
தமிழர்களின் நனவிலி மனத்தில் பதிந்துள்ள முதன்மையான குரல்களில் ஒன்று, நாகூர் ஹனிபாவினுடையது. ஓராயிரம் குரல்களுக்கு மத்தியில் இன்றும்கூட அந்த ஒரு குரல் மட்டும் தன்னை யாரென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறது. சிம்மக் குரலோன், இசைமுரசு என்றெல்லாம் அவரை வருணித்தாலும் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத அசாத்திய கம்பீரமும், சாரீரமும் அவருக்கே உரியவை. `காற்றில் கலந்த பேரோசை’ என்று பொதுவுடைமைத் தலைவர் ஜீவாவின் குரலை எழுத்தாளர் சுந்தரராமசாமி எழுதுவார். எனக்கோ காற்றிலும் கலந்துவிடாத, கரைந்துவிடாத பேரிசைக் குரலே இ.எம்.ஹனிபாவின் குரல் எனத் தோன்றுகிறது.
இஸ்லாமியப் பண்பாட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அசலான தமிழ்க்குரல் அவருடையது. அவர்போல எத்தனையோபேர் பாட முயன்றிருக்கிறார்கள். என்றாலும், அவர் குரலையும் பாடும்முறையையும் ஒருவராலும் பிரதியெடுத்துப் பின் தொடர முடிந்ததில்லை. சுருதி, இலயம் என்பவற்றைத் தாண்டிய சுயத்தை அவர் பாடல்களில் கேட்கலாம். இயற்கையே வழங்கிய கொடை என்றுதான் சொல்ல வேண்டும். பாடல்களில் எங்கேனும் ஓர் இடத்திலேனும் அவர் தன்னுடைய அதி அற்புத கமகக் கையெழுத்தை இட்டுவிடுவதால் அவரை விஞ்சுவதோ மிஞ்சுவதோ எளிதில்லை. ஒரு பாடலுக்கு வரிகள் முதன்மையா, மெட்டு முதன்மையா என விவாதிப்பவர்கள் இறுதியில் குரலே முதன்மையென்னும் முடிவிற்கு வந்துவிடும் சூழலை அவர் ஏற்படுத்திவிடுகிறார். தமிழிசையின் தாத்பரியங்களைப் புரிந்த ஒருவரே அவர் என்பது என் எண்ணம். வார்த்தைகளை அட்சரம் பிசகாமல் உச்சரிப்பதில் மொழிமீது அவருக்குள்ள பற்றினைத் தெரிந்துகொள்ளலாம். பாடலில் வரக்கூடிய உருதுச் சொற்களையும், அரபுச் சொற்களையும்கூட அவரளவிற்கு அழுத்தமாகவும் திருத்தமாகவும் பாடியவர்கள் எவருமில்லை.
அவரால்தான் பல அரபுச் சொற்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு என்போன்றோருக்குக் கிடைத்தது. அதுமட்டுமன்று, அவருடைய தாக்கத்தில் எத்தனையோ அரபுச் சொற்கள், மக்களின் புழங்குச் சொற்களுக்குள் புகுந்துள்ளன. `நான் கச்சேரிக்காரனில்லை, கட்சிக்காரன்’ என்று திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் முழங்கிய நாகூர் ஹனிபா, பெரியாருடனும் அண்ணாவுடனும் நெருங்கிப் பழகியிருக்கிறார். கலைஞர் மு. கருணாநிதியின் அத்தியந்த நண்பர்களில் அவரும் ஒருவர். நாகூரில் பிறந்திருந்தாலும் தம்முடைய இளவயதின் பெரும்பகுதியைத் திருவாரூரில்தான் கழித்திருக்கிறார். எனவே, கலைஞருடனான ஹனிபாவின் உறவென்பது நீண்ட நெடிய நினைவுகளைக் கொண்டது. அடுக்குத் தமிழின் அழகுகளைக் கண்டடைந்த திராவிட இயக்கப் பேச்சாளர்களின் மரபில்தான் அவரும் வருகிறார்.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் பாடத் தொடங்கிய அவர், வார்த்தைகளின் இசைமையில் கொண்டிருந்த மயக்கத்தையே ஒருகட்டத்தில் பாடலாக மாற்றியிருக்கிறார். மிகக் குறைந்த இசைக் கருவிகளை வைத்துக்கொண்டே ஓர் உயரிய இசையனுபவத்தை அவரால் வழங்க முடிந்திருக்கிறது. திரையிலும் அவர் பாடியிருக்கிறார். என்றாலும், அவருடைய பெருமையும் புகழும் திரைத்துறையால் வந்ததில்லை. `இறைவனிடம் கையேந்துங்கள் / அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ என்று பாடிப் பரவசப்படுத்திய அவரே நாத்திக மேடைகளிலும் காட்சியளித்திருக்கிறார். ஒரே நேரத்தில் ஆன்மிகத்தையும் ஆவேசத்தையும் கலந்து பாடிய விடுதலைப் பறவை.
பொதுக்கூட்ட மேடையில், `ஆறிலும் சாவு / நூறிலும் சாவு / அஞ்சாமல் ஓடிவா / அண்ணாவின் வழியில் / கண்ணான கலைஞர் / அழைக்கின்றார் ஓடிவா’ என்று அவர் பாடத் தொடங்கினால் தொண்டர்களின் உள்ளத்தில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாகனத்தில் இருந்து இறங்குகிறவர்கள், வரிசை வரிசையாக அரங்கத்தை நோக்கி நடப்பார்கள். உந்தியெழும் உணர்ச்சிப் பெருக்கில், `தன்மான உணர்வும் / தாய்மொழிப் பற்றும் / தாழ்வுற்று அழிவதோ / உன் கண்போன்ற தாயகம் / காட்டிப் கொடுப்போரின் / காலடியில் கிடப்பதோ’ என்று அவர் உச்ச ஸ்தாயிக்குப் போகையில் எல்லோரின் கண்களிலும் தீ பரவும். எதற்காகக் கூடுகிறோம், எதை நோக்கிப் போராடுகிறோம் என்பதற்கான விளக்கவுரையாகவே அவர் பாடல்கள் அமைந்திருக்கும். பொதுக்கூட்டமோ மாநாடோ எதுவென்றாலும் ஹனிபாவின் குரலே முதன்மை என்னும் நிலையை அவர் நிறுவியிருக்கிறார்.
மேடையைக் கொள்கைக்கேற்பவும் கோரிக்கைக்கேற்பவும் தயாரிக்கும் தளகர்த்தராக அவர் இருந்திருக்கிறார். வேறு எந்தக் கட்சியும் செய்ய முடியாத அல்லது செய்யத் துணியாத முன்மாதிரி அவர். இயல்பில் அவருக்கிருந்த இசையார்வத்தைக் கோட்பாட்டு ரீதியாக விரிவுபடுத்திய விவேகம் அவருடையது. திராவிட முன்னேற்றக் கழகம் பலமுறை பிளவுகளைக் கண்டிருக்கிறது. ஈ.வெ.கி.சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ போன்றோர் கட்சியிலிருந்து வெளியேறிய போதெல்லாம் அச்சரிவைச் சரிகட்டி, தூக்கி நிமிர்த்த அவருடைய `வளர்த்த கடா / மார்பில் பாய்ந்ததடா’ பாடல் உதவியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராய் இருந்த வைகோ, அக்கட்சியிலிருந்து பிரிந்தபோது நான் பள்ளிச் சிறுவன். அரசியல் குறித்தெல்லாம் பெரிதாகத் தெரியாது. ஆனாலும், அந்தச் சமயத்தில் தஞ்சாவூரில் இருந்த எனக்கு, வைகோவிற்குக் கூடிய கூட்டமும், குடவாசலை நோக்கிய பேரணியும் பிரமிப்பைக் கொடுத்தன.
வைகோவே அடுத்த முதல்வர் என்றெல்லாம் என் அப்பாவும், அவரின் நண்பர்களும் பேசிக் கொண்டார்கள். திடுமெனக் கிளம்பிய புயலால் திராவிட முன்னேற்றக் கழகமே இனி அவ்வளவுதான் என்றனர். பொறி பறக்கும் அறிக்கைகள். பொழுதெல்லாம் கலைஞர் மீதான கண்டனங்கள் என ஒருவாரம் கழிந்தது. அதன்பிறகு அதே தஞ்சாவூரில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. ஹனிபா அந்த மேடைக்கு வந்து `வளர்த்த கடா’ பாடலைப் பாடினார். அவ்வளவுதான். எல்லா எதிர்பார்ப்புகளும் புஸ்வாணமாயின. அணிதிரண்ட கூட்டமெல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை. அவர் கூட்டத்தில் பாடப் பாடக் காவிரிக் கரையில் ஆரவாரம் பெருக்கெடுத்து ஓடியது. மொத்தக் கூட்டமும் மெய்மறந்து நின்றதுடன், `நன்றி மறந்ததடா / நாணயத்தை இழந்ததடா / என்றுமே பொதுவாழ்வில் / உருப்படாத ஜென்மமடா’ என்ற வரிகளுக்குக் கரவொலியும் விசிலும் பறந்தன. எனக்கு எதுவுமே விளங்கவில்லை. ஒரு பாடல், அதன் ஊடே வரக்கூடிய ஒன்றிரண்டு வார்த்தைகள், எத்தகைய கிளர்ச்சியை அவர்களுக்குள் ஏற்படுத்துகின்றன என வியந்து போனேன்.
கூட்டத்தின் முடிவில் என் அப்பாவும் அவரின் நண்பர்களும் வேறுவிதமாகப் பேசத் தொடங்கியதை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அப்பாடல் வைகோவிற்காக உருவாக்கப்பட்டதில்லை. ஈ.வெ.கி.சம்பத்தோ எம்.ஜி.ஆரோ கட்சியைப் பிளந்தபோது உருவாக்கியதென்னும் உண்மை அப்போதெனக்குத் தெரியாது. எத்தனை பிளவு வந்தாலும் ஒரு கட்சியை அல்லது கூட்டத்தைக் கட்டியெழுப்ப அந்த ஒருபாடல் போதுமானது. ஒருவேளை ஹனிபா போன்றோர் வைகோவிற்கும் கிடைத்திருந்தால் விளைவு என்னவாக ஆகியிருக்கும் என விவரிக்க முடியவில்லை. பொதுவாக ஒரு கட்சியைக் காக்கும் அரணாக அக்கட்சியைச் சேர்ந்த கலைஞர்கள் எவ்விதம் செயல்படவேண்டும் என்பதற்கு ஹனிபா ஆகச்சிறந்த உதாரணம். தலைமைக் கழகம் எழுதிக்கொடுத்தோ தாங்கிப் பிடியுங்கள் எனக் கேட்டுக் கொண்டோ அப்பாடல் பிறந்திருக்க வாய்ப்பில்லை. தன்னெழுச்சியாக ஒரு பாடலை உருவாக்கி, அதை மக்கள் மத்தியில் பிரச்சாரப் பாடலாக்கும் வலிமை அவருக்கு இருந்திருக்கிறது. கன சாரீரத்தில் கருங்கல் கோட்டைகளையும் தவிடு பொடியாக்கும் வித்தையை அவர் கற்றிருக்கிறார். முறையான சங்கீதப் பயிற்சியெல்லாம் தனக்கில்லை என ஒரு நேர்காணலில் அவரே தெரிவித்திருக்கிறார்.
உண்மையில், தனிப்பாடல்கள் வழியே மேடைக் கச்சேரிகளுக்கான இடத்தை அவரே உண்டாக்கியிருக்கிறார். கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்த மேடைகளில் போர்க்களப் பாடல்களைப் பாடமுடியும் என நிரூபித்தவர்களில் அவரும் ஒருவர். அவருடைய மேடையும் அமைப்புமுறையும் வித்தியாசமானவை. தோளில் சால்வையை அணிந்துகொண்டு முஷ்டியையும் உள்ளங்கையையும் அவர் மடக்கி மடக்கிப் பாடும் உடல்மொழி ஈர்ப்புக்குரியது. எந்த மேடை என்றாலும் தலையில் குல்லா அணிந்திருப்பார். அதை அவ்வப்போது சரிசெய்தபடியே அவர் மேற்கொள்ளும் ஆலாபனை அரங்கத்தை உயிர்ப்புடையதாக ஆக்கிவிடும். கட்சி மேடைகளில் அவர் எத்தகைய கம்பீரத்துடன் வெளிப்படுகிறாரோ அதே கம்பீரத்துடனே இன்னபிற மேடைகளிலும் அவர் தென்பட்டிருக்கிறார்.
இஸ்லாமியர் வீட்டுத் திருமணங்களில் அவர் பாடக்கூடிய பாடல்களின் தன்மை வேறு தரத்திலானவை. அங்கே அவர் மார்க்கத்தை உத்தேசித்தே பாடுவார். `அண்ணல் நபி பொன்முகத்தை / கண்கள் தேடுதே’ என்றொரு பாடல். அப்பாடலில், `கஸ்தூரி மணம் கமழும் / தங்கள் மேனியை / இந்தக் கண்களாலே / பருகுகின்ற ஆவல் ததும்புதே’ என்ற வரிகளும், `புஷ்பங்களின் மகரந்தமாம் / மதினப் புழுதியில் / நான் புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்குதே’ என்னும் வரிகளும் என்னை எங்கேயோ இழுத்துச் சென்றுவிடும். திரைப்பாடலுக்கு இணையாக ஒரு தனிப்பாடலைக் கேட்கத் தூண்டும் முறையில்தான் அவர் ஒவ்வொரு பாடலையும் அமைத்திருக்கிறார்.
தொடக்கத்தில் இந்தித் திரையிசைப் பாடல்களின் சந்தத்தை உள்வாங்கிப் பாடல்களை அமைத்துவந்த அவர், பின்னாட்களில் தாமே மெட்டமைத்துப் பாடும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இந்த இடத்தில் அவர் பாடுவதற்கு ஏதுவான பாடல்களைப் புனைந்தளித்த புலவர் ஆபிதீன், பேராசிரியர் அப்துல் கபூர், கிளியனூர் அப்துல் சலாம், நாகூர் சலீம் உள்ளிட்ட பலரையும் நினைக்க வேண்டும். மக்கள் உணர்வுகளையும், மார்க்கக் கருத்துகளையும் பிசிறில்லாமல் எழுதிய அப்பாடலாசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எண்பதுகளில் `இசை ஹராம்’ என்ற கோஷத்துடன் முன்னெழுந்த இயக்கத்தினர் ஹனிபாவை விமர்சித்த சொல்லாடல்கள் கசப்பானவை. கலையைப் புரிந்துகொள்ளாத மத அடிப்படைவாதிகள், அப்போது முன் வைத்த முழக்கங்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. என்றாலும், இன்னும் அவர் அதிகமான பாடல்களைப் பாடியளிக்க இயலாத சூழல் நிலவியதை மறுப்பதற்கில்லை.
மணமக்களை வாழ்த்தி அவர் பாடிய பாடல்கள் ஏகத்துவத்திற்கே எதிரானவை என்றுகூட அவதூறுகள் பரப்பப் பட்டன. இத்தனைக்கும் மார்க்கத்தின் கொள்கைகளையும் தன்மைகளையும் எங்கேயும் அவர் விலகியோ விலக்கியோ பாடியதில்லை. இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள அத்தனை கடமைகளையும் பட்டியலிட்டே அவர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். `தீன் குல கண்ண / எங்கள் திருமறைப் பொண்ணு’ என்ற ஒரு பாடல் போதும், அவர் எத்தகைய கருத்துகளுடன் இயங்கினார் என்பதை விவரிக்க. அப்பாடலில் `நகை சுமக்கும் பதுமையாக / மாறவும் மாட்டாள் / பிறர் நகைக்கும்படி வீண் பெருமை / கூறவும் மாட்டாள் / வகை வகையாய் உணவு செய்து / இன்பமூட்டுவாள் / கணவன் வரவறிந்து செலவு செய்து / மீதம் ஈட்டுவாள்’ என்று வரக்கூடிய வரிகள் குறிப்பிடத் தக்கவை. மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு முரணாக அவர் ஒரு பாடலையும் பாடியதில்லை. மாறாக, குரானிலும் ஹதீஸிலும் உள்ள அரிய செய்திகளையே பாடலாக ஆக்கி அளித்திருக்கிறார். இயைபான சொற்களில் எப்படி ஒரு விஷயத்தை அடுக்கிச் சொல்ல வேண்டும் என்பதை அவர் பாடல்களின் வழியே படித்துக்கொள்ளலாம்.
ஒருமுறை தமிழறிஞரும், சொற்பொழிவாளருமான திருவாரூர் சண்முகவடிவேல், ஹனிபாவைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட தகவல்கள் சுவாரஸ்யமானவை. இளவயதில் உடனிருந்த தன்னைக் கண்ணியம் குறையாமல் அவர் நடத்திய விதத்தையும், கச்சேரிகளில் நடந்த கலகலப்பான சம்பவங்களையும் அவர் வாயால் கேட்க வேண்டும். குன்றக்குடி அடிகளார் பங்கெடுத்த ஒரு கூட்டத்தில் புலவர் ஆபிதீன் எழுதிய `பாண்டியர் ஊஞ்சலில் ஆடி வளர்ந்த / பைந்தமிழ் அமுதே நீ அம்மா’ என்னும் பாடலை ஹனிபா பாடியிருக்கிறார். அப்பாடல் முழுக்கவே தமிழின் சிறப்புகளை எடுத்துரைப்பது. பாடிக்கொண்டே வந்த ஹனிபாவிற்கு இடையில் இரண்டொரு வரி மறந்திருக்கிறது. எனினும், ஆலாபனையை நிரவியபடியே அப்பாடல் வரிகளை நினைவிற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஓசை ஒழுங்கு கெடாமல் தமிழை உச்சரித்த அவர், கடைவாயிலேயே கவிதைகளையும் ஒளித்து வைத்திருப்பது போலிருக்கும். சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போலத் தனித்துவமான குரல் வளமுடையவரே என்றாலும், அவர்கள் இருவருக்கும் கிடைக்காத ஓர் இடத்தை ஹனிபா பெற்றிருக்கிறார். அது, இலட்சிய வேட்கை. கட்சி அரசியல்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை.
இறுதிவரை திராவிட இயக்கத்தின் தேவையை உணர்ந்தவராகவே அவர் இருந்திருக்கிறார். களச் செயல்பாட்டின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருக்கவே அவர் விரும்பியதால் பதவிகளின் மீதெல்லாம் அவர் பார்வை போகவே இல்லை. கலைஞரால் வற்புறுத்தி வழங்கப் பட்ட பதவிகளைக்கூட அவர் பெருமைக்குரிய விஷயமாக எங்கேயும் பேசியதில்லை. இருமுறை தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவியிருக்கிறார். என்றாலும், கழகம் ஒருபோதும் தோற்றுவிடக் கூடாதென்றே உழைத்திருக்கிறார். `கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ பாடலையும், `பாளையங்கோட்டை சிறையினிலே’ பாடலையும் எத்தனைமுறை கேட்டாலும் எனக்குச் சலிக்காது.
ரஜினிகாந்த் நடித்த `லால் சலாம்’ திரைப்படத்தில் `எல்லாமும் இங்கே / அல்லா உன்னாலே ஆகும்’ என்றொரு பாடலை நான் எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளார் தேவாவின் குரலில் வெளிவந்துள்ள அப்பாடலை என்னால் எழுத முடிந்ததற்கு முழுமுதற் காரணம் ஹனிபாவே என்றால் மிகையில்லை. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த என்னாலும் அல்லாவைப் பற்றிப் பிழையில்லாமல் எழுத முடியும் என்கிற நம்பிக்கையை ஹனிபாவின் பாடல்களே வழங்கின. வரிகளை வாசித்த ஏ.ஆர். ரகுமானே நெகிழ்ந்துபோய், `எப்படி எழுதினீர்கள்?’ என்றார். `இருக்கவே இருக்கிறதே ஹனிபா ஐயாவின் பாடல்கள்’ என்றதும், அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. எல்லாச் சமூகத்தினருள்ளும் ஹனிபா விதையாக விழுந்திருக்கிறார். வயது வித்யாசமில்லாமல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக்குரல் அவருடையது.
என் இனிய நண்பர் மீரா கதிரவன் இயக்கும் ‘ஹபிபீ’ திரைப்படத்தில் `வல்லோனே வல்லோனே / வையம் உன்னாலே’ என்னும் பாடல் இடம்பெற்றிருக்கிறது. அப்பாடலையும் நானே எழுதியிருக்கிறேன். அப்பாடலின் சிறப்பு என்னவென்றால் ஹனிபா ஐயாவின் குரலிலேயே அப்பாடல் வந்திருக்கிறது. `ஏஐ’ முறையில் அவர் குரலை அப்படியே கொண்டு வந்திருக்கிறோம். காலம் கடந்தாலும் அவர் நம்முடனேயே இருக்கிறார் என்பதைச் சொல்லும் விதமாக அம்முயற்சியைப் படக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒரு திரைப்படத்தில் அவர் குரல் இல்லாமல் எப்படி என்கிற எண்ணத்துடனே தோழர்கள் அம்முயற்சியில் ஈடுபட்டதைப் பெருமிதத்துடன் வரவேற்கலாம். `பூமானின் போதம் / ஈமானே நீதம்’ என்றெல்லாம் அப்பாடல் வரிகளை நானெழுத ஹனிபாவே உந்திவிசை என்பதை உணர்ந்துகொள்வது கடினமில்லை. திரைத்துறையில் அவரை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்கிற ஆதங்கம் பலருக்கு உண்டு. ஆனால், அவருடைய குரலின் தன்மை அனைத்து வகைப் பாடல்களுக்கும் பொருந்துமா எனும் யோசனையில் தவிர்த்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது. தவிர, பரவலாக அறியப்பட்டுவிட்ட அவர் குரல், கதாபாத்திரங்களுக்கு ஆணையும் அறிவுரையும் ஆலோசனையும் தரக்கூடியது. எது அவருடைய தனித்துவமென்று சிலாகிக்கிறோமோ அதுவேதான் அவருக்குத் திரைத்துறையில் தடையாகவும் இருந்திருக்கிறது. சகோதர மதத்தினர் அவரைத் தம் வீட்டில் ஒருவராகக் கருதும் அளவிற்கு இணக்கத்துடனே அவர் செயல்பட்டிருக்கிறார். `உன்மதமா என்மதமா / ஆண்டவன் எந்த மதம்?’ என்று அவர் கேட்டால் அக்கேள்வி சரியானதே எனச் சகலரும் ஏற்கும் இடத்தில் தன்னை வைத்திருக்கிறார். அவருடைய பாடல் பட்டியலில் எனக்குப் பிடித்ததென்று கணக்கெடுத்தால் ஆயிரக்கணக்கான பாடல்களைச் சொல்ல வேண்டும். சமூகத்தில் ஒரு பாடகராக ஹனிபா ஏற்படுத்தியுள்ள தாக்கம், கணக்கிட முடியாதது. எளிய மனிதர்கள் அத்தனைப் பேரையும் அவர் வசீகரித்திருக்கிறார். அவருடைய ஒரு பாடலையாவது முணுமுணுக்காத உதடுகளே இல்லை.
இத்துடன் இணைத்துச் சொல்ல வேண்டிய இன்னொரு தகவல், உதயநிதி நடிப்பில் வெளிவந்த `மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `மலையிலதான் தீப்பிடிக்குது ராசா / ஏ மனசுக்குள்ள வெடிவெடிக்குது ராசா’ என்னும் பாடலைப் பற்றியது. வைகைப்புயல் வடிவேலு அப்பாடலைப் பாடியிருக்கிறார். அப்பாடல் பதிவின்போது ஒரு சம்பவம். முதலில் அப்பாடலைப் பாட வடிவேலு சம்மதிக்கவில்லை. இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், உதயநிதி, நான் என எல்லோரும் அவர் பாடுவதை விரும்பினோம். என்றாலும், அவர் பிடிகொடுக்கவில்லை. தன்னால் பாடமுடியுமா? எனத் தயக்கத்துடன் தவிர்த்தார். நாங்களும் விடாமல் அவரை ஒருமுறைக்குப் பலமுறை வற்புறுத்தினோம்.
பிறகு ஒருவழியாகப் பாட ஒப்புக்கொண்டு ஒலிப்பதிவிற்கு வந்தார். வந்தவர், பாடத் தொடங்கினார். என்றாலும், எவ்வளவோ முயன்றும் அவரால் அப்பாடலைப் பாட முடியவில்லை. அழைத்துவிட்டோமே என்கிற தவிப்பு எங்களுக்கு. அவருக்கோ பாட முடியவில்லையே என்கிற பதற்றம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படியும் பாட வைத்தே தீருவதென்ற முடிவில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான் சட்டென்று அவரைப் பாடும் அறையிலிருந்து வெளியே வரச் சொன்னார். வடிவேலும் வெளியே வந்தார். வந்தவரைத் தன் அருகில் அமர வைத்துக்கொண்டு பழைய பாடல்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். குறிப்பாக, ஹனிபாவின் பாடல்கள். வடிவேலுவிற்கு ஹினிபாவின் அநேகப் பாடல்கள் அத்துப்படி என்பதால் ஒவ்வொரு பாடலையும் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். வடிவேலு பாடப் பாட அகம் மகிழ்ந்த ரகுமான், `அடடா என்ன அற்புதமாகப் பாடுகிறீர்கள்’ என்று பாராட்டினார். ஒருமணி நேரங்கழிந்த பின் ஏஆர். ரகுமான், `சரி இப்போ மலையிலதான் பாட்ட பாடிடுவோமா’ என்றார். வடிவேலுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
கொஞ்ச நேரத்தில் வடிவேலுவின் இருக்கைக்குப் பக்கத்திலேயே மைக்கைப் பொருத்தி, ஹனிபாவின் ஒவ்வொரு பாடலையும் பாடிக் காண்பித்தபடியே மலையிலதான் பாடலைப் பதிவு செய்ய தொடங்கினார். கால் மணி நேரத்தில் முழுப் பாடலையும் வடிவேலு பாடி முடித்தார். வடிவேலுவிற்கே ஆச்சரியம் தாங்கவில்லை. `அண்ணே.. ஹனிபா ஐயா பாட்டுக்குள்ளதான், மலையிலதான் பாட்டும் இருந்துச்சா’ என்றார் வெகுளியாக. அப்போது ஏ.ஆர். ரகுமான் சிரித்தபடியே, `எல்லோருக்குள்ளும் அவர் இருப்பதால் இந்தப் பாடலையும் எளிதாக உங்களால் பாட முடிந்தது’ என்றார். தமிழர்களின் நனவிலி மனத்துள் பதிந்துள்ள ஹனிபாவையும் அவர் குரலையும் பிரிக்க முடியாது. ஆண்டுகள் எத்தனை ஆனாலும் அவர் வாழ்வார், வாழ்வார், வாழ்ந்துகொண்டே இருப்பார்; காற்றைக் கவர்ந்த பேரிசையாக.


