
மில்லத் அஹமது
“பிணியின்மை” என்பது நோய் இல்லாத ஒரு நிலை. “பிணியின்மை செல்வம்” என்பது நோயற்ற வாழ்வே ஒரு மாபெரும் செல்வம் என்பதைக் குறிக்கிறது. திருக்குறளில், திருவள்ளுவர் நாடு என்னும் அதிகாரத்தில் “பிணியின்மை செல்வம்” (குறள் 738) என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். அஃதாவது, இந்த உலகில் செல்வங்கள் பல இருந்தாலும், நோய் இல்லாத உடலே அவற்றுள் தலைசிறந்த செல்வம் என்கிறார். பிற செல்வங்கள் ஒருவரிடம் இருந்தாலும், அவர் நோயால் அவதிப்பட்டால், அந்தச் செல்வங்கள் அவருக்கு எவ்வித மகிழ்ச்சியையும் தராது என்பதை இந்தக் குறள் உணர்த்துகிறது. நோயற்றவர் எதையுமே சாதிக்க முடியும். அவருக்கு எந்தவிதத் தடையும் இல்லை. ஆனால், நோய்வாய்ப்பட்டவர் கோடி கோடியாகச் செல்வம் வைத்திருந்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. அவர் படும் துன்பம் அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்.
சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், நோயற்ற வாழ்வின் பெருமை பல இடங்களில் பேசப்பட்டுள்ளது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள், அரசர்கள் தங்கள் குடிமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆரோக்கியமான குடிமக்களே ஒரு நாட்டின் பலம் என்பதை அக்கால மன்னர்கள் உணர்ந்திருந்தனர். சித்த மருத்துவ இலக்கியங்கள் உடல் நலத்தைப் பேணுவதன் அவசியத்தையும், நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் விரிவாக விளக்குகின்றன.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதனால் நாம் எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும். மேலும் சமூகத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். ஆகவே, நோயற்ற வாழ்வு என்பது வெறும் உடல்நலம் மட்டுமல்ல, அஃது ஒரு முழுமையான, நிறைவான வாழ்வின் அடிப்படை. நாம் நமது உடல் நலத்தைப் பேணுவது, நமக்கு நாமே செய்துகொள்ளும் ஒரு மாபெரும் முதலீடு. இதுவே நிம்மதியான, அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளமாக அமைக்கிறது.
பிணியின்மை செல்வத்தை அடைவதற்கான வழிகள்:
நம் முன்னோர்கள் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று வாழ்ந்தவர்கள். சத்தான, சரிவிகித உணவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, இயற்கை உணவுகளுக்கும், காய்கறிகள், பழங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சமச்சீர் உணவு முறையை பயன்படுத்த வேண்டும்.
வெள்ளை சர்க்கரையில் (சீனி) அதிகக் கலோரி உள்ளதால் நீரிழிவு நோய் வர வாய்ப்பிருக்கிறது. வெள்ளை அரிசியில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மைதா மாவில் ஊட்டச்சத்து இல்லாதது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உப்பு உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். மேலும் பால் பொருட்கள், அதிகக் கொழுப்புள்ள பால் பொருட்கள், உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம்.
உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். நடைப்பயிற்சி, மெதுவோட்டம், யோகா, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் என உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைத் தேர்வு செய்யலாம். உடற்பயிற்சிகள் தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இஃது உடல் பருமன் மற்றும் அதனால் வரும் நோய்களைத் தடுக்கிறது. சீரான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள உறக்கம் மிக அவசியம். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த, இடையூறில்லாத உறக்கம் அவசியம். தூக்கமின்மை மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது உடலின் உயிரியல் கடிகாரத்தைச் சீராக்கும்.
மன அழுத்தமும், பதட்டமும் பல நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. தியானம், மூச்சுப் பயிற்சி, பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவும். நேர்மறை சிந்தனைகள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
அடிப்படை சுகாதாரப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளைக் கழுவுதல், சுத்தமான ஆடைகளை அணிதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற அடிப்படை சுகாதாரப் பழக்கங்கள் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க உதவும். சில ஆண்டுகளுக்கு முன் வந்த கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் இருந்ததைப்போல எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும்.
நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. நோய்கள் தீவிரமாவதற்கு முன் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை மருத்துவச் சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். ஆண்டிற்கு ஒருமுறையோ, இருமுறையோ மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது எதிர்கால நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.
இந்த வழிமுறைகளை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்வதன் மூலம், நாம் பிணியின்மை என்ற மகத்தான செல்வத்தை அடைந்து, நிறைவான வாழ்வை வாழ முடியும். பிணியின்மை செல்வம் என்பது தனிப்பட்ட ஒருவரின் நலன் மட்டுமல்ல, அஃது ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கும் காரணியாகும். ஆரோக்கியமான குடிமக்களே ஒரு நாட்டின் பலம். வருங்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகச் சிறந்த சொத்து இந்தப் பிணியின்மை செல்வம் தான். உடல் நலத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும்.
நமது உடல் ஓர் அற்புதமான படைப்பு, அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தனித்துவமான, அத்தியாவசியமான பணிகளைச் செய்கிறது. இறைவன் எதையும் வீணாகப் படைப்பதில்லை என்பதற்கு நமது உடலே சிறந்த சான்று. நமது உடலே நமது முதல் மற்றும் மிக முக்கியமான சொத்து. இந்தச் சொத்தைப் பாதுகாப்பதும், போற்றுவதும் நமது கையில்தான் உள்ளது. ஒவ்வொரு நோயும் ஏன் வருகிறது, அதை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது இந்த நோயற்ற வாழ்வை அடைவதற்கான முதல் படியாகும். பெரும்பாலான நோய்கள் திடீரென வருவதில்லை. அவை நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் படிப்படியாக உருவாகின்றன. இப்பகுதியில் நாம் ஒவ்வொரு நோய் பற்றியும், எதனால் வருகிறது? எப்படித் தவிர்க்கலாம்? போன்ற எனக்குத் தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(தொடரும்)
millatmarecar@gmail.com


