(சிறுகதை) சிறகுகள்
சித்ரா ரமேஷ்
ஆதிக்கு மலை முகட்டின் உச்சியின் பாறையின் நுனியில் நின்று புகைப்படம் எடுக்கவேண்டும் என்று ஆசை கிடையாது. நண்பர்கள் சேர்ந்து மலைவாசஸ்தலத்திற்குச் சென்றால் இதைப் போன்ற சாகசங்களில் ஈடுபடவேண்டும் என்று திடீரென்று ஆர்வம் வந்துவிடும். அருவியில் குதிப்பது, நதியின் ஓட்டத்தில் நீச்சல் அடிப்பது, மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குவது, கடலலைகளின் நடுவே சென்று சிரிப்பது என்று வழக்கத்துக்கு மாறான சாகசங்களில் ஈடுபடுவதும் அதை புகைப்படம் எடுத்து விடீயோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவது, டிக்டாக்கில் போடுவது என்று புதிய தலைமுறையினருக்கு அத்தனை விஷயங்களையும் செய்துபார்ப்பது ஒரு வழக்கமாகி விட்டது. அதில் ஒன்றுதான் பாறையின் நுனியில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்ததும் முதல் சாகசவீரனாக ஆதி வீரராகவன் மாட்டிக் கொண்டான். எப்படி ஈராயிரம் ஆண்டு பிறந்தவனுக்கு ஆதி வீரராகவன் என்று பெயர் வைக்கத் தோன்றியதோ அவன் பெற்றோருக்கு! எல்லாம் அப்பத்தாவின் தொணதொணப்பால்தான் இருக்கும். நல்ல வேளை ஆதி என்று சுருக்கிக் கொண்ட பிறகு ரொம்பவே நவீனப் பெயராகி விட்டது.
சிவில் எஞ்சினியரிங் டிப்ளமா முடித்ததும் உடனே துபாயில் வேலை கிடைத்து போய்விடலாம் என்று நினைத்திருந்தான். ஐந்து வருடங்களில் மாடி வீடு கட்டி பெரிய இடத்தில் பெண் கிடைத்து பிறகு ஐந்து வருடங்களில் ஒரு ஆண், ஒரு பெண் என்று குழந்தைகள் பிறந்து மனைவி செல்வச்செழிப்பில் கொஞ்சம் உடல் பெருத்து தங்க ஆபரணங்கள் மினுமினுக்க நின்றுகொண்டு, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து நாங்கள் இருவரும் என்றும் இணைந்து என்று முகநூலில் போட்டு, விஜய் திரைப்படத்தில் கதாநாயகியைப் பார்த்தவுடன் காதல், கல்யாணம், குழந்தைகள், இரண்டு குழந்தைகள் போதும் என்று குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் செஞ்சாச்சு என்று சொல்லும் அளவிற்கு கனவுகள் விரியும் பருவம் அது.
ஆதிக்கு அவ்வளவு பெரிய கனவுகள் எல்லாம் இல்லை. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படும் சராசரி மனிதன். ஆனால் தன்னால் எவ்வளவு உயரத்தை அடைய முடியும் என்பது தெரியவில்லை. பல ஏஜெண்டுகளைப் பார்த்தான்.
“தம்பி இப்ப என்ன வேலை செய்யறீங்க? என்ன வேலை உங்களுக்குத் தெரியும்?” என்று எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்டார்கள்.
“ரெண்டு வருஷம் கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனில வேலை செஞ்சுட்டு வாப்பா. அப்புறம் வெளிநாட்டுல வேலையத் தேடலாம்”, என்று அனைவரும் சொன்னபிறகு உள்ளூரில் வேலைத் தேடத் தொடங்கினான்.
கட்டட வேலைகள் ஊரெங்கிலும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் வேலை கேட்டுச் சென்றால், மேஸ்திரி வேலை தெரியுமா, சித்தாள் வேலைக்குத்தான் ஆள் வேண்டும் என்று பதில் கிடைத்தது. சிவில் என்ஜினியரிங் டிப்ளமாவுக்கு வேலையே கிடைக்காதா? என்று அலைந்தான். கடைசியாக அப்பாவின் நண்பருக்கு நண்பரின் மூலம் திருச்சியில் கல்யாண மண்டபம், பக்கத்திலேயே விருந்தினர் மாளிகை, அடுக்கு மாடி வீடுகள் என்று பெரிய அளவில் கட்டட வேலைகள் நடந்து கொண்டிருந்த கோல்ட் ஸ்டார் நிறுவனத்தில் சூப்பர்வசைர் வேலை கிடைத்தது. பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னதும் முகம் சுருங்கிப் போனான்.
முதல் நாள் இள நீல நிறத்தில் சட்டை, கருப்பு கால் சட்டை என்று டிப்டாப்பாக போய் நின்றான். “மேஸ்திரி அய்யாதுரையிடம் போய்க் கேளு அவர் என்ன சொல்லறாரோ அதைச் செய்” என்று பெரிய என்ஜினியர் சொன்னதும் அய்யாதுரையிடம் போனான். அவர் பரம அழுக்காக காக்கி நிறச்சட்டை, என்ன நிறம் என்பதை சொல்லமுடியாத நிறத்தில் அரைக்கால் சட்டை, காலில் ஹவாய் செருப்புடன் நின்று கொண்டிருந்தார்.
“நீ தானா வீரராகவன்?”, என்று கேட்டு விட்டு இவன் பதிலை எதிர்பார்க்காமல் “வா எங்கூட” என்று விறு விறுவென்று பக்கத்தில் சாரம் கட்டி ஊஞ்சல் போலத் தொங்கிக் கொண்டிருந்த கட்டையில் ஏறினார். “வா நாம இப்ப பத்தாவது மாடிக்குப் போகணும்”, என்று கூப்பிட்டார்.
தயக்கத்துடன் ஏறினான். முதல் இரண்டு மாடிகள்வரை எறியபோது ஒன்றும் தெரியவில்லை. நான்காவது மாடியிலிருந்து லேசாக கால் ஆடத் தொடங்கியது. இரண்டு கால்கள் மட்டும் வைத்துக் கொள்ள இடம் இருந்த பலகையில் எப்படி பத்தாவது மாடி வரை போவது? தலையைச் சுற்றியது. தோள் பக்கம் வியர்வைக் கொட்டியது.
“பத்தாவது மாடி வந்துடுச்சின்னா அப்புறம் ப்ளோரிங் போட்ட இடம் இருக்கு” என்றார் அய்யாதுரை. வியர்வை கசகசக்க பத்தாவது மாடிக்குச் சென்றான்.
“இனிமே இங்கதான் வேலை. நாலு வீடு கட்டணும். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாரி இருக்கும். ஒரு வீட்ல மாடி கட்டணும். அது பதினொராவது மாடில கட்டப்போற வீட்டுக்குள்ள போகும்” என்று எதோ சொல்லிக் கொண்டே சென்றார். சுற்றிலும் நிறையத் தலைகள் தெரிந்தன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இப்படி எல்லா வயதினரும் இருந்தனர். ஆளுக்கொரு மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். அய்யாதுரை சத்தம் போட்டதும் கலைந்து சென்றனர்.
ஒரே மொழி பேசும் மனிதர்கள் இருந்தபோது சொர்க்கத்திற்குச் செல்ல அனைவரும் சேர்ந்து கோபுரம் எழுப்ப அது உயரமாக வளர்ந்து கொண்டேயிருந்தது. கடவுள் அதைப் பார்த்து இதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் கடைசியில் ஒரு வழி கண்டு பிடித்தார். எல்லா மக்களும் ஒற்றுமையாக ஒரே மொழி பேசுவதால் தானே ஒற்றுமையாக இந்த கோபுரத்தைக் கட்டுகிறார்கள்? ஆளுக்கு ஒரு மொழி உருவாக்கி பேச வைத்தால் பிறகு அவர்களிடம் குழப்பம் வந்து விடும். இதுதான் பேபல் கோபுரத்தைக் கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நின்ற பைபிள் கதை படித்திருக்கிறான்.
ஆனால் இங்கே ஹிந்தி, பெங்காலி, பீஹாரி, தெலுங்கு என்று ஆளுக்கொரு மொழி பேசினாலும் முப்பது மாடிக் கட்டடத்தை எழுப்பி விடலாம். பல மொழிகளுக்கும் வயிறு ஒன்றுதான். வறுமையின் மொழியும் ஒன்றுதான் என்பது புரிந்தபோது ஆதி அவர்களில் ஒருவனாக மாறினான். எந்த மாடியில் வேலை நடக்கிறதோ அந்த மாடி வேலை முடியும் வரை அது அவர்கள் சொந்தம். இரவு நேரம் மட்டும் கீழ்த்தளம் வந்து சமையல் செய்துகொள்வார்கள். அங்கேயே படுத்துக்கொள்வார்கள். அவர்கள் காதல், காமம், ஆசைகள் எல்லாம் அந்த நேரம் மட்டும்தான்.
மெள்ள மெள்ள தன்னுடைய தயக்கங்களைத் களைந்து, அங்கு இருந்த கங்கு பாய், சமேலி, ரூபா, கெஜலட்சுமி, பாலாஜி, ஆபீர், ஸ்வீட்டி, ஜும்பா, அன்மோல், தாஸ் என்று அனைவரிடமும் பழகினான். இரவு நேரங்களில் மட்டும் தான் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றான். பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக மட்டும் உழைக்காமல் வேலை கற்றுக்கொள்ள உழைத்துப் பார் என்று அவனோடு வேலை பார்த்த கருணாகரன் சொன்னதும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டான். மேஸ்திரியை ஒரு படி கீழே தன் வேலை என்பதை உணர்ந்தான்.
கட்டடம் கட்டுவதை விட இடிப்பது பெரிய வேலை என்று தெரிந்தது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுவேன் என்ற கட்டடத்தை இடிக்கத் தொடங்கியபோதுதான் அதை இடித்து தரை மட்டமாக்குவது அவ்வளவு சுலபமில்லை என்று புரிந்தது. ஸ்கஃபோல்டிங், பைலிங், ப்ளம்பிங் என்று அனைத்தையும் கற்றுக் கொண்டான்.
ஆனால் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு ஊருக்குப் போகும் போது கருத்து இளைத்துப் போய் நிற்பதைப் பார்த்த அம்மா “உனக்கு வேலை பிடிக்கலைன்னா பரவாயில்லப்பா! இங்க எதோ நம்ம கிட்ட இருக்கிற காடு கழனியப் பாத்துக்கிட்டு இருந்துடு. அங்கப்போயி ஏன் இப்படி கஷ்டப்படற?” என்று கேட்டதும் அவனையும் மீறி கழிவிரக்கம் வந்துவிடும். அம்மா கையில் “இந்தா வெச்சுக்க” என்று ஆயிரம் ரூபாய் கூடத் தர முடியாது. ஆனால் இந்த கஷ்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்கள்தான். இன்னும் ஒரு வருடத்தில் அரபு நாடுகளுக்கோ இல்லை சிங்கப்பூருக்கோ சென்றுவிடலாம். அதற்குப் பிறகு கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளம்புவான்.
ஏஜெண்டைப் பிடித்து எப்படியாவது வேலை வாங்கிக் கொடு என்று கெஞ்சினான். “பிளைட் டிக்கெட் விசா, அப்பறம் அங்க வொர்க் பெர்மிட், ஏஜெண்ட் கமிஷன் எல்லாம் சேந்து மூணு லெட்சம் ஆகும். பணத்த ரெடி பண்ணிட்டு வாங்க. பாக்கலாம்”, என்று எஜெண்ட் சொன்னபோது அப்போதே சிங்கப்பூர் போன உணர்வு வந்தது.
அம்மாவின் தாலிக்கு எவ்வளவு மதிப்பு என்று பணத்துக்கு அலைந்தபோதுதான் தெரிந்தது. அம்மா “சிங்கப்பூர் பவுன் நல்லா பளபளப்பா கருத்துப் போகாம இருக்கும்ன்னு அன்னபூரணி சொன்னா. நல்லா சம்பாதிச்சு எனக்கு தாலி செயின் வாங்கித்தாப்பா”, என்று தாலிச்செயினை கழட்டித்தந்தாள்.
ஏஜெண்ட்டுக்கு கட்டிய பணம் போக மீதமிருந்ததில் இரண்டு ஜீன்ஸ், பாண்ட், டீ சட்டைகள், ஷூ என்று தேவைக்கு மேல் வாங்கி பெட்டியில் அடுக்கினான். நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசப்பயணம், பார்ட்டி என்று அலைந்தான். கடைசியில் சொர்க்கத்திற்கு வழி காட்டும் சிங்கப்பூருக்கு திருச்சியிலிருந்து விமானம் ஏறினான்.
வந்து இறங்கியதும் ஒரு மௌனமாக சலனமற்று இருந்தது போலிருந்தது விடியற்காலை நகரம். தங்கவேண்டிய இடம் வந்ததும், அவனை அழைத்துக் கொண்டு வந்த நவீன் என்ற சிங்கப்பூர் பையன் “இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை வந்து அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
பங்கர் படுக்கையிலிருந்து ஒரு குரல் கேட்டது. “புது ஆளா? என்ன வேலைக்கு வந்திருக்க? என் பேரு சிவா. எனக்கு உடம்புக்கு முடியலை. வேலைக்குப் போகலை. நானும் இல்லேன்னா உனக்கு இங்க யாரும் இருக்க மாட்டாங்க”, என்றான் புன்னகையுடன்.
கையில் பெரிய கட்டு. கண்களில் குறும்புத்தனம். பார்த்தவுடன் பிடித்துப் போய்விடும் தோற்றம். அரை நாளில் மொத்த வாழ்க்கையும் பேசி முடித்தார்கள். அங்கு தங்கியிருக்கும் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே கதை. பல சுமைகள். பெரிய கனவுகள்.
“சரிதான் சீன முதலாளி உனக்கு என்ன வேலைன்னு கூட்டிட்டு வந்திருக்காரு?” என்று சிவா கேட்டதும், “கன்ஸ்ட்ரக்சன் சைட்ல வேலையாம்” என்றான். “ஆமா எல்லாரும் ஐஐடில சாஃப்ட்வேர் படிச்சுட்டு சிட்டி பாங்க்ல வேலைக்கா வந்திருக்கோம்? எல்லாருக்கும் கன்ஸ்ட்ரக்சன் சைட்ல வேலை இல்லேன்னா கிளீனிங் செக்டார்ல வேலை. அதுல என்ன வேலை? என்று கேட்டான் சிவா.
ஆதிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. “நாளைக்கு ட்ரெயினிங் கொடுக்க கூட்டிட்டுப்போறாங்க. அப்ப தெரியும்னு நினைக்கிறேன்” என்றான் மெதுவாக.
மறுநாள் லாரியில் அனைத்துப் பணியாளர்களுடன் ஆரஞ்சு நிற சீருடை அணிந்து உற்சாகத்துடன் கிளம்பினான். இரண்டு வாரங்கள் பயிற்சி தரப்பட்டது. உயரமான கட்டடத்தின் மேல் சென்று எப்படி பழுது பார்ப்பது, சுத்தம் செய்வது, பெயிண்ட் செய்வது போன்றவற்றிற்குப் பயிற்சி. கட்டடக்கலையின் உச்சகட்டமாக பல வடிவங்களில் கட்டடங்களை வடிவமைத்துக் கட்டுவது, கட்டியபின் அதை அப்படியே புதியதுபோல் பராமரிப்பது இரண்டு வேலைகளுக்கும் காண்ட்ராக்ட் எடுத்து அந்த வேலைகளைச் செய்ய தொழிலாளர்களை ஏற்பாடு செய்வது என்று பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து தொழில் செய்து வந்த நிறுவனம். ஆதிக்கு அந்த நிறுவனத்தில் தான் வேலை.
சீருடை,காலணிகள், பாதுகாப்பு பெல்ட் பலவகை உபகரணங்களைக் கொடுத்தார் அந்த சீன முதலாளி. ஊரில் எந்த வகையான பாதுகாப்பும் இல்லாமல் அய்யாதுரையுடன் பல மாடிகள் ஏறியது நினைவுக்கு வந்தது.
பாதுகாப்புப் பயிற்சிகளில் பலவகையான சங்கேதச் சைகைகள், மாதிரிப் பயிற்சிகள், முழங்கால் வரை மூடியிருக்கும் கம்பூட்ஸ் அணிந்து மேலே ஏறுவது போன்ற பயிற்சிகள். கிட்டத்தட்ட இரண்டு வாரம் கொடுத்தார்கள். காலையில் போனால் மாலை வரை தொடர்ந்தது.
“என்ன ஆதி வௌவால் வேலைக்கா வந்தே? நேத்திக்குப் பாத்தப்ப தொங்கிட்டிருந்தே?” என்று சிவாவும் நவீனும் கேட்டனர். “ஆமா மெயிண்டனன்ஸ் வேலையாம்”, என்றான்.
“போன தடவை ஜேம்ஸ்ன்னு ஒரு பையன் வந்து இப்படித்தான் மாட்டிக்கிட்டான். அவனுக்கு உயரம்னாலே பயமாம். அவனப் போயி முப்பதாவது மாடில போயி பெயிண்ட் அடி, சுத்தம் பண்ணுன்னு வேலை கொடுத்தாங்க. அவ்வளவுதான். ஒரேடியா மிரண்டு போயி கால்ல விழுந்து கெஞ்சி வேலைய மாத்த சொல்லி கேட்டான். அவன சுத்தம் செய்யற வேலைக்கு அனுப்பிட்டாங்க. வெளில கார்டனரா வேலை செய்யறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்”, என்று நவீன் சொன்னதும் அடி வயிற்றில் சரேல் என்றது. என்ன இது? சிவில் என்ஜினியரிங் டிப்ளமா படிப்புக்கு என்ன வேலை கொடுக்கவேண்டும் என்று நிறுவனத்திற்குத் தெரியாதா? என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
இரண்டு வாரங்கள் முடிந்து அன்று புது வேலைத் தொடக்கம். பொங்கோல் என்ற இடத்தில் புது ப்ராஜெக்ட் தொடங்கப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பெரிய லாரியின் பின்புறம் எல்லோரும் இடித்துப் பிடித்து உட்கார்ந்து கொண்டு கைத்தொலைபேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு அந்த நாள் வேலைக்கு தயாரானார்கள். வேலை செய்யும்போது கைத்தொலைபேசியை பயன்படுத்த முடியாது. சூப்பர்வைசர் மூலம்தான் தொடர்பு கொள்ளமுடியும்.
“ஆதி! நீ ஃபைசல், இமிதியாஸ், சுப்பிரமணி இவர்களுடன் போய் வேலையைத் தொடங்கு” என்று சூப்பர்வைசர் சொன்னதும் அவர்கள் பின்னால் போய் நின்றான். அவர்கள் குறும்பாக இவனைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தார்கள். அந்த சிரிப்புடன் விதி சிரித்தது அவனுக்குப் புரியவில்லை. மடமடவென்று முப்பதாவது மாடிக்குச் சென்றனர். ஜன்னல் வழியே கயிறுகளை வீசி அங்கங்கே அதை பிடிமானத்தில் கட்டினர். இமிதியாஸ் டக்கென்று பெல்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜன்னலில் மறுபக்கத்தை பொருத்தி விட்டு வானத்தில் நடப்பவன் போல் மெல்ல நடந்து கூரைக்கு மேல் சென்றான்
பாதுகாப்பு பெல்ட்களை சரியாகப் பொருத்தி விட்டு கையை அசைத்து அனைவரையும் கூப்பிட்டான். ஃபைசல், சுப்பிரமணி இவர்களுடன் ஆதி ஜன்னலிலிருந்து வெளியே வந்து கூரை மேல் மெல்ல நகரத் தொடங்கினான். அந்த கூரையின் வெளிப்புறம் வெள்ளியில் செய்த மலை போல் பளபளவென்று மின்னியது. ஆதிக்குக் கண்கள் கூசியது. கால் எங்கோ உடலை விட்டு நழுவுவது போல் தோன்றியது. அடி வயிற்றில் பயம் ஜிவ்வென்று ஏறியது. பயப்பந்து உருண்டு தொண்டை வரை அடைத்துக் கொண்டது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. பூனையின் சாகச நடையுடன் அவர்கள் மெல்ல கூரையை நோக்கி நகர்ந்தனர். ஆதிக்கு திடீரென்று தன் நண்பர்களுடன் ஊட்டிக்குச் சென்றபோது தொட்டபெட்டா சிகரத்திற்கு பக்கத்தில் பாறையில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்தது நினைவுக்கு வந்தது. ஜில்லென்று மேகம் முகத்தை உரசிக் கொண்டு சென்றபோது நிலை தடுமாறினான். அவன் நண்பன் பிரணவ் கையை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றான். இத்தனை வெயிலில் ஏன் தனக்கு மட்டும் ஜில்லென்று எதோ முகத்தில் மோதுகிறது?
பிரணவ் மாதிரி கையை யாராவது பிடித்துக்கொண்டு நின்றால் பரவாயில்லை. வெயிலில் எப்படி மேலே செல்லமுடியும்? புரியவில்லை. அவர்கள் மூவரும் பாதுகாப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்தான். மீண்டும் கண்கள் கூசியது. கண்ணாடியை எங்கே வைத்தோம்? நினைவில்லை. யாரோ ஆதி ஆதி என்று கூப்பிடுவதைப் போல் தோன்றியது. உடல் பறப்பதை உணர்ந்தான். தனக்கு எப்போது சிறகுகள் முளைத்தன. ஜிவ்வென்று மேலே சென்று பறப்பது ஒரு பரவச அனுபவமாக இருந்தது. மேலே செல்ல செல்லச் ஜில்லென்று காற்று வீசியது. கண்கள் இப்போது கூசவில்லை. பறப்பது இவ்வளவு சுகமான அனுபவமா? ஆதிக்குச் சற்று பயமாக இருந்தது.
கூட்டத்தை விலக்கிப் பார்க்க சிவாவுக்குப் பயமாக இருந்தது. இமிதியாஸும் சுப்பிரமணியும் இவன் தோளைத் தொட்டனர். அதிர்ந்துபோய் அவர்கள் காட்டிய இடத்தைப் பார்த்தான். முப்பதாவது மாடியிலிருந்து புன்னகையுடன் குதிப்பவர்களை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அன்று சிவா அதைப் பார்த்தான்.
chitra.kjramesh@gmail.com


