(நினைவலைகள்) சிம்மக் குரலோன் நாகூர் ஹனிஃபாவின் விருத்தம் மற்றும் கதைப்பாடல்கள்

ம.ஆயிசா மில்லத் / கே. மாலிக் அலி

விருத்தம் பாடுவது ஓர் கலையாகும். பாடகரின் குரல் வளம், இசைஞானம் மற்றும் பண்ணின் (இராகம்) சாயலை வெளிப்படுத்துவது விருத்தமாகும். விருத்தம் பாடுவதற்கு எடுத்துக்கொண்ட பண்ணின் இலக்கணத்திற்கு ஏற்ப தாளக் கருவி இசை இல்லாமல் இல்லாமல் பண்ணின் சாயலை வெளிப்படுத்துவது இவ்விருத்தமாகும். மேலும் பாடலைக் கேட்போரை பாடுபொருளின் கருத்திற்கு அறிமுகப்படுத்துவதும் விருத்தமாகும். விருத்தம் பாடலின் ஆரம்பத்திலோ அல்லது இடையிலோ பாடப்படும். பெரும்பாலும் பாடலின் ஆரம்பத்திலேயே பாடப்படுகிறது

நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்களில் விருத்தத்தில் அமைந்த சில பாடல்களை நாம் இங்கு காண்போம். 

1. திக்குத் திகந்தமுங் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!
சிங்கா சனாதிபர்கள் நதரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!

ஹக்கனருள் பெற்ற பெரியோர்க ளொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!
அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அணைந் தருகு நிற்பர் கோடி!

மக்க நகராளு முஹம்மது ரஸூல்தந்த
மன்னரே என்பர் கோடி!
வசனித்து நிற்கவே கொலுவீற்றி ருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ

தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம் மேருவே!
தயை வைத்தெனையாள் சற்குணங் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீத ரசரே!

2. “உலக முஸ்லிம்கள் கூடும் இடம்” 

ஒற்றுமை கீதம் பாடும் இடம் 

உள்ளத்தை ஆளும் ஒரே இடம் 

உத்தம நபி நாதர் வாழும் இடம்”

3. “மெய்நிலை கண்ட ஞானி… முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி

வையகம் போற்றும் ஞானி வள்ளல் கௌது சமதானி”

4. வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்

ஆனதினால் மானிடனே ஆண்டனவனை நீ  தொழுவாய்

மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?

5. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

பாங்கின் ஓசை கேட்கும் நேரம்…

6. அன்பு மார்க்கம் தந்த அஹ்மத் எங்கள் யா முஸ்தபா

7. அருள் அன்பு பண்பில் அளவற்ற உந்தன் திருநாமம் போற்றி 

துவங்குகிறோம் அல்லாஹ்…

எல்லா உலகும் ஏகமாய் ஆளும் வல்லன் உனக்கே வான் புகழ் அல்லா..

இசைமுரசு ஹனிபாவின் பாடல்களில் கதைப்பாடல்கள்:

நாட்டுப்புற பாடல் வகைகளில் மிக முக்கியமானது இந்த கதைப்படலாகும். கதை ஒன்றைப் பாடலாகப் பாடுவது கதைப்பாடல்கள் எனப்படும். இவை பாடல்களால் புராணம் இதிகாசம் சார்ந்த தெய்வ கதை, வரலாற்றுக் கதை அல்லது சமூகக் கதை கதையினை கூறுபவையாக அமைந்துள்ளன.

உதாரணமாக:

அண்ணமார் சாமி கதை

கோவிலன்-கர்ணகி கதை

சதமுக இராவணன் கதை

கள்ளழகர் கதை

காத்தவராயன் கதை

இரணியாசுரன் கதை

ஐவர் ராசாக்கள் கதை

கெளதல் மாடன் கதை

“மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்;
ஈகைவான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

ஆங்கு,
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்” (சிலப்.: 1.23-32)

மேற்குறிப்பிட்ட மங்கலவாழ்த்துப்பாடல் வரிகள் கண்ணகி மற்றும் கோவலனின் அருமை பெருமைகளையும் அவர்களது பெற்றோர்கள் இன்னார் என எடுத்துக்கூறும் கதைப்பாடலாக அமைந்துள்ளது

கதைப்பாடல்கள் என்பது பெரும்பாலும் உரைநடை வடிவில் அமைந்திருக்கும். ஒரு பாடகருக்கு பெரும் சவாலாக விளங்குவது இந்தக் கதைப்பாடலாகும். ஏனென்றால் உரைநடையில் கவிதைக்குண்டான இலக்கணம் இல்லாமல் இருப்பதால் பாடுவது கடினமான செயலாகும். செம்மையாக பாடாவிட்டால் பாடலை வாசிப்பது போல் தோற்றமளிக்கும். இசைமுரசு ஹனிபாவின் ஒருசில கதைப்பாடல்களை இங்கு காணலாம்.

1. ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்

உபவாச நன்மை சொல்லுறேன்

கேட்பீரே மாந்தரே

உயர் நோன்பு மாத பெருமையே

இதுவாகும் மாந்தரே

2. ஒருநாள் மதீனா நகர் தனிலே

ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே 

பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் 

பண்புடன் தோழர்கள் மத்தியிலே…

3. பெரியார் பிலாலின் தியாக

வாழ்க்கை கூறுவேன் இதோ,

பெரியார் பிலாலின் தியாக

வாழ்க்கை கூறுவேன் இதோ,

பிரியாத அன்பு பூண்டனர்

பெருமானார் மீதிலே,

நபி பெருமானார் மீதிலே…

4. ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது

அரபுநாட்டிலோர் தியாகம்

தூயோனாம் அல்லாஹ் நபி இப்ராஹிம்

துணிவைச் சோதித்ததாகும்

கேளுங்கள் தியாகம் என்பதே குர்பான்

மெய் குர்பான்

5. விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த 

அண்ணலான நபிமகளார் அருமையான பாத்திமா 

பாத்திமா அன்னை பாத்திமா..

6 கருணை கடலாம் காதர் வலியின் காரண சரிதம் கேளுங்கள் 

அருமை நாதர் ஷாகுல்ஹமீத் ஒலி அற்புத சரிதம் கேளுங்கள்

அற்புத சரிதம் கேளுங்கள்..

7. கன்னியரே அன்னையரே

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்.

மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து பிறந்தார்..

8. அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததை கேளுங்கள்- இன்று

அன்பின் எல்லையாய் அறிவின் சிகரமாய் அமைந்த்தைப் பாருங்கள்

அங்கே போவோம் வாருங்கள்.

கஃபா என்னும் கடவுள் ஆலய்ம் முதலில் தோன்றியது

உலகில் முதலில் தோன்றியது. 

9. கேரளக்க கரையோரம் வாழும் கருணை முத்தும் பீமா 

தாரணி புகழ் கூறும் எங்கள் தாயே புனித பீமா..

தேர்ந்த பாடர்களால் மட்டுமே கதைப்பாடல்களை பாட முடியும். அவ்வரிசையில் நமது சிம்மக் குரலோன் நாகூர் ஹனிபா அவர்களால் பாடப்பட்ட சில கதைப்பாடல்களை நாம் இங்கு கண்டோம்.