(கவிதை) பங்குனி ஆமைகள்

அலைகடலின் நுரை ஒளியை

மரபணுவில் வைத்திருக்கும்.

இட்டுவைத்த முட்டைகளை

இயற்கையிடம் விட்டுவைக்கும்.

பல்லாயிரம் ஆண்டுகளாய்

பரிணமித்த உயிரனம்,

தெருவிளக்கின் வெளிச்சத்தால்

திசைமாறிச் செல்கிறது.

பட்டணத்தின் வீதியெங்கும்

பெருகிவிட்ட தெருநாய்கள்,

ஆமை குஞ்சுகளை

இரையாக்கி கொல்கிறது.

ஆமை நடை மூலமாக

முட்டைகளை மீட்டெடுத்து

அடைகாக்கும் மனிதர்கள் –

கடலை உயிர்ப்பிக்கும்

கற்றுணர்ந்த காவலர்கள்.

வங்கக் கடற்கரையில்

வாழிடம் தொலைத்துவிட்டு

மக்காத குப்பையிடையே

மணற்பரப்பில் இடம்தேடும்

பருவநிலை பிறழ்வறியா

பங்குனி ஆமைகள்.

அலைகடலின் நுரையொளியை

மரபணுவில் வைத்திருக்கும்.

இட்டுவைத்த முட்டைகளை

இயற்கையிடம் விட்டுவைக்கும்.

சதீஷ் முத்துகோபால்

satheesh.balu.m@gmail.com