மொழிபெயர்ப்புக் கவிதை

0
1130
மஹேஷ்

இறுதி மொழி

நான் அசோகன்
சவக்குழிகளின் சோகங்களோடு
பிணைக்கப்பட்ட காவல்காரன்
சகோதரர்களின் தலைகளை மிதித்து
குருதியாற்றைத் தாண்டும் துரியோதனன்.
உதிரக்கலசத்தை மணிமுடியாக அணிந்த
வெறும் சதைப்பிண்டம்.
எனது பச்சாத்தாபம்
பாலையில் சுற்றித்திரியும் காளையைப் போல
அலைகிறது.
எனது கழிவிரக்கம்
குருதியில் முங்கிய வாளின் மீது
போர்த்தப்பட்ட காவியுடை.
தர்மத்தை போதிக்கும் இந்தத் தூபிகளின் பின்னே
என் பாவங்களை ஒளித்துவைக்க இயலாது.
அவையும் என் வெற்றித்தூண்களாகும்,
எனது தீமைகளின் ஆபரணங்களாகும்.
என் சக்கரத்தில் உள்ள ஒவ்வொரு ஆரக்காலும்
நான் கடந்து வந்த வம்சங்களின் முதுகெலும்பு.
என் சிங்கங்களின் ஒவ்வொரு உரோமமும்
நான் சுட்டெரித்த நகரங்களின் சிதைகளின் பிழம்பு.
நான் இரண்டு போர்களிலும் தோற்றவன்
எனக்கு மரணதண்டனை அளியுங்கள்
எனது இறுதி ஆசை இது மட்டுமே:
நானே இந்தப் பூவுலகின்
கடைசிப் பேரரசனாக இருக்கட்டும்.

கவிஞர் பற்றிய குறிப்பு

கேரளம் திருச்சூர் பகுதியிலுள்ள புல்லூட்டு கிராமத்தில் பிறந்த கே.சச்சிதாந்தன் 70களில் நிகழ்ந்த மலையாள சமூக-பண்பாட்டு மறுமலர்ச்சியின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது நவீன கவிதைகள் கால தேசங்கள் கடந்து ஒரு உலகளாவிய புரிதலை அளிக்கின்றன என்று புகழப்படுகிறார். பெண்கள் மற்றும் ஒடுக்கப்படோருக்கான உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர். 4 கேரள சாகித்ய அகாதெமி விருதுகள், 3 தேசிய விருதுகள் மற்றும் போலந்து, இத்தாலி நாடுகளிலும் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டவர்.