
சரஸ்வேல்
சகுந்தலையை மறந்துவிட
துசுயந்தன் பெற்ற சாபமெனச்
சட்டென மறக்கிறாள்
தன் கவிச் சொற்களை!
பாரிஜாதம் மணக்கும் யாமப் பொழுதுவரை
புரண்டுபுரண்டு படுக்கிறாள்
திடீரென தூர்ந்துபோன
கவிச்சுனையை எண்ணி!
வரையாடுகளைப்போல
கத்தித் தீர்க்கிறது மனம்
மறந்திருக்காது என!
மரங்கொத்தியின் கழுத்தில்
தெரியும் நீலத்தினையும்,
இரண்டு இலைகளின் பின்னலில்
இருக்கும் ஆலிங்கனத்தையும்
கண்டு வியந்த கவிமனம்
ஒரு குழந்தையைப் போன்றே . . .
கட்டுப்படுத்த முடியாதது!
மேகங்களுக்குள் ஒளிந்து கொள்வது
நிலவிற்கு நிரந்தரமில்லையே!
பைந்தமிழின் இனிமையில் குளித்துக்
கவிதைகளில் தலை துவட்டியவளுக்கு
அவளின் சொற்கள் கண்ணாமூச்சி
ஆட முடியுமே தவிர
நீர்மை தொலைத்த பூமியாய்
முற்றிலும் வறண்டுவிட வாய்ப்பில்லை.
இனி தேவை எல்லாம் . . .
அந்தச் சொல்எறும்பை வெளிக்கொணரும்
சூழல்சீனியின் வாசம் மட்டும்தான்!
danuslk@yahoo.com


