TST100

சமஸ்

எதிர்காலத்தில் இதழியல்துறை கல்வித்துறையோடு கூடுதலாக இணைந்து செயலாற்ற வேண்டும்

சிங்கப்பூர் இதழியல் தடத்தின் சிறப்பம்சம் என்று நான் எதை கவனத்தில் கொள்கிறேன் என்றால் இங்கே உள்ள தமிழிதழியல் முற்போக்கான உள்ளடக்கங்களை ஆரம்பம் முதலே கொண்டிருக்கிறது என்று நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இங்குள்ள ஆய்வாளர்கள் குறிப்பிடக்கூடிய 1875இல் வெளியான முதல் இதழாக கருதப்படக்கூடியது “ சிங்கை வர்த்தமானி” ஆகும் .

1877இல் வெளியான சிங்கை நேசன் போன்ற பத்திரிக்கைகள் உள்பட பல பத்திரிக்கை முயற்சிகளையும் முன்னத்தி ஏராக முன்னெடுத்து செயல்பட்ட மகதும் சாஹிப், முகமது அப்துல்காதிர் புலவர் போன்றவர்களின் இயக்கம். இவைகளை பார்க்கும்போது அதில் இருக்குக்கூடிய ஒரு பொதுத்தன்மை ஆழ்ந்த தமிழ் உணர்வு, தமிழ் பண்பாட்டின் தனித்துவம், இவைகளை பாதுக்காக்கிற உணர்வு. முழுமையாக இந்த மண்ணோடு பொருந்திக்கொள்கிறது. இங்கு இருக்கக்கூடிய பிற இனங்களோடு கலந்து “காஸ்மோபாலிட்டன்“ என்ற பன்முகத்தன்மையை கொடுப்பதையும்  நாம் பார்க்க முடிகிறது.

இந்த பன்முகப்பார்வை சிங்கை நேசன் பத்திரிகையின் தலையங்கத்தில் மிகத்தெளிவாகவே பார்க்க முடிகிறது. பொது நன்மைதான் தன்னுடைய இலக்கு என்று பத்திரிகையின் தலையங்கம் சொல்கிறது. இந்த இலக்கின் தொடர்ச்சியாகத்தான் இன்று நூறாவது இதழைக் கடந்திருக்கும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழை நான் பார்க்கிறேன். இந்தப் பயணம் கூட 1877ஆம் ஆண்டின் இதழியல் மரபின் தொடர்ச்சி என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய “கமிட்மெண்ட்” இருக்கிறது அல்லவா? அது வெறுமனே இதழ் நடத்தணும்; வெறுமனே தமிழ் உணர்வை தமிழ் மக்களிடம் கொண்டு போகவேண்டும் என்பது  மட்டுமல்லாமல்… இந்த சமூகத்தின் மீதான பொறுப்புணர்வாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

இத்தகைய இதழியல் வெளியீடுகள் இந்தியாவைப் பற்றியோ தமிழ்நாட்டைப் பற்றியோ ஒரு இயக்கமாகப் பார்க்கவில்லை. மாறாக சிங்கப்பூரில் இருக்கக்கூடிய வரலாறு, பண்பாடு மற்றும் மிக முக்கியமான தளங்கள் மீது ஆழ்ந்த கவனம் வைத்திருக்கிறது. அந்த அம்சம்  மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நிறுவனரான எம்.ஏ.முஸ்தபா அவர்களிடமும் பொறுப்பாசிரியர் ஷாநவாஸ் உள்ளிட்ட ஆசிரியர் குழுவிடமும் சில சமயங்களில் நான் பேசும்போதெல்லாம் இதை உணர்ந்திருக்கிறேன். இது ஒரு மிகவும் முக்கியமான தருணம் என்றுதான் பார்க்கிறேன். அதாவது 2015லிருந்து 8 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து 100 இதழ்களை கடந்திருப்பது சிங்கப்பூரில் இருக்கக்கூடிய தமிழ் சமூகத்தின் பின்னணியில் இருக்கும் ஒரு மிக முக்கியமான பணி என்றுதான் நினைக்கிறேன். சாதாரணமாக தனி ஒரு முனைப்பாக நடத்துவது என்பதும் அதற்கு  அரசு ஆதரவு போன்ற காரணிகள் இல்லாமல் இருப்பது என்பதும் சாதாரணமான விஷயம் இல்லை. தமிழ் முரசு போன்ற பெரிய பத்திரிகைகள் தவிர்த்துப் பார்த்தோம் என்றால் நமக்கு அப்படியான சாத்தியப்பாடுகள் மிக மிக அசாதாரணமாக தெரியும்.

இது எப்படி நடக்கிறது? அதுவும் இதில் மிகவும் முக்கியமான விஷயம்… 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் இன்று உலகம் முழுக்க மிக முக்கியமான இதழ்கள் நிறுத்தப்பட்டு திரும்ப தொடங்கப்படவில்லை.  பலர் காணாமல் போய்விட்டார்கள்.

குறிப்பாக தமிழில் இருக்கிற அச்சு இதழ்களெல்லாம் தமது பணிகளை நிறுத்திவிட்டு இன்று டிஜிட்டல் மயமாக மாறிட்டார்கள். உதாரணமாக ‘கல்கி’ இதழைச் சொல்லலாம். கொரோனாவுக்குப் பலியான இதழ் கல்கி. அவர்கள் அச்சிதழை நிறுத்திட்டு இன்று முழுமையாக டிஜிட்டலாக மட்டுமே செயல்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ எல்லா காலகட்டத்தையும் தாண்டி நீடிக்கிறது. இந்த ஒரு விஷயம் இதழியல் துறைக்கே மிக முக்கியமான ஆதார ஊக்கமாக அடையாளப்படுத்துகிறது. இதுபோன்ற முனைப்புகள் இதழியல் துறைக்கே  முக்கியமான சவாலாக பார்க்கவேண்டியிருக்கிறது.

மாறி வரக்கூடிய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இதழியல் தன்னை முழுமையாக மாற்றிகொள்ள வேண்டிஇருக்கிறது. ஒரு காலகட்டம்  வரைக்கும் இதழியல் பொழுதுபோக்கு துறையின் ஒரு அங்கமாக செயல்பட்டிருக்கிறது. 2015-16 காலகட்டத்திற்குப் பிறகு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மாற்றம் அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் பொழுதுபோக்கிற்கான ஊடக இயக்கங்கள் முழுமையாக ஸ்மார்ட் ஃபோனாகவும், டிஜிட்டல் மீடியாக்களாகவும் ஆன பிறகு இன்றைக்கு பத்திரிகைகள் அந்த இடத்திற்கு இனி போய் நிற்க முடியாது என நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் பத்திரிகைகள் கூடுதலான பொறுப்புகளோடு கல்வித்துறையோடும் கூடுதலாக இணைந்து செயலாற்ற முடியுமா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

கல்வித்துறை என்பது நேரடியான கல்வி நிறுவனங்களைச் சொல்லலாம். அதற்குப் பதில் நான் எதைச் சொல்கிறேன் என்று சொன்னால் கற்பிக்கக்கூடிய பணி தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாமல் இனிமேல் இதழ்கள் என்பது  ஒரு ஆசிரியருக்கான பணியை மட்டுமே செய்ய முடியும். அதற்கேற்ற அளவில் அதனுடைய உள்ளடக்கம், அதனுடைய இலக்கு எல்லாமே மாறவேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் ஒரு பெரிய சவால். இந்த சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும். சிராங்கன் டைம்ஸ் அத்தகைய ஒரு தன்மையைப் பெறுவதற்கான காது கொடுக்கக்கூடிய ஒரு ஆசிரியர் குழுவை பெற்றிருக்கிறது.

நான் சிங்கப்பூர் வந்த பிறகு ஆசிரியர் குழுவினரோடு நடந்த கலந்துரையாடலில் பேசும்போது மிக திறந்த மனதுடன் அவர்கள் தமிழ் சமூகம் சார்ந்த ஆழ்ந்த கவலைகள் இருப்பதை கண்ட பிறகு ஒரு அதீத நம்பிக்கை உண்டாகிறது. மிகுந்த அர்ப்பணிப்போடு அவர்கள் தங்களுடைய காலகட்டத்தில் தமிழுக்கு எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொண்டு, அவை எப்படி வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன; அடுத்தடுத்த தலைமுறையில் அது எப்படி மாறுகிறது என்று நாம் பார்க்கிறோம். குறிப்பாக  பிள்ளைகளை எவ்வளவோ தமிழ் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள். ஆனால் பேரக்குழந்தைகள் காலகட்டத்தில் அது எடுபடாமல் போவதும் அதனுடைய தொடர்ச்சியாக பண்பாட்டில் பெரிய மாற்றங்கள் எல்லாம் உருவாகுவதும்கூட அவர்களின் உரையாடலில் ஏக்கமாக முன்னிற்கிறது. இதற்கேற்ப நாம் ஒரு இதழை நடத்த முடியும். அந்த இதழை எவ்வாறு சிறப்பாக செய்ய முடியும் என்று மிகுந்த கவலையுடனும் பேசிக்கொண்டிருந்தோம். அதாவது தன்னைப் பரிசீலனை செய்துகொள்ளக்கூடிய எந்தவொரு பணியும் எந்தவொரு அமைப்பும் அது அடுத்தடுத்த காலகட்டத்துக்கு நிச்சயமாக முகம் கொடுக்கும். அந்த மாதிரி சிராங்கூன் டைம்ஸ் முகங்கொடுக்கும் என்று பார்க்கிறேன். இதுபோன்ற ஒரு தமிழ் பணிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஏனென்றால் இன்று இதழியல் துறையெல்லாம் பொருளாதாரம் இல்லாமல் நல்ல இதழிலியலை செய்துவிட முடியாது. ஒரு நல்ல இதழிலியலுக்கு மிக அடிப்படையான அம்சம் எதுவென்றால் நிதி சுதந்திரம். அதற்கு அந்த இதழ் காலத்திற்கும் தொடர வேண்டும் என்று நிதிநல்கையை உருவாக்கி அதன் வழியாக செய்து கொண்டிருக்கக்கூடிய அதன் நிறுவனர் முஸ்தபா அவர்களின் தமிழ்ப் பணி என்பது முக்கியமான பணி. இதன் ஆசிரியர் குழுவினர் பல்வேறு தொழில்கள், பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட இதற்கென நேரத்தை ஒதுக்கி இந்த இதழை எவ்வளவு பேர் படிப்பார்கள், இதற்கு என்ன பலன் என்பதெல்லாம் யோசிக்காமல் இங்கேயிருக்கிற வரலாற்றை பதிவு செய்ய வேண்டும், அடுத்தடுத்த தலைமுறைக்கு அது போகவேண்டும், நம்முடைய தமிழ்ச் சமூகமும் ஏனைய சமூகமும் இதனோடு தொடர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்து செய்யக்கூடிய இந்த பணியானது ரொம்ப முக்கியமானது. அது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.