(கட்டுரை) நபிகள் நாயகம் குறித்த வாழ்வியல் பார்வை:

காலச்சுவடு பதிப்பாக 2024 டிசம்பரில் முடவன்குட்டி முகம்மது அலி வெளியிட்டுள்ள “நபிகள் நாயகம் சில முக்கிய குறிப்புகள்” இஸ்லாம் குறித்து போற்றத்தக்க பல நூற்களை வழங்கியுள்ள ஆய்வறிஞர் ஜியாவுதீன் ஸர்தாரின் Muhammad: All that Matters நூலின் தமிழ் மொழிமாற்றுப் படைப்பு. ஜியாவுதீன் பிரிட்டனின் சிறந்த நூறு அறிவுஜீவிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்புக்குரியவவர். நபிகள் பெருமானார் குறித்து இதுகாறும் வெளிவந்துள்ள நூற்களில் பரவலாக அறியப்படும் முப்பதுக்கும் மேற்பட்ட நூற்களை ஆய்வுசெய்து தந்துள்ள ஜியாவுதீனின் மூல நூலினை சீரிய மொழிமாற்றுப் படைப்பாக முடவன்குட்டி வழங்கியுள்ள இந்தநூலின் படைப்பு நேர்த்தி பாராட்டுதலுக்குரியது.

நபிகள் நாயகம் குறித்த பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கி நூலில் பதினோரு இயல்களில் முடவன்குட்டி மூலநூலாசிரியர் தந்துள்ள விவரங்களை விரித்து வைத்துள்ளார். முகம்மது (ஸல்) அவர்களை புரிந்துகொள்ளல் என்னும் முதலாவது இயலில் நபிகளாரின் வாழ்க்கையை அறிந்துகொள்ள எத்தகைய சான்றுகள், வரலாற்று ஆவணங்கள் கிடைத்துள்ளன என்பதைத் தெளிவாகவும் அழகாகவும் பட்டியலிட்டுள்ளார். திருமறை குர்ஆன், நபிகளாரின் நன்மொழிகள், கடிதங்கள், உடன்படிக்கைகள், கவிதைகள், வாய்மொழித் தகவல்கள், வரலாற்றாசிரியர்களும் முஸ்லிம் கல்வியாளர்களும் சேகரித்த தரவுகள் உள்ளிட்டப் பல்வேறு சான்றாதார வகைமைகள் குறித்து இவ்வியலில் தொட்டுக்காட்டிப் பதிவுசெய்துள்ளார்.

இஸ்லாத்திற்கு முந்தைய அரபு மக்களின் வாழ்க்கைமுறை, வணிகம், பண்பாட்டுக்கூறுகள், வழிபாட்டு முறைகள், தீபகர்ப்பத்தின் நிலப்பரப்பு, அரசியல், நிர்வாகக் கட்டமைப்பு, சமூக அமைப்பு, அம்மக்களின் கலை இலக்கிய ஆர்வம் போன்றவை குறித்து இயல் இரண்டில் பதிவிட்டுள்ளார்.  பெண்களுக்கு விவாகரத்து மற்றும் மறுமணம் செய்துகொள்ளும் உரிமை இஸ்லாத்துக்கு முந்திஇருந்தே அச்சமூகம் பெற்றிருந்தது என்னும் செய்தியும், முக்கிய நகரங்களான மக்கா, மதீனா, தாயிப் மற்றும் புனித கஅபா குறித்த வரலாற்றுச் சிறப்புச் செய்திகளும் வணிகத் தொடர்புகள் பற்றிய விவரங்களும் இவ்வியலில் தரப்பட்டுள்ளன.

நூலின் மூன்றாவது இயலில் அண்ணல் பெருமானாரின் நபித்துவத்துக்கு முந்தைய வாழ்க்கை சார்ந்த செய்திகள் பேசப்படுகின்றன. அண்ணலாரின் குழந்தைப்பருவம், அநாதை வாழ்க்கை, வணிகத் தொடர்பு, கதீஜா அம்மையாரை மணம்புரிதல், தனித்திருந்து தவம் மேற்கொள்ளல் போன்ற விவரங்கள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன. ஓரிறைக் கொள்கையை அப்போதே மேற்கொண்டிருந்த ஹனீபாக்கள் பற்றிய செய்திகள், வணிகப் பயணங்களின்போது கிறிஸ்துவத் துறவியரைச் சந்தித்துக்கொள்ளுதல் அதன்மூலம் வரலாற்றின் சில வழித்தடங்களைத் தெரிந்துகொள்ளுதல், தனது இனக்குழுவினரின் எழுச்சி, வீழ்ச்சி போன்ற வரலாற்று உண்மைகளைக் குறித்த அறிவுதேடல் வேட்கையை நபிகளார் வளர்த்துக் கொள்ளல் போன்ற செய்திகளை இந்த இயலில் பார்க்க முடிகிறது. 

மக்காவில் இறைத்தூதர் என்னும் நான்காவது இயல் திருமறை குர்ஆன் அருளப்பட்ட வரலாறு, வஹீ என்னும் இறைச்செய்திகள் அருளப்பட்டது குறித்த மேற்குலகின் அறிஞர்களின் கருத்து, துவக்ககால இஸ்லாமின் நிலை, அண்ணல் நபிகளின் அருள்மொழிப் போதனைகள், முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள், அபிஸீனியா மற்றும் தாயிப் நகரங்களுக்கு நபிகளாரின் பயணமும் அவற்றின் நோக்கமும், விண்ணேற்றம் என்னும் மிஹ்ராஜ் பயணம் குறித்த குறிப்புகள் போன்றவை இவ்வியலில் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய மார்க்கம் என்னும் இறைநெறியின்பால் ஈர்க்கப்பட்டவர்களில் முதன்மையர்களாக அன்றைய சமூகத்தின் அடித்தட்டு மக்கள் இருந்தார்கள் என்ற செய்தியையும் இந்த சமூக மாற்றங்களைக் கண்ணுற்ற மேல்தட்டுக் குடியினர் கலக்கமுறுவதும் கலகம் செய்வதும் இந்த இயலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகப் பேசப்படும் ஹிஜ்ரா என்னும் புலம்பெயர்தல் நூலின் இயல் ஐந்தில் இடம்பெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இறை கட்டளைப்படி நபிகளார் மக்காவிலிருந்து மதீனா நகருக்குப் புலம்பெயர்ந்தபோதும் மக்காவாசிகள் அன்னாரிடம் ஒப்படைத்திருந்த அடைக்கலப்பொருட்களையும், திருப்பித் தரவேண்டிய கடன்தொகைகளையும் உரியவர்களிடம் ஒப்படைக்கவேண்டித் தனது மருமகனார் அலியை மக்காவிலேயே தங்கியிருக்கச்செய்து அக்கடமையினை நிறைவேற்றிவரப் பணித்த நபிகளாரின் நேர்மை இந்த இயலில் நாம் காணும் அரிய செய்தியாகும். 

புகழ்பெற்ற மதீனா அரசியல் சாசனம் குறித்து இயல் ஆறில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இச்சாசனம் ஒரு ஒருங்கிணைந்த சமூக ஒப்பந்தம். குடிமக்களின் சமய சமூக நல்லிணக்க நிர்வாக வரைமுறைகளைத் தெளிவுபடுத்திய ஆவணம். அடுத்துவரும் இயல்களில் நபிகளார் கலந்துகொண்ட போர்கள், செய்துகொண்ட உடன்படிக்கைகள் போன்றவை மிக நுட்பமாகப் பதிவுசெய்யப்படுகின்றன.

நபிகள் பெருமானின் நற்குண நலன்கள் குறித்து நூலின் இறுதி இயல் பேசுகிறது. நபிகளாரின் நேர்மை, எளிமை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகம் மற்றும் சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கம் ஓம்பும் போக்கு, மற்றவர் கருத்துக்களைச்  செவிமடுத்து மதித்திடும் பண்பு, மூட நம்பிக்கைகளை எதிர்த்து நிற்கும் துணிவு, கல்விகற்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சீர்மை, ஏழை, எளியோர், ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் முதியோர் ஆகியோர் மீது வேறுபாடு பாராட்டாமல் காட்டிவந்துள்ள பரிவு, கணவர், தந்தை, நண்பர், தலைவர், என்ற பல்வேறு நிலைகளிலும் நடந்துகொண்ட மதிப்புறு செயல்பாட்டுத்திறம் என்பனவாகிய நபிகளாரின் நற்குண நலன்களை பேசும் இவ்வியலின் பதிவுகள் தனிக் கவனம் பெறுகின்றன.

இந்நூலின் தனிச்சிறப்பு நூலின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள 35க்கும் மேற்பட்ட முக்கிய நூல்களைபி பட்டியலிட்டுத் தந்துள்ள பின்னிணைப்பு. மொழிபெயர்ப்பில் தனித்திறம்கொண்டுள்ள முடவன்குட்டி முகம்மது அலி இந்நூலை முதல்நூல்போல் வாசகர்களை உணரச்செய்யும் வல்லமையுடன் படைத்துத் தந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. இறைத்தூதர் அண்ணல் நபிகளாரின் அழகார் வாழ்வியலை பலகோணங்களில் நபிகள் நாயகம்: சில முக்கியக் குறிப்புகள் நூல் அற்புதமாக விரித்துவைத்துள்ளது.

முனைவர் எச் முஹம்மது சலீம்

mdsaleem@jamiyah.org.sg