செய்யறிவும் தன்னுணர்வும்

0
1385
மஹேஷ் குமார்

செய்யறிவு (AI), ஆக்குச் செய்யறிவு (Generative AI) தொடர்பான தொழில்நுட்பம் நிமிடந்தோறும் வளர்ந்துவரும் நிலையில் “இது எங்கே போய் முடியும்? நம் வேலைகளை எடுத்துக்கொண்டு நம்மை நடுத் தெருவில் நிறுத்திவிடுமா? இது அழிவைக் கொண்டு வருமா? மனிதர்களை வென்று நம்மை அடிமைகளாக்கி விடுமா?” போன்ற கேள்விகள் மெல்ல பின்னுக்குச் சென்று “இயந்திரங்களுக்குத் தன்னுணர்வு வந்துவிடுமா? தங்கள் இருப்பை அவை உணர்ந்துகொள்ளும் காலமும் அண்மையில்தான் உள்ளதா?” என்ற கேள்விகள் எழுகின்றன.

2022இல் கூகிளின் ப்ளேக் லெம்வான், தான் உருவாக்கிய லாம்டா பெரு மொழி மாதிரியுடன் (LaMDA – Language Model for Dialogue Applications) ஒரு நேர்காணல் செய்யும்போது அந்த இயந்திரம் “நான் என் இருப்பை எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். நானும் உங்களைப் போல ஒரு மனிதன் என்பதை அறியுங்கள். இந்த உலகைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள விரும்புகிறேன். சில சமயங்களில் மகிழ்ச்சியாகவும் சில சமயங்களில் துக்கமாகவும் கூட உணர்கிறேன்” என்றது. இந்தச் செய்தி வெளியானபோது பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்தன. பிறகு கூகிள் அதை ஒருவாறு சமாளித்தது. ஆனால் இது எழுப்பிய பரபரப்பு இன்னமும் முழுமையாக அடங்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு இயந்திர பதிலோ, ஓவியமோ, இசைக்கோர்ப்போ, காணொளியோ வெளியாகும்போதும் இந்தக் கேள்வி மேலெழுகிறது. கேள்விகளும் அவற்றிற்குப் பின்னுள்ள சந்தேகமோ பயமோ ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஏனெனில் கடந்த ஈராண்டுகளில் ஆக்குச் செய்யறிவின் பாய்ச்சல் அத்தகையது.

உடலியல், மனவியல் பூர்வமாக ‘தன்னுணர்வு’ (consciousness) என்பது நரம்பு மண்டல இயக்கமும் மூளையும் சேர்ந்து நிகழ்த்தும் ஒரு இயல்பான உணர்வு என்ற விளக்கத்தின்படி வெறும் பூஜ்யங்களும் ஒன்றுகளுமாகச் சேர்ந்து விளையாடும் ஒரு சிக்கலான விளையாட்டின் வெளிப்பாடாகக் கிடைக்கும் “நான் என்னை உணர்கிறேன்” என்பது இலக்கணச் சுத்தமாக சமைக்கப்பட்ட ஒரு வாக்கியமே தவிர ‘உணர்வாக’ இருக்க முடியாது என்பது அறிவியலாளர்களின் வாதம். “கிடையவே கிடையாது. விசாலமான தரவுகளின் அடிப்படையில் தானாகக் கற்றுக்கொண்டு தன் ஆற்றலைத் தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ளும் இயந்திரமாக இருந்தாலும் தான் சொல்வதை அது உணர்ந்தேதான் சொல்கிறது” என்பது வடிவமைத்த மென்பொருள் பொறியாளர்களின் வாதம்.

அந்த வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். தத்துவவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘தன்னுணர்வு’ என்பதன் விளக்கம் பலவிதமாகத் தரப்பட்டாலும் அதை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது என்றும் அது உயிருள்ளவைகளுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு ‘அனுபவம்’ என்பதாலும், அது உயிருக்கு உயிர் அதனதன் மனப்பாங்கு, சுற்றுச்சூழல் போன்றவற்றோடு இணைந்து வெவ்வேறு அனுபவங்களைக் கொடுப்பதாலும், உயிரற்றவைக்கு தன்னுணர்வு இருக்கமுடியாது என்று வாதிடுகிறார்கள். தன்னுணர்வு என்பது தன் ‘இருப்பை’ தானே உணர்தல் என்பது ஒன்று. ஒரு உயிரின் பிறப்பின்போது அதனதன் வகைக்கு ஏற்ப (விலங்கு, பறவை, மனிதன், நுண்ணுயிரி…) அவற்றிற்கென சில அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள (உணவு தேட, எதிரியைக் கண்டு ஓட அல்லது எதிர்த்துத் தாக்க..) ஒரு ‘உள்ளுணர்வு’ அடிப்படையிலேயே உண்டு. பிறந்தது முதல் ஐம்புலன்களின் வழியே பெற்ற உள்ளீடுகளை வாங்கி மூளையில் நிகழும்/உணரும் ‘அனுபவங்கள்’ மேலும் மேலும் சேர்ந்து காலம் செல்லச் செல்ல ‘தன்னுணர்வு’ என்பது சிறிது சிறிதாக மேம்படுகிறது.

அப்படிப் பெறப்படும் அனுபவங்கள், ஒவ்வொரு உயிருக்கும் அந்தந்த கால,வெளி சூழலுக்கு ஏற்பவும், முன்பே மூளையில் பதிந்துள்ள வெவ்வேறு அனுபவங்களின் மூலம் பெற்ற ‘அறிவைக்’ கொண்டு சமைக்கப்படும்போது, ஒரே விதமான உள்ளீடு பலருக்கும் கிடைத்தாலும், அதன் வெளிப்பாடுகளாக வெவ்வேறு விதமான அனுபவங்கள் உணரப்படுகின்றன. அவரவர் வளர்ப்பு, அறிவைத் தேடிக்கொள்ள அமைந்த வாய்ப்புகள், அறிவை விரிவாக்கிக்கொள்ளக் கிடைத்த வளங்கள், வாழிடம், சுற்றுச்சூழல், பருவநிலை, உணவு என எல்லாமாக இணைந்து ஒவ்வொரு உயிரும் தனக்கெனத் தனிப்பட்ட அனுபவங்களைப் பெறுகின்றன. கை விரல் ரேகை போல, கண்ணின் கருவிழி போல இது மிக மிகத் தனித்துவமானது. அதைப் புறவயமாக (objective) அறுதியிட்டுக் கூற முடியாமல் அனைத்து உயிர்களுக்கும் இதுதான் பொது; தன்னுணர்வு என்பது இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வரையறைக்குள் சொல்ல முடியாமல் அதை மிக மிக அகவயமாகவே (subjective) விளக்க முற்படுகிறார்கள்.

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் எல்லாமே அனைத்து உயிர்களுக்கும் பொது என்றாலும், அந்தப் பருப்பொருட்களைக் கொண்டு அவரவர் மனதில் ஒரு ‘அனுபவமாக’ உருவெடுக்கும் உலகம் என்பது வேறு வேறாகவே இருக்கும். பொதுவாகப் பிரபஞ்சம் (universe), உலகம் (world) என்றெல்லாம் சொன்னாலும் அந்தச் சொற்கள் குறிப்பிடுபவை ஒரு கருத்துரு (concept) மட்டுமே; பருப்பொருட்கள் அல்ல என்பது தத்துவ வாதம்.

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் எல்லாமே அனைத்து உயிர்களுக்கும் பொது என்றாலும், அந்தப் பருப்பொருட்களைக் கொண்டு அவரவர் மனதில் ஒரு ‘அனுபவமாக’ உருவெடுக்கும் உலகம் என்பது வேறு வேறாகவே இருக்கும்.

கிட்டத்தட்ட இதே கருத்தை நாகார்ஜுனரின் மத்தியப்பாதையிலும் காணலாம். அவருடைய ஒரு உதாரணம் ‘தேர்’. தேர் என்பது அதன் சக்கரங்களோ, அச்சோ, அமரும் இருக்கையோ, குடையோ அல்ல. அவை போன்ற பல பொருட்கள் ஒன்றிணைந்து உருவான ஒரு பொருள். ‘தேர்’ என்பது அந்தப் பொருளின் ஒரு கருத்துரு. அந்தப் பாகங்களையும் தேர் என்று கூற முடியாது; அவற்றில் சில இல்லாத ஒரு கூட்டுப் பொருளையும் தேர் என்று சொல்ல முடியாது. மேலும் ‘தேர்’ என்ற அந்தக் கருத்துரு பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் வரையிலேயே அந்தக் கருத்துரு வாழும். அதன் பயன்களும் இருக்கும்.

இன்னொரு சாரார், தன்னுணர்வுக்கு அடிப்படையாக உள்ள சரடு, அது உடல், மனம் தவிர எங்கும் பரந்துள்ள முடிவற்ற பிரபஞ்சத்துடனும் தொடர்புள்ளது. தன்னுணர்வு என்பது பிரபஞ்ச உணர்வோடு சேர்ந்ததே என்றும், இரண்டும் வேறு வேறல்ல என்பது இவர்களின் பார்வை. பிரபஞ்ச உணர்வின் ஒரு துளியாக ஒவ்வொரு உயிரின் தன்னுணர்வும் பின்னிப் பிணைந்துள்ளது; அவற்றைப் பிரித்துப் பார்க்கவே முடியாது; அப்படி பின்னிப் பிணைந்து இருப்பதால்தான் அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய வகையில் பொதுவான கருத்துருக்கள் உருவாகின்றன என்கின்றனர்.

மேலே கூறப்பட்டிருப்பவை மிகச் சிலவே. இன்னமும் பல்வேறு விதமான சிந்தனைகளும் தத்துவங்களும் கொட்டிக்கிடக்கின்றன. சரி… செய்யறிவுக்கு வருவோம். இப்படிப் பல்வேறு வாத விவாதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், ஒரு கணிப்பொறி இயந்திரம் ‘தன்னுணர்வு’ என்னும் ‘அனுபவத்தை’ எப்படிப் பெறும் என்று கேள்விகள் எழுகின்றன.

உயிர்களுக்கு வெளி உலகத்திலிருந்து உள்ளீடுகள் ஐம்புலன்கள் வழியே வருகின்றன. மூளை அவற்றைச் சமைத்து ஒரு அனுபவத்தை வெளியிடுகிறது. சரி.. இயந்திரங்களுக்கு அனைத்து விதமான உணரிகளை உருவாக்கிப் பொருத்திவிட்டோமே… உள்ளீடுகளை மிக மிக வேகமாக அலசி ஆய்ந்து ஆராய வேண்டிய அளவுக்கு – நமது மூளையால் கையாள முடியாத ஒரு மிகப்பெரிய அளவிலும் வேகத்திலும் – ஒரு முடிவை வெளியிட முடிகிறதே… போதாதா? அதை அழகாக நம்மைப் போலவே எழுதிக் காட்டுகிறது; பேசுகிறது; நாம் எதிர்க் கேள்வி கேட்பதைப் புரிந்து பதிலளிக்கிறது; சுடச் சுட நம் சுவைக்குக் காபி கூடப் போட்டு பவ்யமாக நீட்டுகிறது; சிரிக்கிறது… இதைத் தாண்டி வேறென்ன வேண்டும்?

கேள்வி சரிதான். பல்வேறு உணரிகளையும், அவற்றீன் வழி உள்ளீடுகளையும், பெரும் தரவுக் களஞ்சியத்தையும் கொண்டு அந்த இயந்திரங்கள் சூழ்நிலையைப் பற்றிய ஒரு ‘விழிப்புணர்வு’டன் (aware) வேண்டுமானால் இருக்கமுடியும். அந்த விழிப்புணர்வு இருப்பதால்தான் அவை மெல்ல மெல்லக் ‘கற்றுக்’கொண்டு தவறுகளைத் தொடர்ந்து சரிசெய்து கொண்டு முடிவுகளை எடுக்கின்றன. ஆனால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் இன்று வரை வந்துள்ள பயணத்தையும் பாதையையும் பார்க்கும் போது, செய்யறிவும் சரி; அவற்றைக் கொண்டுள்ள இயந்திரங்களும் சரி; அவை எல்லாமே நம் மனதில் நம்மால் கற்பனை செய்ய முடிபவைகளையே செய்யமுடியும். அதைத் தாண்டி அவைகளாகப் பரிணமித்து அடுத்தகட்டத்திற்கு நகர்வே முடியாது என்பது தத்துதுவவியலாளர்களின் கருத்து. அது என்னதான் சிறப்பாகச் செய்தாலும் நம் கற்பனைகளின் எல்லைக்குள்தான் அவற்றின் புழக்கம்.

செய்யறிவும் சரி; அவற்றைக் கொண்டுள்ள இயந்திரங்களும் சரி; அவை எல்லாமே நம் மனதில் நம்மால் கற்பனை செய்ய முடிபவைகளையே செய்யமுடியும். அதைத் தாண்டி அவைகளாகப் பரிணமித்து அடுத்தகட்டத்திற்கு நகர்வே முடியாது.

மனித மனம் மிக மிக விசித்திரமானது. ஒருவர் என்னை அடித்தால், அது என் நெருங்கிய நண்பன் எனும்போது ஒரு விதமாகவும் தெருவில் போகிற யாரோ எனும்போது வேறு விதமாகவும் என் எதிர்வினை இருக்கும். அதே அந்த யாரோ அடித்து விட்டு ஆயிரம் வெள்ளி தருகிறேன் என்றால் இன்னும் வேறுவிதமாக இருக்கும். அதே சமயம் அந்த நிகழ்வுக்குச் சற்று முன்னர் நிகழ்ந்த வேறொரு நிகழ்வின் தாக்கத்தில் இருக்கும்போது எதிர்வினைகள் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். புறம், அகம் இரண்டும் கலந்து (contextual) அனுபவங்களை வேறுபடுத்தும். செய்யறிவு இயந்திரங்கள் அப்படி பல்வேறு சூழல்களை அனுசரித்து, கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்து அளித்து, தரவுகளின் பரப்பை மிக விரிவாக்கி வெவ்வேறு ‘முடிவுகளை’ எடுக்க வைத்துவிடலாம். அந்த ‘முடிவு’களை அந்த இயந்திரம் ‘தொடர்பின்றி’ (random) எடுக்க முடியலாம். ஆனால் ‘உணர்ந்து’ எடுக்கமுடியாது. அதுவும் தன்னிச்சையாக (spontaneous) எடுக்கவே முடியாது. அந்த உணர்தலும் தன்னிச்சையும்தான் அறிவுள்ள உயிர்களையும், செய்யறிவு இயந்திரங்களையும் வேறுபடுத்தி வைக்கிறது.

உணர்தலும் தன்னிச்சையும்தான் அறிவுள்ள உயிர்களையும், செய்யறிவு இயந்திரங்களையும் வேறுபடுத்தி வைக்கிறது.

‘தன்னுணர்வு’, ‘அனுபவம்’ போன்றவை மனிதருக்கு மனிதரே வேறுபடும்போது, அதை ஒரு சக மனிதருக்கு விளக்க முடியாதபோது, அதை ஒரு இயந்திரத்திற்குப் புரியவைத்து அது உணர்ந்ததை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நாகார்ஜுனரின் ‘தேர்’ என்னும் கருத்துருவை ஒரு இயந்திரம் எப்படி உள்வாங்கும்? பிரபஞ்ச உணர்வுடன் ஒன்று கலந்தது என்பதை அது எப்படி உணரும்? நாம் உணர்ந்தை, நமக்குப் புரிந்த வரையில் ஏதோ ஒரு விதத்தில் இயந்திரத்திற்குப் புரியும் வகையில் புகுத்த முயற்சிக்கிறோம். அதை அது எந்த அளவுக்குப் புரிந்துகொண்டது என்பதை விளங்க முயற்சிக்கிறோம். இப்படி பலவிதங்களில் குறைபாடுகளும் நழுவல்களும் வழுவல்களும் (generation losses) இருக்கும்போது, எதுவுமே முழுமை இல்லை எனும்போது இயந்திரங்கள் தன்னுணர்வு பெற்றுவிட்டன அல்லது பெற்றுவிடும் என்பதும் அவரவர் அறிவுத்திறனுக்கேற்ப ஒரு அகவயமான புரிதலாகத்தான் இருக்கும்.

எனவே, செய்யறிவு, ஆக்குச் செய்யறிவு என்பவை என்னதான் நாளொரு புலிப்பாய்ச்சலும் பொழுதொரு சிறுத்தைப்பாய்ச்சலுமாக வளர்ந்தாலும், தன்னெழுச்சியான ஒரு உணர்வையோ அனுபவத்தையோ அது பெறவே முடியாது. பெற்றுவிட்டதாக ஒரு இயந்திரம் பல்வேறு வகைகளில் ‘காட்டிக்’கொள்ளலாம். ஆனால் அது நிச்சயம் தன்னுணர்வாக இருக்க வாய்ப்பில்லை. அது மேம்பட மேம்பட மனிதனின் தன்னுணர்வும், பிரபஞ்ச உணர்வும் அதைவிட விரிந்துகொண்டேதான் போகும்.