
Backlogues என்பது சிங்கப்பூரின் கலை நிர்வாக வலையொலித் தளம் (arts management podcast). கடந்த 2022இல், Centre 42, SingLit Station ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 1980-1995 காலக்கட்ட சிங்கப்பூரில் கலை நிர்வாகம் குறித்த எட்டுப் பகுதிகளுள்ள வலையொலித் தொடரைத் தயாரித்தது. முனைவர் ஹோ சு ஃபெர்ன் (Dr. Hoe Su Fern), முனைவர் ஷெரில் ஜூலியா லீ (Dr. Cheryl Julia Lee) ஆகியோருடனான கூட்டுமுயற்சியான முன்னோடித் தொடருக்கு தேசியக் கலை மன்றம் மானியம் வழங்கி ஆதரவளித்தது. அத்தொடரின் முதல் பகுதியில் அருண் மகிழ்நனின் கலை நிர்வாக அனுபவங்களை அவருடன் உரையாடி செரீன் சென் (Serene Chen) கேட்டறிந்தார். அவ்வுரையாடலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட, சுருக்கமான தொகுப்பு இது. சுருக்கமும் மொழிபெயர்ப்பும்: சிவானந்தம் நீலகண்டன். முழு உரையாடலையும் https://www.backlogues.sg/episodes தளத்தில் கேட்கலாம்.
அருண் மகிழ்நன் 1980 முதல் 1990 வரை சிங்கப்பூர்க் கலைவிழாவை (Singapore Arts Festival) வழிநடத்தும் குழுவில் உறுப்பினராக இருந்தார். நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர் மோபில் ஆயில் (Mobil Oil) சிங்கப்பூர் நிறுவனத்தின் பொதுவிவகார மேலாளராக இருந்தார். மேலும் 1982 சிங்கப்பூர்க் கலை விழாவிற்குப் பெருந்தொகையாக 500,000 வெள்ளி நிதியுதவி வழங்க மோபில் முடிவெடுத்ததில் முக்கியப்பங்கு இவருக்குண்டு. ஒரு கலை நிர்வாகி என்பவரின் தேவை, அவருக்கு இருக்கவேண்டிய தனித்துவமிக்க, பன்முகத் திறன்கள் ஆகியவற்றைக் குறித்து அருண் விழிப்புணர்வை உண்டாக்கினார். சிங்கப்பூரில் கலை நிர்வாகத்தை நிபுணத்துவப்படுத்துவதில் இது ஒரு முக்கிய நகர்வாக இருந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் கலாசாரக் கொள்கை வளர்ச்சியிலும் அருண் முக்கியப் பங்காற்றினார். தேசியக் கலை மன்றத்தை 1991இல் நிறுவுவதற்கான பணித்திட்ட வரைவை உருவாக்கிய கலை, கலாசார ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த துணைக்குழுவுக்குத் தலைமை வகித்தார்.

கலைகள் மீதான காதல் எப்படித் தொடங்கியது? உங்கள் குடும்பப்பின்னணி ஒரு காரணமா? கலை நிர்வாகியாக ஆவதற்காக நீங்கள் கலைக்கல்வி ஏதும் பயின்றீர்களா?
எனது குடும்பம் இலக்கியத்தில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தது. என் அம்மாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அவர் முறையான கல்வி கற்கவில்லை என்றாலும் அதிகமாக வாசிப்பவராக இருந்தார். என் தந்தை, அண்ணன், தம்பி, தங்கை அனைவரும் தீவிர வாசகர்கள்.
‘கலைகளுடனான காதல்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளீர்கள். காதலிப்பதற்கு எப்படிக் காதலைப் படிக்கவேண்டிய அவசியமில்லையோ அதைப்போலவே நான் கலை நிர்வாகத்தை எந்த முறையிலும் படித்ததில்லை. எனக்கு தெரிந்த ஒரே முறை செய்துபார்த்துக் கற்றுக்கொள்வதுதான். ஆனால் பல்கலைக்கழகத்தில் நான் படித்த தமிழ் இலக்கியக் கல்விக்கும் கலை, கலாசாரம் பற்றிய எனது அடிப்படைப் புரிதல்களுக்கும் கலை நிர்வாகத்துக்கும் நிறையத் தொடர்புண்டு.
நீங்கள் கலைவிழாவுடன் இணைந்தபோது கலைகளுக்கான ஆதரவு சிங்கப்பூரில் எவ்வாறு இருந்தது?
கலை என்பது வயிறு நிரம்பியவர்களுக்கு மட்டுமே என்ற கருத்து இருந்தது. நம் தலைவர்கள் சிலர் அவ்வாறு பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உலகெங்கிலும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளனர். கலை அநாவசியமோ ஆடம்பரமோ அல்ல.
நான் 1979இல் மோபில் ஆயில் நிறுவனத்தில் சேர்ந்தபோதுதான் என்னுடைய தீவிரமான கலைவிழா ஈடுபாடு தொடங்கியது. அப்போது சிங்கப்பூர் ஒரு கலாசாரப் பாலைவனம் என்ற உணர்வு பரவலாக இருந்தது. அதனால்தான், கலைவிழா விளம்பரங்களில், “சிங்கப்பூர் ஒரு பண்பாட்டுப் பாலைவனம் என்று யார் சொன்னது?” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினோம்.
சிங்கப்பூரில் கலைகள் வளர்ந்திருக்கவேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை என்பது உண்மையே. திட்டமிட்ட வளர்ச்சியோ தன்னிச்சையான வளர்ச்சியோ, இரண்டிலுமே நிலைமை அதுதான். பொருளாதார மேம்பாட்டில் ஒரு வெறித்தனமான அக்கறை இருந்தது. அந்த ஆவேசத்திற்கு அனேக நியாயங்களும் இருந்தன. நாம் மலேசியாவிலிருந்து 1965இல் வெளியேற்றப்பட்டோம். அதன்பிறகு சிங்கப்பூர் நீந்திப் பிழைத்துவிடுமா அல்லது மூழ்கித் தொலைந்துவிடுமா என்ற கேள்விக்கு உருவகமாக அன்றி நேரடியாகவே பொருள்கொள்ள முடிந்தது.
விளைவாக, வாழ்வாதாரம் குறித்த அந்த இருத்தலியக் கேள்வி அரசாங்கக் கொள்கைகளையும் முயற்சிகளையும் வழிநடத்தியது. மேலும், அந்தக்காலத்தில் தனியார் துறையின் முன்முயற்சிகள்கூடப் பொருளாதார வளர்ச்சியிலேயே கவனம் செலுத்தின. எனவே கலைகள் காரின் பின் இருக்கையில் அல்ல காரிலேயே இருக்கவில்லை. அதேவேளையில், அன்றைய கலாசார அமைச்சர் ராஜரத்தினம் கலைத்துறைக்காக மிகத் தெளிவாக வாதிட்டவர்களில் ஒருவர் என்பதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும். சிங்கப்பூரை ஓர் உலக நகரமாக அப்போதே கருதியவர் அவர். தென்கிழக்காசியக் கலாசார விழா போன்ற சில பெரிய விழாக்களில் சிங்கப்பூர்க் கலைவிழாவுக்கான வித்துகள் இருந்தன. கலைவிழா என்ற பெயரிலேயே எண்பதுகளுக்கு முன்னும் விழாக்கள் நடந்துள்ளன. ஆகவே நான் இணைந்த கலைவிழாக்கள் தனித்துவம் வாய்ந்தவையோ புதிதாகத் தொடக்கி நடத்தப்பட்டவையோ அல்ல. ஆயினும், எண்பதுகளில் இருந்துதான் கலைகளின் அவசியமும் பங்கும் மிகவும் தெளிவாக நமக்குப் புலப்படத் தொடங்கியது என்பேன். அரசாங்கமும் மோபில் போன்ற தனியார் நிறுவனங்களும் மிகுந்த தன்னுணர்வுடனும் நீடித்த ஒருங்கிணைப்புடனும் கலை வளர்ச்சியில் ஈடுபட்டன. அதுவரை நிலைமை அப்படி இருக்கவில்லை.
நீங்கள் மோபில் நிறுவனத்தில் இணைவதற்குமுன் எங்கு பணியாற்றினீர்கள்? மோபிலில் எப்போது சேர்ந்தீர்கள்? மோபில் ஆயில் நிறுவனம் கலைகளை ஆதரிக்க முன்வந்தபோது என்ன நடந்தது?
நான் 1970 முதல் 1979 வரை ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூரில் (RTS) வேலை செய்தேன். நிறுவனத்தின் மத்திய தயாரிப்புப் பிரிவு (CPU) நடப்பு விவகாரங்கள், கலை சார்ந்த நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் ஆகியவற்றைத் தயாரித்தது. அப்பிரிவில் மூத்த தயாரிப்பாளராக இருந்தபோது 1979இல் மோபிலில் சேர்ந்தேன். மோபிலில் பொதுவிவகார ஆலோசகராகச் சேர்ந்து பிறகு மேலாளரானேன்.
மோபிலின் கலைவிழா பங்கேற்பு இதர பெருநிறுவனங்களுக்கும் ஒரு சமிக்ஞையை அளித்ததாக நினைக்கிறேன். மோபில் உள்ளிட்ட பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களில் அத்தகைய பாரம்பரியம் இருந்தது. ஒரு நல்ல மாற்றமாக, சிங்கப்பூர் நிறுவனங்களும் கலைகளுக்குப் பங்காற்றும் முயற்சிகளைத் தொடங்கின. எடுத்துக்காட்டாக, யூஓபி (UOB) ஒரு சிங்கப்பூர் நிறுவனம். அது சிறந்த ஓவியத்துக்கான போட்டியை ஆண்டுதோறும் பெருஞ்செலவில் நடத்தத் தொடங்கியது. கலை ஆர்வலர்களுக்கும் நிறுவனத்துக்கும் ஒருசேரப் பயனுள்ளதாக அம்முயற்சி அமைந்தது.
சிங்கப்பூரில் கலைவிழா வரலாற்றை நோக்கினால், 1959இல், சுயாட்சி பெறுவதற்குமுன், ஒரு கலைவிழா நடந்துள்ளது. பிறகு, 1963இல் தென்கிழக்காசியக் கலாசார விழா ஒரு வாரத்துக்கு நடந்தது. விழாக்குழு கலாசார அமைச்சின் நிரந்தரச் செயலர் லீ கூன் சோய் (Lee Khoon Choy) தலைமையில் ஈராண்டுக்குமுன்பே அமைக்கப்பட்டது. 12 அண்டை நாடுகளில் இருந்து சுமார் 1500 கலைஞர்கள் பங்கேற்ற அவ்விழாவை சிங்கப்பூரில் நடத்த என்ன காரணம்?
தென்கிழக்காசியக் கலாசார விழா 1963இல் சிங்கப்பூரில் நடந்தபோது, 18 வயது இளைஞனாக இருந்த எனக்கு, அதுவரை வாழ்நாளில் கண்டிராத விழாவாக அமைந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதுவே ஆகப்பெரிய, பரபரப்பான கலைநிகழ்வு என்பேன். பலர்மீது கணிசமான கலைத் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றது.
தென்கிழக்காசியா நம் சொந்தக் கொல்லைப்புறம். கலை, கலாசாரம் என்றால் அதுவரை எப்போதும் நாம் மேற்கு நோக்கியே பார்த்துவந்தோம், அதுதான் சிறந்தது என்றும் நினைத்தோம். ஆனால் ஒரு நாடாக, நமது அண்டை நாட்டினரின் கலாசாரம் என்ன, கலைகள் என்னென்ன, அவற்றை அவர்கள் எவ்வாறு வளர்த்துள்ளனர் போன்ற அம்சங்கள் எல்லாம் முதன்முறையாக விழாவில் காணக்கிடைத்தன. விழா நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அவை என்னிடம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தின.
நான் ஓர் இளம் மாணவன் என்பதால் விழாவை சிங்கப்பூரில் நடத்தியதற்கான காரணம் குறித்தெல்லாம் அப்போது யோசிக்கவில்லை. ஆனால் அது எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் அரசியல் யோசனை என்றே இப்போது கருதுகிறேன். கலைகளைச் சாக்காக வைத்து, பல இளம் நாடுகளை ஒருங்கிணைப்பதே உண்மையான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். புவிசார் அரசியல் வரலாற்றில் அது மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டம். ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள் என இரண்டாகப் பிளந்துகிடந்த உலகில் தென்கிழக்காசியாவின் சிறிய நாடுகளுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் பரவலாக இருந்த காலம். எனவே, தென்கிழக்காசியக் கலாசார விழா ஓர் அற்புதமான கலை நிகழ்வாக இருந்தபோதிலும் அதற்கு அரசியல் பின்னணியே முதன்மையான உந்துதலாக இருந்தது என்பேன். துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய விழா தொடர்ந்து நடக்காமற்போனது வெட்கக்கேடு.
அதன்பின் 1975இல்தான் சிங்கப்பூர் அனைத்துலகக் கலைவிழா (Singapore International Festival of the Arts, SIFA) என்ற பெயர் அடிபட ஆரம்பித்தது அல்லவா? கல்வியமைச்சின் ஒரு பகுதியான இளம் இசைக்கலைஞர்கள் சங்கம் (Young Musicians Society, YMS) ஓர் இசைக்கச்சேரி நடத்த நிதியாதரவுக்காக மோபில் நிறுவனத்தை அணுகியபோது அதை ஒரு கலைவிழாவாக மாற்றும் யோசனை மோபிலின் அன்றைய பொதுவிவகார மேலாளர் ஜான் லிம்மிடமிருந்து (John Lim) பிறந்தது. அதைத்தொடர்ந்து அமைந்த கலைவிழா வழிநடத்தும் குழுவில் நீங்கள் இணைந்தீர்கள். உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்த அந்த நேரத்தில் சூழ்நிலை எப்படி இருந்தது?
நான் மோபிலில் 1975இல் இல்லை என்றாலும் கலைவிழாவில் மோபிலின் ஈடுபாட்டை அந்தப் புள்ளியில் இருந்து என்னால் நன்றாகப் பார்க்கமுடிகிறது. ஜான் லிம் விழாவில் நேரடியாக ஈடுபட்டிருந்தார். சில காலம் கழித்து அதில் பங்கேற்க எனக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. ஜான் லிம்மிற்குப் பிறகு பீட்டர் வில்கின்சன் (Peter Wilkinson) பொறுப்பு வகித்தார். அவருக்குப்பின் நான் 1979இல் பொறுப்பேற்றேன். மோபில் என்பது மோபில் ஆயில் சிங்கப்பூர் மட்டுமல்ல, மோபில் கார்ப்பரேஷன். அது நீண்ட காலமாகக் கலை, பண்பாட்டுப் புரவலராக இருந்துவந்தது. சில நாடுகளின் கலை, கலாசாரம் குறித்த தரமான ‘காஃபி டேபிள்’ புத்தகங்களை வெளியிடும் பாரம்பரியமும் அதற்கு இருந்தது. மோபிலின் தலைமையகமும் கலை நடவடிக்கைகளுக்கு நன்கு ஆதரவளித்தது.
எண்ணெய் வணிகம் உலகின் மிகப்பெரிய வணிகமாக இருந்த 1980களில் மோபில் உள்ளிட்ட ஏழு எண்ணெய் நிறுவனங்கள் உலகையே கட்டி ஆண்டனர். ‘ஏழு சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட அவர்களுக்குப் பணம் பிரச்சினை அல்ல என்பதால்தான் கலைகளுக்குப் பணத்தைச் செலவிட்டனர் எனச் சிலர் கருதியதுண்டு. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒவ்வொரு காசுச் செலவுக்கும் வரவு எவ்வளவு என்ற கணக்கு கடுமையாகப் பார்க்கப்படும். மோபிலில் கூட, சில இயக்குநர்கள், “கலைவிழாவால் எத்தனை லிட்டர் பெட்ரோல் விற்கமுடியும்?” என்று என்னிடம் கேட்டுள்ளனர். “கலைவிழா பெட்ரோலை விற்பதற்கு அல்ல, மாறாக மோபில் கார்ப்பரேஷனை விற்பதற்கே” என்பதுதான் அவர்களுக்கு என் பதில். மோபில் ஆயில் சிங்கப்பூர் – ஒரு பொறுப்பும் சமூக அக்கறையும் மிக்க கார்ப்பரேட் நிறுவனம் என்ற பெயரை கலைவிழா ஆழமாகப் பதியவைத்தது.
எங்களின் போட்டியாளரான ஷெல் (Shell) மிகப்பெரிய நிறுவனம். அவர்கள் ஷெல் ட்ராஃபிக் (Shell Traffic) வழியாகத் தங்கள் சமூக அக்கறையை நிலைநிறுத்திக் கொண்டனர். அறிவியல் சூழல் தொடர்பான பலவற்றைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதில் நிறைய விஷயங்களைச் செய்தார்கள். ஆனால் கலைத்துறையில் பெரிய நிறுவனங்கள் எவரும் இல்லை. ஓர் உலக நகரமாகவும் ஒரு தேசமாகவும் நம் வாழ்வில் கலை ஒரு மிக முக்கியமான பகுதி என்ற கருத்து அந்தக் காலக்கட்டத்தில் வலுவாக நிறுவப்படவில்லை என்பதே அதற்குக் காரணம். கலாசார அமைச்சர் ராஜரத்தினம் ‘உலக நகரம்’ என்ற சிந்தனையைத் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் கலை அதன் ஒருங்கிணைந்த பகுதியாக மிகவும் தாமதமாகத்தான் வந்துசேர்ந்தது.
ஒருவகையில், நான் மோபிலுக்கு வந்த காலக்கட்டத்தில்தான் அரசாங்கமும் நமது தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு முக்கிய அங்கமாகக் கலை வளர்ச்சியையும் அங்கீகரித்து அதைநோக்கித் திரும்பியது. மேலும், மற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்தாத கன்னிக்களமாக கலைக்களம் இருந்ததால் அதில் பெயரை அழுத்தமாகப் பதிக்கலாம் என்ற உணர்வு மோபிலுக்கு உண்டானது.
ஜான் லிம் செய்தது ஒரு முன்னோடி முயற்சி என்று நான் நினைக்கிறேன். மோபில் நிறுவனம் சிங்கப்பூர்ச் சூழலில் கலை ஆதரவு முன்னோடி என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் உலகெங்கிலும் மோபில் அப்படித்தான். ஆகவே என் கலைவிழா யோசனைகளை முன்வைப்பது, அவற்றைத் தொடர்ந்து பெரிதினும் பெரிது கேட்பதாகவும் மேன்மேலும் சிறப்பாகவும் ஆக்குவது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஏனென்றால் நிறுவனத்தின் தலைமையகம் என் நோக்கங்களுடன் முற்றிலும் ஒத்திசைந்து சென்றது. நிறுவனத்தின் அப்போதைய தலைவர் டோர்சி டன்னும் (Dorsey Dunn) முக்கியப் பங்காற்றினார். எனக்கு வரும் பாராட்டுகள் அனைத்தும் அவருக்குத்தான் போகவேண்டும். அவரும் தலைமையகமும் முழுமையாகத் துணைநின்றனர்.
அப்போது கலாசார இயக்குநராக இருந்த லீ வாய் கோக் (Lee Wai Kok) அவருக்கு உதவியாக இருந்த துணை இயக்குநர் மைக்கல் லோக் (Michael Lok) ஆகியோரையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். கலைவிழா அவர்களுடைய அதிகாரப் பொறுப்பில் இருந்தது. ஆயினும் என் பெருங்கனவுகளையும் யோசனைகளையும் அவர்கள் பெருந்தன்மையுடன் கேட்க எப்போதும் தயாராக இருந்தனர். இன்னொரு பாத்திரம் கேரி ஸ்டீனையும் (Gary Steen) சேர்த்தால்தான் கதை முழுமையடையும். திறன் மேம்பாட்டுக்காக நான் 1982-83இல் நியூயார்க் அனுப்பப்பட்டபோது அவர்தான் பொதுவிவகார மேலாளராக இருந்தார். அவரும் கலை ஆர்வலர் என்பதால் முழு ஈடுபாட்டுடன் கலைவிழாப் பணிகளைத் தொய்வின்றித் தொடந்தார். மேலும் கலைவிழா வழிநடத்தும் குழுவிலும் முக்கியப் பங்குவகித்தார்.
மோபிலின் அனுசரணையுடன் நான் கலைவிழாவிற்குள் நுழைந்தது ஒரு தற்செயலே. ஒருவகையில் பொருத்தமான நபர்கள் பலர் ஒன்றுகூடிய ஓர் அருமையான கலைத்தருணம் அது. எங்கள் பாத்திரங்களை நாங்கள் முடிந்தவரை சிறப்பாக நடித்தோம்.
(தொடரும்)


