(தொடர்) ஆழ் நெடுநீர்  – 8

0
1410

பரிநித்தா

அதற்குப் பின் மாமாவை நான் சந்திக்கவில்லை. இருவரும் தனியாகச் சென்றது அத்தைக்குப் பிடிக்கவில்லை போலும், வீட்டிலும் இனிமேல் மாமாவுடன் எங்கும் செல்ல வேண்டாம என சொல்லிவிட்டனர். இப்படியான கீழ்மைகளைச் சந்திப்பதில், எனக்கு இதுவே முதல் முறை. அருவறுப்பில் கரத்தின் மென்மயிர்கள் சிலிர்த்து எழுந்தன. அருவறுப்பாய் அப்படி என்ன நிகழ்ந்து விட்டது? நல்லநாள் அன்று மயானத்திற்குச் சென்றோம். அதுவும் நமக்கு முந்தையவர்களைச் சந்திக்க, அவர்களின் வீட்டைப் பார்க்க. எதுவும் இப்போது இல்லையென்றாலும், இருந்தார்கள் எனச் சொல்ல நம்மை மட்டும் விட்டு சென்றுள்ளனர்.

எது அருவறுப்பு? சிகாமணி வாழ்ந்த பழைய விசாலதைக் கேட்க சென்ற மலாய் பெண் வீட்டின் முன்னிருந்த ஒரு மரம் நினைவுக்கு வந்தது. அந்த மரத்தின் முன்னே பாம்பின் தோலில் செய்தது போல ஒரு சதுரம் இருந்தது. அதைப் பார்க்க தான் அருவறுப்பாக இருந்தது என நினைத்தேன். அதை விட உறவினர்களின் அலங்கோலமான சிந்தனைகளும் அதை அவர்கள் வெளிப்படுத்த உபயோகிக்கும் வார்த்தைகளும் அதைவிட அருவறுப்பாகத் தோன்றியது.

ஆனால் இப்பொழுது என்னுடைய இந்த குமுறலானது சிகாமணியின் குமுறலின் முன் ஒரு சதம் கூட முக்கியமானதில்லையே? மொத்த குடும்பத்தையும் இழந்த ஒருவன். மனைவி, மகள், பேத்தி என மூன்று தலைமுறையினர் மூழ்கி மறைந்ததை நேரில் கண்டு பித்தானவன்.

இந்த அழிவுக்கு யார் பொறுப்பேற்க முடியும்? மழையா? இல்லை, இயற்கையைப் பழிப்பவன் பூமியில் வாழ தகுதியற்றவன்.

கண்ணம்மா, சிகாமணியின் மனைவி? அவள்தானே வீட்டினுள் சென்று பொருட்களை எடுத்து திரும்பியவள்? இல்லை, அவள் பிள்ளைக்கென சேர்த்து வைத்திருந்ததைத் திருப்ப முயன்றாள்.

சிகாமணி? ரப்பர் தோட்டத்தில் இருக்க குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது, அப்படி இருக்க ஆத்தோரமாக, வெள்ளம் வரும் இடத்தில் ஏன் வாழ வேண்டும்? காதலித்து திருமணம் செய்ததால் ஒதுக்கப்பட்ட குடும்பம்தானே அவனுடையது? அப்படியெனில், மந்தையாக கூடி வாழத் தெரியாதவனுக்கே இந்த அழிவுக்கு பொறுப்பென முடித்துவிடலாமா?

இல்லை. சிகாமணி குடும்பத்துடன் நல்ல முறையில் வாழ்ந்தவனாயிற்றே. சிகாமணி கண்ணம்மாவுடன் நிகழ்த்திய இல்வாழ்க்கைக்குதான் எத்தனை பூசனிக்காய்கள் திருஷ்டி சுத்தப்பட்டது? கண்ணம்மாவின் அட்டிகையின் மேல்தான் எத்தனை கண்கள்? அவன் காதலித்து களவாளித்தனம் செய்யவில்லையே. இவர்களை ஒதுக்கி வைத்த சமுதாயத்தை, உறவினர்களைக் குறை  கூறலாமா? முதலில் இவர்களை இந்த தோட்டத்தில் நிறுவியவர்கள் யார்?

வெள்ளையன். இவனின் தலையயை அறுக்க வேண்டும். ஆம், இவனே இதற்கு முழு பொறுப்பேற்கக்கூடியவன். ரிட்லியாம், பைத்தியக்காரனாம். இவருக்கு சார் பட்டம் வேறு. அம்மா சிறுமியாக இருந்த போது, ரிட்லி ஒருமுறை நம்ஹேங் தோட்டத்துக்கு வந்து புதிய வகை உளிகளை கொடுத்து, பால் மரம் சீவும் விதத்தையும் சொல்லிவிட்டு சென்றதாக என்னிடம் கூறியுள்ளார். அந்த வருடம்தான் ரிட்லியின் புதிய கண்டுபிடிப்பான உளி கொண்டுவரப்பட்டது. அதைக் கொண்டு வந்தவர் பேச ஆரம்பித்தார்.

“தொழிலாள நண்பர்களே, இன்று புதியதோர் கத்தியை உங்களிடம் அறிமுகம் செய்யப் போகிறேன். இதுதான் எனது புதிய கண்டுபிடிப்பு. மரத்தின் வெளி மரப்பட்டையை இந்த கத்தியால் அகற்றுங்கள். அதன் பிறகு, அடுத்த தோலையும் அகற்றுங்கள், பால் மெல்ல சொட்ட ஆரம்பிக்கும். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் இருக்கும் ஒவ்வொரு மர டிசு அடுக்குகளையும் இந்த கத்தியால் வெட்டி எடுங்கள். தோளைக் கிழிக்க கிழிக்க மரம் உங்கள் வசப்படும், மரம் அந்த புண்ணுக்கு அடிபணியும்.”

இதைக் கேட்டுக்கொண்ருந்த அம்மா தாத்தாவிடம் கேட்டாரம் “மரத்துக்கு புண் இருந்தா ரத்தம் வருமா அப்பா?”

“வரும் தேவி, சமயத்துல ரத்தம் வெள்ளையா இருக்கலாம்”

“வெள்ளையாவா? லங்காவி மாசுரி தேவிய போலவா?”

அப்பா பதில் சொல்லவில்லை. அவரின் நெறித்த புருவங்கள் மட்டும் ரிட்லியைப் பார்த்தபடி இருந்தது. ரிட்லி இன்னும் பேசிக்கொண்டிருந்தார்.

“ஒரே இடத்தில் மூன்று முறை மர திசுகளை அகற்றியபின், சீரான பால் சொட்டி முடியும். முடிந்தபின், அந்த இடத்துக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இது பசுவிடமிருந்து பால் கறப்பது போல்தான். பால் கறந்தபின் பசுவுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் கரப்போமல்லவா அப்படிதான். ஓய்வு சீரான பால் சேகரிப்புக்கு வழி கொடுக்கும்.”

தேவி மீண்டும் கேட்டாள், “அப்பா பசுமாடு எனக்கு பால் கொடுக்குது அப்டினா, அது கோமாதா… ஒரு சாமினா, அப்ப கெத்தா மரமும் பால் கொடுக்குது அதுவும் நம்ம சாமியா?”

தாத்தா இதற்கும் பதில் சொல்லவில்லை.

ரிட்லி சென்றபின் தாத்தாவின் கால்பந்து நண்பர் வந்தார்.

“மணியா, டேய் மணியா”

தாத்தா கவனிக்கவில்லை.

“டேய் பண்டி மணியா!”

தாத்தா திரும்பி, யாரென பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மர நிழலில் நின்றார். வந்தவர் தேவியின் கண்ணத்தை ஆள்காட்டி விரலால் தட்டிவிட்டு பேசத்தொடங்கினார்.

“என்னடா, இவர்தான் அந்த ரிட்லி துரையா? புதிய ரூல்ஸ்லாம் போட்டிருக்கார் போலயே, என்ன பன்றதா இருக்க?”

தாத்தா பதிலளித்தார் “நாம என்னா பன்றது. சொல்ற படி செஞ்சு பிள்ளைங்க வளக்கறத பாப்போம்.”

“சரிதான். ஆமா, ஏன் துரை ஒரு கைய மட்டும் எப்போதும் பாக்கெட்ல வெச்சிருக்காராம் ?”

“ஹ்ம்ம், நீயும் நானும் நல்லா இருக்கனும்னு கனி உருட்டிட்டு இருக்காரு. அவருக்கு முக்கியமான ஏதோ ஒன்னு வெச்சிருக்கார் போல.”

“டேய். சரியாதான் சொல்லிருக்காங்கல? பைத்தியக்கார ரிட்லினு”

“யார் பைத்தியம்? இந்த உடற்கட்டையும், இந்த மரப்பட்டையும் துரை கட்டவிரலுக்கு அடியில தான் இருக்கு”

“என்னடா திடிர்னு புலவர் மாதிரிலாம் பேசுற… ஆனா பாரு நம்மளும் அந்நியம், இந்த மரமும் இந்த பூமிக்கு அந்நியம்”

தேவியின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்த தாத்தா “யார் அந்நியம்? எது அந்நியம்? இந்த மரமாகட்டும் நானாகட்டும் இந்த மலாயாவுக்குத்தானே உழைச்சது? எப்படி நான் அந்நியன்னு சொல்லுவாங்க, என் பிள்ளைங்க இங்கதான் படிப்பாங்க, ஆளாவாங்க. வேர்வையும் ரத்தமும் இந்த மண்ணுக்குத் தானே கொடுத்துருக்கேன். அப்ப இதுதான் என் நாடு. உனக்கு வேற மாதிரி ஏதும் நினைப்பு இருந்தா, இப்பவே கப்பலேறி நாகப்பட்டினம் கிளம்பிரு.”

“டேய், நா சும்ம…”

தாத்தா அதற்குப் பின் அங்கு நிற்கவில்லை என அம்மா கூறினார்.

அன்றுமுதல் நம்ஹேங் தோட்டத்தில் தாத்தாவின் டிவிசனில் உள்ள முதல் பால் மரத்துக்கு மஞ்சள் பட்டு அணிவிக்கப்பட்டது.

krishnanamaravathy21@gmail.com