வணக்கம்

மத்தியகிழக்கு நிலவரம் குறித்து நாட்டில் அனைவரும் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டுள்ளனர். ஏற்கெனவே சமாளிக்க சிரமமாக உள்ள அன்றாட வாழ்க்கைச் செலவினம் இன்னமும் கூடினால் எப்படி எதிர்கொள்வது என்ற கவலை அனைவர் முகங்களிலும் படிந்திருக்கிறது. உயர்ந்துவரும் விலைவாசியினால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆதரவாக யூ சேவ் பற்று, மருத்துவச் செலவினங்களில் சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து போர் நின்று சமாதானம் கிடைத்துவிடாதா என்ற நம்பிகையுடன் உலகமே காத்திருக்கிறது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில் நீச்சல் தாரகை யிப் யின் சியூ இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று, தன் கணக்கில் 7 பாராலிம்பிக்ஸ் தங்கப் பதக்கங்கள் வரவு வைத்துள்ளார். ஊர் திரும்பியவருக்கு மக்களின் அதி உற்சாகமான வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைத்தன. ஆண்டுதோறும் நிகழும் ஃபார்முலா 1 கார்ப் பந்தயம் இந்த ஆண்டும் சிறப்புற நடைபெற்றது. கடந்த ஆண்டுகளின் செயல்பாடுகளின் கற்றல்களிலிருந்து, பந்தயத்திற்காக சாலைகளைத் தயார் செய்வது, பாதுகாப்பு அரண்கள் அமைப்பது, போக்குவரத்தை சீர்செய்வது என்று பல பணிகள் இருந்தாலும் மக்களின் அன்றாட நடமாட்டத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடித்தனர். இது போன்ற சர்வதேச  நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதிலும் சிறப்புற நடத்துவதிலும் சிங்கப்பூர் ஆண்டுக்கு ஆண்டு முன்னேறி வருவது நாட்டிற்குப் பெருமையே.

.

சிங்கப்பூரின் ‘கவிமாலை’ அமைப்பின் 25வது ஆண்டுவிழா இம்மாதம் நடைபெறுகிறது. கவிதை, அதுசார்ந்த உரையாடல்கள், விவாதங்கள், அறிமுகங்கள், வாசிப்புகள் என பல வகைகளில் இத்தனை ஆண்டுகளாக ஒரு இயக்கமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. கவிமாலையுடனான தங்கள் இணைப்பையும், பயணத்தையும் குறித்து பல்வேறு கவிஞர்கள் தத்தமது அனுபவங்களை கூறியிருப்பதை இந்த இதழில் ஆங்காங்கு வாசிக்கலாம். கவிமாலை இயக்கத்திற்கும், அமைப்பாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.

சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை editor@serangoontimes.com முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.