“திருப்பாவை பாசுர விளக்கம்” – சேஷாத்ரி கண்ணன்
திருப்பாவைக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ் தெரிந்த அனைவருக்குமே பரிச்சயமான ஒரு பக்தி இலக்கியம். சிறுவயதில் மார்கழி மாதங்களில் பாடுவதற்கென்றே மனனம் செய்தவை திருப்பாவையும் திருவெம்பாவையும். பொதுவாகவே பக்தி இலக்கிய நூல்கள், நவில்தொறும் நூல்நயம் என்பது போல ஒவ்வொரு வாசிப்பின்போதும் பல திறப்புகளை அளிக்கும். சிறு வயதில் பொருள் அறியாமல் மனனம் செய்தாலும், பல இடங்களில் ஒப்புவித்தாலும், நாம் வளர வளர நம் வாழ்வனுபவங்கள் சேரச் சேர, அனைத்தும் கூட்டாக நமக்கு புதிய புதிய அர்த்தங்களையும் புரிதல்களையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
திருப்பாவைப் பாசுரங்களுக்கு பல பதவுரை, பொழிப்புரை, விளக்கங்களைக் கேட்டு, படித்திருந்தாலும், பல காணொளிகளில் பல்வேறு சொற்பொழிவுகளைக் கேட்டிருந்தாலும் கண்ணனின் விளக்கங்களை இந்த நூலில் வாசிக்கும்போது என் ஆழ்மனதில் மறைந்திருக்கும் பலவற்றை எனக்கு அது மீள் அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த வாசிப்பு மகிழ்வைத் தந்தது.
விவேகானந்தர் சொன்ன ‘எழுமின்; விழிமின்; குறிசாரும் வரை நில்லாது செல்மின்’ என்பதன் வேரை நாம் திருப்பாவையில் காணலாம். அதிகாலையில் உறங்குவோரை பாசுரங்களைப் பாடி எழுப்பி, நம் குறிக்கோள் கண்ணனுக்கு சேவை செய்வதே என்கிறாள் கோதை. மேலும் அதன் நன்மைகள் நம் அனைவருக்குமானது; உலகமே உய்யும் என்ற வகையில் அதன் பொதுமையையும் நிலைநாட்டுகிறாள்.
‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று முதல் பாசுரத்தில் பாடும்போது, அந்த இரண்டு சிறப்பு ஏகாரங்களும் அந்தப் பரம்பொருளே பெருங்கருணையுடன் நமக்கே அனைத்து நன்மைகளையும் அருளுவான் என்று சொல்லும் கோதை நாச்சியார், அடுத்த பாசுரத்திலேயே இது என் ஒருத்திக்கானதல்ல; ஆய்ப்பாடி சிறுமியர்க்கு மட்டுமானதல்ல என்பதை வலியுறுத்த ‘வையத்து வாழ்வீர்காள்!’ என்று விளிக்கிறாள். அடுத்தடுத்த பாசுரங்களில் அனைவரையும் அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனை வாயிலில் நின்று அந்த நாரணனையும் எழுப்பச் சொல்லி வேண்டி, இறுதியில் ‘உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று முடிக்கிறாள். அவன் தாளைப் பற்றி, அவனுக்கு சேவைகள் புரிவதே நாம் உய்வதற்கான வழி என்று சரணாகத தத்துவத்தை போதிக்கிறாள்.
இதையே நாம் வேறொரு கோணத்திலும் பார்க்கலாம். சைவத்தில் பதி, பசு, பாசம் என்று உயிர்களை பசுக்களாகவும், இறையைப் பதியாகவும், அறியாமையில் உழன்று உலக விடயங்களில் பற்றோடு இருப்பதை பாசமாகவும் கூறுவதைப் போல வைணவத்திலும் உயிர்களைப் பசுக்களாகவும், இறையைப் பசுக்களை மேய்க்கும் இடையனாகவும் வரித்து இருப்பதாகக் கொள்ளலாம். எப்படியானாலும் நாம் பந்த பாசங்களில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட்டு, அறியாமையிலிருந்து விழித்தெழுந்து, இறையென்னும் ஞானத்தை, அக விழிப்பை அடைந்துவிட்டால், பிறவி என்பது என்ன என்று உணர்ந்து விட்டால் அதுவே விடுதலையாகும். அதன் பிறகு இனிப் பிறவிகள் இல்லை என்பதைக்கூட, பிறவிகளோ அல்லது அவை பற்றிய எண்ணங்களோ, அவற்றோடு வரும் அறியாமையோ நம்மை சலனப்படுத்தப் போவதில்லை என்பதாகக் கொள்ளலாம். ‘தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்பதுபோல எதுவும் எந்தச் சலனத்தையும் கொடுக்கப்போவதில்லை.
போலவே, ஐந்தாம் பாசுரத்தில் ‘தூமலர் தூவித் தொழுது, வாயாற் பாடி, மனத்தாற் சிந்தித்து’ என்பதை எப்படிப் பார்க்கலாம்? பக்தி நோக்கோடு பார்த்தால் சிறுவயதில் வீடுகளில் பூசைகள் செய்யும்போது சிறு குழந்தைகளிடம் பெரியவர்கள் செய்வதைப் போல பூக்களை தூவி தொழச் செய்யலாம். விளையாட்டாகவே குழந்தைகளும் செய்வர். பின்னர் பேச்சு வந்ததும் சிறு பாசுரங்களை திரும்பத் திரும்பச் சொல்லி மனனம் செய்ய வைத்து தொழச் சொல்லலாம். பொருள் தெரியவேண்டிய அவசியமில்லாமல் ஒரு சடங்கு போல தினந்தோறும் செய்வதன் மூலம் அது ஒரு பழக்கமாக வாழ்வின் கடைசி வரை வரும். பின்னர் வாழ்வில் பல்வேறு அனுபவங்கள் சேரச் சேர, சிந்திக்கத் தொடங்கி தங்களுக்கான புரிதல்களை அடைவர். பக்தி தவிர்த்து அறிவு வளர்ச்சி என்ற நோக்கில் பார்த்தாலும் இதேதான். முதலில் கணக்கு வாய்ப்பாடுகள் ஒப்புவித்து பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் கணிதக் கோட்பாடுகள் புரியவருவது போல.
பக்தி இலக்கியங்களின் மறு பக்கமாக, அவற்றின் வழியே தமிழின் அழகையும் ஆராதிக்கலாம்; அனுபவிக்கலாம்; மகிழலாம். எங்கள் தமிழாசிரியர் திரு.இலட்சுமணசாமி மூலம் நான் அறிந்து கொண்டவை பல. வெண்பா இலக்கணங்களைக் கற்றுக் கொடுக்கும்போது, ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்றே முடியவேண்டும். ஏழாம் பாசுரத்தில் ‘காசும் பிறப்பும் கலகலப்ப’ என்ற தொடருக்கு அணிமணிகள் கலகலவெனக் குலுங்க ஆய்ப்பாடியில் தயிர் கடைந்துகொண்டிருந்தனர் என்பது விளக்கம். ஆனால் அதையே காசு, பிறப்பு என்பவை தேமா (நேர்-நேர்) புளிமா (நிரை-நேர்) என மாச்சீர்களாக இருப்பதால், ‘மாச்சீர்’ என்பது ‘பெரும் செல்வம்’ என்ற பொருளில், இறையின் அளவற்ற பெருங்கருணையாகவும் கொள்ளலாம் என்று நயம் பாராட்டுவார்.
அவர் சைவ சித்தாந்தக் கழகத்திலும் இருந்தவர். ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’ என்பதையும் உயிர்களாகிய நாம் (பசுக்கள்) பிறவி எடுக்கையில் இறையின் பெருங்கருணையோடுதான் (குடம் நிறைந்த) இறைப் பண்புகளுடனேதான் (வள்ளல்) வருகிறோம். எனினும் ஆணவ மலங்களின் மறைப்பை நீக்கி இறை ஞானத்தைப் (நீங்காத செல்வம்) பெற அவனருளேதான் தேவை என்று வேறு கோணங்களிலும் சிந்தனையைத் தூண்டுவார்.
திருப்பாவைப் பாசுரங்கள் வழியே நாச்சியார் நமக்குச் சொல்வதெல்லாம் கண்ணனிடத்திலே அன்பு வைத்து அவனடியையே தொழுது அவனோடு ஒன்றாதல் என்ற உயரிய நோக்கத்தையே. பக்தி முத்தினால் அன்பு; அன்பு முத்தினால் பக்தி என்பர். இது போலவேதான் தாயுமானவரும் இறைஞ்சுகிறார்.
“கல்லால் எறிந்தும், கைவில்லால் அடித்தும், கனிமதுரச்
சொல்லால் துதித்தும், நற்பச்சிலை தூவியும் – தொண்டரினம்
எல்லாம் பிழைத்தனர் – அன்பற்ற நான் இனி ஏது செய்வேன்?”
ஆண்டாள் எனும் கோதை நாச்சியாரை பதின்மரின் சாரமாகவும் கொள்வர். பதின்மர் என்பது பிற பத்து ஆழ்வார்கள். முதலாழ்வார்களாக பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்; பின்னர் திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வர், பெரியாழ்வார் ஆகியோர். பெரியாழ்வரின் திருமகளாகப் பிறந்தவள் ஆண்டாள். அவருக்குப் பின் தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் வருவர். தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வாரையே ஆராதித்தவர். எனவே பன்னிருவரில் அவரையும், நாச்சியாரையும் தவிர்த்து மற்றவர் பதின்மர். அவர்கள் அனைவருக்கும் மகளாகவே ஆண்டாள் பார்க்கப்படுகிறாள். மேலும், மற்ற ஆண் ஆழ்வார்கள் தம் மேல் பெண்மையை ஏற்றி நாரணனுடன் நாயக-நாயகி பாவனையில் கொண்டாடியவர்கள். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து கண்ணனைப் பாடுவதால் அவளுக்கு மேலும் சிறப்பு.
மணவாள மாமுனி ஆண்டாளின் சிறப்பைப் பற்றிப் பாடுகையில்,
“அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்தம் செயலை
விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.”
இங்கே அஞ்சுகுடி என்பது ஆண்டாளுக்கு முந்தைய எழுவரை. முதலாழ்வர்கள் மூவரையும் ஒரு குடியாகப் பார்ப்பது மரபு என்பதால் எழுவரையும் ‘அஞ்சுகுடி’ என்பார் உண்டு. ஆழ்வார்கள் அனைவருமே தங்கள் இறை நாராயணனுக்கு என்ன தீங்கு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்ததால் அஞ்சுகுடி என்போரும் உண்டு. அப்படிப்பட்ட ஆழ்வார்களின் சந்ததியாய் வந்து சிறு வயதிலேயே கண்ணனின் மேல் பேரன்பு கொண்டு பாசுரங்கள் பாடியதால் ‘பிஞ்சாய்ப் பழுத்தாளை’ என்று ஆராதித்து ஆண்டாளின் சிறப்பை மேலும் உயர்த்திக் காட்டுகிறார்.
இப்படிப்பட்ட சிறப்புகளுடைய, இனிய தமிழில் பாசுரங்கள் பாடிய ஆண்டாளே “சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே” பாடச்சொல்லிக் கேட்கிறாள். பாடினால்? வேறென்ன? “செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”. இதையேதானே தாயுமானவரும் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்றார்.
திருப்பாவையின் சிறப்பை மேலும் அழுத்தமாகச் சொல்ல வரும் கூரத்தாழ்வாருடைய மகன் பராசர பட்டர், “நற்கன்றுக்கு இரங்கும் தேனு தோற்கன்றுக்கும் இரங்குமாற் போலே…” என்கிறார். அதாவது நாம் ஆண்டாள் (நற்கன்று) போல் கண்ணனை ஆழ்ந்து பக்தியோடு பாட முடியாவிட்டாலும், ஆண்டாள் அருளிச் செய்த பாசுரங்களைத் திரும்பப் பாடினாலே போதும்; வைக்கோல் திணிக்கப்பட்ட தோல்கன்று முட்டினாலும் பசு பால் சுரக்கும் என்பதுபோல நமக்கும் கண்னனின் பரிபூரண அருள் வந்துசேரும் என்கிறார்.
சேஷாத்ரி கண்ணன் எழுதியுள்ள இந்த நூலை வாசிக்கையில் மேலெழுந்த எண்ணங்களே இவை அனைத்தும். அதற்கு அவருடைய எழுத்து பாணியும் ஒரு உந்துதல். ஒரு சொற்பொழிவாளர் எதிரில் அமர்ந்து சொல்வது போலவே எழுதியிருப்பது நூலின் ஒரு சிறப்பம்சம். அதே போல் ஆசிரிய-மாணவ உறவை, ஆசிரியனின் வழிகாட்டுதலில் மாணவன் சரியான பாதையில் சென்று அடைய வேண்டிய பெருஞ்செல்வத்தை அடைய முடியும் என்பதை பல இடங்களிலும் வலியுறுத்தி, குரு-சிஷ்ய மரபை அழுத்தமாகக் காட்டியிருப்பது மற்றொரு சிறப்பம்சம். மேலும் பல சிறு சிறு மேற்கோள்கள், கதைகள், வெறும் பாசுர விளக்கமாக மட்டுமே இல்லாமல் மற்ற இலக்கியங்களிலிருந்து தொடர்பான செய்திகள் என்று ஒரு முழுமையான பார்வையைக் கொடுத்திருப்பது வெகு சிறப்பு.
| பெட்டிச் செய்தி: சிங்கையைச் சேர்ந்த திரு.கண்ணன் சேஷாத்ரி அவர்கள் எழுதிய “திருப்பாவை பாசுர விளக்கம்” நூல் பிப்ரவரி 16 அன்று தேசிய நூலகத்தின் ‘தி பாட்’ அரங்கில் வெளியீடு கண்டது. தமிழ் நெஞ்சர் திரு.என்.ஆர்.கோவிந்தன் அவர்கள் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராக திரு. இராஜ்குமார் சந்திரா நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. தமிழகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்த கலைமாமணி திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சிறப்புரை நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டியது. ‘சுயம்பு ஃபைன் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் திருப்பாவைப் பாசுரங்களுக்கு நடனம் ஆடி நிகழ்வுக்கு மெருகேற்றினர். இசைக் கலைஞர் பரசு கல்யாணும், அவரது நண்பர் சந்தோஷும் தமது இனிய குரலில் சில பாசுரங்களைப் பாடி மகிழ்வித்தனர். திருமதி.கங்கா பாஸ்கரன், திருமதி.பானு சுரேஷ் நேர்த்தியாக நெறியாள்கை செய்ய, திரு.தமீம் அன்சாரி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார். திரு.சக்தி கண்ணன் அவர்களும் நானும் நூல் அறிமுகம் செய்தோம். நிகழ்வில் நான் பேசியதன் தொகுப்பே மேலே உள்ள வாசிப்பனுபவம். |


