ஆழ்நெடுநீர் (தொடர் 4)

0
795
பரிமித்தா

“பொறமையா?“ என்றார் என் அம்மா. நான் அமைதியாக காடியில் அமர்ந்திருந்தேன். அம்மா வீடு வரை ஒன்றும் சொல்லவில்லை, மௌனமாக வந்தார்.

வீட்டினுள் நுழைந்ததும் என்னிடம் மூன்று சீயக்காய் பெக்கட்டுகளையும் நல்லெண்னையும் மேசையில் எடுத்து வைக்க சொல்லிவிட்டு தொடர்ந்தார். “சிகாமணி கடசி காலம் பத்தி உனக்குத் தெரியாது. தெரிஞ்சா இப்படிலாம் பேச மாட்ட. எங்கப்பாவுக்கு குரல் போச்சு. அவர பாத்துக்க எங்கம்மா பிள்ளைங்கனு நாங்கலாம் இருக்கோம். ஆனா சிகாமணி அவர் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு நடந்தத நினைச்சு நினைச்சு செத்தார். அந்த ரோத்தான் நாக்காலிய ஃபேன்கடில போடு.”

மூங்கில் சாய்வுநாற்காலியை இழுத்து விசிறியை அதிக விரைவில் வைத்தப்பின் கேட்டேன். “ஏன்? அவரோட இரண்டு பையங்க மூத்த பொன்னு தப்பிச்சாங்க தானே? அவுங்க பாத்துகில்லையா?”

அம்மா தொடர்ந்தார். “சிகாமணியோட மூத்த பொண்ணு எனக்கு அண்ணி முறை. அவுங்களுக்கு அப்பவே கல்யாணம் முடிஞ்சு அனுப்பிட்டாங்க. பையனுங்கள எங்க பாட்டிதான் அவுங்க காலம் வரைக்கும் வளர்த்தார். சிகாமணி மாமா அமராவதி பாட்டிய பாக்க வரும்போது சாராயம் இறக்கிட்டுதான் வரும். துக்கம். விடாப்பிடி துக்கம். விரும்பி விரும்பி துக்கம். மாமா வந்தார்னா பாட்டி என் அத்தைங்ககிட்ட சோறு போட சொல்லுவாங்க. வேற என்னதான் சொல்றது. இவர் வரதும் யாருக்கும் பிடிச்சுக்கல. ஆனா அத்தைங்க யாரும் ஒன்னும் சொல்லிற முடியாது. முகம் கோணலா இருந்தா கூட – உங்க வீட்டுக்கு நான் என்ன சோறுக்கா வரேனு இரண்டு கையையும் விரிச்சு விறைச்சுக்கிட்டுப் போய்டுவாரு.”

சிரித்து “ஐயையோ அப்றம்?” என்றேன்.

“அப்றம் என்ன மறுநாள் காலைல மறுபடியும் அந்தாளு சாராயம் குடிச்சு அவுங்க அக்காவ பாக்க வரும். தினசரி இதேதான்.”

“ஏன் உங்க வீட்டுல வந்து சாப்டணும்? இரண்டு பையங்க இருந்தாங்களே..”

“என்னவிட வயசு கம்மிதான். அவனுங்க இரண்டு பேருக்கும் இவர பிடிச்சுக்காது. வெச்சு வெளுத்துவிட்டுருவார் சிகாமணி. ஏன் எதுக்கு ஒரு காரணமும் தெரியாது. இவரும் அக்கா வீடே கதின்னு இருப்பார். வந்தா சாப்பாடு கொடுப்போம். அவ்வளவுதான். மாமாவுக்கு அப்றமா கிட்னி பிரச்சனையாகிதான் போனார். ரொம்ப கஷ்டப்பட்டார். அவர் பசங்க அவுங்க வீட்டுக்கு வெளிய ஒரு நாலு பலகைய வாங்கு மாதிரி அடுக்கி அதுல மாமாவ படுக்க போட்டுடாங்க. வெயிலாகட்டும் மழையாகட்டும் அங்கதான். அந்த வாங்க பாத்தாலே முதுகு வலிக்கிறமாதிரி இருக்கும். அப்றமா அவர் கேட்டுக்கிட்ட மாதிரி அக்கா பக்கத்துலயே பொதச்சாச்சு” என்று ஒரு கொட்டாவியுடன் நிறுத்தினார்.

“இதலாம் பாத்த பிற்பாடும் எங்கப்பாவுக்கு சிகாமணி மாமா மேல பொறாமை இருக்கும்னு நீ நினைக்கிறியா? சின்ன பிள்ளை நீ. விடிஞ்சா நல்ல நாள். இப்ப வந்து யார் எப்படி செத்தார்னு கேட்டுகிட்டு. படுத்து தூங்கு காலைல அஞ்சரைக்கு எழுந்தரிக்கனுணும்.”

சாயந்தரம் கழித்து வரும் அலுப்பு கட்டிலில் படுத்திருக்கும்போது மறைந்து மூளை தெளிவாகியது. தூங்க முயற்சித்தேன். கண்களை மூடிய சற்று நேரத்தில், நீருக்குள் மூழ்கி எழுந்திருக்கும் சலசலப்பு கேட்டது. கண்களைத் திறந்து நீர் அருந்தி தூங்க முயற்சித்தேன். இந்தமுறை வெய்யிலில் உலர்ந்த வாங்கு கண்ணுக்குள் வந்து மறைந்தது. கண்டதுக்குள் நுழைந்து அறிய முயலுவதால் ஏற்படும் இந்த சுய சித்தரவதையை நொந்து கொண்டேன். எழுந்தமர்ந்து ஜன்னலின் துணியை விலக்கி வானில் நட்சத்திரம் தெரிகிறதாவென பார்த்தேன். ஒன்றே ஒன்று உள்ளது. துருவனோ? எரிச்சலாய் வந்தது. மீண்டும் படுத்து உறங்கச் சென்றேன். நினைவுகள் மெல்ல கலைந்து கனவுலகம் செல்வது தெரிந்தது.

அந்த உலகம் முழுக்க இருளாலானது அல்ல. கருநீலமாக இருந்தது. நீலமிருப்பின் ஒளியிருத்தல் அவசியம். அந்த உலகத்தில் நீரில்லை, நிலமில்லை. உம்பர்களிலான உலகம். வானம் மட்டுமே இருக்கிறது. வானில் நான்கு பலகைகளிலான படகு. படகு அதிவேகமாக வானுக்குள் நுழைகிறது. ஒரு வானம் அடுத்து மற்றொன்று, இன்னும் ஒன்று என உள் செல்கிறது. ஒரு வானம் தாண்டி மறு வானம் செல்லவும் அடர்நீலத்துள் ஒளி மெல்ல மெல்ல கலந்து நாவல் பழ ஊதாவாகிறது. அடுத்த வானத்தில் செல்லும் போது செக்கென்ற சிவப்பு. நியா குகையில் ஆதி மனிதன் வரைந்த சிவப்பு. அவன் தேர்ந்தெடுத்த சிவப்பு. என்னுடல் உஷ்ணமாகி எனக்கு மூச்சு திணறுவதுபோல் இருந்தது. இந்த வானம் நச்சுப் புகையின் வெளியோ? அமிலங்கள் நுரையீரலை எரிக்கின்றன. படகு இன்னும் உள் நுழைகிறது. அடுத்த வானம் ஆரஞ்சாகி மஞ்சலாகியது. படகின் மேலே ஒரு உடலுருவம் தெரிகிறது. அவளது பின்னால் வெகு தொலைவில் நான் இருக்கிறேன். என் முன் படகில் இருப்பது ஒரு சிறுமி எனத் தெரிகிறது. முழங்கால் வரை முடி. அவள் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறாள். நான் அவளை காண முன்னே நகர்கிறேன். மஞ்சள் வானம் பொங்கிய பால்நிறமாக மாறியது. நான் நகர்வது எனக்கே போலியாக உள்ளது. அவள் ஆட்டுவிக்கிறாளா என என் விரல்களைப் பார்த்தேன். மாநிறம் பால் நிறமாக மாறிக்கொண்டு வந்தது. மீண்டும் அவளைப் பார்த்தேன். என் மூக்கை உரசாமல் என் முன் நிற்கிறாள். இமைப்பதற்குள் முன் இருந்த தொலைவில் சென்று என்னைப் பார்த்தவாரு படகில் நிற்கிறாள். அவள் உடம்பில் துணியில்லை. அல்குலில் மயிரில்லை. பூப்படையாதவள். அவள் என்னுள் நுழைந்து எனக்குள் என்னைப் பார்க்கிறாள், என்னை என்னையே பார்க்கச் சொல்லி அழுத்துகிறாள். என் துணிகள் என் மேனியிலிருந்து களையப்படுவது போல உணர்கிறேன். அதி தூய்மையின் வெளி வந்துவிட்டது. இந்த உம்பரில் பால் நிறம் மறைந்து ஒளி மட்டும் மிஞ்சியிருக்கிறது. என் உடல் முழுவதும் ரப்பர் பாலால் நிறைக்கப்பட்டது; நகம், சருமம், முடி, வேர்வை, இரத்தம், நாசி, கர்ப்பப்பை, குடல், நரம்பு, எலும்பு அனைத்தும் ஒட்டுப்பாலாகியது. என்னை ஒரு ரப்பர் பொம்மையாக்கினாள். எந்த வானிலும் அவளது முகம் தெரியவேயில்லை. ஒளிவானில் அவளது தேகம் மறைந்து ஒரு நமட்டுச் சிரிப்பு நகைப்பது தெரிகிறது. நகையினில் தெரிந்தது அவள் சிறுமியில்லை என்று. நான்கு தலைமுறையின் தாயவள்.

எழுந்த போதுதான் உள்ளங்காலும் உள்ளங்கைகளும் தோள்பட்டையும் மார்பும் வேர்த்திருப்பதை உணர்ந்தேன். என்னை நானே ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். சூடாக இருந்தது. “பாலில்லை, இரத்தம்தான்”. ஐந்தரைக்கு இன்னும் ஒன்றே கால் மணி நேரம். சற்று நேரத்திற்குள் கண்ட கனவை மறந்து மந்த நிலையில் இருந்தேன். கனவை திரும்ப திரும்ப நினைத்துப் பார்க்க முயன்ற போது அழுகை வந்தது. அழவில்லை. விசும்பலுடன் நிறுத்திவிடு என மூளை கட்டளையிட்டது. அந்த சிறுமியை கொலை செய்ய வேண்டும் போல இருந்தது. அப்படியே மீண்டும் ஜன்னல் துணியை விலக்கி சில்லென்ற காற்றுடன் அமர்ந்திருந்தேன். அதன்பின் கீழ்மாடியில் அம்மாவின் தாலிகாசு கலகலப்பது கேட்டது. ஹாலின் விளக்கு சுவிட்சை தட்டுகிறார். நாளை மீண்டும் அமராவதி பாட்டிக்கு படையலிட்ட அந்த இடுகாட்டிற்கு மீண்டும் ஒருமுறை சென்றாள், அந்தச் சிறுமியைப் பார்த்துவிடலாம் எனத் தோன்றியது. 


(தொடரும்) krishnanamaravathy21@gmail.com