(நினைவலைகள்) சூஃபி பரம்பரையில் வந்த மாபெரும் இசைக் கலைஞன்

சாரு நிவேதிதா

எனக்கு இலக்கியத்தை விட அதிக விருப்பமானது இசை. என் இசை ரசனைக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் நாகூர் ஹனீஃபா. நினைவு தெரிந்த நாள் முதலாய் ஹனீஃபாவின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஹனீஃபாவின் குரல் வேறு யாராலும் பின்பற்ற முடியாத தனித்துவம் கொண்டது. அந்த வகையில் ஒரு தனித்துவம் கொண்ட பாடகர் அவர். இந்தி கிஷோர் குமாரின் குரலும் தனித்துவமானதுதான் என்றாலும் அவருடைய பாணியில் அவருக்கு முன்னதாக கே.எல்.செய்கல் இருந்திருக்கிறார். இதை கிஷோர் குமாரே குறிப்பிட்டும் இருக்கிறார். கிஷோரைப் போல் யாரேனும் பாடி விடவும் கூடும். ஆனால் ஹனீஃபாவைப் போலப் பாட அவரை விட்டால் வேறு யாருமே இல்லை. உலகிலேயே அவர் மட்டும்தான். இது பற்றி ஹனீஃபா, “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? கோடிக் கணக்கான மனிதர்கள் பிறந்து கொண்டு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி முகம் இருக்கிறதுதானே? ஒருவரைப் போல் இன்னொருவர் இல்லையே?” என்கிறார். தொடர்ந்து சொல்லும்போது, “என்னைப் போல் என் குரலில் பல இளைஞர்கள் பாடுவதைக் கேட்கிறேன். ஆனால் இரண்டு பாடல்களுக்கு மேல் அவர்களின் குரல் வேறு மாதிரி ஆகி விடுகிறது” என்கிறார். உண்மைதான். ஒலிபெருக்கி இல்லாமலேயே பல காத தூரம் கேட்கும் அளவுக்கு கனத்த குரல் ஹனீஃபாவினுடையது. அதே சமயம் தேனினும் இனிமையானது. 

இதையெல்லாம் விடப் பெரிய விஷயம், நான்கு ஐந்து மணி நேரத்துக்கு இடைவிடாமல் மழைபோல் பொழியும் இசைக் கலைஞன் ஹனீஃபா. வேறு யாராலும் இவ்வளவு உச்ச ஸ்தாயியில் குரலில் நான்கு ஐந்து மணி நேரம் பாடுவதை யோசித்தும் பார்க்க முடியாது. அதிலும் பல பாடல்களில் சுவாசத்தில் இடைவெளியே கொடுக்காமல் பாடிக்கொண்டே போவார். உதாரணமாக, ”திக்குத் திகந்தமும் கொண்டாடியே” என்ற பன்னிரண்டு நிமிடப் பாடலில் முதல் ஆறு நிமிடம் ஹனீஃபாவின் குரல் இசையும் இறைமையும் கலந்து நிற்கும் உன்னத வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும். ஆறு நிமிடம் கழிந்த பிறகே ”உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்ற அற்புதப் பாடல் நிகழும். இந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் விடாத மனிதரை நான் கண்டதில்லை. 

ஹனீஃபாவின் இசைமழையில் நனைந்து வளர்ந்த பயிர் நான். கந்தூரியின்போதும் மற்ற விசேஷங்களிலும் ஹனீஃபாவின் கச்சேரி இரவு முழுவதும் நடைபெறும். அவரது பாடல்கள் மதம், இனம் போன்ற பாகுபாடுகளைக் கடந்தவை என்றாலும் பல பாடல்கள் இஸ்லாமிய அறக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் விளக்குபவையாக இருக்கும். உ-ம். ”அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே அண்ணல் நபி வரும் போது இன்னல் செய்தாள் ஒரு மாது” என்ற பாடல் நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை விளக்குகிறது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளை நினைவூட்டும் சம்பவம் அது. 

இது போல் எண்ணற்ற ஹதீஸ்களைப் பாடலாகப் பாடியிருக்கிறார் ஹனீஃபா. நெஞ்சம் உருகுதம்மா என்ற பாடலில் தீனோர்களின் தியாக வரலாற்றைச் சொல்லுவார். ”ஐந்தாயிரம் ஆண்டுகள் முன்பே நடந்தது அரபு நாட்டிலே ஓர் தியாகம்” என்ற ஒரு பாடல். இடது காதை இடது கையால் பிடித்தபடி ஹனீஃபாவின் தனி முத்திரையான “ஓ…” என்று இழையும் குரலை இந்தப் பாடலில் கேட்கலாம். 

“கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்; கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள்”, “ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?”, “தீன்குலக் கண்ணு…” போன்ற பாடல்கள் ஒரு இஸ்லாமியப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்பவை. அது தவிர இந்தப் பாடல்களின் இனிமை கேட்பவரை இசைப் பேரின்பத்தில் ஆழ்த்துபவை. 

ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் இசைமுரசு ஈ.எம்.ஹனீஃபாவின் மிக முக்கியமான பாடல்கள்: “கருணைக் கடலாம் காதர்வலியின் காரண சரிதம் கேளுங்கள்”, கரீப் நவாஸ் (ஏழைகளின் பங்காளன்) என்று அழைக்கப்படும் அஜ்மீர் ஔலியாவைப் பற்றிய பாடலான ”அஜ்மீர் ராஜாவே கருணை க்வாஜாவே”, “சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ, என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைகளை…”

ஹனீஃபாவின் பல நூறு பாடல்கள் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் தரக் கூடியவை. உதாரணங்கள்: ”அருள் மேவும் ஆண்டவனே அன்புடைய காவலனே”; ”மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யார சூலல்லாஹ்”; ”மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?” (மௌத் = மரணம்); “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு…”; “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா…; “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்.”

இந்தியாவின் சூஃபி பரம்பரையில் வந்த மாபெரும் இசைக் கலைஞனான இசைமுரசு ஈ.எம்.ஹனீஃபா நவீன இசைக் கருவிகள் பழக்கத்துக்கு வரும் முன்பே நான்கே நான்கு கருவிகளோடு – தப்லா, ஹார்மோனியம், ஷெனாய், டேப் (ஃபக்கீர்கள் பயன்படுத்தும் இசைக்கருவி) – நான்கைந்து மணி நேரம் கச்சேரி செய்தவர். என்னுடைய வருத்தம் என்னவென்றால் தமிழ்நாடே கொண்டாட வேண்டிய இந்த இசைக் கலைஞனின் மீது சினிமாவின் நிழல் படாத காரணத்தால் அவரது பெயர் போதுமான அளவில் கவனிக்கப்படாமல் போயிற்றே என்பதுதான். ஹனீஃபா தன் வாழ்நாள் முழுவதும் சினிமாவை ஒதுக்கித் தள்ளினார். குலேபகாவலி, பாவ மன்னிப்பு போன்ற இரண்டு மூன்று படங்களில் தான் பாடினார். 

ஹனீஃபாவின் இன்னொரு சாதனை, திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் மக்கள் இயக்கமாகத் திரண்ட ஆரம்ப காலத்திலும் சரி, அதற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி, அந்தக் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றதில் ஹனீஃபாவின் பங்கு மகத்தானது. கருத்து உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட ”கல்லக்குடி கொண்ட கருணாநிதியே” என்ற பாடலைக் கேட்கும் போது நம் மனம் உருகி விடும்.

ஹனீஃபா தன்னுடைய பெரும்பான்மையான பாடல்களுக்குத் தானே இசை அமைத்தார். அவருடைய ஒரு பாடல் கூட கேட்பதற்கு அசுவாரசியமாக இருந்ததில்லை. இங்கே நான் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம், அவருடைய பாடல்களை இயற்றிய புலவர் ஆபிதீன் மற்றும் நாகூர் சலீம். ஆயிரக் கணக்கான பாடல்களை இயற்றியவர் சலீம். கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோருடன் இணையாகப் பேசப்படவேண்டிய நாகூர் சலீமும் சினிமாவின் நிழல் படியாத இடத்தில் இருந்ததால் பிரபலமாக அறியப்படவில்லை. இந்த மகத்தான கலைஞர்களை இந்தத் தருணத்திலாவது நாம் நினைவு கூர்வோம். அதன் பொருள், காலத்தால் அழியாத அவர்களின் பாடல்களைக் கேட்டு இன்புறுவோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை ஈ.எம்.ஹனீஃபாவின் பாடல்களை ஒன்று திரட்டி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொகுக்க வேண்டும் என்று சொன்னார். அது மட்டும் செயல்படுத்தப்பட்டால் ஹனீஃபாவின் இசைச் சேவை இன்னும் பரவலாக அறியப்படும். 

இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா தான் பாடிய ஒவ்வொரு பாடலையும் ஆயிரக்கணக்கான மேடைகளில் பாடினார் என்பது இங்கே முக்கியமாக நினைவுகூரத்தக்கது. ஒவ்வொரு பாடலையும் அவர் பத்தாயிரம் இருபதாயிரம் தடவை பாடியிருக்கிறார். ஹனீஃபாவுக்கு பாடல் என்பது சுவாசத்தைப் போல. 

“அருள்மழை பொழிவாய் ரஹ்மானே…” என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். எந்தப் பிரயாசையுமின்றி எத்தனை லகுவாகப் பாடுகிறார். 

நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு அற்புத சம்பவத்தை “ஒருநாள் மதீனா நகர்தனிலே…” என்ற பாடலில் விவரிக்கிறார் ஹனீஃபா. “மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா?” அவருடைய இளைமையான குரலில் வந்த இனிமையான பாடல்.

நாகூர் ஹனீஃபாவைப் போன்ற குரல் படைத்தவர் அவருக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஒரு தியாகம் என்ற மகா அற்புதமான பாடல் அதற்கு ஒரு உதாரணம். இந்தப் பாடலில் ஈ.எம்.ஹனீஃபாவுக்கு மட்டுமே உரிய தனித்துவமான விசேஷங்களைக் கேட்கலாம். இஸ்லாமிய நாடோடி இசையின் உச்சம் இந்தப் பாடல்.

சாஸ்த்ரீய சங்கீதத்துக்கு உரிய முக்கியத்துவம் நாடோடி இசைக்கும் தரப்பட வேண்டும். அந்த இசையின் உச்சபட்ச சாதனையாளர் இசை முரசு ஈ.எம்.ஹனீஃபா.

பின்குறிப்பு: மேடையில் தனக்குப் பக்க வாத்தியம் வாசிப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஹனீஃபா ஒலிபெருக்கியைக் கையால் மறைத்தபடி ஒரு காரியம் செய்வார். அந்த அட்டகாசத்தை நாகூர்வாசிகள் மட்டுமே அறிவோம். ஒரு மாபெரும் கலைஞனின் விளையாட்டு மனோபாவம் அது என்று சிரித்துக் கொள்வோம்.