இசைமுரசு எனும் பெருங்கடல்

0
455
உதய சூர்யா

அந்த ஒரு அழைப்பு இத்தனை தேடலைத் தரும் என்று எதிர்பர்க்கவில்லை. ஒருவரைப் பற்றி  இத்தனை பிரமிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

சிங்கையின் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஆசிரியர் திரு.ஷாநவாஸ், பிஸ்மி இணைய வானொலிக்காக ரஹமத் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்க முடியுமா என்ற கேள்வியோடு அந்த அழைப்பு தொடர்ந்தது. எங்களுடைய அழைப்பில் பிஸ்மி வானொலியின் நிறுவனர் திரு.சீனி ஜாபர் கனியும் இணைந்து கொண்டார். இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களை பற்றி 30 நாட்கள் நிகழ்ச்சி வழங்கப் போகிறோம் என்று ஆசிரியர் ஷா பகிர்ந்தபோது நாம் ஒரு பெருங்கடலுக்குள் நீச்சலடிக்கப்போகிறோம் என்று கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை.

“என்றென்றும் நாகூர் ஹனிபா” என்ற பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் 30 நாட்களுக்குள் அரைநூற்றாண்டிற்கும் மேலாக இஸ்லாமிய இசையுலகிலும் திராவிட சிந்தாந்தங்களைப் பரப்பும் திறவுகோலாகவும் செயல்பட்ட மாமேதையைப் பற்றித் தேடத்தேடக் கிடைத்த எண்ணிலடங்கா விடயங்களின் அருமையான அனுபவங்களை பகிர்வதில் மகிழ்ச்சி என்பதை தாண்டி மனநிறைவும் அடைகிறேன்.

முதல் மூன்று நாட்கள் இசைமுரசைப் பற்றி அனைவருக்கும் தெரிந்த பொதுவான கருத்துகளோடு நிகழ்ச்சி ஒலிபரப்பானது. தங்களுக்கு பிடித்த பாடலுக்கான காரணங்களைப் பகிரும் நேயர் விருப்பப் பகுதியும் அதில் இணைக்கப்பட்டிருந்தது.

நாகூர் ஹனிபா என்றவுடன் நம் நினைவில் வரும் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலைப்பற்றி மட்டுமே நான்காம் நாள் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. அந்தப்பாடல் நிச்சயம் மதங்களை கடந்து மனிதங்களை ஒன்றிணைக்கும் பாடல். இந்தப் பாடலை எழுதிய கவிஞர் அப்துல் சலாம் ஒரு துணிக்கடை உரிமையாளர். இவரை பணக்காரக் கவிஞரே என்றுதான் அன்பாக அழைப்பாராம் நம் இசைமுரசு அவர்கள்.

இந்தக் கவிஞரைப் போன்று இசைமுரசின் பாடல்களின் கவிஞர்களைத் தேடியபோது புலவர் ஆபிதீன், வண்ணக்களஞ்சிய புலவரின் வழி தோன்றல் கவிஞர் நாகூர் சலீம், புலவர் சாதிக், மதிதாசன் என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டே போனது. இசைமுரசுடன் நீண்ட நெடிய அனுபவங்களை கொண்ட இசைக் கலைஞர்கள் நவாப் ஜான், இன்பராஜ் ஆகியோரின் அபார இசைஞானத்தை வெளி உலகிற்கு இந்நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தினோம்.

பல்வேறு தளங்களில் இருந்து இசைமுரசின் தகவல்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சியைத் தொடந்து வடிவமைத்தோம். இசைமுரசோடு சம காலத்தில் பயணித்த கவிஞர் நாகூர் காதர் ஒலி அவர்கள் பல சுவாரஸ்யமான ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டு எங்களது இப்பணி சிறப்படைய பெரும் பங்கேற்றினார். இசைமுரசுடன் நேரடி தொடர்பில் இருந்த அவரது குடும்ப நண்பரின் மகனார் பக்ரைன் எழுத்தாளர் அப்துல் ஹையூம், சூரிய பிறை எழுத்தாளர் திரு.தமீம் அவர்களது படைப்புகளும் இந்நிகழ்ச்சிக்குப் பக்க பலமாக இருந்த்து.

குறிப்பாக கவிஞர் நாகூர் காதர்ஒலியுடனான உரையாடல்கள் இசைமுரசுவை பற்றி கேட்டிராத பல தகவல்களின் பொக்கிஷமாக இருந்தது. நாகூரின் பல தெருக்களையும் மேடைக்கச்சேரிகளையும் கண்முன்னே நிறுத்தினார். புகழின் உச்சியில் இருந்தபொழுதும் இசைமுரசு அவர்கள் வாழ்ந்த எளிமையான வாழ்வை எளிதாக எடுத்துரைத்தார் இந்த பக்கத்து தெருக்காரர்.

ஆசிரியர் ஷாநவாஸ் அன்றன்றைய நிகழ்ச்சிக்கான கருப்பொருளை வழங்கிவிடுவார். அதனை ஒலி வடிவாக்கத்திற்கு ஏற்றாற்போல் இயக்கி, தொகுத்து, பாடல்களை இடைச்சொறுகல் செய்வேன். எங்கள் நிகழ்ச்சியில் சில இடங்களில் இசைமுரசின் பாடலைத் தாண்டி அவரது குரல் பதிவுகளும் ஆங்காங்கே வெளிப்படும். திமுக சார்ந்த பேச்சுகளைத் தாண்டி இஸ்லாமிய பாடல்கள் என்று வரும்போது மேடைகளில் பாடிய பாடல்களின் தொடக்கத்திலோ, அல்லது இடைப்பட்ட பகுதியிலோ அவரது பேச்சுகள் அரிதாக இடம் பெற்றிருக்கும். மேடைக்கச்சேரிகளில் அவர் பேசியவை தவிர்த்து பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். மேடைகளில் அவர் பேசிய பேச்சுகள் நம்மை கச்சேரிகளோடு ஒருங்கிணைக்கும் உயிரோட்டாமாக இருக்கும். பெரியோர்களே என ஆரம்பிக்கும் அவரது குரலின் ஆழம் கேட்பவர்களை அமைதி கொள்ளச் செய்யும். கூட்டத்தை ஒருங்கிணைக்கும். செவிமடுக்கச் செய்யும். அத்தனை சிறப்புகளுண்டு அந்த வெண்கலக் குரலுக்கு.

இந்த நிகழ்ச்சிக்கான தொகுப்புப் பணியில் முழுநேரமாக ஈடுபடுத்திக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. அவரது நூற்றுக்கணக்கான பாடல்களை முழுமையாக கேட்க வேண்டியிருந்தது. இசை மீது ஆர்வம் கொண்ட எனக்கு அது மிகவும் சுகமாகத்தான் இருந்தது. கம்பீரமான, கனிவான, கணீர்க் குரலைக் கேட்டுக்கொண்டே அதையே வேலையாகச் செய்வது எத்தனை இன்பம்!!

எங்கள் வீட்டிலும் காலையும் மாலையும் இசைமுரசின் குரல் கோலாச்சிக்கொண்டிருந்தது. என் ஏழு வயது மகள் இன்மொழி தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்து பின்னர் ரசித்துப்பாடத் தொடங்கினாள். அவளுக்குள் இஎம் என்றால் இசைமுரசா அல்லது இஸ்லாமிக் ம்யூசிக்கா என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள். இப்படி தலைமுறை தாண்டி மனங்களை வென்றிருக்கிறார் இசைமுரசு.

இறைவனிடம் கையேந்துங்கள் மற்றும் ஓரு சில இஸ்லாமிய பாடல்களைத் தவிர ஒரு செய்தியாளாராகப் பணியாற்றியதால் ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்க’, ‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ போன்ற திராவிட இயக்க வரலாறு கூறும் பாடல்களை அறிந்துவைத்திருந்தேன். ஆனால் நிகழ்ச்சி தயாரிப்பின்போது இத்தனை அருமையான இஸ்லாமிய பாடல்களை நாம் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறோமே என்று சற்று வருத்தமும் இருந்தது.

இஸ்லாமிய மார்க்கத்தையும், நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, பாத்திமா வாழ்ந்த விதம் என ஒட்டு மொத்தமாக  கவிஞர்களின் படைப்பை எளிய மக்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது அவரின் வெண்கலக்குரல்.

அவற்றில் கதைப்பாடல்கள் என்னை மிகவும் சிலாகிக்க வைத்தவை. ஒருநாள் மதீனா நகர்தனிலே என வரும் கதைப்பாடலை நூறு முறையாவது கேட்டிருப்பேன் அந்த 30 நாட்களில். நீண்டகதையையும் கதை மாந்தர்களின் நவரசங்களையும் தன்குரலில் அழுத்தமாய் வலியுறுத்திப் பாடியிருப்பார் .அவருடைய குரல் அந்த ஓங்கு மஸ்ஜிதுவை நம் கண்முண்னே திரையிட வைக்கும்.

அதேபோல அறிஞர் அண்ணா மறைந்தபோது இவர் பாடிய ‘சிரித்துச் செழித்த உன் முகமெங்கே?’ பாடல் உயிரோட்டமாய் அண்ணாவின் புன்சிரிப்பை அவரின் பேச்சை மீட்டெடுக்கும். சம வயதை ஒத்த முத்தமிழரிஞர் கலைஞரும் இசைமுரசு அவர்களும் இளம் வயதிலேயே திராவிட சித்தாந்தின் மூலம் தோழர்களான  வரலாறு என ஏற்கனவே குறிப்பிட்டது போல அரைநூற்றாண்டுக்கும் மேலான ஒரு அத்தியாயத்தை கற்கும் வாய்ப்பு நோன்பு பெருநாள் வழியாக கிடைத்த்து. 

தமிழகத்தில் நாகூரின் கவுதியா பைத்து சபையில் தொடங்கி, திருமணக் கச்சேரிகளின் வாயிலாக உலக அரங்கை தொட்ட இசைமுரசு  இ.எம்.ஹனிபா அவர்களின் பயணத்தை அறிவது ஆழ்கடலில் நீந்தும் அனுபவமே. இந்த மனிதரைப்பற்றி ஆராயும்பொழுது அந்த ஊரின் சிறப்பு, ஊர்க்காரர்களின் இலக்கிய அனுபவம், இசை அனுபவம், நாடக அனுபவம் என அனைத்தையும் என்னால் அனுபவிக்க முடிந்தது. நிச்சயம் நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்ட ஒவ்வொரு நேயருக்கும் இந்த உணர்வு ஏற்பட்டு இருக்கும் என்பதில் மாற்றமில்லை. முத்தமிழையும் இந்த நாகூர் வளர்த்தெடுத்திருக்கிறது என்பதை இ.எம்.ஹனிபா என்ற மேதையைப்பற்றி பேசும்போது அறியக் கிடைக்கிறது.

நம்மை சுதந்திர வானில் பறக்கவிட்டால் நாம் அடையும் எல்லைகள் அளவில்லாமல் இருக்கும். அப்படி இந்த நிகழ்ச்சிக்கான முழு சுதந்திரத்தையும் திரு.ஷாநவாஸ் அவர்கள் வழங்கியதால் சிறப்பான படைப்பை வழங்கமுடிந்தது. அந்த சுதந்திரத்தின் வேர் தமிழின் மீது தீரா ஆர்வம் கொண்ட ரஹமத் முஸ்தபா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. முஸ்தபா அவர்கள்தான். ஒலி வடிவ நிகழ்ச்சி இன்று எழுத்து வடிவமாக ஆவணப்படுத்துதலுக்கு தயாராகி இருக்கிறது என்றால் அந்த தமிழ் ஆர்வமே மூலதனம். இதில் சிறுதுளியாய் பங்கு அளிக்க வாய்ப்பு வழங்கியதற்கு  மகிழ்ச்சியுடன் நன்றி.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார ஊர்தியாக இருந்த அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த அரசு நாகூர் சில்லடி கடற்கரையில் அமையவிருக்கும் பூங்காவிற்கும், அவர் வாழ்ந்த தைக்கால் தெருவிற்கும் அவரது பெயரை சூட்டி கூடுதல் பெருமை சேர்த்திருக்கிறது.

“என்றென்றும் நாகூர் ஹனிபா” என்று முதல் அழைப்பில் கேட்டபோது இத்தனை அனுபவங்களைப் பெறுவேன் என்று எதிர்பார்கவில்லை. அவை நாகூரை நோக்கிப் பயணிக்கத் தூண்டும் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒலித்தகடுகளில் பாடிய பாடல்களைக் காட்டிலும், மேடைக்கச்சேரிகளில் மக்களின் முன்பு அவர் ரசித்துப்பாடிய பாடல்களின் பதிவுகளே மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது; ரசிக்க வைக்கிறது; நம்மைப் பேச வைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த மேடையை நோக்கி நம் எண்ணத்தை அசைபோட வைத்திருக்கிறது.

இசைப்பிரியர்களை ஒருங்கிணைக்கும் உறவுப்பாலமாக காற்றலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது அந்த வெண்கலக்குரல்!!