
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். அவனது இறுதித்தூதர் முஹம்மது அவர்கள்மீது சாந்தியும் சமாதானமும் உலக முடிவு நாள் வரையிலும் நிலவட்டுமாக.
’இசைமுரசு’ என்று அறியப்பட்டும் நாகூர் ஹனிஃபா மாமா அவர்களைப்பற்றி எழுதுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஒன்று நாங்கள் நாகூர்க்காரர்கள். இன்னொன்று இசைமுரசின் அருமை மகனார் நௌஷாத் என் நண்பர். நானும் என் நண்பர்களும் சிறு வயதிலிருந்தே நாகூர் ஹனிஃபா அவர்களை ’மாமா’ என்றுதான் அழைப்போம்.
ஒருவர் மிக நன்றாகப் பாடுவதற்கு என்ன வேண்டும்? அல்லது என்னென்ன வேண்டும்? நல்ல குரல், இசை ஞானம் இவை இரண்டுமே பிரதானம் என்பது என் கருத்து. நல்ல குரல் என்பதற்கான வரையறையும் வித்தியாசப்படலாம்.
சில பாடகர்களுடைய குரலில் மென்மை இருக்கும். முஹம்மது ரஃபி, பி.பி.சீனிவாஸ், எஸ்பிபி, குலாம் அலி, பங்கஜ் உதாஸ், பாலமுரளி போன்றோர். சிலருடைய குரலில் இனிமை கலந்த கனம் இருக்கும். உதாரணமாக ஜக்ஜித் சிங், கிஷோர் குமார், ஹரிஹரன் போன்றோர். சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மஹாலிங்கம் போன்றவர்களின் குரலின் கணீர்த்தன்மை நம்மை அசத்தும்.
இந்த வரிசையில் ஹனிஃபா மாமாவின் குரல் இரண்டாவது. கனமும் மென்மையும் கலந்த குரல். அந்த கனத்தால் யாரும் எட்ட முடியாத உச்ச ஸ்தாயிகளை எட்டியவர் அவர். திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததில் ஹனிஃபா மாமாவின் குரலுக்கு மிகுந்த முக்கியத்துவமும் பங்கும் உண்டு. கலைஞரின் தோளில் கை போட்டுப் பேசக்கூடிய நட்பு ஈ.எம்.ஹனிஃபா அவர்களுடையது.
என்னுடைய தாய்மாமா கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் ஹனிஃபா மாமாவுக்கு கீழ்க்கண்ட பல முக்கியமான பாடல்களை அந்தக்காலத்தில் எழுதிக்கொடுத்தவர்.
‘அந்த நாளிலே மக்கா நகரம்’
‘காய்ந்து சிவந்தது சூரிய காந்தி’
‘நெஞ்சிலே வாழ்கின்றவர்’
‘அருள் மேவும் ஆண்டவனே’
‘உயிரிருக்கும்வரை உமை மறவேனே’
‘உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்’
‘வாழவாழ நல்ல வழிகளுண்டு’
‘ஓ வெண்ணிலா’
‘அன்பான நபிகள் நாதர் எங்கே’
‘இன்று வந்து நாளை போகும் நிலையிலே’
‘திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன’
‘தீனோரா நியாயமா மாறலாமா’
‘இணையில்லாத அறிவின் உருவே’
‘உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹெ மீரானே’
காங்கிரஸ் அரசு தோல்வியுற்று திமுக ஆட்சிக்கு வருவதற்கு நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பல பாடல்கள் உதவியாக இருந்தன. ’கீழே இறங்கு, மக்கள் குரலுக்கே இணங்கு’ என்று ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல் காங்கிரஸ் ஆட்சியின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது.
அதேபோல, அறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபோது நாகூர் சலீம் எழுதி ஹனிஃபா மாமா பாடிய ’பட்டுமணல் தொட்டிலிலே’, ’சிரித்துச் செழித்த உன் முகமெங்கே’ போன்ற பாடல்கள் அழியா வரம்பெற்றவையாகும்.
இலக்கியத்தில் ’மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றைச் சொல்வார்கள். ஒரு இலக்கிய படைப்பாளி எழுதிய பல பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றில் இதுதான் ஆகச்சிறந்தது என்று ஒன்றைச் சொல்வார்கள்.
உதாரணமாகக் கம்பனுக்கு கம்பராமாயணம், வள்ளுவனுக்கு திருக்குறள், ஜான் மில்டனுக்கு அவர் எழுதிய ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியம் இப்படி. இந்த மாதிரி நாகூர் ஹனிஃபா மாமாவின் பாடல்களில் ஒன்றே ஒன்றை மட்டும் அவரது ’மாஸ்டர் பீஸ்’ என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஹனிஃபா அவர்கள் பாடிய எல்லாமே அப்படிப்பட்டவைதான்.
ஹனிஃபா அவர்கள் பாடிய பல பாடல்களை இன்று பாடக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கிட்டத்தட்ட ஹனிஃபா அவர்கள் குரலைப்போன்றே அக்குரல்களும் இருக்கின்றன. ஆனாலும் அந்த மூலக்குரலுக்கு அருகில் அவை வரவே முடியாது என்பது வேறு விஷயம்.
ஒரு பாடல் உள்ளது. அதை நாகூர் ஈ.எம்.ஹனிஃபா அவர்கள் மட்டும்தான் பாட முடியும். இந்த உலகில் வேறு யாராலும் அதைப்பாடவே முடியாது. இதை நான் ஒரு சவாலாகவே சொல்வேன். அப்படி என்ன பாடல் அது?
நாகூர் நாயகம் ஞானி ஷாஹுல் ஹமீது பாதுஷா அவர்களைப் புகழ்ந்து இன்னொரு ஞானி எழுதிய பாடல் அது. ஆமாம். ’திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி’ என்ற பாடல்தான் அது. அதை எழுதியது ஞானி குணங்குடி மஸ்தான் சாஹிப் அவர்கள். ’உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா’ என்ற அந்தப்பாடலின் தொகையறாவாக வரும் வரிகள்தான் நான் மேலே குறிப்பிட்ட ‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து’ என்பது.
இப்பாடலை இதுவரை வேறு யாரும் பாடியதில்லை. இவ்வரிகளை இந்த உலகில் அனேகமாக நாகூர் ஹனிஃபா அவர்கள் ஒருவரால்தான் பாடமுடியும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட கனமான, உச்ச ஸ்தாயியில் இனிமையாகப் பாடமுடிகிற குரலுக்குச் சொந்தக்காரர் மர்ஹும் நாகூர் ஈ.எம்.ஹனிஃபா அவர்கள்.
அவரது மண்ணறையையும் மறுமை வாழ்வையும் எல்லாம் வல்ல இறைவன் ஒளிமயமானதாக ஆக்கி வைப்பானாக, ஆமீன்.


