(நேர்காணல்) உடுமலைக் கதைகளின் பயணம்

எழுத்தாளர் மஹேஷ்குமார் நேர்காணல்

1. “உடுமலைக்காரன் கதைகள்” சிறுகதைத் தொகுப்பு எழுத உங்களுக்கு என்ன உந்துதல்?

ஒன்று, உடுமலைப்பேட்டை போன்ற ஒரு சிறிய ஊரைப்பற்றி பலருக்கும் தெரியாது. அது ஒரு முக்கியமான, சர்வதேச விளையாட்டுகளோடு தொடர்புடைய ஊர் என்பதை பலரும் அறியவேண்டும் என்பது. இரண்டு, கொங்கு வட்டார வழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கதைகளில் சில வசனங்கள் இருந்தாலும் அந்த பாணியில் தொகுப்பாக ஏதும் இல்லை எனத் தோன்றியது. மூன்று, அவ்வப்போது எழுதி வைத்திருந்த கதைகளை மொத்தமாகப் பார்த்தபோது ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்தால் முதல் இரண்டு ஆசைகளும் நிறைவேறிவிடும் என்று தோன்றியதால் என் முதல் சிறுகதைத் தொகுப்பாக அவற்றையே கொண்டுவந்தேன்.

2. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் — இவற்றில் எது உங்களை அதிகம் கவர்கிறது? ஏன்?

வாசிப்பு என்று வரும்போது அனைத்துமே எனக்கு உவப்பானவைதாம். படைப்பின் உள்ளடக்கமும், படைக்கப்பட்ட விதமும் நம் எண்ணங்களோடு சேர்ந்து இயைந்து ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்குமானால் அதுவே அதிகம் கவரும்.

3. உங்கள் கதைகள் பெரும்பாலும் நினைவுக்குறிப்புகளாகவும் சொல்கதைகளாகவும் அமைந்துள்ளன. இது இயல்பாக வந்ததா?

இயல்பாகவே வந்ததாக இருக்கலாம். அவை பெரும்பாலும் நினைவுக்குறிப்புகளாகவும் சொல்கதைகளாகவும் அமைந்தது ஒரு யதேச்சையான நிகழ்வாகவும் இருக்கலாம். ஆனால் அப்படித்தான் எழுதவேண்டும் என்று முனைந்து எழுதவில்லை. மேலும் பெரும்பாலானோர் தங்கள் ஆரம்பகால படைப்புகளை நினைவுக்குறிப்புகளை விரித்தே எழுதுகின்றனர். அதில்தான் நம்பிக்கையோடும் தயக்கமின்றியும் படைக்கமுடியும் என்று நினைக்கிறேன்.

5. சிங்கப்பூரில் வாழும் தமிழராக, இங்கு உங்கள் எழுத்துப் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்கள்?

சிங்கப்பூரைப் பொறுத்தவரை நான் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கினேன். தி ஸ்டிரெயிட் டைம்ஸ் நாளிதழில் சிங்கை குறித்த அக்கறைகளை அதன் FORUM பகுதியில் தொடர்ந்து பதிவுசெய்து வந்தேன். இன்னமும் எழுதிவருகிறேன். கணினி தொழில்நுட்பம், அறிவியல், கணிதம் குறித்த அறிமுக நூல்களும் இலவசமாக வெளியிட்டேன். முகநூலிலும் தொடர்ந்து எழுதிவருகிறேன். இதனிடையில் 2012இல் ‘தங்கமீன் வாசகர் வட்டம்’ அறிமுகமானது. அதன் தலைவர்  திரு.பாலு மணிமாறன் வெளியிட்ட கவிதை, சிறுகதைத் தொகுப்புகளில் பங்குகொண்டது ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.

அதன் பிறகு 2016 இறுதியிலிருந்து திரு.ஷாநவாஸ், திரு.சிவாநந்தம் நீலகண்டன் போன்றோடுடன் இணைந்து சிராங்கூன் டைம்ஸில் எழுதவும், சில மாதங்களிலேயே ஆசிரியர் குழுவிலும் இணைந்தேன். அன்று முதல் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாத இதழை நடத்துவதில் உள்ள அத்தனை சிரமங்களுக்கு இடையில் நானும் எழுதி, மற்றவர்களையும் எழுத ஊக்கப்படுத்தி வருகிறேன். சிங்கையில் ஒரு தமிழ் மாத இதழை, எந்த சமரசங்களும் இல்லாமல் நடத்தி பலரின் ஒத்துழைப்புடன் 100 இதழ்கள் தாண்டி முன்னேறிச் சென்றுகொண்டிருப்பதில் ஒரு பெருமிதம் இருக்கவே செய்கிறது.

6.  “தி சிராங்கூன் டைம்ஸ்” ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறீர்கள், எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

சிங்கப்பூரில் ஒரு தரமான இலக்கிய மாத இதழை, அதுவும் தமிழில், ஒரு அச்சு இதழாக வெளியிடுவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. முதலாவதாக, இங்குள்ள எழுத்தாளர்கள் அனைவருமே பகுதிநேர எழுத்தாளர்களே. வாழ்வுக்காக வெவ்வேறு பணிகளில் உள்ளவர்கள். நேரம் கிடைக்கும்போது மட்டுமே எழுதுபவர்கள். கிடைக்கும் சிறிது நேரத்தில் கவிதை எழுதுவது கொஞ்சம் எளிது என்பதால் கவிதை படைப்போர் பலர் உள்ளனர். ஆனால், 800 சொற்களிலிருந்து 1500 சொற்கள் நீளமுள்ள ஒரு சிறுகதையோ, கட்டுரையோ படைக்க அதற்கான ஒரு மனநிலை, நேரம் போன்றவை அமைவது அரிது. எனவே மாதந்தோறும் சிறுகதை, கட்டுரைகள் சேகரிப்பது ஒரு பெரிய சவால்.

மேலும், சிராங்கூன் டைம்ஸ் இதழில் சிங்கப்பூரில் உள்ளவர்களின் படைப்புகள் மட்டுமே வரவேண்டும்; இங்குள்ளோருக்கான இலக்கியப் படைப்புகளுக்கான ஒரு தளமாக அமையவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களிலிருந்து படைப்புகள் கோரினால் நிறைய கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும், ஓரிரு விலக்கங்கள் தவிர, பிடிவாதமாக உள்ளூர் படைப்பாளர்களுக்கே முன்னுரிமை என்பதாலும் சில சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

தவிர, வழக்கமாக சிங்கப்பூரில் நிகழும் பல்வேறு மாதாந்திரக் கூடுகைகளில் படைப்பாளர்களில் சிலருக்கு தொகை சிறியதாக இருந்தாலும் ஏதேனும் சில பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சிராங்கூன் டைம்ஸ் இதழைப் பொறுத்தவரை, அது  திரு.முஸ்தஃபா அவர்களின் புரவலத்தால் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கிறது. சந்தாதாரர்களும் சொற்பமே. எனவே படைப்பாளார்களுக்கு ஒரு தளத்தை அளிப்பதை தவிர சன்மானம் என்று எதுவும் வழங்கப்படுவதில்லை.

இதுவரை இருந்த / இப்போது இருக்கிற ஆசிரியர் குழுவுமே முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் ஆனது. எனவே படைப்புகள் சேகரிப்பு, செப்பனிடுதல், தொகுத்தல், வடிவமைப்புக்கு அனுப்புதல், மெய்ப்புப் பார்த்தல் என்று பல்வேறு பணிகளும் ஓரிருவராலேயே செய்யவேண்டியுள்ளது. இவை ஒவ்வொரு மாதமும் சிறிது அயற்சியை அளித்தாலும், இவை எல்லாவற்றையும் தாண்டிய ஏதோ ஒன்று நம்மை இந்தப் பணியுடன் இணைத்துவைத்திருக்கிறது.

7. “தி சிராங்கூன் டைம்ஸ்”  வாசகர்களைச் சென்றடைந்துள்ளதா?

அனைத்து வகையான பரந்துபட்ட வாசகர்களைச் சென்று சேர்ந்துள்ளதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் வருந்தமான பதில். ஆனால், தமிழில் ஆர்வமுள்ள, இலக்கியத்தில் ஆர்வமுள்ள – சிறு வட்டமாக இருந்தாலும் – பல நல்ல வாசகர்களை சேகரித்துள்ளது. சினிமா, அரசியல், பரபரப்பான ருசிகரமான செய்திகள் போன்றவைகளைச் சேர்ப்பதில்லை என்ற அம்சத்தில் உறுதியுடன் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், கணையாழி அரவிந்தன், கவிஞர் இந்திரன் போன்ற மூத்த இலக்கியவாதிகளைச் சென்றடைந்து, அவர்களின் பாராட்டுகளையும் பெற்றது கவனிக்கவேண்டியது. 

8. “தி சிராங்கூன் டைம்ஸ்” சிங்கப்பூர்ப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாசிக்கப்படுகிறதா?

ஒரு சில தமிழாசிரியர்கள், தனிப்பட்டவர்களின் முயற்சியால் மட்டுமே சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வாசிக்கப்படுகிறது. மற்றபடி நூலகங்களில் கிடைப்பதால் அங்கு பரவலாக வாசிக்கப்படுவதாக அறிகிறோம். ஆனாலும், வாசகர்களிடமிருந்து கருத்துகள் வருவது மிக மிகக் குறைவு. அதுவும் நேரில் கேட்டால் மட்டுமே கிடைக்கிறது. மின்னஞ்சல் வழியாகவோ, இணையதளத்திலோ படைப்புகள் குறித்த கருத்துகள் வருவதில்லை. வந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

சென்ற மே மாதம் தேசிய நூலகத்தின் உதவியோடும், எழுத்தாளர் சங்கம் போன்ற மற்ற அமைப்புகளின் ஆதரவோடும் நடந்த ‘சிங்கை தமிழ் புத்தகத் திருவிழா’வில் பல புதிய சந்தாதாரர்களை சேர்க்க முடிந்தது. மேலும் சிலரிடம் இதழ் பற்றிப் பேசவும், படைப்புகளைப் பெறவும் முயற்சிகள் மேற்கொண்டோம். வரும்காலங்களில் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.

9. தமிழில் எழுதும்போது நீங்கள் அடையும் சுதந்திரம், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளை மொழிபெயர்ப்பு  செய்யும்போதுள்ள கட்டுப்பாடுகள் போன்றவை பற்றிச் சொல்ல முடியுமா?

மொழிபெயர்ப்பில் நமக்கு பெறுமொழி மீதான கட்டுப்பாடு மட்டுமே உண்டு. மூலப் படைப்பின் கருத்தையோ, படைப்பாளரின் பார்வையையோ மாற்றவோ, திரிக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது. அப்படிச் செய்ய முற்பட்டால் அது நம் படைப்பாகிவிடுமே தவிர உண்மையான, நேர்மையான மொழிபெயர்ப்பாக ஆகாது. நமது சொந்தப் படைப்புகளில் கட்டுப்பாடுகள் என்பவை நாமாக விதித்துக்கொள்பவை மட்டுமே. அவை கூட படைப்பாளர் தனக்கான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கவோ, அமைந்துவிட்ட ஒரு பிம்பத்தைப் பேணவோ, அல்லது ஊடகம், வாசகர் போன்ற புறக்காரணிகளைக் கருத்தில்கொண்டோ விதித்துக்கொள்பவையாக இருக்கலாம்.

10. மொழிபெயர்ப்பு அனுபவத்தைச் சொல்லுங்கள்?  நூல்  ஆசிரியரோடு உரையாடுவதுண்டா? எழுத்தாளரின் உணர்வுகளை மொழிமாற்றத்தில் தக்கவைக்க முடிகிறதா?

நான் மொழிபெயர்ப்பவை பெரும்பாலும் மறைந்துவிட்ட படைப்பாளர்களின் படைப்புகள். எனவே நூல் ஆசிரியருடன் உரையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. தற்போது சிங்கப்பூர் நிலவியல் குறித்த ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்து முடித்துள்ளேன். அதன் ஆசிரியர் ஜோஹர் பாரு பல்கலையில் பேராசிரியராக இருக்கிறார். அவரிடம் ஒருசில  இடங்கள் குறித்து என மொழிபெயர்ப்பை உறுதிபடுத்திக் கொள்வதற்காக அவ்வப்போது பேசினேன். 

பல சமயங்களில் மூலப் படைப்பை 2,3 முறைகள் வாசித்தபின்னரே படைப்பாளரின் உணர்வு சரியாகப் பிடிபடும். அது மனதில் பலமுறை உருண்டு ஒரு வடிவத்துக்கு வந்த பின் மொழிபெயர்க்கும்போது உணர்வுகளும் தானாக அமர்ந்துவிடும். 

11. வாழ்க்கை அனுபவம் அல்லது வாசிப்பு அனுபவம் கடந்து எழுதுவதில் உள்ள சிக்கல்களைச் சொல்லுங்கள்

இது இரண்டுமே அல்லாத ஒன்றில் முழுக்க முழுக்க ஒரு கற்பனை உலகை சிருஷ்டிக்கும் முயற்சி கொஞ்சம் கடினமான ஒன்று. அதற்குச் செல்ல படிநிலைகளாக சொந்த அனுபவங்களும் மற்ற படைப்புகளை ஆழ்ந்து வாசித்தலும் முக்கியம். அப்படியான படைப்புகள் – கற்பனை என்றாலும் கூட – அதற்கென ஒரு பின்னணி ஆராய்ச்சி, சரியான திட்டமிடல், எழுதுதல், பின்னர் சரியான விதத்தில் தொகுத்தல் என்று மெனக்கெடல் அவசியம். அல்புனைவுப் படைப்புகளுக்கு அது இன்னமும் கூடுதல் அவசியம்.

12. இதுவரை எழுதியதில் எழுத்தாளர் தவிர்த்த வாசக உரையாடல் நடந்திருக்கிறதா ? வாசகர்கள் அணுகியது பற்றிச் சொல்லுங்கள்

பெரிய அளவில் அப்படி முழுக்க ஒரு வாசக உரையாடலாக நடக்கவில்லை. சிறுகதைகள் குறித்து உடுமலையில் ஒரு சிறிய உரையாடல் நடந்தது. முதல் நூலான ‘உடுமலைக்காரன் கதைகள்’ தொகுக்கப்பட்ட விதம் குறித்து சிலருக்கு புரியாமல் இருந்தது. அதே சமயம் மேலும் பலர் அது புதுமையாக இருந்ததாகவும் பாராட்டினர். அந்தத் தொகுப்பில் ஒரு உடுமலைக்காரனாக என் சொந்த அனுபவங்கள் சிறு கட்டுரை வடிவிலும், அந்த வட்டாரம் சார்ந்த நிகழ்வுகளை ஒட்டிய சிறுகதைகளும், உலகின் பல பகுதிகளில் பயணப்பட்ட ஒரு உடுமலைக்காரனின் பார்வையில் வேறு சில சிறுகதைகளும் உள்ளன. அந்த அமைப்பை சரியாகப் புரிந்துகொண்ட சிலருக்கு அது நெருடலாகப் படவில்லை. மற்ற சிலருக்கு அது பிடிபடவில்லை. விளங்கிய பிறகு அந்த நெருடல் இல்லை.

அடுத்த தொகுப்பான ‘ரேடியோ நாயுடு’ நான் வாழ்வில் நிஜத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களை அறிமுகம் செய்ய சிறுகதை வடிவத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். அது பலருக்கும் பிடித்திருந்தது. இதிலும், ஒரு சில மனிதர்களை மற்ற பலருக்கு நேரடி அறிமுகம் உண்டு என்பதால் அவர்களுக்கு அது மனதுக்கு நெருக்கமான தொகுப்பாக அமைந்தது.

13. “உடுமலைக்காரன் கதைகள்” வெளியான பிறகு உடுமலையிலிருந்து என்னென்ன கேள்விகள் வந்தன?

இந்த நூல் உடுமலையில் பரவலாக வாசிக்கப்பட்டது. உடுமலை அருகே ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றுக்கு நிதி திரட்டுவதில் இந்த நூலும் ஒரு பங்காற்றியது. அப்போது அதை வாசித்த பலரும் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி அசைபோட்டனர். அவர்கள் மறந்துபோன பல நிகழ்வுகளை நினைவுறுத்தியது குறித்தும்  அதுபற்றி மேலும் சில கருத்துகளையும் கூறி மகிழ்ந்தனர். மேலும் சிலருக்கு நூலில் உள்ள சில சம்பவங்களுடன் தொடர்பு இருந்தபடியால் அதுகுறித்துப் பேசினர். சில ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வாசித்துக் காண்பித்து, அதில் குறிப்பிட்டுள்ள சில இடங்கள் தற்போது எப்படி உள்ளன என்று விவாதித்துள்ளனர்.

14. இன்றைய  சிங்கப்பூர் இளைய எழுத்தாளர்களுக்குப் பொதுவாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

நான் புதிதாக சொல்வதற்கு எதுவுமில்லை. மூத்த எழுத்தாளர்கள் பலரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வது ஒன்று, கூர்ந்த கவனிப்பு. நம்மைச் சுற்றி நிகழ்பவற்றை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருப்பது. இரண்டு, மொழி மீதாண ஆளுமையை வளர்த்துக்கொள்வது. மூன்று, எழுதுவதை அன்றாடப் பழக்கமாக வைத்துக்கொள்வது.  செயற்கை நுண்ணறிவு இன்று நமது அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மூக்கை நுழைப்பதால், இளையர்கள் அந்தச் சுழலில் சிக்கிவிடாமல், முதலில் தாங்கள் சொந்தமாகவும் சரளமாகவும் எழுதக் கற்றுக்கொண்டுவிட்டு செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை தங்களுக்கு உதவியாக மட்டுமே கையாளலாம். செயலிகளையே நம்பி நம் கற்பனைத் திறனையும் மொழித் திறனையும் அதனிடம் கொடுத்துவிட்டால் நமக்கென சொந்தமான ஒரு அடையாளமோ, பாணியோ இருக்காது. Wall-E என்ற படத்தில் காட்டப்படுவதுபோல மனிதர்கள் தங்கள் கற்பனைத் திறத்தையும், சுயத்தையும் இயந்திரங்களிடம் இழந்து நிற்கும் நிலை வந்தால் அது நன்மைபயக்காது.

நேர்காணல் எடுத்தவர் நீதிப்பாண்டி