகள், சிந்திக்காமல் விட்டுவிட்ட சில செய்திகள் எல்லாவற்றையும் பதிவுசெய்து, அடுத்து வருகின்ற ஆசிரியர் குழுவுக்குக் கொடுத்து, “நாங்கள் செய்தது இவ்வளவுதான். நீங்கள் இன்னும் நன்றாகச் செய்ய முடியும். அதற்கு ஒரு சிறிய வழிகாட்டி” என்று கொடுக்கப்போகிறோம். செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதை அடுத்த தலைமுறை செய்யட்டும்.