(கவிதை) எல்லைகள்

யாழிசை மணிவண்ணன்

இடைநிறுத்தம் இல்லாமல்

பாடிக்கொண்டே இருக்கும்

கடலின் இயல்பு

கானப்பிரியம்

ஏகாந்தம்

தவிப்பு

கொண்டாட்டம்

இன்னபிற.. இன்னபிற..

மணல்வெளி மனங்கள்

நுகரவும் கரையவும்

பூத்திருக்கும் மனோரஞ்சிதம்

இராட்சதர்களுக்குக்

குழந்தை மனம்

ஓடிப்பிடித்து விளையாடும்

அலைகளே சாட்சி

நேற்றுக்கூட ஒரு யுவதி

கணுக்கால்கள் மட்டும்

நனையும் ஆழத்தில் நின்றபடி

மெல்லிசைக் கருவியொன்றை

மீட்டிக் கொண்டிருந்தாள்

பொங்குமாக்கடலின்

தளர்நடையை

அப்பொழுதுதான்

நானும் பார்த்தேன்.

இத்தனை பலவீனங்களைக் கொண்ட

இந்தக் கடலைத்தான்

நாடுகளின் எல்லைகளாக

நம்பியிருக்கிறோம்.