(நினைவலைகள்) இயக்கத்தின் ஓசையில் முகிழ்த்த இறை எனும் ஒலி

முபீன் சாதிகா

”மொழி எப்படிச் சாத்தியப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும்போது ஒலிகளை ஒத்திசையும் குணாம்சமுள்ள பொருள்களுடனும் உடல்களின் ஒலி விளைவுகளுடனோ அவற்றின் செயல்பாடுகளுடனோ வேட்கைகளுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒலியை உடல்களிலிருந்து பிரித்து அதனை முன்மொழிதல்களாக எந்த ஒரு செயல்பாட்டையும் செய்வதற்கான வெளிப்பாட்டையும் கொள்ளாதவையாக எது செய்கிறதோ அதுதான் மொழியைச் சாத்தியப்படுத்துகிறது எனலாம். வாய்தான் எப்போதும் பேசுகிறது என்றாலும் ஒலி என்பது சாப்பிடும் உடல் ஏற்படுத்தும் ஒலி அல்ல. அதாவது வெறும் ஓசையாக இருப்பதல்ல. தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் எந்த ஒரு தன்னிலையின் உறுதிப்பாடும் அல்ல. அத்துடன் மேற்கூறப்பட்ட எதுவுமற்றதான நிகழ்வாக இருந்தால் அது வெறும் ஒலி; தனிப்பட்ட ஒலியாக இருக்கும்’’ என்கிறார் டெல்யூஜ்.

எனவே டெல்யூஜைப் பொறுத்தவரை, ஒலிக்கும் ஒத்திசைவான ஓசைக்கும் இடையில் பிரிவு அல்லது பாதையை உருவாக்கும் நிகழ்வுகள் உள்ளன. அந்த நிகழ்வுகள்தான் தன்னிலையையும் மொழியையும் கட்டமைக்கின்றன. இந்த இடத்திலிருந்துதான் மொழிக்கும் ஒலிக்கும் தன்னிலைக்கும் உள்ள உறவைக் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில் தமிழ் மொழி மும்மையாலானது. இயல், இசை, நாடகம் என்ற பிரிவுகளில் இசை, மொழி உருவாக்கத்தில் பெரும் பங்கெடுத்திருக்கிறது. இசையை மொழியாக அறிவது, மொழியை இசையால் அறிவது என்ற செயல்பாட்டில் விதிகள் சார்ந்த ஒலித்தலின் அளவைகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக மாறி ஓர் ஒலிக்குடும்பத்தில் சேர்ந்துவிட்டவையாகவும் கட்டுப்படுத்தப்படாத கோர்வைகள் விதிகளுக்கு உட்படாத பண்களாக மொழி வழியாக வெளிப்படும் செய்திகளாகவும் தமிழில் மாறிவிட்டன. இந்தப் பிரிவில் ஒலியின் இசை வடிவத்தில் இணைந்த கலாச்சார அரசியல் சார்ந்த மற்றும் மத, சாதிய ஒருங்கிணைப்பின் இயைபுக்குள் தமிழ்ச் செவி பண்பட்டது. பழந்தமிழ் இயல் வடிவத்திலும் இசையின் பண்பு மிகுந்திருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் உருவாகியிருக்கின்றன. தொல்காப்பியத்திலும் அதற்கான சூத்திரங்கள் உள்ளன. தமிழ் இசை வரலாற்றிலிருந்து இங்கு எடுத்துக் கொண்டிருக்கும் நாகூர் ஈ.எம்.ஹனிபா அவர்களின் குரல் வரலாற்றை நோக்கவேண்டும் என்றால் ஒரு நீண்ட பயணத்தைக் கடக்கவேண்டியிருக்கும். அதனால் இங்கு நாகூர் ஹனிபாவின் குரல் கொடுக்கும் பொருள் குறித்து மட்டும் தனிப்பட்டு ஆய்வு செய்ய கீழ்க்கண்ட நான்கு பரப்புகளைக் கவனத்தில் கொள்ளலாம்.

இசையும் இயக்கமும்

நாகூர் ஹனிபா மிக இளம் வயதிலேயே இசைத் துறைக்கு வந்த கலைஞர். அது மட்டும் அல்லாமல் திராவிட இயக்கத்தின்பால் கவரப்பட்டவரும் கூட. தனக்கு இருந்த இசை ஞானம் இறைவனால் அருளப்பெற்றதாகவே ஹனிபா கருதியிருந்தார். ஆனால் இஸ்லாமிய கருத்தியலுக்கு எதிரான கடவுளைக் கைவிட்ட இயக்கத்திற்காக தன் இசையை ஒப்புக்கொடுக்க அவர் தலைப்பட்டார். ஏனெனில் இயக்கத்தின் மீதான பற்று இசையின் மீதான பற்றைவிட அதிகமாக இருந்தது ஒரு காரணம். மற்றும் இறைப்பற்றையும் இயக்கப்பற்றையும் ஒரே வகைமையில்தான் அவர் பார்த்திருக்கிறார். அது இசையாக மட்டுமே அவருக்குள் இருந்திருக்கிறது. தமிழ் இசை பக்திக்கு உரியதாகவும் அவருடைய காலகட்டத்தில் திரையிசையிலும் பக்திக்கு உரிய பங்கை அதிகம் கொண்டதாகவும் இருந்தது. அது ஒரு மதம் சார்பானதாக மட்டும் இருந்தது. திராவிட எழுச்சி வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டும் அல்லாமல் ஒரு கலாச்சார எழுச்சியாக இருந்ததால் இசையின் பண்புக்குள்ளும் இயக்கத்தின் கூறுகளைக் கொண்டு சேர்க்கவேண்டிய விளைவுகள் தோன்றின. அந்தப் பரிமாணத்தில் ஒருவராக ஹனிபா இருந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆஸ்தான பாடகராக அவர் அறியப்பட்டார்.

டிஎம்எஸ், திரைப்படங்களிலும் திமுகவிற்கும் பாடியிருந்தாலும் அது பெரும்பாலும் எம்ஜிஆருக்குப் பாடிய பாடல்களாக இருந்தன. அவை பொதுவான திமுகவுக்கு உரிய குரலாகக் கேட்க முடியாத தடை இருந்தது. மேலும் திராவிடத்திற்கு எனத் தனிப்பட்ட கூறுகள் டிஎம்எஸ் குரலில் இல்லை. டிஎம்எஸ்ஸின் நாயக, காதலில் தோய்ந்த, ஜனரஞ்சகமான குரலுக்கு எதிராக இறைத்தன்மை கொண்ட, புனிதத்துவமான, பழமைத்துவம் நிறைந்த குரலாக ஹனிபாவின் குரல் திமுகவால் சுவீகரிக்கப்பட்டது. திரைப்படப் பாடல்களை அவர் பாடினாலும் அவையும் சமூகத்தின் பொதுக் குரலாக ஒலிக்கும் வகையில் அந்தப் பாடல்கள் இருந்தன. ஹனிபா என்பதைத் தவிர அந்தக் குரலுக்கு வேறு பண்புகளைப் பொருத்த முடியாது. ஆனால் டிஎம்எஸ் குரலுக்கு பல நடிகர்களின் நடிப்புப் பண்பைப் பொருத்த முடியும். திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் தனிப்பட்ட கோட்பாடுகளுக்குரிய குரலாக ஹனிபாவின் குரல் அடையாளப்படுத்தப்பட்டது. திமுகவின் மதச்சார்பின்மையைக் கூறும் மதச்சார்புக் குரலாக ஹனிபாவின் குரல் இருந்தது. 

இசையும் மதமும்

தமிழ் இசை இந்து மத பக்தி சார்ந்த அம்சங்களைக் கொண்டதாக மாறிவிட்ட காலகட்டத்தில் வேற்று மத ஒலிகளைப் புகுத்த வேண்டிய நிலையில் ஹனிபாவின் இசை ஒலித்தது. இஸ்லாத்தின் ஒழுங்குகளை, இறையின் புனிதங்களை, மனித அவலங்களை ஒலிக்க ஒரு குறிப்பிட்ட வகையிலான குரல் தேர்வு தேவைப்பட்டது. பாங்கு ஒலிப்பது போல், அரேபிய மொழியை உள்வாங்கியது போல், தமிழ் ஒலியின் முற்றிலும் வேறான மாற்று ஒலியைக் கொண்டது போல் ஓர் குரலாக ஹனிபாவின் குரல் ஒலித்தது. இஸ்லாம் பொதுப்படையான இறையைக் குறிப்பிடுவது போல் அந்தக் குரல் இருந்தது. அந்தக் குரலின் இசையைக் கேட்பவர்கள் இறை ஒழுங்குக்குள் கடத்தப்பட்டார்கள். மத வேறுபாடின்றி இந்த நகர்வு நிகழ்ந்தது. திராவிடத்தின் கடவுளைக் கைவிடல் இந்தக் குரல் மூலம் நடந்தது. கடவுளற்ற சமூகத்திற்குக் கடவுளின் குரலாக ஹனிபாவின் குரல் ஒலித்தது.

ஹனிபா திராவிடத்தின் தொடக்கத்திலிருந்தே பிணைப்பில் இருந்திருக்கிறார். மேலும் சுதந்திரத்தின் போது நாடு மதத்தை முன்வைத்து பிளவுண்ட போது தமிழகத்தின் திராவிட வேர் மதம் சார்பான அடிப்படை வாதத்தைப் புறக்கணிக்க முனைந்திருந்தது. ஆனால் இஸ்லாமிய, கிறித்துவ மதங்களின் அங்கீகாரம் திராவிடத்தின் மதச்சார்பற்ற தன்மையாக வெளிப்பட்டிருந்தது. இஸ்லாத்தின் குரல் திராவிடத்தின் மதச்சார்பின்மையின் குரலாக அடையாளப்படுத்தப்பட்டது. குரான் ஓதும் குரல்களுக்கு இருக்கும் உரத்து கர்ஜிக்கும் வகையிலான குரலை வளர்த்தெடுத்திருந்த ஹனிபா எல்லாவற்றையும் கண்காணிக்கும் எங்கும் நிறைந்த சர்வவல்லமைமிக்க இறையின் பிரதிமையைக் கொண்ட ஒலியாக, ஓசையாக அடையாளப்படுத்தப்பட்டார். நாடு பிளவுண்ட காலத்தில் இஸ்லாத்தின் பிரதிநிதிகள் சிறுபான்மையினராக மாறிவிட்டிருந்ததால் நாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது போல் பாவிக்கப்பட்டார்கள். நாடோடிகள் போல அவர்கள் தங்களைக் கருதிக் கொண்டார்கள். நாடோடிகளின் உண்மையான குரல் அல்லது இசை ஹனிபாவின் இசை போல் தமிழில் இருந்திருக்கும் என்பதாகச் செவிமடுக்கப்பட்டது. இசை, மதம், அரசியல், திராவிடம் எல்லாவற்றின் கலவையாக ஹனிபாவின் குரல் ஒலித்தது. அல்லது அப்படி உள்வாங்கப்பட்டது. மதம் குரலில் இருந்தாலும் மதச்சார்பின்மைக்குரிய அரசியலில் ஒலிப்பதாக ஹனிபாவின் இசை ரசிக்கப்பட்டது.

இசையின் எல்லையாக்கமும் ஒலிப்பற்றும்

ஹனிபாவின் குரல் வெறும் ஓர் குரலாக மட்டும் பாவிக்கப்பட முடியுமா என்பது கேள்விக் குறி. அது ஓர் ஆளுமை, அது ஓர் தன்னிலை, அது ஓர் அசரீரீ, அது ஒரு முழக்கம், அது ஒரு பாவனை, அது ஒரு கருத்தாக்கம் (திமுக என்ற இயக்கத்தின் தொண்டர்களுக்கு மட்டுமாவது), அது ஒரு நிகழ்வு, அது ஒரு சிந்தனையின் பிம்பம், அது ஓர் எல்லையாக்கம். அந்தக் குரலின் ஆளுமை இறையின் வழித்தோன்றலின் ஆளுமையாக இருந்து தாக்கம் செலுத்தியது. அந்தக் குரலின் தன்னிலை, இயக்கத்தின், இசையின், ஒலியின், மொழியின் உருவாக்கத்தைப் பெற்ற தன்னிலையாக இருந்தது. அதன் தனித்தன்மை அதிலிருந்து பிறக்கும் ஒலியின் மூலத்தைக் கண்டறிய முடியாத வகையில் அசரீரீ போல் இருக்கிறது. போர் அல்லது விழா நிகழ்வுகளில் ஒலிக்கும் முரசைப் போல் அந்தக் குரல் முழங்குகிறது. அந்தக் குரலின் பாவனை அது வரையில் இல்லாத ஒன்று. திமுக என்ற இயக்கத்தின் கருத்தாக்கத்தை ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவம் போல் இசையில் கொடுத்த குரல் அது.

மொழியையும் ஓசையையும் இணைக்கும் பிணைப்புச் சங்கிலி போன்ற நிகழ்வு அந்தக் குரலில் இருந்தது. மதச்சார்பு, மதச்சார்பின்மை, நாடோடித்தன்மை(நாடு பிளவுண்ட நிலையில் உருவான சிந்தனை), இரண்டாம் தர குடிமகனுக்குரிய ஏக்கம், சிறுபான்மை என்ற சிந்தனை பிம்பங்களின் அடுக்கல்களாக அந்தக் குரல் வழங்கியது. அந்தக் குரல் ஓர் எல்லையாக்கத்தை வைத்திருந்தது. ஒலியின் மீதான பற்றைக் கொண்டு வெளிப்பட்ட அந்தக் குரல் ஓசையை தமிழ் இசையின் பண்பிலிருந்து கிளை பரப்பியதாக வேற்று கலாச்சாரத்தின் ஒட்டுயிர்ப்பாக தமிழ் செவிகளுக்குள் ஓர் எல்லையை வகுத்தது. ஹனிபாவின் குரல் உருவாக்கிய எல்லையில் இயக்கத்தின் ஓசை அதனை எல்லை நீக்கம் செய்தது. மதத்தின் சாயை அதை மறு எல்லையாக்கம் செய்தது. இந்த இரண்டு செயல்முறைகளும் மாறி மாறி அந்தக் குரலில் நடந்துகொண்டே இருந்தன. ஹனிபாவைப் போலச் செய்த குரல்களும் அதே எல்லையாக்கத்திற்குள் ஒலிக்க வேண்டியிருந்தன. கர்நாடக இசையின் மதச்சார்புக்கு எதிராக அந்த எல்லையாக்கம் நிறுவப்பட்டது போன்ற ஒலிப்பற்று அந்தக் குரலுக்குள் உருவானது. 

இயக்கம் எனும் ஓசை பிம்பம்

பேரறிஞர் அண்ணாவின் அடுக்கு மொழி கலைஞர் கருணாநிதியின் நயமிக்க உரை போன்றவை தமிழ் இலக்கியத்திலிருந்து மாறுபட்ட ஓர் ஓசையை மொழிக்குள் கொண்டு வந்து சேர்த்தது திராவிட இயக்கம். தமிழ் இலக்கியம் உருவாக்கியிருந்த ஓசைக்கும் திராவிட ஓசைக்கும் இருக்கும் வேறுபாடு தரத்தின் வேறுபாடாகப் பாவிக்கப்பட்டது. திரைத்துறைக்கு அந்த ஓசை திராவிடத்தால் கடத்தப்பட்டது. அதனால் அது பல்கிப் பெருகியது. அந்த ஓசை இயல்பான வாழ்வின் பாவனையிலிருந்து விலகி போலியான அல்லது உள்ளீடற்ற ஒலி போல் இருந்தது. அந்த ஓசை தருவித்த இசையின் பரிணாமத்தை உள்வாங்கி ஒலித்த ஹனிபாவின் குரல் அதில் இயல்வாழ்வின் மெய்மையைக் கொண்டு வந்து சேர்க்க முனைந்தது. இதற்கு மத நம்பிக்கை பாற்பட்ட இறையின் கருணை கோரும் குரலின் நயத்தை இயக்கம் சார்ந்த ஓசைக்குரியதாக மாற்றியது ஹனிபாவின் குரல். இயக்கத்தின் ஓசை எழுப்பிய இயல்வாழ்வைக் கடந்த பிம்பம் ஹனிபாவின் குரல் வழி மீண்டும் இயல்வாழ்வுக்குள் திருப்பிச் செலுத்த முனைந்தது.

திராவிட இயக்கத்தின் தன்னிலை என்பது திராவிடம் என்ற அடையாளம், தமிழ் மொழியின் கர்வம் அல்லது தான், ஆரியம் என்ற மற்றமை என்பதாக வரையறுக்கப்பட்டது. இந்தத் தன்னிலையின் வெளிப்பாடு அதீத தமிழாக இருக்கவேண்டியிருந்தது. அதைத்தான் திராவிடத் தலைவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். அதனால்தான் அந்த ஓசை பிம்பம் வேறு ஓர் ஒத்திசைவைக் கொண்டிருந்தது. இந்தத் தன்னிலையாக்கத்தின் ஒழுங்கமைவை உள்வாங்கிய ஓசை வெளிப்படுகையில் திராவிட ஆற்றலை உணர்த்த வேண்டியிருந்தது. அதனை ஒலித்த ஹனிபாவின் குரல் திராவிட இயக்கமாக உருமாறியிருந்தது. இறையிடம் ஆற்றுப்படுத்துதலாக இருந்த குரல் என்பதால் திராவிடத்தின் அதிகாரத்தை நோக்கி ஆற்றுப்படுத்தலாக மாறுவது எளிமையாக வந்தது. ஹனிபாவின் குரலில் ஒலித்த இசை, இறை எனும் முன்தீர்மானிக்கப்பட்ட அதிகாரத்திலிருந்து வருவதாக இருந்த கற்பனை இயக்கத்தின் அதிகாரத்திற்கு நிகராக்கிப் பார்ப்பதற்கு வசதியாக மாறியது. ஹனிபாவின் குரல் வெறும் ஓசையின் ஒரு வடிவம் என்று கேட்கப்பட்டதற்குப் பதிலாக முன்னறிவித்தலாக, தீர்க்கதரிசனமாக, இயக்கத்தின் போராட்டங்களுக்குத் தீர்வாக இசை பிம்பமாக வரலாற்றில் நிலைபெற்றுவிட்டது.

ஹனிபாவின் குரல் எப்படி இயக்கத்திற்கும் இறையியலுக்கும் பொருந்திப் போனது என்பது குறித்த ஒரு சிறிய ஆய்வின் ஒரு பகுதி இந்தக் கட்டுரை. இன்னும் தொடர்ந்து இது குறித்த ஆய்வை மேற்கொள்வதன் மூலம் இசை, ஓசை, குரலின் ஒலி போன்ற பலவற்றுக்கும் பல வகையான கருத்துகள் கிடைக்கும். அதன் மூலம் தமிழ் இசையின் பாரம்பரியத்தின் பல வகைமைகளை அறியமுடியும்.

பயன்பட்ட நூல்கள்

1.Deleuze, Gilles. The Logic of Sense

2.Deleuze, Gilles and Guattari. Felix. A Thousand Plateaus