வணக்கம்

2025ஆம் ஆண்டின் தொடக்கம் சிங்கப்பூரர்களுக்கு பல  நிதியுதவிகளுடன் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர்  மட்டுமல்ல. உலகமெங்கிலும் விலைவாசி ஏற்றம், நிலையற்ற பொருளாதாரம்  என்று பல நாடுகள் இவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. நம் எல்லோருக்கும் பெரிய அண்ணனான அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதிரடியான பல கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப்பின் கொள்கை மாற்றங்கள் உலகளாவிய பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவது ஒரு புறம் இருக்கட்டும். சிங்கப்பூரில் விலைவாசி ஏற்றம், அதிகரிக்கும் செலவினங்கள், சிங்கப்பூரர்கள் அனைவரும் வீடு வாங்குவதற்கு  உதவி செய்தல், ஒன்றிணைந்த சமூகமாக முன்னேற பல திட்டங்களை வடிவமைத்தல் என பல அடுக்குகளைக் கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு  திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ‘மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு அளித்தல்’ என்ற முழக்கத்தை ஒட்டி சிங்கப்பூரர்களுக்கு பல நிதியாதரவுகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக மேம்பாட்டு மன்ற  பற்றுச்சீட்டுகள், பருவநிலைப் பற்றுச்சீட்டு போன்றவை அனைத்து சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மூத்தோருக்கு, இளையோருக்கு, குழந்தைகளுக்கு, உடற்குறையுள்ளோருக்கு, நீண்ட கால நோயாளிகளுக்கு என்று அனைத்து தரப்பினருக்கும் உதவி வழங்கும் வகையில் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உணவுக்காக மீன் கொடுத்து உதவுவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறப்பு என்பதற்கேற்ப ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர்’ திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 4,000 வெள்ளி பயிற்சி உதவிநிதியும் பயிற்சிப் படியும் வழங்கப்படுகிறது.  எதிர்காலச் சிங்கப்பூரில் 50 சதவீதத்திற்கு மேல் 60 வயதைக் கடந்தவராக இருப்பர். ஆகவே  60 வயதை முதுமை எனக் கருதாது துடிப்புடன் இயங்கும் அனுபவம் மிக்கவராக விளங்க வேண்டும்.

சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெறலாம். அதனை ஒட்டி குழுத் தொகுதிகள், தனித்தொகுதிகள் குறித்த செய்திகள் வெளியாகி விட்டன. விரைவில்  தேர்தலில் வாக்களிக்கத் தயாராகுவோம்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது. 

சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை editor@serangoontimes.com முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.

-ஆசிரியர் குழு, தி சிராங்கூன் டைம்ஸ்