
உடுமலைப்பேட்டைக்கும் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவுக்குமான உறவு அலாதியானது. 80களில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் தேர்த் திருவிழாவை ஒட்டி நிகழும் இசைக் கச்சேரிகளில் அந்த இசைக் கலைஞனின் முரசு ஓங்கி ஒலிக்காமல் இருந்ததில்லை. ஊரின் நடுவில் இருக்கும் குட்டை திடலில் அமைக்கப்பட்ட மேடையில் பித்துக்குளி முருகதாஸ், சூலமங்கலம் சகோதரிகள், வீரமணி, குன்னக்குடி வைத்தியநாதன் – அரித்துவாரமங்கலம் பழனிவேல் இணை போன்றோரின் கச்சேரிகளோடு அவருக்கே உரித்தான தொப்பியோடும் பச்சை சால்வையோடும் நாகூர் ஹனீஃபாவின் கச்சேரியும் களைகட்டும். கீபோர்ட், தபேலா, தேப்பு வாத்தியங்கள் சூழ நிமிர்ந்து அமர்ந்தபடி 2 மணி நேரத்திற்கும் மேலாக கணீர்க்குரலால் மக்களைக் கட்டிப்போட்டு வைப்பார். வீரமணி ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..’ என்று சன்னதம் வந்தவர்போலப் பாடி மேடையை விட்டு இறங்கியதும் மேடையேறும் ஹனீஃபா ‘நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்..’ என்று நெகிழ்வார்.
அவருடைய ‘இறைவனிடம் கையேந்துங்கள்’, ‘ஈச்சைமரத்து இன்பச் சோலையில்’ போன்ற பாடல்கள் அழியாப்புகழ் பெற்றவை. ‘அல்லாவை நாம் தொழுதால்’ பாடலில் “பள்ளிகள் பல இருந்தும் / பாங்கோசை கேட்ட பின்பும் / பள்ளி செல்ல மனமில்லையோ / படைத்தவன் நினைவில்லையோ” என்று பாடும்போது அந்தக் கனிவு கேட்பவரை உருக்கிவிடும். நம்மையுமறியாமல் அந்தத் திடலின் தென்புறம் இருக்கும் மசூதியை நோக்கி நம் பார்வையைத் திருப்பும்.
அன்பை காட்டி, அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார் நபி பெருமானார்
பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
பாதக வழி நடந்தால் இது முறை தானா
என்ன காலமோ… என் சோதரா…
என்ன காலமோ… என் சோதரா… என்று அவர் உச்சஸ்தாயியில் பாடுவது இன்றும் மனதில் பசுமையாய் ஒலிக்கையில், உலகமெங்கும் தேவையான இந்த இக்கட்டான நேரத்தில் இது இன்னமும் ஓங்கி ஒலிக்காதா என்று ஏங்கவைக்கிறது.
சிவரஞ்சனி இராகத்தில் அமைந்த ‘அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே..’ பாடலை இந்திப் பாடகர் முகேஷ் பாடிய ‘மேரே நைனா சாவன் பாதோ..’ மெட்டில் மிக உருக்கமாகப் பாடுவதை ஒரு இருள் சூழ்ந்த அறையில் தனித்துக் கேட்கும்போது கண்ணில் நீர்பெருகாதோர் எதற்கும் உருகார் என்றே கொள்ளலாம்.
அரசியலிலும் தனது இருப்பை அழுத்தமாக உணர்த்தியவர். 50களின் மத்தியில் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக பேரறிஞர் அண்ணா அவர்களுடன் சேர்ந்துகொண்டு துணிமூட்டைகளுடன் பல ஊர்களுக்கு பயணம் செய்து,
“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”
என்று உடுமலைப்பேட்டையின் மாணிக்கம் உடுமலை நாராயணகவி எழுதிய பாடலைப் பாடியபடி துணிகள் விற்பனை செய்தவர் என்று திரு.சாதிக் பாட்சா இவரை அறிமுகம் செய்துவைப்பார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம் போன்றோருடன் நெருக்கமாக இருந்தவர். சமயப் பூசல்கள் இன்றி அனைத்து சமூகங்களுக்கு இடையே அன்பும் அமைதியும் இணக்கமும் அன்று நிலவியதற்கும், இன்றும் பெருமளவில் நிலவுவதற்கும் ‘உன் மதமா என் மதமா..’ என்று உரத்துப் பாடிய நாகூர் ஹனீஃபாவும் ஒரு மிகப் பெரிய காரணம். இசைமுரசு விதைத்த மதங்கள் தாண்டிய அன்பு, நாகூர் பக்கீர் வீரமணியின் ‘பளிக்கட்டு’ மெட்டில் ‘ஏகனே யா அல்லாஹ்’ என்று பாடவைத்தும் இன்றைக்கும் விட்டல்தாஸ் பஜனை மேடைகளில் பலத்த கரகோஷத்துடன் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடவைத்தும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்தி ஒரு மெருமரமாக வளர்ந்து நிற்கிறது.
ஊரால் சிலருக்குப் பேரும் புகழும் சேர்வதுண்டு. இன்னொரு புறம் சிலரால் ஊருக்கே பெருமை சேரும். ஹனீஃபா அந்த வகையைச் சேர்ந்தவர்.


