(சிறுகதை) பிழம்பு

மணிமாலா மதியழகன்

“சூடா மத்தி…!”

மென்மையாகக் கேட்ட சொற்களால் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தான் முருகேசன். சக்கர நாற்காலியில் பாதி மயக்கமும் விழிப்புமாக இருந்தவனது கண்கள் திறந்தன. வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த உடலை ஊழியர்கள் தள்ளிச் சென்றனர்.

‘தப்புப் பண்ணிட்டமோ?’ கடுமையானக் காய்ச்சலுடன் இருந்தவனிடம் அச்சமும் சேர்ந்தது.

‘ஆசுபத்திரிக்கிப் போனா நோய்ப் பரவக்கூடாதுன்னு நச்சு குடுத்து சாவடிச்சிடுவாங்க. அம்மை கண்டா யாரும் ஆசுபத்திரி பக்கமே தலவச்சிப் படுக்கக்கூடாது. பொணத்த கண்லகூடக் காட்டமாட்டங்களாம்’ துறைமுகத் தொழிலாளர்கள் பேசிக்கொண்டவை நினைவில் தலைகாட்டின.

‘செத்துப் போறதுக்கா இங்க வந்தேன்?’

‘அம்மைங்கிறது ஒருத்தருக்கு ஒருத்தர் லேசுல பரவும். அதனால நோயோட அறிகுறி தெரிஞ்சாலே ஆசுபத்திரிக்கி வந்துடுங்க. குணப்படுத்தி அனுப்பிடுவோம்னு அறிவிப்பு செஞ்சத நம்பித்தான கிளம்பி வந்தேன். இங்க பாத்தாலே பயமாயிருக்கே… எனக்கு ஏதாவது ஆகிட்டா பரிமளத்தோட கதி? வைத்தியமும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு ஓடிடலாமா? எழுந்து நாலு அடிகூட எடுத்து வைக்க முடியாதுபோலிருக்கே. என்ன செய்யப் போறேன்? அநாதை பொணமாதான் போவேனோ?’ உடல் உதறியது.

தமிழ்நாட்டிலுள்ள காரைக்கால்தான் முருகேசனின் சொந்த ஊர். பதினைந்து வயதிலேயே காலராவிடம் பெற்றோரையும் உடன்பிறந்தோரையும் பறிகொடுத்தான். ‘பாழாய்ப்போன அந்த நோய் என்னையும் கொண்டு போயிருக்கலாமே’ கவலை நாளும் வாட்டி வதைத்தது.

சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த அவனது ஒன்றுவிட்ட பெரியப்பா, “எங்கூட வந்துடுறியாடா?” எனக் கேட்டார். நம்ப முடியாமல் பார்த்தான். “நெசமாத்தாண்டா” என்றதும் அவர் கட்டியிருந்த ஒற்றைத் தங்கப்பல்போல அவன் முகம் பளபளத்தது. அன்றே துணிமணிகளை டிரங்குப் பெட்டிக்குள் எடுத்து வைத்துத் தயாராகிவிட்டான். சொன்னதைப்போல அழைத்து வந்து துறைமுகத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் வேலையில் சேர்த்துவிட்டார்.

பெரியப்பாவுக்குத் தெரியாமல் அக்கம்பக்கத்திலுள்ள பையன்களோடு ஒருமுறை சினிமாவுக்குப் போய்விட்டான். “இங்க பாருடா… கையில காசு இருந்தா நாலு பேரு உம்பின்னே வரத்தான் செய்வான். அவனுங்க வெள்ள சுருட்டுக் குடிக்கிறப் பயலுவ. வீணாப்போன அந்தப் பழக்கம் தொத்திக்க ரொம்ப நாளாவாது. அனுபவப்பட்டவன் சொல்லுறேன். நாலு காசு சம்பாதிச்சி கால ஊனுற வழியப் பாரு. என்னைப்போல அங்கயும் இங்கயுமா அல்லாடாம இதான் ஒன்னோட மண்ணுன்னு நெனை.”

போதையில் பேசினாலும், அவரது பேச்சிலுள்ள உண்மை புரிந்தது. சிங்கப்பூருக்கு வந்த ஏழாண்டுகளில் எவ்வளவோ மாறின. இந்தியாவுக்குப் போன பெரியப்பா திரும்பவேயில்லை.

‘அனாதையாதான் அலையணும்னு தலையில் எழுதியிருக்குபோல’ நொந்திருந்த வேளையில் பரிமளாவைப் பார்த்தான். அவன் வேலைக்கு, சைக்கிளில் செல்கையில் அவள் பேருந்தைப் பிடிக்கப் போவாள். இருவரும் ஒரே வழியில் போனாலும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டதில்லை.

ஒருநாள், திடீரென யாரோ அலறும் சத்தம் கேட்டுப் பதற்றத்துடன் சைக்கிளைத் திருப்பினான். நெஞ்சில் கை வைத்துக்கொண்டு நின்றவள் “ஆ… வ… வராதீங்க… ப… பா… பாம்பு…” குழறினாள். லாலாங் புற்கள் மண்டிக் கிடந்த ஒற்றையடிப் பாதையின் குறுக்கே நீளமாய்க் கறுகறுவென ஒரு பாம்பைப் பார்த்தான். சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் இரு புறமும் சேறும் சகதியுமாயிருந்தது. பாம்போ அசைவதுபோலத் தெரியவில்லை. உள்ளுக்குள் படபடத்தாலும் கல்லோ குச்சியோ கிடைக்குமா எனச் சுற்றும்முற்றும் பார்த்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. ஏறக்குறைய ஆள் உயரத்தில் வளர்ந்திருந்த புல்லைப் பிடுங்கி பாம்பின் மேல் தட்டினான். அது அசையவேயில்லை. அவள்தான் “வே… வேணாம்…” கத்தினாள். என்ன செய்வதெனப் புரியாமல் புல்லைக் கசக்கி வீசினான். பாம்பு சட்டென நழுவியது. “அப்பாடா…” நெஞ்சில் கை வைத்தாள். ஆனாலும் நின்ற இடத்தைவிட்டு இம்மியும் நகராது இருந்தவளைக் கையோடு அழைத்து வந்தான்.

ரொட்டி தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்குப் போனாள். நட்பாக ஆரம்பித்த பழக்கம், ஒருநாள் ஒருவரையொருவர் பார்க்காவிட்டால்கூடத் தாங்க முடியாததாக மாறியது. அவள் பெற்றோர் காதுகளுக்கு எட்ட, “வேலைக்குப் போறேன்னு காலியாள் பின்ன சுத்துறியா? மாமனைக் கட்டிக்கிறவரை படிய தாண்டாத” என்றனர். கையில் வெள்ளை சுருட்டும் கழுத்திலுள்ள மைனர் சங்கிலி தெரியுமாறு மூன்று பட்டன்களைத் திறந்துவிட்டுத் திரியும் மாமாவைக் கண்டாலே அவளுக்கு ஆகாது.

செய்தியறிந்த முருகேசன், அவள் வீட்டுக்குப் போய்ப் பெண் கேட்டான். “அப்பன், ஆத்தா இல்லாத வெறும் பய. என்னா தைரியத்துல படி ஏறுன?” அவள் அப்பா கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். என்ன சொல்லியும் அவர்களது மனத்தை மாற்ற முடியவில்லை. வேறு வழியின்றி மாரியம்மன் கோயிலில் வைத்து தாலி கட்டினான். மனைவியை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போனவனை, மண்ணைவாரித் தூற்றியதோடு “ஊர்க்காரனை நம்பிப் போயிருக்கியே. ஒன்னவுட்டுட்டு ஓடுவான்… அப்பதான் ஒனக்குத் தெரியப் போவுது…” வசைபாடி அனுப்பினர்.

கடந்தகால நினைவுகள் கண்ணீரை வரவழைத்தன. ‘நம்பி வந்தவளை விட்டுடுவேனோ?’ மனம் பதைபதைத்தது.

“ஒண்ணும் பயப்படத் தேவையில்ல. உடம்பை நல்லா குணமாக்கி அனுப்பிடுவாங்க” அவன் மனத்தைப் படித்ததுபோலச் சக்கர நாற்காலியைத் தள்ளியவர் சொன்னவை காதுகளில் ஏறவேயில்லை.

கப்பலில் சரக்கு ஏற்றிக்கொண்டிருக்கும்போது காலிடறி விழப் போனான். பின்னே வந்தவர் பிடித்துக்கொண்டார். “என்னடா… உடம்பு இப்புடிக் கொதிக்குது?” என்று கேட்டார். “என்னன்னு தெரியலண்ணன். உடம்பெல்லாம் ஒரே வலியாவும் இருக்கு” என்றவனது கண்கள் சிவந்திருந்தன. “அம்மையா இருந்தாலும் இருக்கும். ஒடனே தவ்கேகிட்ட சொல்லிட்டுக் கெளம்பு. ம்… அப்புறம் ஒண்ணு… கேப்பாப் பேச்சக் கேட்டு ஆசுபத்திரிக்கி மட்டும் போயிடாதடா” எச்சரிக்கை செய்து அனுப்பினார். அவனைப் பார்த்தவுடனே முதலாளி போகச் சொல்லிவிட்டார். சைக்கிளை மிதிக்கவே முடியவில்லை. ஒரு வழியாக வீட்டை நெருங்கினான்.

“ஏய்யா முருகேசு… என்னா அதுங்காட்டியும் வந்துட்டே…?”

வீட்டை நெருங்கும் வேளை, அஞ்சம்மா பாட்டியின் குரல் காதுகளை எட்டியது. மூப்பில் முடங்கினாலும், எங்கே என்ன நடக்கிறது என எல்லாச் செய்தியும் தெரிந்து வைத்திருப்பார். அவருக்கு அவ்வப்போது வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொடுப்பான்.

‘இவர்கிட்ட பேச்சு குடுத்தா லேசுல விடமாட்டாரே’ திரும்பியே பார்க்கவில்லை.

அவனைக் கண்டதும் கோழிக்குஞ்சுகள் ஓடி வந்தன. பரிமளா வேலை முடிந்து வந்தவுடன் அவற்றுக்கு ஏதாவது தீனி போட்டுவிட்டுதான் மறு வேலையே பார்ப்பாள். வீட்டுக்கு வெளியே, தட்டுமுட்டுச் சாமான்களுக்குக் கீழிருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறந்தான். சில கோழிக்குஞ்சுகளும் அவனுடனே உள்ளே நுழைந்தன. அவற்றை விரட்ட வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. காய்ச்சல் கூடியிருந்தது. முறத்திலிருந்த அரிசியில் கோழிக்குஞ்சுகள் விளையாடின.

‘வேலையிடத்துல சொன்னதுபோல அம்மையா இருக்குமோ?’

கண்ணாடியை எடுத்துப் பார்த்தான். ‘அம்மைக் கொப்புளங்கள் ஒண்ணுமே இல்லையே’ உடம்பிலுள்ள தெம்பை எல்லாம் ஏதோ ஒன்று உறிஞ்சி எடுத்தவிட்டதைப்போலிருந்தது. நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. பாய், தலையணை ஏதுமின்றி வெறும் தரையிலேயே சுருண்டான். உறக்கமும் வரவில்லை.

அனத்தலுடன் புரண்டவனுக்கு வயிற்றில் ஏதோ இருப்பதுபோலத் தோன்றவும் சட்டென எழுந்தான். உடையைத் தளர்த்திவிட்டுப் பார்க்க, அடி வயிற்றில் ஒரு கொப்புளம் தெரிந்தது. ‘ஐயோ… இது அம்மையா இருக்கக்கூடாதே?’ தவிப்புடன் கண்ணாடியை வயிற்றின் அருகே வைத்துப் பார்த்தான். கண்ணாடிபோன்ற கொப்புளத்தின்மேல் தெரிந்த சிறு கரும்புள்ளி அம்மைதான் எனச் சொல்லாமல் சொன்னது.

‘பரிமளம் அம்மாவா ஆவப் போற சந்தோசத்துல இருக்கிறா. ஒருவேளை அவளுக்கும் வந்துட்டா?’ பயம் ஆட்டிப்படைத்தது. கர்ப்பிணிகளுக்கு அம்மை வந்தால் வயிற்றிலிருக்கும் குழந்தையும் பாதிக்கப்படும் என்று அறிவிப்பில் கேட்டவை மனத்தில் சுழன்றன. ‘எனக்கென்ன ஆனாலும் பரவாயில்ல. எம்பொண்டாட்டியும் புள்ளையும் நல்லாயிருக்கணும்’ முடிவெடுத்தான். அலமாரியிலிருந்த சில்லறைக் காசுகளை எடுத்துக் காற்சட்டைப் பையில் போட்டுக்கொண்டு கதவைத் திறந்தவனுக்கு கோழிக்குஞ்சுகளின் சத்தம் கேட்டது. பரிமளா வேலைக்குப் போகும் முன்  கல்லையும் நெல்லையும் பொறுக்கிவிட்டு முறத்தில் வைத்திருந்த அரிசி, தரையெங்கும் சிதறிக் கிடந்தது. ‘வேல முடிஞ்சி அவ வர்றதுக்குள்ள போயிடணும்’ கோழிக்குஞ்சுகளை விரட்டிவிட்டுக் கதவைச் சாத்தினான்.

வெற்றிலை இடிக்கும் சத்தம் கேட்டது. ‘அஞ்சம்மா பாட்டி பார்வையில் பட்டா அவ்ளோதான்’ வேறு பாதையில் நடந்தான். எங்கே போவது? யார் கண்ணிலும்படக் கூடாது. எதுவும் புரியாமல் நடந்தான்.

சில சமயம் துறைமுகத்தில் நிறைய சரக்கு வரும்போது இரவிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும். அவன் இரவு வேலைக்குப் போவது பரிமளாவுக்குப் பிடிக்காது. “ராவும் பவலுமா வேல செஞ்சா ஒடம்பு என்னத்துக்காவும்?” எனக் கடிந்துகொள்வாள். “ரெண்டு பேரும் சேர்ந்து ஒழைச்சதாலதான் சொந்தமா ஒரு நிலம் வாங்கி அத்தாப்பு குடிசையக் கட்ட முடிஞ்சிருக்கு. கையில இருக்குற காசோட, கூடுதல் நேரம் வேலை செஞ்சா கையளவு பூமிய வாங்கிடலாம். வேலைக்குன்னு என் தங்கம் அடுத்தவங்க தோட்டத்துக்குப் போவ வேணாம் பாரு” சிரித்துக்கொண்டே சொல்வான். “அதெல்லாம் காலம் வர்றப்ப பாத்துக்கலாம். ரா வேலைக்குல்லாம் போவாதே” கண்டிப்புடன் சொல்லியிருக்கிறாள்.

நீண்ட தூரம் நடந்ததில் தாகமெடுத்தது. கண்ணில்பட்ட கிணற்றில் தண்ணீர் இழுத்துக் குடித்தான். அதற்குமேல் நடப்பதற்கு தெம்பில்லாததால் ஒதுக்குப் புறமாய்த் தெரிந்த கட்டடத்தின் கீழே அமர்ந்தான். எப்போது கண்ணயர்ந்தான் என்று தெரியவில்லை. வெள்ளைப் பன்றிகள் திமுதிமுவென ஓடின. பொழுது சாய்ந்திருந்தது. ‘இன்னிக்கு வேணா இங்க இருந்துடலாம். நாளைக்கு?’ வெளியே இருள் சூழ்ந்ததைப்போல உள்ளே கவலை கவிந்தது. கண்களை மூட நினைத்தாலும் கொசுக்கள் விடவில்லை. பொழுது விடிவதற்கு வெகுநேரமிருந்தது. வேறு வழியின்றி சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

‘மிடில்டன் ஆசுபத்திரி’ என்றவனை வாடகைக் காடி ஓட்டுநர் யோசனையாகப் பார்த்தார். சில நொடிகளுக்குப் பின் மேலும் கீழும் தலையசைத்தார். மௌல்மெய்ன் சாலையை நோக்கி காடி கிளம்பியது.

‘ரா வேலைக்குப் போயிருக்கிறதா நினைச்சி கோவமாதான் இருப்பா. உயிரையே வச்சிருக்கிவகிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லாமக் கிளம்பி வந்திருக்கேனே…’ தவிப்பில் இருந்தவனை உறக்கம் தழுவியது. 

‘இன்னும் ஒரே ஒரு வாய்தான். சாப்பிடு ராசா…’

‘என்னவோ பச்சப்புள்ளயாட்டம் கொஞ்சிக்கிட்டு பத்து வயசு புள்ளைக்கி சோறு ஊட்டிக்கிட்டிருக்கே?’

‘எத்தினி வயசா ஆனா என்ன? எனக்கு எம்புள்ள எப்பவுமே செல்லம்தான்’ சாப்பிட்டுக்கொண்டிருந்தவனது கன்னத்தில் அம்மா முத்தமிட்டார். “அப்ப நாங்க?” தம்பியும் தங்கையும் ஓடி வந்தனர். ‘மூணுபேருமே செல்லங்கதான்’ என அணைத்துக்கொண்டதைப் பார்த்து அப்பா சிரித்தார்.

‘நீங்களும் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டீங்களே பெரியப்பா?’

‘சொந்தமா எடமெல்லாம் வேணாம் மாமா. இங்க எடமிருந்தாலே எனக்குப் போதும்’ அவனது நெஞ்சில் கைவைத்துச் சொன்னவளைக் கட்டி அணைத்தான்.

காடி குலுங்கியது. ‘ஒன்ன வுட்டுட்டு எங்கியும் போமாட்டேம்மா’ முனகிக்கொண்டே கண்களைத் திறந்தான். ஆசுபத்திரி மேலே தெரிந்த கருஞ்சிங்கத்தைப் பார்த்ததும் கனவில் தோன்றிய அனைத்தும் காணாமல் போயின. சிரமத்துடன் கால்சட்டைப் பையிலிருந்த சில்லறைகளை எடுத்தபோது ஆசுபத்திரி ஊழியர் ஒருவர் காடியை நோக்கி வேகமாக வந்தார். காசை எண்ணுவதற்குள் உடல் நடுங்கியது. ஒரு கையில் துணியும் மறு கையில் மருந்து தண்ணியையும் எடுத்துக்கொண்டு வந்த ஊழியர் சிறு புன்னகையோடு அவனைப் பார்த்துவிட்டு காடி ஓட்டுநரிடம் மலாயில் ஏதோ சொன்னார். காடியின் கதவைத் திறக்கக்கூட முடியவில்லை. ஊழியர் கதவைத் திறந்துவிட, ஒருவழியாகக் கீழே இறங்கினான்.

கருஞ்சிங்கத்தை நிமிர்ந்து பார்த்தான். ‘பேசாம வீட்டுக்கே திரும்பிப் போயிடலாமா?’ சந்தேகத்துடன் திரும்பியபோது, ஊழியர் அவன் வந்த காடியில் மருந்து தண்ணி தெளித்துக்கொண்டிருந்தார். ‘என்னவானாலும் ஆகட்டும்’ கால்களை முன்னோக்கிக் வைத்தான்.

உடல் வெப்பத்தைப் பரிசோதித்த நர்ஸ், எத்தனை நாட்களாகக் காய்ச்சல் இருக்கிறது எனக் கேட்டார். அதற்குப் பதில் சொன்னதோடு வயிற்றில் ஒரு கொப்புளம் இருப்பதையும் சொன்னான். வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருக்கா எனக் கேட்டார். வீட்டில் யாருக்கும் இல்லை என்றவன் வேலையிடத்தில் சிலருக்கு இருந்ததையும் சொன்னான்.

“முகத்துலயும் போட்டுதான் இருக்கு. இது சின்ன அம்மைதான். நல்லவேளையா ஆரம்பத்துலயே வந்துட்டீங்க. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. இப்ப சக்கர நாற்காலி எடுத்துட்டு வருவாங்க. அதுவரை இந்த நாற்காலியில் உக்காருங்க” என்று சொன்னவரை வியப்புடன் பார்த்தான். அவனைப்பற்றிய மற்ற விவரங்களைப் புன்னகை மாறா முகத்துடனே கேட்டுக் குறித்துக்கொண்டார். சுவற்றிலிருந்த கடிகாரம் ஐந்து முறை அடித்து ஓய்ந்தது.

சக்கர நாற்காலியை தள்ளி வந்தவர், கைத்தாங்கலாகப் பிடித்து உட்கார வைத்தார். ‘என்னவோ தொட்டாவே ஒட்டிக்கும்… அதனால ஆசுபத்திரிக்கிப் போனாலே சாவடிச்சிடுவாங்கன்னு சனம் சொன்னதுகளே? இங்கே என்னன்னா இப்படிக் கவனிக்கிறாங்க?’ கொஞ்சம் தைரியம் பிறந்தது.

அப்போதுதான், ஊழியர்கள் ஓர் உடலைத் தள்ளிச் சென்றுகொண்டிருக்க, யாரோ “சூடா மத்தி” என்று சொன்னது காதுகளில் விழுந்தது.

‘அம்மை கண்டதுல குளுந்துட்டாங்கன்னுதான் ஊருல சொல்லுவாங்க. வேப்பிலைய வீட்டு வாசல்லயும் படுக்கையிலும் போட்டு வைப்பாங்க. வேப்பல வாசத்துல சீக்கிரம் சரியாகிடும்பாங்க. இங்க என்னன்னா உள்ள நுழைஞ்சதிலிருந்து மருந்து தண்ணியின் வாடை தாங்கலையே. பரிமளாவைத் தவிக்க விட்டுட்டுப் போயிடுவனோ?’ உடல் நோவுடன் பல்வேறு குழப்பமும் சேர்ந்தது.

“ஒரு வாரம் இல்லன்னா பத்து நாளுக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம்” சக்கர நாற்காலியை தள்ளியவர் சொன்னார். உள்ளுக்குள்ளிருந்த கலவரம் கொஞ்சம் மட்டுப்பட்டது. நிறைய பேர் படுக்கையைவிட்டே எழவில்லை. விளக்குமாறு சத்தம் அதிகம் வராமல் ஆசுபத்திரியைக் கழுவி விட்டுக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டே போனான். ஒவ்வொரு அறையிலும் பத்துப் படுக்கைகள் இருந்தன. கட்டிலில் போடப்பட்டிருந்த வெண்ணிற மெத்தையின்மீது பளபளப்பானப் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே இருந்தன. ‘வேல இடத்துலயே அவ்ளோ பேருக்கு அம்மை கண்டிருக்கு. அப்படின்னா சிங்கப்பூரு முழுக்க எவ்ளோ பேருக்கு இருக்கும்? ஆனா, இங்க படுக்கைங்க காலியாதானே கிடக்கு? நானே சாவைத் தேடி வந்துட்டேனா?’ கண்ணீர் பொங்கியது.

எதிரில் ஒரு டாக்டர் வந்துகொண்டிருந்தார். அகன்ற மார்புகளுடன் மிகவும் உயரமாகயிருந்தவரது உருவம், கண்களுக்கு எமனைக் காட்டியது. வெள்ளைக்கார டாக்டர் இலேசாகப் புன்னகைத்தார். பார்வையைக் கீழே இறக்கினான். எந்தப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான் என்ற விவரத்தை ஊழியரிடம் கேட்டறிந்தார். மெல்ல அவனது தோளைத் தட்டி, “கவலைப்பட வேண்டாம்” என்றார்.

ஆசுபத்திரிக்குள் நுழைந்தவுடன் கண்ட காட்சி மனத்தைவிட்டு அகலவில்லை. ‘எனக்கும் இதே நிலைதானா? இதுக்காகத்தான் அம்மை கண்டா ஆசுபத்திரி பக்கமே போவக்கூடாதுன்னு சொல்றாங்களோ?’ கலக்கம் அதிகரித்தது.

அவனது அறையில் மூன்று படுக்கையில் மட்டுமே நோயாளிகள் இருந்தனர். மருத்துவமனை ஊழியர், சிறு சுருக்கமும் இன்றி விரிக்கப்பட்டிருந்த படுக்கைக்கு அவனை மாற்றினார். இன்னொருவர் சலவை செய்து மடித்து வைக்கப்பட்டிருந்த மேலங்கியையும் சாரோங்கையும் கொடுத்து மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டுப் படுக்கையைச் சுற்றியிருந்த திரையை இழுத்துவிட்டார்.

இதைவேறு செய்ய வேண்டுமா எனத் தோன்றியது. அங்கிபோலிருந்த சட்டையை போட்டுக்கொண்டு கால்சட்டையைக் கழற்றிவிட்டு சாரோங்கை உடுத்தும்போது தடுமாறினான். சட்டெனக் கட்டிலைப் பிடித்துக்கொண்டதால் அடிபடவில்லை. வெளியே நின்றிருந்த ஊழியருக்கு கட்டில் சத்தம் கேட்டிருக்கலாம். உடனே வந்துவிட்டார். சாரோங்கை கட்டிவிட்டதோடு சட்டையில் மேலும் கீழுமாகப் போடப்பட்டிருந்த பட்டன்களையும் ஒழுங்காகப் போட்டுவிட்டார். ஒரு பையில் அவன் அணிந்திருந்த துணிகளை மடித்து வைத்ததோடு அவனது பெயரையும் படுக்கை எண்ணையும் எழுதினார். இன்னும் சில நிமிடங்களில் டாக்டர் வந்துவிடுவார் எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

எதிர்ப் படுக்கையில் இருந்த முதியவர் அவனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்ததைப் பார்த்தான். பதிலுக்கு புன்னகைக்க முடியாதவாறு கண்கள் செருகிக்கொண்டு சென்றன.

சப்பாத்துகளின் ஓசை படுக்கையை நெருங்கியதை உணர முடிந்தது. ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை. டாக்டர் பரிசோதித்த பின் கன்னத்தைத் தட்டி எழுப்பினார். கண்களைத் திறந்து பார்த்து மூடினான். டாக்டருக்குப் பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் மெல்ல நிமிர்த்தி உட்கார வைத்துவிட்டு வாயைத் திறக்கச் சொல்லி இரண்டு மாத்திரைகளைப் போட்டுத் தண்ணீரையும் புகட்டினார். கட்டிலின் குறுக்கே உடலைச் சுருட்டிப் படுத்துக்கொண்டான். நேராக படுக்க வைத்த நர்ஸ் போர்வையைப் போர்த்தினார்.

யாரோ எழுப்பியபோது வேறு உலகத்தில் இருப்பதைப்போலத் தோன்றியது. வியர்வையில் உடைகள் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தன. எங்கேயிருக்கிறேன் என்ற குழப்பத்துடனே போர்வையை அகற்றினான். “இப்போது பரவாயில்லையா?” கனிவுடன் ஒரு நர்ஸ் கேட்டார். ஆசுபத்திரிக்கு வந்திருப்பது அப்போதுதான் பிடிபட்டது. அடித்துப் போட்டதுபோல உடம்பு வலித்தது.

‘இந்நேரம் பரிமளம் என்னைக் காணாம தவிச்சிப் போயிருப்பா. ஆசுபத்திரிக்கிப் போறேன்னு சொன்னா வேணாம்னு சொல்லிடப் போறாளோன்னு கிளம்பி வந்துட்டேன். இப்ப அவளை நினைச்சா… பெரிய தப்புப் பண்ணிட்டனே.’ உடம்பில்  நிறைய கொப்புளங்கள் வந்திருந்தன.

கலக்கத்தில் இருந்த அவனைப் பார்த்து நர்ஸ் புன்னகைத்தார். “இங்கே வந்ததிலிருந்து எதுவுமே சாப்பிடல. கொஞ்சமாவது சாப்பிடுங்க. மெல்ல எழுந்து உட்காருங்க” என்றார். படுக்கைக்கு அருகிலிருந்த சிறு மேசைமேல் பீங்கான் மங்கில் கஞ்சி இருந்தது. கொஞ்சம்கூடப் பசியே இல்லை. “காச்ச கண்ட உடம்பு அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுதான் ஆகணும்” என்றார்.

சாப்பிடுவதற்கு வாகாக மேசையை அருகில் நகர்த்தி வைத்தார். ‘பரிமளத்துக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாமோ?’ என்ற எண்ணம் மனத்தை வாட்டியது.

எதிர்ப் படுக்கையிலிருந்த முதியவர் சாப்பிட்டுவிட்டுத் தேத்தண்ணியைக் குடித்துக்கொண்டிருந்தார். பக்கத்துப் படுக்கைக்கு புதிதாக ஒருவரை அழைத்து வந்தனர். அவருக்கு அம்மைக் கொப்புளங்கள் வெடித்து உடம்பெல்லாம் புண்ணாய் இருந்தது. ‘எனக்கும் இப்படி ஆகிடுமோ?’ பயப்பந்து வயிற்றில் சுழன்றது.

நான்கு வாய்க் கஞ்சியை உள்ளே அனுப்புவதற்கு போதும் போதுமென்றானது. உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. உடனே படுக்க வேண்டாம் என நர்ஸ் சொன்னார். எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை. வலுக்கட்டாயமாக யாரோ எழுப்பியதை உணர்ந்தான். விட்டிருந்த காய்ச்சல் மீண்டும் வந்திருந்தது. மாத்திரையைக்கூட விழுங்க முடியாமல் தொண்டையில் வலித்தது. “வெளியே கொப்புளங்கள் இருக்கிறதுபோல உள்ளுக்குள்ளும் இருக்கும். அதனால்தான் இப்படியிருக்கு. எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதீங்க” என்றார் நர்ஸ்.

‘பாவம் பரிமளம். நாளைக்கு என்னைக் காணோம்னு எங்கெல்லாம் அலைவாளோ?’

பாலில்லாத குறைவாகச் சர்க்கரை போடப்பட்ட தேத்தண்ணியை முகச் சுளிப்புடன் குடித்தான். அதன் பிறகு கொடுத்த கஞ்சியைக் கொஞ்சமும் குடிக்க முடியவில்லை.

யாரோ உலுக்குவதுபோலிருந்தது. கண்விழித்தபோது கொசுவலைக்குள் இருந்தான். “சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டால்தான் உடம்பு குணமாகும்” என்றார் அவனை எழுப்பிய நர்ஸ். இரண்டு கரண்டிக்குமேல் கஞ்சியை விழுங்க முடியவில்லை.

‘அம்மா, அப்பா என்னை தனியா விட்டுட்டுப் போகாதீங்க. நானும் உங்ககூட வந்துடறேன்…’

‘இனி அந்தப் பசங்களோட சேரமாட்டேன் பெரியப்பா…’

‘என் தங்கமே… ஒன்னவிட்டுப் போமாட்டேம்மா…”

“முருகன்… முருகன்…!”

‘யார் இப்படிக் கூப்புடுறாங்க?’ கண்விழித்தான். பரிசோதித்த டாக்டரின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தான். “கனவிலிருந்த உன்னை தொந்தரவு செய்துவிட்டேனா?” என்றார் அந்த வெள்ளைக்கார டாக்டர். வெறுப்புடன் டாக்டரின் கையைவிட்டான். விடியற்காலை அதே டாக்டர் வந்தபோது படுக்கையில் அமர்ந்திருந்தான். “தூங்கவில்லையா?” எனக் கேட்டுக்கொண்டே பரிசோதித்தார். உடம்பெல்லாம் பரவியிருந்த கொப்புளங்கள் படுத்தி எடுத்தன. போதாக்குறைக்கு கொசு கடித்த இடங்களைச் சொறியக்கூட முடியவில்லை. உடல் அனலாய்த் தகித்தது. கறுப்பு மைபோன்றக் களிம்பைக் கொடுத்தனர். கொப்புளங்களில் மருந்தைத் தடவும்போது மட்டும் சற்றுக் குளிர்ச்சியாய்த் தெரிந்தது.

அடுத்த நாள் காலை. முட்டையும் ரொட்டித் துண்டுகளும் மேசை மேலே இருந்தன. நர்ஸ் சொன்னவற்றுக்கு காது கொடுக்கவேயில்லை. உட்காரவோ படுக்கவோ முடியாமல் அவதிப்பட்டான். எப்படிச் சாப்பிட முடியும்?

“முருகன்…”

டாக்டர் நின்றுகொண்டிருந்தார். “வேளா வேளைக்குச் சாப்பிட்டுட்டு மாத்திரை எடுத்துக்கொண்டு களிம்பைத் தடவினால்தான் உடம்பு குணமாகும்” என்றார். பாதி ரொட்டியை மட்டும் சாப்பிட்டான்.

தன் பெயர் முருகேசன் எனச் சொல்ல நினைத்தான். ‘ம்… பேர்ல என்ன கெடக்கு’ என விட்டுவிட்டான்.

ஏழு நாட்களுக்குப் பின்னர் காய்ச்சல் தணிய ஆரம்பித்தது. சோற்றைப் பார்த்தவுடன் சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் உண்டானது. கத்தரிக்காய், வெண்டைக்காய் போட்ட சாம்பாரும் தொட்டுக்கொள்ள பொரித்த மீனும் கங்கோங் கீரையும் இருந்தன. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டான்.

மதிய உணவுக்குப் பிறகு கொடுத்த வாழைப்பழத்தை வேண்டாமென்றான். “இந்தப் பச்சை நாடன் பழம் உடம்புக்கு நல்லது. உள்ளே இருக்கிற புண்ணை சீக்கிரத்துல குணப்படுத்துவதோடு மலச்சிக்கலையும் சரிப்படுத்திடும்” என்றார் ஆசுபத்திரி ஊழியர். வாழைப்பழத்தை எடுத்தான்.

சுபத்திரிக்கு வந்த பத்து நாளில் பத்து ஆண்டுகள் கடந்ததைப்போலத் தோன்றியது. பரிமளாவைக் காணாத ஏக்கம் வதைத்தது. உடம்பிலிருந்த கொப்புளங்கள் ஆறி வந்தன. ஆனாலும் டாக்டர்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை வந்து சோதிப்பதை நிறுத்தவில்லை.

“எப்போ வீட்டுக்கு அனுப்புவீங்க?” தமிழ் பேசும் டாக்டரிடம் கேட்டான்.

“இன்னும் ஒரு வாரம் இங்கேயிருந்தால் நல்லது.”

“இன்னும் ஒரு வாரமா?”

“ஆமாம். மனைவி கர்ப்பமா இருக்கிறதா சொன்னீங்க. உடம்பு முழுக்க குணமான பிறகு போவதுதான் நல்லது” புன்னகையுடன் சொன்னார்.

“இப்ப சந்தோசம்தானே முருகன்?” பேர் வெட்டிய மலாய்க்காரப் பெண்மணி கேட்டார்.

வெட்கச் சிரிப்புடன் “என் பேரு முருகேசன்” என்றான். அவர் முகத்திலிருந்த புன்னகை சட்டென மறைந்தது.

வேக நடையில் வந்தவன், வந்துட்டேன் என்பதைப்போலக் கறுஞ் சிங்கத்தை அண்ணாந்து பார்த்தான். ‘செலவே இல்லாம வைத்தியம் பாக்குறாங்க. வெளங்காத சனம் உசுரவுடுதுங்க’ நினைத்தவாறு பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றான்.

‘என் பேரைச் சொன்னதோட பேர் வெட்டியவங்களோட முகம் ஏன் சுருங்கியது?’ சிறு ஐயம் தோன்றியது. அடுத்தக் கணமே ‘இனி எதுக்குத் தேவையில்லாததெல்லாம்? பொழைப்பைப் பாப்போம்’ எனக் கால்களை எட்டி வைத்தான்.

‘இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. பரிமளம் வீட்டில்தான் இருப்பா. அவகிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறேன்.’

“காசுக்கு ரெண்டு… கச்சாங் பூத்தே…” பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் கூவிக்கொண்டிருந்த சீனரிடம் இரண்டு பொட்டலங்களை வாங்கினான். பரிமளத்துக்கு ரொம்பப் பிடிக்கும். ‘பாவம்… தவியா தவிச்சிருப்பா. இனி என் தங்கத்தைவிட்டு எங்காவது போவேனா?’ பேருந்து நின்றது. இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.

“அடப் பாவி மவனே… இத்தினி நாளு எங்கடா போயிருந்தே…” அஞ்சம்மா பாட்டியின் குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.

“ஏன் பாட்டி… என்னாச்சி…?”

“சொல்லாமகொள்ளாம எங்கடா ஓடுனே?”

“என்னாச்சி? பரிமளா எங்க..?”

“வவுத்துப் புள்ளக்காரிய வுட்டுட்டு ஓடுன நீ, இப்ப வந்து பொண்டாட்டி எங்கன்னு கேக்குறியா…?”

மூடியிருந்த கதவையும் அஞ்சம்மா பாட்டியிடம் தெரிந்த கோபத்தையும் மாறி மாறிப் பார்த்தான். கையிலிருந்த பை கீழே விழுந்ததில் கடலைகள் சிதற, கோழிக்குஞ்சுகள் ஓடி வந்தன.

mathimanimala@gmail.com