(வாசிப்பு) வெயிலின் கூட்டாளிகள்

கிருஷ்ணமூர்த்தி

வெயிலின் கூட்டாளிகள் | கணேஷ் பாபு | சிறுகதைகள் | யாவரும்

கேள்விகளுக்கும் புனைவுகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. கேள்விகளிலிருந்து தொடங்குவதும், கேள்விகளை அளித்துவிட்டு முடிவதுமான இரண்டு சாத்தியப்பாடுகளை புனைவுகள் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து முளைத்தெழும் கேள்விகள் பண்பாட்டை விசாரணை செய்யும் செயலை செய்யத் துவங்குகின்றன. அன்றாடத்தின் சிக்கல்கள், பண்பாட்டு விழுமியங்கள், கடந்தகால கசப்புகள், வரலாற்று சிதிலங்கள் ஆகிய அனைத்தும் புனைவிற்குள் நுழையும்போது கேள்விகளாகப் பரிணமிக்கின்றன. பதில் தேடி தொடங்கும் புனைவுகளுக்கும், பதிலற்று முடியும் புனைவுகளுக்கும் இடையில் ஆகிருதியாக அமைந்ததிருக்கிறது அக்கேள்விகள். அவற்றை சரிவர கையாளப்பெறாத கதைகள் உரையாடல்களாக பரிணமிக்கத் தவறுகின்றன. கணேஷ் பாபுவின் முதல் சிறுகதைத் தொகுப்பான “வெயிலின் கூட்டளிகள்” கேள்விகளின் அடுக்குகளை உரையாடல்களாக மாற்றும் வல்லமையுடன் படைப்பட்டிருக்கின்றன. பதினைந்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அம்றாடத்தின் சலிப்பிலிருந்து மீள விரும்பும் அனைவருக்கும் ஒரு வடிகால் தேவைப்படுகிறது. கற்பனையான உலகம் கலைகளின் எளிய வடிவங்களிலிருந்து கிடைக்கிறது. திரைப்படப் பாடல்கள், இலக்கிய பிரதிகள், இசைக் கோர்வைகள், பயணங்கள் முதலியன அவற்றை பிரதானமாக அளிக்கின்றன. உள்ளொளி தேடி நம்மையறியாமல் ஆட்கொள்ளப்படுகிறோம். அதேநேரம் அன்றாடத்தின் வேகம் எதையும் முழுமையாக அனுபவிக்க இயலாமல் அலைக்கழிப்பில் ஆழ்த்துகிறது. இந்த முரண்பட்ட வாழ்வியல் சிக்கலை கணேஷ் பாபுவின் அனைத்து சிறுகதைகளிலும் காணமுடிகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் வடிகால்களைத் தேடி ஓடுகின்றனர். அவற்றைப் பார்க்கையில் எட்டிவிடலாம் என்று முயல்கின்றனர். அருகில் செல்லச் செல்ல அவை பார்வையிலிருந்து விலகி தூரம் அதிகரிக்கிறது. எட்டாக் கனியாகிறது. கனவைத் தேடி ஓடும் ஓட்டத்திலும் சலிப்புரும் அம்மனிதர்கள் யதார்த்தத்தை நோக்கித் திரும்புகின்றனர்.

அனைத்துக் கதைகளிலும் யதார்த்தத்திற்குத் திரும்பும் அம்சம் தமிழ் சிறுகதை உலகின் தனித்த அம்சமாக கணேஷ்பாபுவின் சிறுகதைகளில் காணமுடிகிறது. யதார்த்த வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல் கற்பனையான விஷயங்கள் நோக்கி நகர வைப்பதும், கற்பனையான விஷயங்களின் மீது ஏற்படும் ஒவ்வாமை யதார்த்தத்தை நோக்கி நகர்த்துவதும் இயல்பாக கதைகளில் வந்திருக்கிறது. “கைத்தடம்” எனும் சிறுகதையில் திருமணத்திற்கு பின் காமம் கொடுக்கும் புதிய அனுபவம் பெண்ணிடம் அச்சத்தை விதைக்கிறது. புரிந்துகொள்ள முடியாத அச்சவுணர்வுடன் போராடுகிறாள். கணவன் அவளுடைய பாதுகாப்பற்ற நினையை உணர்ந்து உதவ விரும்புகிறான். வீட்டில் உரையாடல்கள் குறைகின்றன. இணக்கம் குறைகின்றன. அப்போது இரவு நேரங்களில், படுக்கையறையின் ஜன்னலில் தோன்றும் குழந்தையின் கைத்தடம் மட்டுமே அவளுக்கான ஆசுவாசமாகிறது. அவள் கண்களுக்கு மட்டுமே புலனாகிறது. அவை கொடுக்கும் உளவியல் மாற்றங்களும் கதையில் விவரிக்கப்படுகின்றன. இந்த கைத்தடத்தின் மீது அளவுக்கு அதிகமான கவனத்தை குவிக்கிறாள். கதையின் இறுதியில் கைத்தடம் அவளுடைய அன்றாடத்துடன் கலக்கிறது. சிறப்பு கவனம் மாறும் இடத்தில் கணேஷ் பாபுவின் தனித்த முத்திரையை உணரமுடிகிறது. கற்பனைகள் அன்றாடங்களின் பகுதியாகின்றன. அதன் சிறப்பான அர்த்தங்கள் பொலிவிழந்துவிடுகின்றன.

அனைத்து கதைகளின் இறுதியிலும் படிமமான முடிவை சிறுகதைகள் எய்துகின்றன. “டிராகன் பொம்மை” எனும் சிறுகதை காதல் பிரிவைப் பேசும் ஒன்று. சிறுவயதிலேயே காதல் வயப்படும் இருவர். காதலுக்கு காரணமாக ஒரு டிராகன் பொம்மை அமைகிறது. இளம் பருவத்தில் தமக்குள் இருப்பது காதல் அல்ல என்று உணர்ந்து பெண் பிரிந்துவிடக் கோருகிறாள். நாயகன் காதலின் தடத்தை அசைபோடுவதன் வழியே காதலை உயிர்ப்பித்துவிட முடியும் என்று எண்ணுகிறான். ஆணின் கற்பனையும், பெண்ணின் யதார்த்தவாத அணுகுமுறையும் டிராகன் பொம்மையின் ஊடே உரையாடப்படுகிறது. கதையின் இறுதியில் அப்பொம்மை ஒரு படிமமாக எஞ்சுகிறது.

பெரும்பாலான கதைகள் சிங்கப்பூரின் நிலவியலில் நிகழ்வதாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து பணி நிமித்தமாக அங்கு சென்று வசிப்பவர்களின் மனநிலை நன்றாக பதிவு செய்பப்பட்டிருக்கிறது. புலம் பெயர் வாழ்க்கைக்கும் இவ்வகையான வாழ்க்கைக்கும் இருக்கும் வேறுபாடுகளை கதைகளில் நன்கு உணரமுடிகிறது. இம்மனிதர்களின் உந்துசக்தி ஆசையாக அமைகிறது. ஆசையின் விசையில் ஓடிக்கொண்டே இருப்பவர்களின் இருப்பு அர்த்தமற்றதாகிறது. இருப்பின் மீது எழும் கேள்விகள் பதிலற்று கிடக்கின்றன. பதிலற்று செல்லும் கேள்விகள் தத்துவார்த்த சிக்கலாக உருவெடுக்கின்றன. ‘நாற்பதிற்குள் நுழைதல்’, ‘ஒரு நாள்’, ‘விடுதலை’ ஆகிய கதைகள் எழுப்பும் கேள்விகள் கல்லாய்ச் சமைகின்றன. விடுதலை சிறுகதை பெருந்தொற்று காலத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தந்தையின் இறப்பிற்குச் செல்லமுடியாத துயரம் உரையாடலாக மாற்றம் கொள்கிறது. இறப்பை அணுகும் வழிமுறைகளைப் பேசும் கதைகளாக மாற்றம் கொள்கின்றன. இருப்பின் கேள்விகளுக்கு நிகராக இழப்பின் கேள்விகளும் தொகுப்பில் அர்த்தம் கொள்கின்றன.

‘அந்தரத்தில் தொங்கும் வீடு’ மற்றும் ‘நால்வர்’ ஆகிய கதைகள் மிகச் சிறப்பான கதைகளாக உருப்பெறுகின்றன. ‘அந்தரத்தில் தொங்கும் வீடு’ விக்ரமாதித்யன் மற்றும் வேதாளத்தின் கதையை மீட்டுருவாக்கம் செய்ய முயல்கிறது. காலத்தின் ஓட்டத்தில் கைவிடப்படாமல், சாகாவரம் பெற்றிருக்கும் விக்ரமாதித்தியனின் விடுதலை கேள்விக்குட்படுத்தப்படுகிறது. விடுதலையாக சொல்லப்படும் கடைசி கதை சமகால வாழ்விலிருந்து அமைகிறது. கரப்பான் பூச்சிகளால் அவதியுரும் ஒரு சிங்கப்பூர்வாழ் குடும்பத்தின் கதை. பல்வேறு உள்ளடுக்குகள் கதைக்குள் உண்டாகும்போதும் அவற்றை குழப்பாமல் சிறப்பாக எழுதியிருக்கிறார். வாசிப்பில் விக்ரமாதித்தியன் விடுதலை குறித்த உரையாடலை எழுப்புகிறதெனில், உள்ளடுக்காக சொல்லப்படும் கதை இருப்பைக் குறித்த உரையாடலைப் பேசுகிறது.

கணேஷ்பாபுவின் பரந்துபட்ட வாசிப்பை சிறுகதைகளின் வழியேவும் உணரமுடிகிறது. கதாபாத்திரங்கள் உலக இலக்கியங்களை வாசித்தவர்களாக இருக்கின்றனர். நால்வர் சிறுகதையில் உலக இலக்கியத்தை கூட்டாக வாசிக்கும் நண்பர்களிடையே நிகழும் உரையாடல் கதையாகிறது. வாழ்வின் மீதான கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதைப் புனைவாக்குவது சவாலானது. சிறிது பிசகினாலும் அது கட்டுரைக்கான தொனியை அடைந்துவிடும். அந்தச் சவாலை ‘நால்வர்’ சிறுகதையில் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார்.

கதைசொல்லலில் வசீகரம் உவமைகளால் நிரம்பியிருக்கிறது. கதாபாத்திரத்தின் உணர்வு வெளிப்பாட்டை வெளிப்படுத்தாத இடங்களில் உவமைகள் கைகொடுக்கின்றன. நவீனக் கதைகளில் உவமைகளும் சவாலான ஒன்று. பல நேரங்களில் யாரோ ஒருவரால் ஏற்கனவே சொல்லப்பட்ட உவமைகளாகிவிடுகின்றன. கணேஷ் பாபுவின் சிறுகதைகளில் எண்ணற்ற உவமைகள் வருகின்றன. அவை பலமாகவும், பல இடங்களில் அவையே பலவீனமாகவும் அமைந்திருக்கிறது.

புதிய நிலத்தின் வழியே நவீன கேள்விகளை எழுப்பும் நல்ல படைப்பாக்கம் ‘வெயிலின் கூட்டாளிகள்’.

krishik10@gmail.com