
2008ஆம் ஆண்டு வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிங்கப்பூர் வருவதாகக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து சிங்கப்பூர் செல்லவேண்டும் என்கிற திட்டம் மனத்திற்குள் வலுவானது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று என் கல்லூரி காலத்திலிருந்து துணையெழுத்து, கதாவிலாசம் போன்ற எஸ்.ராவின் எழுத்துகளை வாசித்து அதன்பால் அதிகம் ஈர்ப்புக் கொண்டவனாக இருந்தேன். அவரைச் சந்தித்தாக வேண்டும் என்கிற முனைப்பு அவர் சிங்கை வருவது தெரிந்ததும் அடர்த்தியானது. அடுத்ததாக,2006 முதல் திண்ணை.காம் இணைய இதழில் அதிகம் எழுதத் தொடங்கிய பின்னர் கிடைத்த சிங்கப்பூர் நண்பர்கள் காரணம் எனலாம். குறிப்பாக, நீதிபாண்டி, பாலுமணிமாறன், ஜெயந்தி சங்கர் கண்ணபிரான் ஐயா, பூங்குன்ற பாண்டியன், பாலாஜி, எம்.கே குமார் என இன்னும் சிலரைச் சொல்லலாம். இணையவழி உருவான இவர்களின் நட்பின் காரணமாகவும் சிங்கை செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானது. அப்பொழுது நான் இணைய இதழ்களில் அதிகம் எழுதி கொண்டிருந்ததால் ஓரளவில் அங்கு அறியப்பட்டவனாகவும் இருந்தேன்.
அதன்படியே 2008ஆம் ஆண்டு சிங்கை சென்றேன். நீதிபாண்டிதான் என்னை வந்து அழைத்துக் கொண்டார். அவர் தங்கியிருந்த இல்லத்திலேயே என்னைத் தங்க வைத்தார். மறுநாள் அங்குள்ள உள்ளூர் நிகழ்ச்சிகளுக்குப் பயணப்பட்டோம். எஸ்.ராவின் நிகழ்ச்சிக்குச் சென்றோம். மலேசியாவில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களின் மீது அப்பொழுது சிங்கப்பூரில் கூடுதல் கவனமும் வாசிப்பும் இருந்தது. அந்த முதல் வருகையின்போதுதான் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களையும் சந்திக்க வாய்ப்புக் கிட்டியது. முன்னமே உயிர் எழுத்தில் வந்த எனது சிறுகதைகளை வாசித்திருந்ததால் அவர் என்னுடன் இலகுவாக அது சார்ந்து உரையாட முடிந்தது. பின்னர், எஸ்.ரா தங்கியிருந்த தங்கும் விடுதி அறைக்குச் சென்று அங்கும் எங்களின் உரையாடல் நீண்டது. எஸ்.ரா நல்ல எழுத்தாளர் என்பதைத் தாண்டி கவரக்கூடிய பேச்சுவளமிக்கவர் என்பதையும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சியில் நன்கு உணர முடிந்தது.
அடுத்ததாக, சிங்கப்பூர் வாசகர் வட்ட நண்பர்களுடன் அறிமுகம் உண்டானது. ஷாநவாஸ்,சித்ரா ரமேஷ் அவர்களுள் முக்கியமானவர்கள். இருவரும் மூத்தவர்களாக இருந்தாலும் அன்போடும் அக்கறையோடும் நம்மை அணுகக்கூடியவர்கள். அவர்கள் காட்டிய அன்பு எல்லையற்றவை. தேசம் கடந்து வாழும் எழுத்தாளர்கள் எத்தனை அன்புள்ளம் கொண்டவர்கள் என்பதை கண்ணபிரான் ஐயா, நீதிபாண்டி, ஷாநவாஸ், சித்ரா ரமேஷ் என இன்னும் சிலரின் மூலம் அந்த இளம் வயதில் என்னால் அனுபவரீதியாக அறிய முடிந்தது. எழுத்துலகம் இன்னும் நம்மிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகளைக் கோருகிறது என்கிற அழுத்தமும் ஊக்கமும் சிங்கப்பூர் முதல் வருகை உணர்த்தியது. நாடு திரும்பியதும் இன்னும் தீவிரமாக எழுதத் துவங்கினேன் எனலாம்.
அதன் பின்னர், பாலு மணிமாறன் மூலம் எனது திண்ணையில் வெளிவந்த கவிதைகளை நூலாகத் தொகுக்கலாம் என்கிற திட்டம் வந்து சேர்ந்தது. எழுதத் துவங்கி மூன்றாண்டுகளிலேயே முதல் நூலை வெளியிட வேண்டும் என்கிற சிந்தனையை உஉருவாக்கியவர் அவர்தான். அதிலும், முழுக்க நிறைய சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த என்னிடமிருந்து கவிதைத் தொகுப்பை முதலில் வெளியிட வைத்தவர் அவர்தான். பின்னாளில் அது முரணாகத் தெரிந்தாலும் என் வாழ்க்கைப் பயணத்தில் அது மறக்க முடியாத அழகியல் எனலாம். ‘கடவுள் அலையும் நகரம்’ என்கிற தலைப்புடன் என் கவிதைத் தொகுப்பு தமிழகத்தின் பிரபலமான கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களின் முன்னுரையுடன் 2009 ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் பொது நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. என் முதல் நூலை வெளியீடு செய்தது சிங்கப்பூர்தான் மேலும் அதனை முதலில் பெற்றுக் கொண்டவர் கண்ணபிரான் ஐயாதான் என்பது எனது இலக்கியப் பயணத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாகவே நீடிக்கும். அத்தகையதொரு இனிய இலக்கிய நினைவுகளை ஆழப்பதித்த மண் சிங்கப்பூர்.
அதன் பின்னர், நான் மலேசியாவில் தொடங்கிய ‘அநங்கம்’ சிற்றிதழை சிங்கப்பூர் வாசகர் வட்டம் 2009ஆம் ஆண்டு அம் மோ கியோ நூலகத்தில் அறிமுகம் செய்தது. ஜெயந்தி சங்கர், கண்ணபிரான் ஐயா, முனைவர் லட்சுமி என இன்னும் பலர் கலந்து கொண்டு இதழ் குறித்து உரையாற்றினர். மலேசிய சிங்கை தமிழ் நவீன இலக்கியத்தின் தொடர் இணைப்பு நிகழ்ச்சியாக அவ்வறிமுகம் அமைந்தது. அதன் மூலம் நீதிபாண்டி, ஜெயந்தி சங்கர் எனப் பலர் அநங்கம் இதழில் எழுதத் துவங்கினர். நானும் சிராங்கூன் டைம்ஸ், நாம் பொன்ற இதழ்களில் எழுதினேன். இலக்கிய உறவானது மேலும் ஆழமானது.
அடுத்ததாக, நான் சிறார் இலக்கியம் சார்ந்து இயங்கத் தொடங்கிய பின்னரும் அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் உருவான அகநெருக்கடிகள் காரணமாகவும் நான் சிங்கப்பூர் செல்வது குறைந்தது. மலேசியாவிலேயே தொடர்ந்து பல பள்ளிகளுக்குச் சென்று உரையாற்றுவதில் என் நாள்கள் கழிந்தன எனலாம். அவ்வப்போது நீதிபாண்டியின் மூலம் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றி தெரிந்து கொள்வேன்.
2015ஆம் ஆண்டு எனது இரண்டாவது சிறுவர் நாவலான ‘மோகினி மலையின் இரகசியம்’, எனது குறுநாவலான ‘ஆப்பே கடையில் நடந்த236ஆவது மேசை உரையாடல்’ ஆகியவற்றை மீண்டும் சிங்கப்பூர் வாசகர் வட்டம் மூலம் அங்கு அறிமுகம் கண்டது. வெகுநாட்களுக்குப் பின்னர் நானும் தம்பி தினகரனும் அங்குச் சென்றிருந்தோம். பாரதி மூர்த்தியப்பன், எம்.கே.குமார், கண்ணபிரான் ஐயா, ஷாநவாஸ் என இன்னும் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். விளிம்புநிலை மனிதர்கள் குறித்து எழுத வேண்டிய தேவைகளைத் தொட்டு நான் உரையாற்றினேன். அது ஒரு நல்ல பரவலான அலையை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக விளிம்புநிலை மனிதர்கள் குறித்து எழுத வேண்டும் என்கிற ஒரு தேடல் அங்குப் பரவியது. அது தொடர்பான ஒரு சிறுகதை எழுதும் போட்டியும் அறிவிக்கப்பட்டதை நாளிதழில் வாசித்தேன்.
பின்னர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்பாக உருவான நட்பு வட்டமும் குறிப்பிடத்தக்கவர்கள்தான். குறிப்பாக பிரேமா மகாலிங்கம் அவர்கள் மிகவும் அன்பிற்குரியவர் எனலாம். திரு.ஆண்டியப்பன் என்று இன்னும் சிலரையும் குறிப்பிடலாம். அதன் பின்னர் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டியது.
பிறகு, மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி உருவானது. வாழ்க்கை அடித்துச் செல்லும் திசையில் கரைந்தும் காணாமல் போவதும் என அலைக்கழிப்பு உண்டானது. 2019ஆம் ஆண்டு அரூ மூலம் மீண்டும் சிங்கப்பூருடனான உறவு புதுப்பிக்கப்பட்டது எனலாம். ராம், சுஜா, பாலா ஆகியோர் இணைந்து நடத்தும் அரூ அறிவியல் புனைவிதழில் பங்காற்றத் தொடங்கினேன். ராம், சுஜா சிங்கப்பூர் இலக்கியம் எனக்களித்த அடுத்து மிக நெருக்கமான நண்பர்கள் எனலாம். இப்பொழுது வரை அந்த நட்பானது தொடர்கிறது. 2020, 2021, 2022, 2023 வரை அரூ நடத்திய உலகலாவிய அறிவியல் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்து எனது மூன்று கதைகள் இறுதி சுற்றுவரை தேர்வானதோடு நூலாக்கமும் செய்யப்பட்டன. மூக்குத் துறவு சிறுகதை இன்றுவரை வாசிக்கப்பட்டுப் பலவிதமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அது நான் அரூ போட்டிக்கு எழுதிய முதல் அறிவியல் சிறுகதையாகும். அரூவில் பின்னர் எழுதிய அறிவியல் சிறுகதைகளைத் தொகுத்து ‘மூக்குத் துறவு’ என்கிற தலைப்பிலேயே நூலாக 2024இல் வெளியீடு செய்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த வாசகசாலை பதிப்பகம்தான் அந்த நூலை வெளியீடு செய்து புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் செய்தனர்.
நவீன இலக்கியம் சார்ந்து சிங்கப்பூர் அதிவேக வளர்ச்சிக் கண்டபோது உருவான நண்பர்கள் அழகுநிலா, ரமா சுரேஷ் போன்றவர்களின் வாசகப் பார்வை ஆழமானதாகத் தோன்றியது. வாசிப்பிலும் அதனைக் கலந்துரையாடுவதிலும் தீவிரம் காட்டத் தொடங்கினர். பிரம்மிப்புடன் அவர்களின் ஈடுபாட்டையும் சமரசமற்ற அவர்களின் விமர்சனப் பார்வையையும் கண்கு மகிந்தேன். நான் நடத்திய சிறார் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் அழகுநிலா சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டார். பின்னர், ரமா சுரேஷ் அவர்கள் நடத்திய மாயா வாசகர் சந்திப்பில் நான் பலமுறை கலந்து கொண்டு வாசகப் பார்வையைப் பகிர்ந்துள்ளேன். இதுவொரு புதிய உறவாக நீடித்தது. முனைவர் லட்சுமி அவர்கள் தொகுத்த சிறுகதைத் தொகுப்பில் என் சிறுகதை ஒன்று தேர்வாகி அச்சானது. அவரும் எனக்கு உருவான சிங்கப்பூர் இலக்கிய உறவில் முக்கியமானவர்தான்.
இப்படியாக, சிங்கப்பூர் இலக்கிய வெளியின் கடந்த பதினைந்து கால வரலாற்றை எடுத்து அலசினால் அதனுள் எனது பிரவேசமும் பங்களிப்பும் படைப்புகள் அங்கும் அறுப்படாமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றன. எனது இலக்கிய நகர்ச்சியிலும் சிங்கப்பூர் இலக்கியத்தின் தாக்கமும் அது கொடுத்து அனுபவமும் நிறையவே இடம் பெற்றுள்ளன. இவையனைத்தும் எனது நினைவில் இருந்த சுருக்கமான நினைவலைகள் மட்டுமே. இன்னும் சிறைய சொல்லிக் கொண்டே போகும் அளவில் இன்னும் சொல்லப்படாத நிறைய அனுபவங்கள் சிங்கப்பூர் மண்ணில் நிலைத்திருக்கின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக இங்கிருந்து சென்றிருந்தேன். இலக்கியத்தில் சாம்பல்நிற மனிதர்கள் என்கிற கருப்பொருளிலும் பின்னர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இணை ஏற்பாட்டில் குறும்படம் இயக்குவது தொடர்பான பட்டறையை வழிநடத்தவும் வாய்ப்புக் கிட்டியது. அப்பட்டறைக்குப் பின்னர் ஒரு சிலரின் நட்பு கிடைத்தது. எழுத்தாளர் மணிமாலா, சங்கீதா, ரமேஷ் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து உருவான நாடு. ஆக, அதனைத் தொடக்கக் காலம் தொட்டே வேறு நாடாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. மலேசிய இலக்கிய வரலாற்றின் தொடக்கக்காலம் என்பது சிங்கப்பூருக்கும் உரியதாகும். ஒரே மரத்திலிருந்து பிரிந்த இரு கிளைகள். இப்பொழுது மீண்டும் எங்கு தொடங்கினோமோ அங்கிருந்து இதையெல்லாம் ஒரு நினைவலையாக எழுதச் சொல்லி அழைப்பு வந்தது. நண்பர் நீதிபாண்டி என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத இலக்கிய நண்பர். அவரிடமிருந்து எனது சிங்கப்பூர் இலக்கியத் தொடர்பு ஆரம்பமானது. மலேசியாவின் கரையை ஓயாமல் தழுவிச் செல்லும் சிங்கப்பூர் கடலலைகள். இன்னும் எழுத நிறைய அனுபவங்களும் நிறைய மனிதர்களும் இருக்கிறார்கள்.


