
எதையோ தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக பழைய போட்டோ ஆல்பம் ஒன்று தட்டுப்பட்டது. சட்டென அதன் நடுப்பக்கத்தைத் திறந்து பார்த்தேன். ஜெகதீசனோடு நண்பர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படம். எத்தனை வருடங்களாகிறது இந்தப் புகைப்படத்தைப் பார்த்து? அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் அடுத்த சில நொடிகளில் அந்த மகிழ்ச்சி கரைந்து போனது. தற்செயல்கள் வலுவானவை. சட்டென பின்னால் வந்து நம் காலை வாரிவிடக் கூடியவை. எப்போதும் இல்லாமல் ஏன் இப்போது அந்தப் புகைப்பட ஆல்பம் என் கண்ணில் படவேண்டும்? அதிலும் மிகச்சரியாக ஜெகதீசன் இருக்கும் புகைப்படம் ஏன் என் கண்ணில் படவேண்டும்? ஆனாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. இந்தத் தற்செயல்கள்தான் வாழ்வை அழிக்கவும் செய்கின்றன. வாழ்வை அர்த்தப்படுத்தவும் செய்கின்றன.
அலையலையாக ஜெகதீசனின் நினைவுகள் என்னுள் எழுந்தன. இருபது வருடங்களுக்கு முன் கல்லூரியில் அறிமுகமானோம். முதல்நாள் கல்லூரி வகுப்பறையில் ஒவ்வொருவராக எழுந்து எங்களை விரிவுரையாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தோம். அறியாத முகங்கள் யாவும் அறிமுகங்களாக மாறிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் வகுப்பில் நுழைந்தான் ஜெகதீசன். ஒடிசலான தோற்றம், நிறம் மங்கிய முழுக்கைச் சட்டை, பேண்ட், ரப்பர் செருப்பு. இளமையிலேயே முடிகொட்டிப் போன ஏறு நெற்றி. தடித்த கண்ணாடி அவனது முன்வழுக்கையை மேலும் அழுத்திக் காட்டியது. மெல்லிய கண்டிப்புடன் விரிவுரையாளர் அவனை வகுப்புக்குள் அனுமதித்தார். தாமதமாக வந்தது குறித்த வருத்தமோ, புதிய மனிதர்களுடன் கூடிய புதிய சூழ்நிலைக்குள் முதன்முதலாக நுழையும் தயக்கமோ சிறிதுமின்றி ஒரு புன்னகையுடன் வந்து ஓர் ஒரத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனது புன்னகை ஒரு மச்சம் போல அவனுள் என்றென்றும் ஒட்டிக் கொண்டிருந்தது. ஜெகதீசனை நினைத்தால் அவனது புன்னகையும் சேர்ந்தேதான் நினைவில் எழும். அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னதும், அவன் எழுந்து, “என் பெயர் ஜெகதீசன், சீலையம்பட்டியில் இருந்து வருகிறேன், எங்கள் குடும்பத் தொழில் மலர் விவசாயம், மல்லிப்பூ, கனகாம்பரம், சம்பங்கி என பல்வேறு வகைப் பூக்களைப் பயிரிட்டு வளர்க்கிறோம். விவசாயத்தில் ஈடுபட்டது போக மீதி வேளைகளில் படிப்பேன், அப்படித்தான் இதுவரை வந்திருக்கிறேன்.” என்றான். அதுவரை நாங்கள் எல்லோரும் எங்கள் பெயரை மட்டுமே சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால், ஜெகதீசன் சற்று வித்தியாசமாக, தன்னுடைய ஊர், குடும்பத் தொழில் என மேலதிகமான தகவல்களைச் சொல்லி எங்கள் கவனத்தைக் கவர்ந்தான். விரிவுரையாளர் புன்னகையுடன், “ஜெகதீசன், இதுவரை அப்படி இருந்திருக்கலாம், ஆனால், இங்க காலேஜில, படிப்புத்தான் முக்கியம், படிப்பு போக மீதி நேரத்தில நீ விவசாயம் செஞ்சுக்கலாம், தினமும் நீ காலேஜுக்கு வரணும்” என்றார். எந்த நேரத்தில் அவர் அதைச் சொன்னாரோ, அதன்பின் ஜெகதீசன் வகுப்புக்கு வரவேயில்லை. வாரம் ஒரு நாள் வந்து கொண்டிருந்தவன், அதன்பின் மாதம் ஒரு முறை வருபவனானான். விரிவுரையாளர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் பிடிக்காதவனாக மாறிப் போனான். ஆனால், எங்களுக்கு மிகவும் வேண்டியவாகவும் ஆகிப்போனான.
அவன் வகுப்புக்கு வந்துவிட்டால், விரிவுரையாளர், தன்னை ஒருமுறைக் கிள்ளிப் பார்த்துக் கொள்வார், “என்ன ஜெகதீசா, நல்ல மனநிலையோடத்தான் இருக்கியா, காலேஜ் பக்கம் வந்திருக்கிற?” என்று கேட்பார். எங்களுக்கு அவன் வந்துவிட்டால் கொண்டாட்டம்தான். குறிப்பாக, பெண்களுக்கு. அவர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பை நிறைய மலர்கள் கொண்டு வந்து கொடுப்பான். தலையில் சூடிக்கொள்வதற்கு, வீட்டுக்கு எடுத்துப் போவதற்கு, பூஜைக்கு என எடுத்துவைத்துக் கொள்வார்கள். பெருமைக்குரியவனாகவும், பொறாமைக்குரியவனாகவும் அந்த ஒரு நாளில் மாறிப்போவான் ஜெகதீசன். ஒளிபெற்ற முகங்களோடு, தலையில் பூச்சூடியவாறே, “அடுத்து எப்ப வருவ ஜெகதீசா?” என்று கேட்பார்கள் பெண்கள். “அது அவனுக்கே தெரியாதே” என்பார்கள் நண்பர்கள். அப்போதும் வழக்கமான புன்னகைதான் அவனிடம் இருந்து வரும். அதிகம் அவன் பேசிப் பார்த்ததில்லை யாரும். யாவருக்கும் ஓரிரு வார்த்தைகளில்தான் பதில். ஒப்புநோக்க அவன் முதல் நாள் பேசியதுதான் அவன் பேசியதிலேயே ஆக நீளமான வசனம்.
எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக ஜெகதீசனிடம் பேசிப் பார்த்தார்கள். ஆனாலும் அவனால் தொடர்ச்சியாக கல்லூரிக்கு வரமுடியவில்லை. கல்லூரி நிர்வாகத்தினர் அவனது பெற்றோர்களை வரவழைத்துப் பேசிப் பார்த்தார்கள். அவர்களும் அவனைக் கண்டித்தார்களே ஒழிய அவனை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெற்றோர்களே அவனை அவன் போக்கில் விட்டுவிட்டார்கள். ஒழுங்காய் விவசாயம் பார்க்கிறானே, அதுவே போதும் என்று நினைத்துவிட்டார்கள். அந்த சலுகையை அவன் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டான். என்றைக்காவது அவன் வகுப்பில் நுழையும்போது ஆரவாரத்துடன் வரவேற்கப்படுவான். அவன் சட்டைப் பாக்கெட்டில் எப்போதும் பணம் புழங்கும். ஆகையால், அவன் வந்தவுடனேயே, அவன் பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு, “மாப்ள, சரித்திரத்த மாத்தக்கூடாது, இன்னிக்கு எதுக்கு இங்க வந்த? சரி, வந்தது வந்த, வா இப்டியே படத்துக்குப் போயிருவோம்” என்று நாங்கள் வகுப்பைப் புறக்கணித்து அவனோடு வெளியே சென்றுவிடுவோம். விரிவுரையாளர்களோ, இவன் ஒருவன் வராமல் இருந்தால் நமக்கு ஒன்றும் நட்டமில்லை. ஆனால், வந்துவிட்டாலோ எல்லோரையும் வெளியே அழைத்துப் போய்விடுகிறான். இவன் வராமல் இருந்தாலே நல்லதுதான் என்ற நினைப்பில் விட்டுவிட்டார்கள். ஆனாலும், கல்லூரி வருகைப் பதிவு மிகவும் குறைவாக இருந்ததால் அவனால் செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியவில்லை. நிர்வாகம் அவனை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டது. சில காலம் அவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.
அதன்பின் ஒருமுறை, மெல்லிய வெயிலோடு கூடிய மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், தேநீர் கடையொன்றில் ஜெகதீசனைப் பார்க்க நேர்ந்தது. அதே பிரியத்துடனும், புன்னகையுடனும் வந்து என்னைக் கட்டிக் கொண்டான். நண்பர்களைப் பற்றியும், எங்கள் படிப்பு குறித்தும் கேட்டுக்கொண்டான். கல்வியை இழந்தது குறித்தோ, கல்லூரி காலத்தை இழந்தது குறித்தோ சிறு வருத்தமும் அவனிடம் தோன்றவில்லை. மலர் விவசாயம் குறித்தும், சினிமா குறித்தும் நிறையப் பேசினான். பேச்சின் முடிவில், “ஏண்டா, நிஜமாகவே உனக்கு காலேஜ் வரத் தோணலியா?” என்று கேட்டேன். சிறிது யோசனைக்குப் பின், “உனக்கு ஒன்னு சொல்றேன் நட்பு, உண்மைல தினமும் நான் காலேஜுக்கு கிளம்பி வருவேன், வீட்டில இருந்து பஸ் ஏறுவேன், ஆனா, காலேஜ் பக்கத்துல வரும்போது ஏதோ ஒரு குரல் எனக்குள்ள இருந்துகிட்டு கத்திக் கூப்பாடு போடும். போகாதே.. போகாதேன்னு என் கழுத்தப் பின்னால இருந்து பிடிச்சு இழுக்கும். மீறியும் பஸ்ல உக்காந்திருந்தா அந்தக் குரல் கால்ல விழுந்து கெஞ்சும். உடம்பெல்லாம் சங்கிலியால இறுக்கிக் கட்டினது போல இருக்கும். சரியா காலேஜுக்கு ரெண்டு ஸ்டாப் முன்னாடி பஸ்ல இருந்து இறங்கிருவேன். அதுக்குப் பிறகுதான் அந்தக் குரல் மெல்ல மறையும். எனக்கும் உடம்பும் மனசும் அதுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு வந்திரும். சரி. இன்னைக்குத்தான் இப்படி ஆகிப் போச்சு, அடுத்த நாளாவது காலேஜுக்குப் போயிரலாம்ன்னு நினைப்பேன். ஆனால், அடுத்த நாளும் பஸ் ஏறினத்துக்கப்புறம், அந்த குரல் என்கிட்டப் பேசும். முதல்ல கொஞ்சும், கெஞ்சும், மிரட்டும், அதுக்கப்புறம் மறுபடியும் கெஞ்சும். பொறுக்க மாட்டாம, நான் பஸ்ஸ விட்டு இறங்கிருவேன். இப்படியேதான் தினமும் நடக்கும். அதனாலத்தான் என்னால காலேஜ் வரமுடியல. இத நான் வீட்டுல சொன்னேன். அவங்க நான் பொய் சொல்றதாச் சொல்றாங்க. அதுக்குப் பிறகு இத நான் யார்கிட்டவும் சொல்லல. உன்கிட்டத்தான் சொல்றேன்”, என்றான்.
“ஒரு மனநல மருத்துவர்ட்ட உடனே போகணும், ஜெகதீசா. இல்லன்னா, இது இதோட நிக்காது. பெரிய பிரச்சினைல கொண்டு போய் விட்டிரும் “ என்று நான் பதட்டத்துடன் சொன்னேன்.
அவன் நிதானமாக தேநீர் பருகியபடியே, “அதெல்லாம் தேவையில்ல நட்பு, காலேஜுக்குப் புறப்படும்போதுதான் அந்தக் குரல் என்கிட்டப் பேசும். மற்றபடி, எந்தப் பிரச்சனையுமில்லையே, எதுக்கு மனநல மருத்துவர்ட்ட போகணும்” என்றான்.
“சொல்ல முடியாது ஜெகதீசா. எதுக்கும் போய் பாத்துருவோம்” என்றேன்.
“வேண்டாம் நட்பு, அப்புறம் உன்னப் பாக்கும்போதெல்லாம் அந்தக் குரல் என்கிட்ட பேச ஆரம்பிச்சுரும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். மழையோடு மழையாகப் போயும்விட்டான்.
கல்லூரி நிறைவு நாளில், பிரிவு உபசார விழா நடத்தத் திட்டமிட்டோம். அனைத்து ஏற்பாடுகளும் ஆனபின்னர், விழா நாளின் காலையில்தான் ஜெகதீசனின் ஞாபகம் எங்களுக்கு வந்தது. ஜெகதீசனையும் விழாவுக்கு அழைப்பதென்று முடிவெடுத்தோம். விவசாய வேலையாக எங்கேயோ போனவனை, துரத்திப் பிடித்து விழாவுக்கு அழைத்து வந்தோம். விழாவுக்கு வரத் தயங்கியவனை, “நீயில்லாமலா ஜெகதீசா, நீதான் சீஃப் கெஸ்ட். “ என்று சொல்லி அழைத்து வந்தோம். அந்த விழாவில் அவனோடு குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். அந்தப் புகைப்படம்தான் இப்போது என் கண்முன் இருக்கிறது.
பட்டப்படிப்பின் சான்றிதழை வைத்துக்கொண்டு வேலைக்கு முக்கிக்கொண்டிருந்த நாளொன்றில், ஜெகதீசன் சாலை விபத்து ஒன்றில் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. இரு சக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தவன், எந்த வித சமிக்ஞையும் காட்டாமல், வண்டியைத் திருப்பியிருக்கிறான். பின்னால் வந்த பேருந்து இடித்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். நண்பர்கள் அனைவரும் ஜெகதீசனின் வீட்டிக்கு ஓடினோம். அவனது மலர்த்தோட்டத்தின் ஒரு பகுதியில் இருந்தது வீடு. வீட்டின் முகப்பில், அவன் கிடத்தப்பட்டிருந்தான். அவன் மீது மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எங்கும் பேரோலம், விசையுடன் கூடிய அழுகையொலி. ஒரே பையனை இழந்த பெற்றவர்களின் நிர்க்கதி. கல்லூரிப் பதிவேட்டில் மட்டும்தான் அவனது வருகைப் பதிவு குறைந்திருந்தது என்று நினைத்திருந்தோம். வாழ்க்கைப் பதிவேட்டிலும் அப்படித்தான் என்று காட்டிவிட்டுப் போய்விட்டான் ஜெகதீசன். எல்லாம் முடிந்தது. அதன்பிறகு சில ஆண்டுகள் நண்பர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ஜெகதீசனின் வீட்டுக்கு அவ்வப்போது சென்று அவனது பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தோம். அதன்பின் அந்த வழக்கமும் நின்று போனது.
ஆனால், இன்று வரை ஒரு விஷயம் மட்டும் என்னை மாறாத குற்ற உணர்ச்சியில் மூழ்கடித்துக் கொன்று கொண்டிருக்கிறது. ஜெகதீசன் என்னிடம் தனக்குள் கேட்பதாகச் சொன்ன குரல் குறித்து அதன்பின் நான் யாரிடமும் சொல்லவில்லை. ஒருவேளை நண்பர்களிடம் அப்போதே சொல்லியிருந்தால் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவனை மருத்துவரிடம் அழைத்துப் போய், அவனை சரிசெய்திருக்கலாம். அதன் ஏன் நான் செய்யவில்லை? சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தவன் ஏன் சட்டென வேகமாகத் திரும்பினான்? ஒருவேளை அவனுக்குள் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த குரலின் கட்டளையா அது? தெரியவில்லை. அவனிடம் எப்படி மன்னிப்பு கேட்பது? கனவில் தோன்றினாலாவது மன்னிப்பு கேட்கலாம். ஆனால், அதன் பிறகு அவன் என் கனவிலும் தோன்றவில்லை. அங்கும் அவனது வருகைப்பதிவு குறைவுதான்.
பெருந்தேவியின் இந்தக் கவிதையை வாசித்தேன்.
கவனமாக ஆடு முதலில் பாட்டி தாத்தாவின் சாவைக் கேள்விப்படுகிறோம் பிறகு அம்மா அப்பாக்கள் பிறகு நண்பர்கள் அவர்கள் குழந்தைகள் அபூர்வமாக வரிசை மாறுகிறது ஒருத்தி சொல்கிறாள் “நம் கிளாஸ்ல அவதான் நல்லா பாடுவா” ஒருத்தன் சொல்கிறான் “அவன் உன் பின்னாடியே சுத்தினான் அப்பல்லாம்” நான் சட்டென்று திரும்பிப் பார்க்கிறேன் பின்னால் ஒரு நிழல் சுற்றுகிறது பிரியம் கூடுகிறது நிழலை நெருங்கும்போது வயது உறுதிப்படுகிறது இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம் - பெருந்தேவி
ஜெகதீசனின் நிழலோடு அல்ல, அவனது நினைவுகளோடுதான் நான் தட்டாமாலை ஆடிக்கொண்டிருக்கிறேன். அவன் இறந்த அன்று துவங்கிய ஆட்டம் இது, இன்றளவும் நின்றபாடில்லை.
ganeshmodec@gmail.com


