(கட்டுரை) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50-வது ஆண்டு விழா

NUS Tamil Language Society’s 50th Anniversary Dinner

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையின் ஐம்பதாவது ஆண்டு விழா சனிக்கிழமை மே மாதம் 2025-ஆம் ஆண்டு (17/05/2025), சிராங்கூன் கார்டன்ஸ் கண்ட்ரி கிளப்பில் (Serangoon Gardens Country Club) நடைபெற்றது. இதில். தமிழ்ப் பேரவையின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைச்சர் திரு கா.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

1975இல் இந்த பேரவையை பேராசிரியர் வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். இவர் 1974ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் ஆனர்ஸ் பட்டம் (Honours in Sociology) பெற சேர்ந்தார். 1975-77இல் முதுகலை பட்டம் (M.Soc.Sc.) “Changing caste structure amongst Singapore Indians” சிங்கப்பூர் இந்திய மத்தியில் மாறிவரும் சாதி அமைப்பு” என்ற தலைப்பில் சிறப்பு ஆய்வு செய்தார். ஆய்வு சிங்கப்பூரில் தமிழர் சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களை தெளிவாக்கியது. அதற்கு தீர்வு காணும் வகையில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் 1975ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை எனும் அமைப்பை துவக்கினார். சிங்கப்பூரில் தமிழும் தமிழரும் வளர ஆக்ககரமான திட்டங்களை கற்றோர் முன்னின்று நடத்தினால்தான் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் “சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும்” எனும் இருநாள் ஆய்வரங்க மாநாட்டினை 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19, 20 ஆம் தேதிகளில் கூட்டினார். மாண்புமிகு திரு.C.V.தேவன் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிங்கப்பூரில் தமிழ் வாழ வேண்டும் என வலியுறுத்தினார். இளம் வீரமணி அவர்களும் ‘உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழி’ என்னும் தலைப்பில் தமிழுக்கு பட்டதாரிகள் இல்லாத நிலையை சுட்டி அரசாங்கம் பல்கலைக்கழக நிலையில் தமிழ்த் துறை அமைக்க வேண்டும் என உரையாற்றினார். ஆய்வரங்க மாநாட்டுக் கட்டுரைகள் “சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும்” என்னும் தொகுப்பு நூலாக வெளி வந்தது.

1977இல் ஏற்பாடு செய்த முதல் தமிழ் ஆய்வரங்க மாநாடு, சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. பொது கல்விச் சான்றிதழ் மேல்நிலை தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு துணைப்பாட வகுப்புகளைப் பேரவை அறிமுகம் செய்தது. “சாதனா” என்று அழைக்கப்படும் அந்த வகுப்புகள் தலைமுறைகளாக தமிழ் மாணவர்களின் மொழியாற்றல் வளர்ச்சியையும் முழுமையான கற்றலையும் சாத்தியமாக்கியது. 1975இல் மிக குறைவான மாணவர்களின் எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட இந்த பேரவை இன்று அளப்பரிய வளர்ச்சி கண்டுள்ளது. சிங்கப்பூரில் தமிழுக்கு அங்கீகாரமும் உயர்ந்த மரியாதையும் தர வேண்டும் என்ற நோக்கத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தமிழ்ப் பேரவை இன்று நல்ல நிலையில் இருப்பதை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த பல்கலைக்கழகம் இருக்கும் வரை தமிழ்ப் பேரவை நூறாவது ஆண்டினை கொண்டாடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் பேராசிரியர் வீரமணி தெரிவித்தார்.

நமது மன்ற உறுப்பினர்கள் மூவர், தற்போதைய சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை உறுப்பினர்களாக, சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். செல்வி.கேஜஸ் ஸ்ரேயா, திரு.பிரணவன் சிவலிங்கம், செல்வி.சாதனா ஆகியோர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையில் சீரிய  பணியாற்றி வருகின்றனர்.

பேராசிரியர் அ.வீரமணி அவர்களின் தமிழ்ச் சமுதாய தொண்டினை மேலும் அறிய ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்’ (2019)  நூலின் முதல் தொகுதியில், 1-10 பக்கங்களைக் காணலாம்.

<< NUS pic 1 >>

தற்போதைய 46வது செயற்குழு உறுப்பினர்களுடன் அமைச்சர் கா.சண்முகம்.  படம்: அஷோக் தருண் (தமிழ் முரசு)

அமைச்சர் கா.சண்முகம் அவர்களுக்கு நினைவுப் பொருள் வழங்குவோர் தமிழ்ப் பேரவையைத் தொடங்கிய பேராசிரியர் அ.வீரமணி, தற்போதைய 46வது செயலவைத் தலைவர் திரு.சுப்பிரமணியன் கார்த்திகேயன். – படம்: அஷோக்  தருண் (தமிழ் முரசு).

சுவர்ண லட்சுமி