
தமிழ் முஸ்லீம் சமூகத்தின் வாழ்வில் பிறப்பு இறப்பு மற்றும் இவற்றிற்கிடையேயான வாழ்க்கை என்பது பாடல்களாலும் பைத்துகளாலும் கிஸ்ஸாக்களாலும் நெய்யப்பட்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
நூறு மஸ்அலாவிலும் விறகுவெட்டியார் கிஸ்ஸாவிலும் கேள்விகள் கேட்க ஆரம்பித்த இஸ்லாமிய சமூகம் பின்னர் இசை வடிவிலான பாடல்களை கேட்டு மெய்மறக்க ஆரம்பித்தது நாகூர் ஹனிஃபாவின் கணீர் கம்பீரக் குரலைக் கேட்டபின்னர்தான்.
எழுபதுகளில் பிறந்த என்னைப்போன்ற இளைஞர்களுக்கு நாகூர் ஹனிபாவின் பாடல்கள் மூலம்தான் இஸ்லாமிய வாழ்க்கைமுறை நபிகளாரின் சரித்திரம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் நினைவடுக்குகளில் பதியலாயிற்று. நோன்பின் மாண்பு என்றால் “ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப்பாலகன்”. நோன்பு வைத்து மூர்ச்சையாகிப் பின் “நீயே எழுவாய்” என்று சாது கூறியெழுப்பும் மேன்மையை உணர்த்தி நிற்குமென்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் குணநலன்களையும் மேன்மைகளையும் “அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே அண்ணல் நபி வரும்போது இன்னல் செய்யும்” மாதுவை நோய் விசாரிக்கும் பாடலால் சுட்டியுணர்த்தும்.
சிறுவயதில் கதைபாணியிலான பாடல்களை விரும்பிக் கேட்டாலும் காலப்போக்கில் மதரஸா மேடைகளில் பாடமுற்படும்போது கொள்கை முழக்கப் பாடல்களை விரும்பிக் கேட்கவும் பாடவும் செய்தோம். “யாரடா சொன்னது, எம்மை அந்நியனென்று யாரடா சொன்னது” என்று மீலாத் விழா மேடையில் தினவெடுத்த தோள்களைத் தட்டியபடியே பாடியபோது குற்றச்சாட்டுகளாலும் சந்தேகங்களாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சோகமும் ஆற்றாமையும் பெருக்கெடுத்தோடியது. இஸ்லாமிய மேடை என்றாலே அங்கு “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடியாகவேண்டும் என்கிற எழுதப்படாத சட்டம் இருந்த காலத்தில் ஒரு முஸ்லிமாக பொதுச்சமூகத்தில் அறிமுகமாகும்போது “எனக்கு இறைவனிடம் கையேந்துங்கள் பாட்டு ரொம்ப பிடிக்கும்” என்றுதான் ஒரு மாற்றுமத சகோதரர் கைகுலுக்கிக் கொள்வாராக இருக்கும்.
வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மணமக்கள் நீடூழி” பாடல் ஒலிக்காத திருமண வீடுகளையோ மண்டபங்களையோ “பிஸ்மில்லாஹ் என்றே ஆரம்பம் செய்யுங்கள் நம் பெருமான் ரசூலுல்லாஹ்வின் பாதை செல்லுங்கள்” என்று துவங்கப்படாத வணிக நிறுவனங்களையோ காணமுடியாத காலம் அது. பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கையை அவர் கனத்த குரலில் பாடும்போது நாம் நெகிழ்ந்துபோய் கேட்டுக்கொண்டிருந்தோம்.
மதரஸாவில் நபிகள் பெருமானாரின் சரித்திரம் சார்ந்த பேச்சை தோட்டத்துலெபை ஹழரத் பேசிக்கொண்டிருக்கையில் “இறுதித் தூதின் நுபுவத்தொளிரும் தங்கள் முதுகிலே முத்தம் இடுவதற்கும் தொடுவதற்கும் இதழ்கள் துடிக்குதே” என்று நெகிழ்வார். நாங்கள் அப்போது சீரியஸாகக் கேட்போம் “இவ்வளவு உணர்ச்சிகரமா பாடியிருக்காரே அவருக்கு கண்டிப்பா சுவர்க்கம்தான ஹஜரத்..? என்று. “அத முடிவு பண்றவன் அல்லா மட்டுந்தாம்ப்பா” என்று சொல்பவர் “தாயிஃப் நகரின் கல்லடிகள் பட்ட தழும்பிலே…..” என்று தொடரும்போது மட்டும் கட்டுப்படுத்தவே முடியாமல் துண்டை எடுத்து முகம்பொத்தி அழுவார்.
தாயிஃப் நகரவாசிகள் மீது எங்களுக்கெல்லாம் இன்னுமே கோபம் தீரவில்லை. பலமுறை ஹஜ் உம்ரா செய்தபோதிலும் நண்பர்கள் பலரும் அழைத்தபோதிலும் “ரசூலுல்லாவை அடிச்சுத் துரத்துன ஊர்ல பாக்கறதுக்கு எனக்கு ஒண்ணுமில்ல” என்றுவிட்டோம்.
கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு “மக்கத்து மன்னர் தர்பார் வாசல் வேத வெளிச்சம் தெரிகிறது” பாடல் தொகுப்பு கேசட் வெளியானபோது தற்செயலாக நாகூர் சென்றிருந்தேன். வழமையாக மார்கெட்டிங் நிமித்தம் தமிழ்நாடு முழுக்கப் பயணிக்கும் தருணங்களில் எனக்கு இயல்பாகவே இருக்கும் இறைநேசர்களின் மீது உண்டான நேசத்தின் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிபுரியும் போது தங்குமிடமாக நாகூரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம்.
நாகூரில் நாகூர் ஹனீஃபாவின் தங்கும் விடுதி இருக்கிறது, தொடக்கத்தில் அங்குதான் தங்குவோம். அங்குள்ள மேலாளரிடம் நாகூர் ஹனீஃபா இப்போது எங்கிருக்கிறார், இங்கு வந்தால் எந்த அறையில் தங்குவார், எப்படி நடந்து கொள்வார் என்றெல்லாம் அவர் பேச்சாகத்தான் இருக்கும். அறையில் அமர்ந்தவாறு “மதினா நகருக்கு போக வேண்டும், எங்கள் மன்னர் முஹம்மதைக் காண வேண்டும்” பாடலை உரக்கப் பாடிக் கொண்டிருப்பேன். “ஆரத்தழுவி என் ஆவி பிரிய வேண்டும், மன்னர் முஹம்மதே ஷஹாதத் கூற வேண்டும் “என்று கண்களில் நீர் கசிய உச்ச ஸ்தாதியில் பாடி முடிக்கும்போது திடீரென நாகூர் ஹனீஃபா அங்கு வருவதாகவும் நான் பாடுவதைக் கேட்டபடி அறைக்கே வந்து “அருமையா பாடனீங்க தம்பி” என்று கட்டியணைத்துப் பாராட்டுவதாகவும் நினைத்துக் கொள்வேன். அவ்வளவு சுகமாக இருக்கும் அந்த நினைப்பு.
இரவு உறங்கி முன் அதிகாலை தஹஜ்ஜத் நேரம் முதல் வெடி வெடித்ததும் கிளம்பி வெளியே ஒரு சாயா குடித்தபடி உலாத்தினால் திறந்திருக்கும் ஒவ்வொரு கடையிலிருந்தும் நாகூர் ஹனீஃபாவின் பாடல் வரிசைகள் ஒலித்துக் கொண்டிருக்கும். “ஹீரா குகையில் இறங்கிய வசனம் கிழக்குக் கதிராய் எழுகிறது” எனும் கனத்த உரத்த குரல் சூரியனைக் கட்டி இழுத்து வந்து கண்முன் நிறுத்தினால், “தாஹா நபியின் புன்னகை அங்கே தென்றல் காற்றாய் தவழ்கிறது” எனும் வரிகளின் ஈரம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் கனிந்த புன்னகையை மனதில் இறுத்தி நினைவுகளில் குளிர்பரப்பி நிறைக்கும். “விழிகள் ஒருநாள் நபிகள் பாதம் பார்த்து விடவே விழிக்கிறது, மொழிகள் எல்லாம் அவர்புகழ் பாடி சலாத்தை சொல்லத் துடிக்கிறது” வரிகள் ஆன்மாவுக்குள் ஊடுருவி நபிகளார் மீதான நேசத்தில் திளைத்திருக்கும் இதயத்தை உருக்கி உடம்பின் மொத்த அணுக்களும் தளர்ந்து இளசான நொங்கின் சோறுபோல இளகி வழிந்து உருகி தர்ஹாவுக்குள் நுழைந்து எஜமானின் தர்பாரில் பாதம் தலையில் தாங்கி வெள்ளிக்கதவுகளை முத்தமிட்டு கால்மாட்டின் கண்களை ஒற்றி இடப்பக்க சிறு ஜன்னலில் முகத்தை ஊன்றி “அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா சைய்யது அப்துல் காதிர் ஷாஹுல்ஹமீது பாதுஷா,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாத்துஹூ” எனும் முதல் ஸலாம் மட்டுமே நடுக்கத்துடனும் தழுதழுப்புடனும் உதடுகளிலிருந்து வெளிப்படும்.
அதன் பின்னர் மொத்த உடலும் குலுங்கிக் குளிர்ந்து உதடுகள் துடிதுடிக்க கண்ணீர் மட்டுமே வெளியாகிக் கொண்டிருக்கும். கண்ணீரே மொழியாகி, கோரிக்கைகளற்ற சமர்ப்பணமே பிரார்த்தனைகளாகி, மானசீக உரையாடலே வஸிய்யத்தாகி பூரணித்து நிறைந்த மனதுடன் சுப்ஹ் தொழச்செல்வேன். பின்னர் இந்தப்பாடலை எழுதியது காயிதேமில்லத் குடும்பத்தைச் சேர்ந்தவரும் ஏ.கே.ரிஃபாயி அவர்களின் மகனுமாக ஹிலால் முஸ்தஃபா அண்ணன் எனும்போது இன்னமும் அந்தப்பாடல் நெருக்கமாக இயைந்து நிற்கிறது.
அதேபோல உஸ்தாதுமார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சிறப்பு,குணநலன்கள் பற்றிக் கூறும்போதும் “உம்மி நபி” என்பதன் விளக்கத்தைக் குறிப்பிடும்போதும் “ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா நபி நாயகம் அல்லவா, கானத்தில் நானதைக் கொஞ்சம் இங்கு சொல்லவா” பாடலை பாடச்சொல்லி விளக்குவார்கள். “உம்மி நபின்னா ஓதப்படிக்கத் தெரியாத நபி இல்லத்தா… ஓதப்படிக்க இன்னொரு மனுசன் கத்துக்கொடுக்கத் தேவைப்படாத நபி” என்று அந்த வரிகளை மெல்லச் சொல்லுவார்கள்.
“பள்ளி சென்று படித்ததில்லை / பாடம் ஏதும் கற்றதில்லை
சொல்லித்தரும் தகுதி இந்த / துனியாவில் எவர்க்குமில்லை
அல்லாஹ்வே ஆசிரியன் / அனைத்துமே ஆச்சர்யம்
சொன்னதெல்லாம் நீதிகளே / சத்தியத்தின் செய்திகளே”
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவங்களுக்கு கத்துக்கொடுக்க இன்னொரு மனுசனுக்கு தகுதி உண்டுமா… அவங்கதானே அகிலத்துக்கே அருட்கொடை, அவங்கதானே கீர்த்தி பெற்ற மகாபுருஷன், வர ஃபஃனா லக திக்ரக்னு அல்லாவே சொல்லிட்டானே. இன்னக்க லஅலா ஹுளுக்கிள் அளீம்னு அல் கலம் சூரால இன்னும் சொன்னானே “மகத்தான நற்குணத்துக்கு மேலதானே ரசூலுல்லாஹ் இருக்காங்க” என விளக்கும்போது அனைவரும் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருப்போம்.
முதல்முறையாக 2006இல் ஹஜ்ஜுக்குச் சென்றபோது காஃபதுல்லாஹ்வை கண்நிறைந்து கண்ட அந்த நொடியில் உள்மனதுக்குள் ஒலித்தது நாகூர் ஹனீஃபாவின் “காணக்கண் கோடி வேண்டும் காபாவை” பாடல்தான். மட்டுமின்றி மினா அரஃபா முஜ்தலிபா போன்ற இடங்களிலும் மற்றுமுள்ள மக்கா மதினா ஆகிய இரு புனித தலங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நுழையும்போது அந்த இடம்சார்ந்த வரிகள் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். மக்காவிலிருந்து புனிதமதினா நகருக்குச் செல்லும்போது பேருந்தில் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் மீதான நாகூர் ஹனீஃபாவின் பாடல்களைப் போட்டிபோட்டுப் பாடிக்கொண்டிருந்தோம்.
“மதினா நகருக்குப் போகவேண்டும்,
எங்கள் மன்னர் முஹம்மதைக் காணவேண்டும்”
“போவோம் மதீனா புகழ்பாடியே நாம்
பயகம்பர் வாழும் அருள் வாசல் தேடி”
“மதினாவில் அரசாளும் மகராஜரே
மறைவேதம் தனைத்தந்த மஹமூதரே”
என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகத்தில் நபிநேசத்தை உணர்த்திச் செல்லும். லால்பேட்டை யஹ்யா நானா அவர்களுடன்தான் முதல் ஹஜ்ஜை நிறைவேற்றினேன். சுவர்க்கத்துப் பூங்கா என நபிகளாரால் முன்மொழியப்பட்ட “ரவ்ளதுல் ஜன்னா”வில் நானாவை அழைத்துச்சென்று தொழவைத்து ரவ்ளாவின் திருமுன் நின்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கும் அபூபக்கர், உமர் (ரலி) ஆகிய கலிஃபாக்களுக்கும் ஸலாம் உரைத்துவிட்டு வெளியே வந்ததும் நானா, கால்மாட்டில் வெகுநேரம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். யாரிடமும் எதுவும் பேசவில்லை. அந்த மெளனமும் அவர்களது ஈரம் ததும்பும் கண்களும் ஆயிரம் மொழிகளில் பேசிக்கொண்டிருந்தன.
அதன் பின்னர் மதினாவில் மஸ்ஜிதுன்னபவியின் முன் வளாகத்தில் நானாவுடன் வழமையாக அமர்ந்திருக்கும்போது “ரவ்ளாக்கு போய் ஸலாம் சொல்லிட்டு வரலாமா நானா” எனக்கேட்டால் “நீங்க போய்ட்டுவாங்க தம்பி” என்று அனுப்பி விடுவார்கள். அப்படி ஒரு முறை சென்று திரும்பி வந்து பார்த்தால் மார்பிள் போடப்பட்ட வளாகத்தை அடுத்த புழுதிபடிந்த வெளிப்பகுதியில் நானா அசைந்தபடி படுத்திருந்தார்கள். பஸ்ஸில் அமர்ந்தாலும் ஒரு பச்சைத்துணியை முழுசாக விரித்து அமரும் நானா,எங்கு அமர்ந்தாலும் எப்போதும் கீழே துணியை விரிக்காமல் அமர மாட்டாத மனிதர் இப்படி கீழே உருண்டு கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து ஓடிச்சென்று “நானா நானா” என்று உசுப்ப, “ஒன்னுமில்ல தப்பி சும்மாதான்” என்றபடி எழுந்து அமர்ந்து கொஞ்சம் ஜம்ஜம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் மெல்லக் கூறினார்கள். “புஷ்பங்களின் மகரந்தமாம் மதினப்புழுதியில் நான்புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்குதேன்னு ஹனீஃபா அண்ணன் பாடினாரே, அந்த மனுசன் எந்த நிய்யத்துல பாடிருப்பாருன்னு தோணுச்சு அதான் கொஞ்சம் உருண்டு பாக்கலாமேன்னு” என்று.
அந்த ஹஜ்ஜின்போது, குறிப்பாக மஸ்ஜிதுன்னபவியில் ஸலாமுன் விதா எனும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் விடைபெறும் ஸலாம் சொல்லிவிட்டுக் கிளம்பும்போது நிகரற்ற ஒரு ஆன்மீக அனுபவம் கிடைத்தது. எல்லாவற்றையும் சொல்லிவிட முடிகிறதா என்ன.. மேலும் அகப்பயணத்தின் வழித்துணைகள் அந்தரங்கமானவை அல்லவா.
இவ்வாறாக ஒரு தமிழ் முஸ்லிமின் வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒவ்வொரு வாழ்வனுபவங்களிலும் வழிநடத்தும் ஆசானாக, கைகோர்த்து உடன்வரும் வழித்துணையாக, ஆன்மீகப் பயணத்தின் ஷாரிக்காக, உள்ளனுபவங்களின் சாட்சிக்குரலாக உடனிருந்து ஒலிக்கும் மனசாட்சியாக நிலைத்து நிற்கும் இறவாக்குரல் நாகூர் ஹனீஃபா அவர்களுடையது. இந்தச் சிறு கட்டுரையில் நான் பகிர்ந்து கொண்டது என் வாழ்வுப் பயணத்தில் நாகூர் ஹனீஃபாவின் பங்களிப்பின் ஒரு சதவிகிதத்தைக் கூட அல்ல. சொல்லாத பெருவாழ்வு இன்னும் மீதமிருக்கிறது.


