கவிஞர் மகுடேசுவரன் | சந்திப்பு : ஷாநவாஸ்
உரையாடல் தொகுப்பு : மணலி அப்துல் காதர்
கவிஞர் மகுடேசுவரன் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த புகழ் பெற்ற கவிஞர். 18 கவிதைத் தொகுதிகள், 7 திரைப்பட ஆய்வு நூல்கள், 13 கட்டுரை தொகுப்புகள், 15 மொழியியல் நூல்கள், 4 பயண இலக்கிய தொகுப்புகள் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர். இவரது கவிதை நூல்களில் “பூக்கள் பற்றிய தகவல்கள்”, “யாரோ ஒருத்தியின் நடனம்”, “இன்னும் தொலையாத தனிமை” போன்ற நூல்கள் தமிழ்க் கவிதை உலகில் கவனம் பெற்றவை. அண்மையில் சிங்கப்பூருக்கு வருகை புரிந்த இவரோடு ஒரு சிறு நேர்காணல்.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், புதிய தலைமுறை எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும் உங்களுடைய மனதுக்கு சிங்கப்பூரில் இலக்கியப் போதாமை இருக்கிறதா? நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
மேலோட்டமாக சொல்லக்கூடாது. இது பரபரப்பாக இயங்குகிற ஒரு நாடு. இங்கே தமிழ் மக்களும் அப்படித்தான் இயங்குவார்கள். இவர்கள் தங்களுடைய கண்ணீரையும், மகிழ்ச்சியையும் கை விட்டுவிட்டுத்தான் இயங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. அது இருக்கும் சூழலில் அவர்களுக்குள் இலக்கிய உணர்ச்சி, அந்த கலையுணர்ச்சி எல்லாம் இருக்கும். அது இல்லாமலும் போகாது. இன்னும் மேம்பட்டும் கூட இருக்கலாம். நுண்மைப்பட்டும்கூட இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிய காலம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நாளைக்கு எழுதவும் வாய்ப்பு இருக்கும். இன்றைய சூழலில் இருந்து விடுபட்டுக்கூடப் போயிருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களுக்கு இடையில் அவங்க ஒரு மௌனமாகக்கூட இருக்கலாம். என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
சிங்கப்பூரில் இந்த ஒரு மக்கள் திரளுக்கு இடையில் நூலகங்கள் இல்லாமல் இல்லை. சிங்கப்பூர் எழுத்தாளர்களுடைய நூல்களை பல பகுதிகளிலும் பார்த்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் பார்க்கிறேன். நிறைய நூல்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் இங்க பெண் எழுத்தாளர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தைவிட விட இங்கே நிறைய பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். எல்லாத்துறையிலும் பெண்களுடைய பங்களிப்பு அருமையாக உள்ளது. பெண்களுக்கு இலக்கியம் இன்னும் நெருக்கமாக இருக்கிறது. ஆண்கள் எழுதுவதை விட பெண்கள் எழுதுவது இன்னும் உணர்வு வெளிப்பட்ட மொழியாக உள்ளது. இந்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இது போதாமை என்றெல்லாம் சொல்ல முடியாது. உரிய நேர்கோட்டில்தான் உள்ளது. தமிழ் சார்ந்து நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் கவிதைக்கும் பாட்டுக்கும் கதைக்கும் எழுத்துக்கும் அப்பால் நீங்கள் இருக்கமாட்டீர்கள். அதற்கு அருகில்தான் இருப்பீர்கள். அல்லது அதில் ஈடுபடக்கூடிய இடத்துக்கு வந்துவிடுவீர்கள். அது இந்த மொழியின் இயல்பும் கூட.
சில கவிஞர்களை இங்கே நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்? அவர்களின் கவிதைகளின் தரம் எப்படி இருக்கிறது?
தொடக்கநிலைக் கவிஞர்களுக்கு எப்போதுமே இருக்கக்கூடிய இடர்பாடு இவர்களுக்கும் இருக்கும். அது தமிழ்நாட்டிலும் இருக்கிறது. இங்கேயும் அப்படி இருக்கக்கூடும். ஆனா தகுதிகள் சார்ந்து இவர்களுக்கு இருக்கிற ஆர்வமும் அக்கறையும் தாழ்த்தி மதிப்பிடக்கூடியது அல்ல. இவர்களுடைய நல்ல நல்ல கவிதைகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் வரும். நிறைய கவிஞர்கள் எல்லாம் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறுகின்றன. எளிதில் மக்களை திரட்டுகிறார்கள். இலக்கியம் சார்ந்த குழுக்கள் நிறைய உள்ளன. கைபேசி வழியாக என்னென்ன குழுக்கள் உருவாகி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. எனக்கு தெரிந்து நிறைய அப்படி செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே கவிதைகளும் மேம்பட்ட தளத்திற்கு வந்துவிடமுடியும் என்று நான் கருதுகிறேன்.
உங்கள் பெயரில் பாசறையெல்லாம் வைத்திருக்கிறார்கள். அடுத்த திட்டம் என்ன?
இணையத்தின் வழியாக பலருடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுக்கு தமிழ் மொழியின் அடிப்படைகளை நான் கற்பித்து வருகிறேன். ஒரு பள்ளி மாணவனாக இருந்துதான் தமிழ் கற்று வந்திருக்கிறோம். நாற்பதாண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு மொழி சார்ந்து, உங்கள் உணர்வு சார்ந்து, புரிதல் முதற்கொண்டு அனைத்துமே ஒரு மேம்பட்ட தளத்தில் இருக்கும். பள்ளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கற்றுக்கொண்டு வந்துவிட்டோம். ஆனால் இப்போது படித்ததெல்லாம் மறந்து போய் ‘பகுபத உறுப்பிலக்கணம் எல்லாம் படித்தோமே… அது என்ன?’ என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. இப்போது மட்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தால், யாராவது சொல்லிக் கொடுத்தால் கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலரும் இருக்கக்கூடும்.
இடையூறு என்னவென்றால் கற்றுக் கொடுக்கும் எண்ணம் இல்லை அல்லது யாரும் முன் வரவில்லை. அல்லது ஒருங்கிணைத்து இதை செயல்படுத்த முடியவில்லை. கற்றுக்கொடுக்கும் இடத்துல எண்ணற்ற தமிழாசிரியர்கள் உள்ளார்கள். இல்லை என்று சொல்ல முடியாது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த பணியை செய்ய முன்வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கற்றுக்கொடுக்க ஒருவர் முன்வரும்போது நாம் கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருந்தவர்கள்தான் என்னை நாடி வருகிறார்கள். அவர்கள் இவ்வளவு ஆர்வத்தோடு இருப்பதை பார்த்து இதனை நாமே செய்துவிடவேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன். ஒரு ஐம்பது மணி நேரம் பாடமாக அமைத்து தமிழை நுனி வேரிலிருந்து முடி வரைக்கும் யாப்பிலக்கணம் தவிர்த்து அனைத்தையும் கற்றுக் கொடுத்துள்ளேன். தமிழை நன்கு புதிதாக கற்றுக் கொண்டவர்கள் மாணவ நிலையில் தொடர்ந்து இருக்க முடியாது. கற்றுக்கொண்ட பிறகு செயல் நிலையில் மாற்றத்தை விரும்புகிறார்கள். இது சார்ந்து மேலும் எதாவது செய்ய விரும்புகிறார்கள்.
ஒன்று தமிழை இந்தளவுக்கு கற்று கொடுக்கிறேன். இரண்டு, இந்த அளவிற்கு கற்றுக் கொண்ட நிலையில் இயங்குபவர்களை நான் மேம்படுத்த விரும்புகிறேன். மேலும் தமிழ் மொழி சார்ந்து, இலக்கியம் சார்ந்து வெவ்வேறு மேம்பட்ட செயல்கள் செய்ய முடியுமா என நாங்கள் பார்க்கிறோம். அப்படிப் பலர் முன்வந்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் தோற்றுவித்ததுதான் சிங்கப்பூர் மாணவர் பாசறை. சிங்கப்பூரில் உள்ள மக்கள் என்னிடம் கற்றுக்கொண்டதன் வழியாக உருவாகிய ஓர் அமைப்பு. அமைப்பு தொடக்க நிலையில் உள்ளது எனலாம். ஆனால் எங்களுக்குள்ளேயே நிறைய செய்திருக்கிறோம். நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறோம். எதிர்காலத்துல தமிழ்க்கல்வி சார்ந்து ஒரு பெரிய அமைப்பாக மாறவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். இலக்கணம் சார்ந்து யாருக்கும் இலக்கண அறிதலின்மை இருக்கக் கூடாது. இலக்கணத்தில் ஐநூறு கலைச் சொற்கள் இருக்கிறதென்றால் தமிழ் அறிந்த அனைவருக்கும் அந்த ஐநூறும் தெரிய வேண்டுமென்று நினைக்கிறேன். தமிழ் தெரியாதவர் என்று இங்கே யாரும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். வினைத்தொகை என்றால் என்ன, பண்புத்தொகை என்றால் என்ன என்று எல்லாருமே அறிந்திருக்க வேண்டும். உண்மையிலேயே பண்புத்தொகை என்பது தெரியும். அந்த விதிக்குள்தான் நாம் அனைவரும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம்.
மக்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட வேண்டியதுதான் என்கிற ஒரு முடிவுக்கு வந்து கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அமெரிக்க மாணவர்களுக்கும் கற்று கொடுத்திருக்கிறேன். அங்கே பள்ளி நடத்துபவர்களும் தமிழ் கற்று கொடுக்கிற ஆசிரியர்களும் வந்து கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். கற்றுக்கொண்டு இதே முறைப்படி சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அவர்களும் அதன்படியே சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் சிங்கப்பூருக்கு 12 தடவை வந்திருக்கிறீர்கள். சிங்கப்பூரில் அட… என்று ஆச்சரியப்பட வைக்கிற மாதிரியான அம்சமாக எதைப் பார்க்கிறீர்கள்?
இங்குள்ள போக்குவரத்து வசதி எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. இந்தியாவில் நீங்கள் ஏதாவது ஒரு வண்டியை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தனிப்பட்ட முறையில எங்கேயாவது போவதற்கும் வருவதற்கும் திட்டமிட முடியும். ஆனால் இங்கே அப்படி இல்லை. எங்கு வேண்டுமானாலும் உடனே போய்விடக்கூடிய இடத்துல இந்த நகரம் கட்டமைக்கப்பட்டு இருக்கு. அந்த அளவுக்கு போக்குவரத்து வசதி வாய்ப்பு கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு தனிச் சிறப்பு. ஆனால் இந்தப் போக்கு அமெரிக்காவில் இல்லை. அங்கு திடீரென்று வெளியே போவது குறித்து எண்ண முடியாது. உங்களுக்கு ஒரு வண்டி தேவை. வண்டியை ஓட்டிச் சென்று நீங்கள் போக வேண்டிய இடம் குறித்த தெளிவு இருந்தால் மட்டும்தான் போக முடியும். இந்தியாவிலும் அப்படிக் கிடையாது. பொதுப் போக்குவரத்து இருந்தாலும் இவ்வளவு மேம்பட்ட ஒன்றாக அது இல்லை. இந்த நாட்டினுடைய பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட மற்ற எல்லா நிலையிலான போக்குவரத்தும் மிக அருமையாக இருக்கிறது. போக்குவரத்தின் வழியாக கட்டமைக்கப்பட்ட ஒரு நகரம் போல தெரிகிறது.
இது என்னுடைய தனிப்பட்ட கேள்வி. உங்களுடைய ஆரம்ப கால கட்டத்தில் சித்திரைக்காரன் வீதி என்ற பெயரில் முதலில் ஒரு துண்டு கவிதை வந்த உடனே எழுத்தாளர் சுஜாதா அதுகுறித்து விதந்தோதுகிறார். நீங்களும் பரவலாக தெரியப்படுகிறீர்கள். அது போல இப்போது நீங்கள் நிறைய கவிதைகள் எழுதுகிறீர்கள். அதோடு உங்கள் விக்கிபீடியா போனால் அங்கேயும் உங்களது தமிழ் சொற்கள் மற்றும் அந்த அழகியல் மற்றும் தலைப்புகளும் சரி கவிதைகளும் சரி பிரமிப்பாக இருகக்கிறது. நீங்கள் அந்த அளவிற்கு உயர்ந்து விளங்குகிறீர்கள். இந்த அளவுக்கு நீங்கள் உயர்ந்த பிறகு நீங்கள் இப்படி யாரையாவது இப்படி அடையாளம் கண்டிருக்கிறீர்களா? அவர்களை இந்த சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறீர்களா?
எப்போதும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக நிறைய இளைஞர்களை நான் அடையாளப்படுத்தி இருக்கிறேன். பலரும் அவர்களுடைய நூல்கள் எல்லாம் வெளியிடுவதற்கு அணிந்துரை வாங்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையிலோ அல்லது அவர்களுடைய எழுத்துக்களைக் கட்டுரை எழுதி தெரிவிப்பது மட்டுமின்றி ‘இதை எப்படி செய்யலாம்; இந்த இடத்துல இந்த குறை உள்ளது. இதைச் சரி செய்யுங்கள்’ என்றும் ஆலோசனை வழங்கியும், மிகச்சிறந்த படைப்பாக இருந்தால் அடையாளம் காட்டிக்கொண்டும் வருகிறேன். பலருக்கு உள்ளிருந்து ஊக்க விசையாக நான் செயல்பட்டுக்கொண்டுதான் வருகிறேன்.


