(இளையர் முற்றம்) அஜ்னேபியாக்களின் பயணம்

0
770

ஆங்கிலத்தில்: ஆரவ் (தொடக்கநிலை 5)  தமிழாக்கம்: சவிதா

நூற்றுக்கணக்கான அஜ்னேபியா ஹாட்ரோசார்கள் கடற்கரைக்கு வந்திருந்தன. அவைகளின் குட்டிகள் சற்று முன்பு தான் முட்டையை விட்டு வெளியே வந்திருந்தன. இனி, இவையெல்லாம் புதிய உணவுப்பகுதியை தேடி கடலில் நீந்தி அருகிலுள்ள தீவுகளுக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. பச்சை கோடுகள் மற்றும் மஞ்சள் இமைகள் கொண்ட வாத்துப்போல் தோன்றும் இந்த அஜ்னேபியாக்கள், ஒரு காரணத்துக்காக தயங்கின. ஒரு பெரிய 65 மீட்டர் நீளமுள்ள மோசாசோரஸ் பாறைகள் அருகே சுழன்று கொண்டு, அஜ்னேபியாக்கள் மற்றும் அவைகளின் குட்டிகளை விழுங்கக் காத்துக்கொண்டிருந்தது.

அஜ்னேபியாக்கள் பசியுடனும் பதற்றத்துடனும் இருந்த தங்கள் ஆவலான குட்டிகளை கவனித்துக்கொண்டிருந்தன. அவர்கள் தங்களின் தலைவன் ஆணிடமிருந்து வரும் ஒரு சின்ன சைகைக்காகக் காத்துக்கொண்டிருந்தன. பூஊங்! என பந்தய ஆரம்ப சத்தம் போல ஒலித்த உடனே நூற்றுக்கணக்கான அஜ்னேபியாக்கள் கடலில் பாய்ந்தன.

தங்களுடைய பரந்த கால்களால் நீந்தத் தொடங்கின. பெரிய கூட்டமாகச் செல்லும்போது, சுறாக்களும் மோசாசோர்ஸ்களும் ஒரே இலக்கைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணற வேண்டியிருந்தது. ஆனால் ஒரு குட்டி ஹாட்ரோசார் குழுவிலிருந்து விலகிப் போனது. தனியாக இருந்ததால், அது எளிதான குறியாக மாறியது. மோசாசோரஸ் உடனே வேகமாக முன்னே பாய்ந்து, நீரில் ஒரு V வடிவ அலை உருவாக்கியது. தன்னுடைய தவறை புரிந்துக்கொண்ட அந்த குட்டி மீண்டும் தன் கூட்டத்துக்கு ஓட முயன்றது. ஆனால் மோசாசோரஸ் தண்ணீரிலிருந்து பாய்ந்து வந்து, அந்த குட்டியைப் பிடித்து வாயில் உறிஞ்சி இழுத்தது.

அதன் முழு உடலும் நீரின் மேல் பாய்ந்தது. அது தண்ணீரில் விழும்போது, தண்ணீர் எல்லா பக்கமும் தெறித்தது. அது தண்ணீரில் விழும் சத்தமே இரண்டு சிற்றுந்துகள் மோதும் சத்தம் போல அதிர்ந்தது. இந்த சத்தத்தைக் கேட்டு, மற்ற ஹாட்ரோசார்கள் இன்னும் வேகமாக நீந்தத் தொடங்கின.

இதை உணர்ந்து, வானில் பறக்கும் ஹட்சிகொப்டெரிக்ஸ்களும் வந்தன. ஒட்டகத்தைப் போல் பெரிய அளவு கொண்ட இவை, 1.5 மீட்டர் நீள அலகு கொண்டிருந்தன. அவைகள் மேல் பறந்து, குட்டி அஜ்னேபியாக்களை நீரிலிருந்து கற்கள் எடுப்பது போல எடுத்துச் சென்றன.

இந்த தாக்குதல் 30 நிமிடங்களுக்கு நடந்த பிறகு, அஜ்னேபியாக்கள் கடைசியாக தீவின் பாதுகாப்பான பகுதியில் சென்று சேர்ந்தன. பல குட்டிகள் இரையாகி இருந்தன, ஆனால் எப்போழுதுமே இவ்வாறு தான் இயற்கையின் தேர்வு நடந்தது. வலிமை வாய்ந்தவைகள்தான் பிழைத்தன. ஒரு வருடத்திற்கு பிறகு, இதே பயணம் மீண்டும் நடக்க வேண்டும். இந்த வருடம் பிறந்த குட்டிகளுடன் மீண்டும் இனப்பெருக்க இடத்திற்கு திரும்ப வேண்டும். இது இந்த உயிரினங்களின் வருடாந்திர இடமாற்ற வழக்கமாக இருந்தது.