(கட்டுரை) “செம்மொழி” பவள விழா

0
835

செம்மொழி இதழின் ஆசிரியர் திரு.இலியாஸ் அவர்களை சந்திக்கும் நபர்கள் எப்போதும் தவறவிடக் கூடாத நண்பர்களில் ஒருவராக அவரை முதல் சந்திப்பிலேயே உணர்ந்து கொள்வார்கள். புதிய குடியேறிகளுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் உறவுப்பாலம் என்று அவரைச் சொல்லலாம். அவருடைய தொடர்புகளும், தன்னியல்பான குணமும், அவர் தொழில் செய்யும் இடமும் அதற்கான காரணிகளாக அமைந்து விட்டன.

முதன் முதலில் செம்மொழி இதழுக்காக நான் எழுதிய கட்டுரை ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அது  இந்திய சினிமா நூற்றாண்டு சிறப்பிதழ். அந்த இதழை முன்னாள் கலை மலர் பத்திரிக்கையாளர் காலம் சென்ற மூத்த எழுத்தாளர் திரு.ஏ.பி.இராமன் அவர்கள் திரைத்துறையில் வெளிவராத பல சுவரஸ்யமான தகவல்களுடன் வெளிக்கொணர்ந்தார்.

என்னுடைய கட்டுரையில் சிங்கப்பூர் மரங்கள் பற்றி “மரங்கள் வீசும் சாமரங்கள் என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். என்னுடைய வீடு ஹெண்டர்ஸன் பகுதியில் இருந்தது. புளோக் 104க்கும் 103க்கும் இடையில் குத்துச் செடிகளுடன் மரங்களும் வளர்ந்து நிற்கும் அதில் ஒரு மரம் மற்ற மரங்களுக்கு காவல்போல் கிளை பரப்பிக் கொண்டு நிற்கும். அது ஹோப்பியா செங்கல் (Hopca sengal) என்ற மரம். 2004 நவம்பரில், நாங்கள் அங்கு குடியேறி வந்தபிறகு 7ஆம் தேதி சிங்கப்பூர் சிற்பி லீக்வான்யூவால் அந்த மரக்கன்று நடப்பட்டது.

2002இல் புகழ்பெற்ற ஒரு தனியார் சொத்து நிறுவனம் சுமார் 50 ஹோப்பியா செங்கல் மரங்களை ஒட்டு மொத்தமாக நில மீட்புக்காக வெட்டிச் சாய்த்துவிட்டது. ஒரு மீட்டருக்கும் அதிகமாக சுற்றளவுள்ள மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச் சூழல் துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இந்த மரங்களின் பருமன் 3.4 மீட்டர். அந்த நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 48 ஆயிரம் வெள்ளி அபராதம், 4 லட்சம் வெள்ளி இழப்பீட்டுத் தொகை என்று அந்த நிறுவனத்திடம் வசூல் செய்யப்பட்டது.

சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இத்தீர்வை ஒரு விழிப்புணர்வாகக் கொண்டு செல்ல வெட்டப்பட்ட மரங்களின் பாகங்களளை “ஹோப்பியா செங்கல் சிற்பங்கள்” என்ற பெயரில் கண்காட்சி ஏற்பாடு செய்து அவைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இம்மரத்தின் விதைகளை சேகரித்து அவைகளை தேசிய பூங்கா ஆணையத்தின் நர்ஸரியில் வளர்த்த்தது அந்த மரக்கன்றுதான் என் வீட்டிற்கு அருகே திரு.லீ அவர்களால் நடப்பட்ட மரம்.

அந்தக் கட்டுரை எனக்கு நன்றாக நினைவில் நிற்கக் காரணம், அதைப்பற்றி திரு இலியாஸ் அவர்களிடம் தொடர்ந்து உறவாடி உருவான கட்டுரை அது.  இப்படித்தான் கட்டுரைகளையும் படைப்புக்களையும் செம்மொழி, சிராங்கூன் டைம்ஸ் இதழ்களுக்குப் பெறுகிறோம்.

இதழ் நடத்தும் சவால்கள் பற்றி பல தகவல்களை என்னால் குறிப்ப்ட முடியும். எழுத்தாளர்களை அணுகிக் கட்டுரை கேட்ட பல அனுபவங்கள் உண்டு. அவர்களிடம் தொடர்ந்து உரையாடி கட்டுரை கேட்டுப் பெறவேண்டும் என்ற நோக்கில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருப்பாரோ என்று கூட அவர்கள் நினைத்து ஓட்டம் எடுத்த அனுபவங்கள் உண்டு. இன்னொன்று நூல்கள் மதிப்புரை அல்லது விமர்சனக் கட்டுரைகளை சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயமும் கட்டுரைகள் வெளிவருவதில் சவால்களை அதிகப்படுத்துகிறது.

ஒப்பு நோக்க 1950களில் விமர்சன முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதை நினைவு கூறலாம். தமிழ் முரசில் ‘எழுத்தாளர் பேரவை’ என்ற பகுதி விமர்சனத்தைத் தீவிரமாக முன்னெடுத்தது. மாதம்தோறும் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டு கதைகள் கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பலரும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பி.கிருஷ்ணன், சே.வெ.சண்முகம், தா.மா.சி.பாக்கியச்சிற்பியன், மா.செகதீசன், ரா.நாகையன் உள்ளிட்ட மூத்த எழுத்தாளர்கள் பலர் அப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் .

அந்தக் காலம் போல இல்லை. 10 ஆண்டுகளுக்குள் 100 இதழ்களை தொட்ட சிராங்கூன் டைம்ஸும் ,பவள விழா ஆண்டு செம்மொழி இதழும் பெரும்பாலும் ஒரே மாதிரியான சவால்களையே சந்தித்து வருகின்றன. செம்மொழி இலவச இதழ். ஆனால் அச்சு இதழாக வெளிவரும் சிராங்கூன் டைம்ஸ் இலவச இதழ் அல்ல. ஒவ்வொரு மாதமும் தபால் செலவுடன் 250 சிங்கப்பூர் முகவரிகளுக்கு இலவசமாக அனுப்பப்பட்டு வருகிறது. 30 க்கும் குறைவான சந்தாதாரர்களே உள்ளனர். 4 பக்க அளவில் ஆரம்பத்தில் வார இதழாக வெளிவந்த தமிழ் முரசு ஒர் இதழ் ஒரு cent என்ற விலையில் விற்கப்பட்டது. இதழ் விற்பனையாளருக்கு வாரம் 200 இதழ்கள் கொடுத்து விட்டு 100 இதழ்களுக்கான பணத்தை மட்டும் பெற்றுக் கொண்ட அந்தக் கால நடைமுறை இன்னும் மாறவில்லை.

அமைச்சர் திரு.சண்முகம் தமிழ் முஸ்லிம் சமூகம் சிங்கப்பூர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கை பாராட்டி பேசியது இன்னும் எங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது. மகதூம் சாயிபு சிங்கப்பூர் தீவின் இதழ் வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு முன்பே முத்திரை பதித்தவர். அவருடைய ஆன்மா திரு இலியாஸ், சிராங்கூன் டைம்ஸ் நிறுவனர் திரு முஸ்தபா இவர்களின் பங்களிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஷாநவாஸ்

shaaanavas@gmail.com