
வணக்கம் சிங்கப்பூர்!!
ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சிங்கப்பூர் மே மாதம் 3ஆம் தேதி வாக்களிப்பு முடிந்து அன்றிரவே மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
மறு வாரம் மே 9,10, 11 தேதிகளில் தமிழ்ப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ‘தி பிளாசா’ என்ற நூலக நுழைவாயிலில் உள்ள திறந்த வெளி அரங்கத்தில் நம் தமிழ்ச்சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக “SG60 தமிழ்ப்புத்தகத் திருவிழா” நடைபெற்றது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் பெரும் முயற்சி எடுத்து இந்த விழாவை நடத்தியது மிகவும் பாராட்டத்தக்கது. ஊர் கூடி தேர் இழுத்தது போல் மூன்று நாட்களும் தொடர்ந்து நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் அனைத்து தமிழ் அமைப்புகளும் பங்கெடுத்து புத்தகத்திருவிழாவிற்கு மேலும் சுவை சேர்த்தன.
மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் என்ற மூன்று நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர். எல்லா வயதினருக்கும் புத்தகங்கள் இருந்தன. மூன்று நாட்களும் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். பல நண்பர்கள் சந்திப்பு நிகழ்ந்தன. புத்தக வெளியீடுகள், கவியரங்கம், பட்டி மன்றம், நாடகம் என பல்சுவை நிகழ்ச்சிகள் புத்தகத்திருவிழாவிற்கு மெருகூட்டியது.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.
சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை editor@serangoontimes.com முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.
ஆசிரியர் குழு, தி சிராங்கூன் டைம்ஸ்

