
சித்ரா ரமேஷ்
நூலாசிரியர் பற்றிய குறிப்பு:
சோ டெக் செங் சிங்கப்பூர் இலக்கிய பரிசு மற்றும் தங்கமுனை விருதைப் பெற்றவர்.மேலும் தேசிய அளவில் நடைபெற்ற சீன வனப்பெழுத்துப் (Chinese calligraphy) போட்டிகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார்.அவர் தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்பு தைவான் தேசியப் பல்கலைக்கழகத்தில் சீனவியல்(சீன மொழி, பண்பாடு, சமூகம், அரசியல் பற்றிய ஆராய்ச்சிக் கல்வி)(sinology)மற்றும் மொழிபெயர்ப்புக் கல்வியில் பட்டப்படிப்பு படித்தார்.
சோவ் கவிதை மற்றும் புனைக்கதைகள் எழுதி வருகிறார், சீன வனப்பெழுத்து மற்றும் ஓவியங்களை உருவாக்குகிறார். மேலும் கலை மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். இவர் இரு கவிதைத்தொகுப்புகள் ‘ஒரு நாளை அமைதியான இரவுக்காக பயன்படுத்துதல்’,2022 (using the entire day to quiet night) உன் கதையும் என் கதையும் (Your story and Mine) 2012 வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் சிங்கப்பூர் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. அவரது சில கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் கவிதைகள் குறும்படங்கள், பாடல்கள் மற்றும் ஓவியங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
என் வாழ்விடம்
கேலாங் கேலாங் –என் முதல் வீடு
என் வாழ்வின் தொடக்கம்,என் குழந்தைப் பருவம்
ஒரு சிறிய சந்தின் புழக்கடையில் வாழ்ந்திருந்தேன்
முகவரி 27 ஏ லோரொங் கேலாங்!
மூடப்பட்ட ஜன்னல்களின் வழியே
என் கண்களை மறைத்து மறைத்து விளையாடும் சிறுமி
தன் குழந்தைமையின் அப்பாவித்தனத்தோடு கேட்டாள்
அந்த ஜன்னலை,
அந்தக் கண்களை
இப்போது திறக்க முடியுமா?
வருடங்கள் பல கடந்த பின்
என் உழைப்பின் விடாமுயற்சியின் விளைவாக
கிளமென்டிப் பகுதியில் நான்காவது மாடி
வீவக வீட்டில் வாழ்ந்தேன்.
வீட்டின் கதவுகள் திறந்து மூடிய பொழுதுகளில்
இன்பங்களும் துன்பங்களும் உள்ளே நுழைந்தன
அக்கணத்தில் என் இதயத்தை கேட்டேன்.
இதயங்களும் கதவுகளும் இறுக்கமாக
பூட்டி வைக்கப்பட வேண்டுமா?
ஒரு முறை என் ஆன்மா
என் வீட்டிலிருந்து வெகு தொலைவில்
இருக்கும் சிறு நகரத்தில் வசித்து வந்தது.
சிறிய தங்கும் விடுதியின் அறை ஜன்னல் வழியே
பரந்த உலகத்தை உற்று நோக்கினேன்.
நீ அந்த உலகத்தை எட்டிப் பார்த்து
மென்மையான குரலில் கேட்டாய்
தெருவில் செல்லும் அந்த பாதசாரிகள்
நமக்கு அந்நியர்களா?
கிளெமென்டி–என் மூன்றாவது வீடு
வணிக வாழ்க்கையில் ஒரு சிறு வர்த்தகன்
ஒரு சகாப்தத்தின் எளிமையான நிறுவனம்
மேற்கே செல்லும் தொடர் வண்டிப்பாதையில்
கிளெமெண்டி தொடர்வண்டி நிலையத்திலிருந்து வெளியேறி
என் தோற்றத்தை மாற்ற முடி வெட்டுதல்
என் அணுகுமுறையை ,மாற்ற ஒரு தலைஅசைப்பு
என் மனநிலையை மாற்ற ஒரு கரோக்கே இரவு
எப்போதும் அவை வேலை செய்யாது
இந்த மாற்றங்கள் தோல்வியடைகின்றன
மற்றும் சில நேரங்களில்
கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும்
சிங்கப்பூர் குறித்தும் நித்தியத்துவம் குறித்தும்
விவாதிக்கிறார்கள்
சிலர் யதார்த்தத்தின் அரசியலை தங்கள் இடது கையிலும்
ஓபியம் போதையின் மீதான
காதலை தங்கள் வலது கையில் வைத்துள்ளனர்
தள்ளு வண்டிகள் உள்ளூர் திரைப்படங்களின்
திரைச்சுருள்களால் நிரம்பியுள்ளன
நகர்ந்து கொண்டிருக்கும்
திரைக்காட்சிகளாக வாழ்க்கை நிரம்பியுள்ளது
கண்கள் ஏக்கத்தைப் பிரதிபலித்தாலும்
எதிர்காலத் துண்டு பிரசுரங்கள் போல் புன்னகை நிழலாடுகிறது
மதிய வெயில் கடையின் முனையில் நிழல்களை நீட்டுகிறது
இளைஞர்கள் சூரியனுக்கு அடியில் மலிவாக விற்கப்படுகிறார்கள்.
தெருசந்தை போல் வளர்ச்சி விரிவடைகிறது.
வரலாறு உற்சாகக் குரல் எழுப்புகிறது.
தொலைந்த ஆன்மாக்கள் சென்றடையும் திசையைத் தேடி
அலைகின்றன
இளைஞன் வெர்தர் தனது ஒற்றைத் தலைவலிக்கு
வலி நிவாரணிகளை வாங்கிக் கொண்டு
உலகின் மொத்த வலிகளையும் தாங்கிக் கொண்டு செல்கிறான்
கைவிடப்பட்டவை வாழ்க்கை, இறப்பு,
பூனைகள் மற்றும் குப்பைகள் மட்டுமே
நாளின் 24 மணி நேரங்களும்
வாரத்தின் 7 நாட்களும்
திறந்திருக்கும் 7/11 கடைகள் மட்டுமே
அதன் நாணயங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது
கொடுங்கனவிற்கும் நனவிற்கும்
இடையில் முகங்களை மாற்றுகிறது
இரவும் பகலும் தலை சுற்றி சுழன்று கொண்டு!!
இக்கவிதையில் குறிப்பிடப்பட்ட இளைஞன் வெர்தர் என்பவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம். இளைஞர் வெர்தரின் துயரங்கள் என்ற தலைப்பில் ஜெர்மானிய எழுத்தாளர் ஜோஹன் உல்ஃப்கெங் கோத்தே (Johann Wolfgang Goethe) என்பரால் எழுதப்பட்ட நாவல். கடித இலக்கிய வடிவ நாவல். சார்லட் என்ற அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டு அந்த நிறைவேறாகக் காதலினால் நாவலின் முடிவில் வெர்தர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்வார். ஜெர்மானிய இலக்கியத்தில் மிகப் புகழ் பெற்ற நாவல்.
chitra.kjramesh@gmail.com


