
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக நீ சூன் லிங்க் சமூக மன்றத்தின் இந்திய நற்பணி செயற்குழுவின் சார்பில் இந்த ஆண்டு சனிக்கிழமை (12/04/2025) அன்று யூஷுனில் உள்ள நார்த் வியூ தொடக்கப்பள்ளியில் செந்தமிழ் மொழி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடக்கநிலை ஒன்று, இரண்டில் பயிலும் மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும், பிரிவு மூன்று, நான்கில் பயிலும் மாணவர்களுக்கு பொருள்களை காட்டிப் பேசும் போட்டியும், ஐந்து, ஆறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது.
விழா காலை சுமார் 9 மணிக்கு வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது. தமிழின் தனிச்சிறப்பையும் அதன் இலக்கிய செழிப்பையும் எடுத்துக்கூறும் பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தனர் நடன மணிகள். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் தன் தனித்தன்மையை பேணி வருகின்ற செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துக் கூறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்திய நற்பணி செயற்குழுவின் துணைத் தலைவர் திரு.சாந்தகுமார்.
மாறுவேட உடை அணிந்து மேடை ஏறிய சிறுவர்கள் வரலாற்று கதாபாத்திரங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர். பொருள்களை காட்டி பேசிய மாணவர்களும் பேச்சுப் போட்டியில் பேசிய மாணவர்களும் இலக்கிய நயத்துடன் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். மேடை எங்கும் தமிழின் அழகு ஒளிர்ந்தது. நீ சூன் லிங்க் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் திரு.டெரிக் கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தமது சிறப்புரையில் தாய்மொழி கற்றலின் அவசியம் குறித்து பேசியதோடு அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் 2016 முதல் தமிழ் மொழி விழாவை கொண்டாடி வரும் இந்திய நற்பணி செயற்குழுவினருக்கு தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. நடுவர்களுக்கும் தொண்டு ஊழியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரும்பாலானோர் பாரம்பரிய உடை அணிந்து வந்தது விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. குடியிருப்பாளர்களுக்கிடையே தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தையும் பற்றையும் அதிகரிப்பதே தங்கள் நோக்கம் என்றும் தமிழை விரும்பி போற்றி கொண்டாடுவதற்காகவே ஆண்டுதோறும் விழா எடுப்பதாகவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது. வகுப்பறைகளுக்கு அப்பால் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதில் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர். இறுதியாக நெறியாளர் நன்றியுரை நவில நல்லதொரு நிகழ்வில் கலந்து கொண்ட நெகிழ்ச்சியுடன் அனைவரும் விடை பெற்றனர்.


