(கட்டுரை) கவிதைகளை மொழிபெயர்த்தலின் சவால்களும் சாத்தியக்கூறுகளும்

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் சொற்கள் மட்டுமின்றி அதன் பின்னணியில் உள்ள பண்பாட்டையும் உணர்வுகளையும் மற்றொரு மொழியில் புதிய வாசகர்களுக்கு கொண்டுசெல்லும் ஒரு நுட்பமான செயல். இதில் கவிதைகளை மொழிபெயர்த்தல் என்பது மேலும் சிக்கலான ஒரு பணியாகும். ஏனெனில் கவிதை என்பது மொழியின் இசை, உணர்வு, வடிவமைப்பு, சிந்தனை என்றூ அனைத்தும் கூடிய ஒரு செறிவான வடிவமாகும். இந்நிலையில், கவிதைகளை மொழிபெயர்க்கும்போது எதிர்நோக்கும் சவால்களும் அதிலுள்ள சாத்தியக்கூறுகளும் முக்கியமாகக் கவனிக்கத் தக்கன.

மொழியின் தனித்துவமும் பாவனையும்

முதன்மையான சவால் என்பது மொழியின் இயல்பே. ஒரு மொழியின் சொற்கள் மற்றொரு மொழியில் அச்சு அசலாக பொருளடைவதில்லை. உதாரணமாக, தமிழ் மொழியில் “நினைவோடை”, “பரிகாசம்”, “அவசரம்” போன்ற சொற்கள் தனித்துவம் வாய்ந்தவை. இவை ஆங்கிலத்துக்கோ அல்லது வேறு மொழிக்கோ நேரடியாக மொழிபெயர்க்க முடியாது. இதுபோன்ற சொற்களில் உள்ள நுணுக்கங்களை மொழிபெயர்ப்பாளர் உணர்ந்து பொருத்தமான மாற்றுச் சொற்கள் அல்லது விளக்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

யாப்பும் இசையும்

கவிதையின் உருமொழி யாப்பு (structure), அலங்காரங்கள், மற்றும் இசைச்சொற்கள் (rhyme, rhythm) கவிதையின் உயிராகும். உதாரணமாக, கம்பன், பாரதி போன்றோரின் கவிதைகள் இசை மயமானவை. இவை “அதிரடி”, “இனிமை”, “ஒழுங்கமைவு” ஆகிய அம்சங்களால் சிறந்து விளங்குகின்றன. ஒரு மொழியில் உள்ள யாப்பை அப்படியே மற்றொரு மொழியில் கொண்டு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய சவால். சில நேரங்களில், பொருளை பாதுகாப்பதற்காக யாப்பைத் துறக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம்.

பண்பாட்டு மாறுபாடுகள்

கவிதைகள் பல நேரங்களில் சமூக, கலாசார, வரலாற்று பின்னணிகளுடன் பிணைந்திருக்கும். இவை ஒரே நிலைபாடு கொண்ட வாசகர் மன்றத்தில் கூடுதல் விளக்கமின்றி சமர்ப்பிக்க முடியாது. ஆகவே மொழிபெயர்ப்பாளர் அந்த பண்பாட்டு குறியீடுகளை விலக்காமல், உணர்வுடன் மற்றும் விவரங்களுடன் வாசகருக்குக் கொண்டுசெல்லவேண்டும்.

உணர்வுகளின் பிழைபடுதல்

கவிதையின் முக்கியமான அம்சம் உணர்வு (emotion) ஆகும். ஒரு மொழியில் உள்ள உணர்வுச் சொற்கள், வெளிப்பாடுகள், உள்ளார்ந்த விவரங்கள் மற்றொரு மொழியில் பிழையாகப் படக்கூடும். ஒரே சொல் வேறு மொழியில் வேறு உணர்வைத் தூண்டக்கூடும்.

சாத்தியக்கூறுகள் – கவிதை மொழிபெயர்ப்பின் அருமை

இத்தனை சவால்கள் இருந்தாலும் கவிதை மொழிபெயர்ப்பின் வாய்ப்பு பரந்தது. முதன்மையாக, இது உலக இலக்கியங்களை வாசகர்களிடம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பாகும். தமிழில் உலகப் புகழ்பெற்ற கவிதைகள் மொழிபெயர்ப்பு மூலம் மக்களுக்கு சென்றுள்ளன. இதேபோல், தமிழ்க் கவிதைகள் பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும், கவிதை மொழிபெயர்ப்பு என்பது இரு மொழிகளுக்கிடையே உள்ள கலாசாரத் தொடர்பை ஏற்படுத்தும் பாலமாகும். இது வாசகர்களை புதிய உலகங்களை நோக்கி அழைத்துச் செல்கிறது. கவிதையின் உருவகம், உள்ளார்ந்த கருத்து மற்றும் அமைப்புகள் மற்றொரு மொழியில் சீராக ஊட்டப்படும்போது அது ஒரு புதிய படைப்பாகவும் விளங்கும்.

இடைநடுவான மொழிபெயர்ப்புகளின் பங்கு

பல சமயங்களில் நேரடி மொழிபெயர்ப்புக்கு வழி இல்லாதபோது இடைநிலை மொழி (intermediary language) மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்படும். இதுவும் ஒரு சவாலாக இருக்கும், ஏனெனில் அதில் உணர்வுகள் பல தடங்களைக் கடக்கவேண்டியிருக்கும். இருந்தபோதிலும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் திறமையால் இந்த தடைகளை சமாளித்து வாசகர்களுக்கு முழுமையான அனுபவத்தை தருகின்றனர்.

மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை

மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் அல்ல; அது ஒரு புனைவாக மாறுகிறது. இங்கு மொழிபெயர்ப்பாளரின் கலைநயம், உள்ளுணர்வு, மற்றும் இலக்கிய புலமை மிக முக்கியமானவை. அவர் ஒரு கவிஞனாகவே மாற்றப்படுகிறார்; யாருடைய கவிதையை மொழிபெயர்க்கிறாரோ அவருடைய சிந்தனையை, எண்ணத்தை தன் உள்ளத்தில் ஊன்றி அதை மற்றொரு மொழியில் “மறுபிறப்பு” செய்கிறார்.

கவிதை மொழிபெயர்ப்பு என்பது பெரும் சவால்கள் நிறைந்த, ஆனால் அதைவிட ஆழமான சாத்தியங்கள் கொண்ட ஒரு கலைமாகும். அது மொழியின் எல்லைகளை கடந்து மனித உணர்வுகளை பரிமாறும் பாலமாக உள்ளது. இது மொழிகளை இணைக்கும் ஒரு பாலமாகவும், உலகத்தை புரிந்துகொள்ளும் வாயிலாகவும் அமைந்துள்ளது. இச்சவால்களை மதித்து, இவை நிகழ்த்தும் புதிய வாய்ப்புகளை வெளிக்கொணரும் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் இலக்கியம் மேலும் விரிவடைகிறது.

கவிதைகளை மொழிபெயர்ப்பதின் அழகியல் கோணம்

கவிதை என்பது மொழியின் எல்லைகளை மீறிச் செல்வதொரு கலை. அதில் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு உச்சரிப்பும், ஒவ்வொரு உளச்சுருக்கமும் ஒரு தனித்துவத்தை கொண்டிருக்கின்றன. கவிதையை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்குத் துல்லியமாக மொழிபெயர்ப்பது என்பது வெறும் மொழிமாற்றமல்ல; அது ஒரு கலையும், அதேசமயம் ஒரு அழகியல் (aesthetic) சவாலும்கூட.

மொழிபெயர்ப்பு என்பது துவக்கக் கவிஞனின் உள்ளுணர்வுகளை, அதனுடைய கலைநுணுக்கங்களுடன் சேர்த்து மற்றொரு மொழியில் மறுசீரமைத்தல். கவிதையின் உள்ளடக்கம் மட்டுமன்றி, அதன் ஒலிமுறையும் (phonetics), உருவகக் காட்சிகளும் (imagery), பாவனைகளும் (emotions) மற்றும் இசைப்பண்பும் (musicality) மொழிபெயர்ப்பின் நேர்த்தியை நிர்ணயிக்கின்றன. இவை அனைத்தையும் பேணிக்காத்து மொழிபெயர்ப்பது என்பது சிக்கலான பணியாகும்.

ஒரே வார்த்தைக்கு மொழிகள் இடையே ஒத்த அர்த்தங்கள் இருக்காது. ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட பிம்பம், மற்றொரு மொழியில் வேறுபட்ட பாவனையை உருவாக்கலாம். இதனால்தான் மொழிபெயர்ப்பாளரின் பங்கு மிக முக்கியமானதாகும்; அவன்  ஒரு கவிஞனாகவே ஆக வேண்டும். ஒவ்வொரு சொற்றொடரிலும் உள்ள பண்பாட்டு அடையாளங்களை புரிந்து கொண்டு, அவற்றை இலக்குமொழியின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றிச் சொல்லவேண்டும்.

அதே நேரத்தில், ‘சேர்த்து சொல்வதா? சீர்செய்து சொல்வதா?’ என்பதுபோல், உண்மையின் மீதான சுவாசத்துக்கும், வாசகருக்கான அனுபவத்திற்குமான சமநிலையை மொழிபெயர்ப்பாளன் கையாளவேண்டும். சில நேரங்களில், உள்ளடக்கத்தைவிட, அதன் தாக்கம் (impact) முக்கியமாகிறது. ஒரு கவிதை வரி வாசகனில் ஏற்படுத்தும் உணர்வை அதே அளவில் மீண்டும் உருவாக்க முடிந்தால் மட்டுமே அது ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாகக் கருதப்படுகிறது.

மொத்தமாக, கவிதை மொழிபெயர்ப்பு என்பது மொழியியல் திறமை மட்டும் அல்லாது, கலை உணர்வையும், கலாச்சார எண்ணங்களையும், எளிமையாகவும், ஆழமாகவும் மீளுருவாக்கும் திறமையையும் கொண்ட ஒரு செயல். இது ஒரு கவிஞனின் உள்ளத்தை மற்றொரு மொழியின் வாசகருக்குச் சென்று சேர்க்கும் அசாதாரண பாலமாக அமைகிறது. இதன் அழகியலை உணர்ந்தாலே, மொழிபெயர்ப்பு என்பது தனித்து நிற்கும் ஒரு கலையாகப் பரிமளிக்கும்.

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் 9 முதல் 11-ஆம் தேதிவரை நடைபெற்ற தமிழ் புத்தகத்த திருவிழாவில் தி சிராங்கூன் டைம்ஸ் அரங்கில் நண்பர் கவிஞர் மஹேஷ் குமாரின் ‘வண்ணம் தேடும் சொற்கள்-2‘ மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு நூல் பிரதியொன்று கிடைத்தது. பல்வேறு மொழிகள் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கவிதைகள் 31 தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மலையாளக் கவிஞர்கள் கே. சச்சிதானந்தன், கே.ஜி. சங்கரன் பிள்ளை, கே. எஸ். ஜோசப், கே. எஸ். நந்திதா, வீரான்குட்டி இந்தி மொழியின் குல்சார், ஜாவேத் அக்தர், மஹாதேவி வர்மா, ஃபிராக் கோரக்பூரி, அல்லாமா முஹம்மது இக்பால், கைஃபி அஸ்மி, நிராலா, திலீப் சித்ரே , ஹர்வன்ஷ்ராய் பச்சன், ரவீந்திர நாத் தாகூர், ஆங்கிலத்தில் ராபர்ட் பிரஸ்ட், முனைவர் வோங் யூன் வா, டா ட்ச்சாய் புவான், பிரஞ்சு மொழியில் விக்டர் ஹியூகோ, பால் வெர்லின் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை இத்தொகுப்பில் மஹேஷ் குமார் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் மாதிரிக்காக என்னைக் கவர்ந்த இரண்டு கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன்.

மலையாளக் கவிதை வெளியில் கொண்டாடப்படும் கவிஞர் கே.ஜி.சங்கரன் பிள்ளை. இவரது (முண்டு) ‘வேட்டி’ என்னும் கவிதை :

என் வேட்டியின் சிவப்புக்கரை சாயம் போயிருந்தது

ஒவ்வொரு முறையும் சலவைக்காரன் சொன்னான்

ஒவ்வொரு முறை துவைக்கும் போதும்

இந்த சிவப்புக் காயம் கரைகிறது

இதில் மட்டும் எங்கிருந்து இவ்வளவு சிவப்பு வருகிறது

இதற்கு முன்பும் சிலமுறை

இதுபோலப் பார்த்திருக்கிறேன்

வெட்கமில்லாதது. முரடு.

கடைசியில் பொறுமையிழந்த சலவைக்காரன்

இந்த சிவப்பு சாயம் கரைவதை நிறுத்தப்போகிறேன்

என்று கூவிவிட்டுப் போனான்.

அடுத்தமுறை சலவைக்காரன் காலம் தாழ்ந்தே வந்தான்.

தீர்ப்பைச் சொல்லும் நீதிபதி மெதுவாகக் கோப்பைத் திறப்பதுபோல

அவன் துணிக்கட்டை மெதுவாக அவிழ்த்தான்

அந்த வேட்டி வெளுப்பான வெளுப்பாயிருந்தது.

நாகரீக மனிதனைப்போல வசீகரமாக இருந்தது

எடுத்துப் பிரித்தபோதோ

ஆங்காங்கே ஓட்டைகளும் கிழிசல்களும்

கடும் பாறைகளில் அடித்துத் துவைக்கப்பட்ட

இரத்தச் சிவப்பாயிருந்த அந்த வேட்டி

வெளிறி நிறமிழந்து வெளுத்துப்போயிருந்தது.

ஆனால் …

துணிக்கட்டில் இருந்த மற்ற துணிகள் யாவிலும்

சிவப்புச் சாயம் ஏறியிருந்தது.

குளங்களும் குட்டைகளும் ஏரிகளும் ஆறுகளும்

சிவப்பாக இருந்தன.

மற்றொரு கவிதை கவிஞரும் திரைப்படக் கதாசிரியருமான இலக்கிய ஆளுமை ஜாவேத் அக்தரின் காலம் என்னும் கவிதை.

காலம் என்பதுதான் என்ன ?

அப்படி என்னதான் இது?

போய்க்கொண்டே இருக்கிறதே.

போகாமல் இருந்தபோது

எங்கே இருந்தது அது?

எங்காவது இருந்திருக்கவேண்டுமே.

கடந்து போய்விட்டது என்றால்

இப்போது எங்கே அது?

எங்காவது இருக்க வேண்டுமே.

எங்கிருந்து வந்தது?

எங்கே போனது?

எப்போதிலிருந்து எப்போது வரைக்குமானது இது?

காலம் என்பதுதான் என்ன? 

என்னைப் பொறுத்தவரை

காலத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை

என்பது ஏற்புடையதாயில்லை.

இது மிக மிக நீண்டதொரு இழைதான்.

இதன் தொடக்கம் எங்காவது

இருக்கத்தான் வேண்டும்.

மனிதன் மயங்கிக்கிடக்கிறான்.

அவன் காலமென்னும் கூண்டினுள்ளேயே பிறந்து

அங்கேயே வளர்கிறான்.

காலக்கூண்டின் புறத்தேயும்

வேறொரு வெளி உள்ளதென்பதை அறிந்தபின்

மேலும் குழம்பியபடி கேட்கிறான்…

காலம் என்பதுதான் என்ன?

படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் பல்வேறு கவிதைகளைத் தேடித்தேடி இத்தொகுப்பில் மொழிமாற்றம் செய்து தந்துள்ள மஹேஷ்குமாரின் உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் நன்றியும் பாராட்டும்.

முனைவர் எச் முஹம்மது சலீம்

mdsaleem@jamiyah.org.sg