(கட்டுரை) சிங்கப்பூர் புத்தக கண்காட்சி

ஜீவ கரிகாலன்

கடந்த சென்னை புத்தகக் காட்சியின்போதே, பதிப்பாளர்கள் சிலர் சிங்கப்பூரில் புத்தகக் காட்சி நடக்கவிருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே ஷார்ஜா புத்தகக் காட்சி ஒருமுறை மட்டும் சென்றிருக்கும் எனக்கு, அந்த அனுபவத்தின்படி, வெளிநாடுகளுக்கு புத்தகங்களை சுமந்து செல்வது முதல்முறை எனில் அது பலவிதமான இடர்களைக் கொண்டிருக்கும் என்கிற அச்சத்தையே தந்தது.

ஆனாலும் சிங்கப்பூர் என்கின்ற ஒரே காரணத்தினால் எத்தனை நெருக்கடியான சூழலிலும் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என நினைத்துக்கொண்டேன். அதற்கு பிரதானமான காரணம் ஏற்கனவே யாவரும் பதிப்பகத்திற்கு சிங்கப்பூரிலிருந்த அறிமுகமும் நற்பெயரும் அதற்கு காரணமான ஆசிரியர்களும் நண்பர்களும்தான். 2023ல் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் திருவிழாவிற்கு கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் சிங்கப்பூர் குறித்தும் இந்தத் துறையில் அதற்கான வணிக வாய்ப்பு குறித்தும் நேர்மறையான நம்பிக்கை இருந்ததும் ஒரு காரணம்.

சென்னை புத்தகக் கண்காட்சியிலேயே, சிங்கப்பூர் செல்வதற்கு திட்டமிட்ட வேறுசில பதிப்பாளர்களும் முதல்முறையே கலந்துகொள்வதில் இருக்கின்ற சிக்கல்களைப் பற்றி பேசியது சிறிது தயக்கத்தை தந்தாலும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஒருங்கிணைக்கின்ற இந்தப் புத்தகக் கண்காட்சி மற்ற அமைப்புகளையும் தன்னோடு இணைத்துக்கொண்டு தீவிரமான ஏற்பாடுகளை செய்துவருவதை அறிந்தேன்.

என்னைப் போலவே உற்சாகமாக சக பதிப்பாளர் நண்பர்களும் இருந்தார்கள். எஸ்.ஜி 60 என சிங்கப்பூர் முழுக்கவே கோலாகலமாக தங்களது அறுபதாம் ஆண்டினைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். தவிர ஏப்ரல் மாதத்தில்தான் தமிழ் மாத திருவிழா கொண்டாடி முடித்திருந்தார்கள்.

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு ஆண்டியப்பனுடன் நேரடியான ஒரு கலந்துரையாடலை சக பதிப்பாளர்களுடன் திரு வேடிப்பன் அவர்கள் ஒருங்கிணைத்தார். புத்தகங்களைக் கொண்டு செல்வது விசா உள்ளிட்ட சிக்கல்களை அவரிடம் எடுத்துவைத்தோம். Whatsapp புலனத்தில் இதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டது. அவ்வப்போது சந்தேகங்களைக் கேட்டு அறிந்துகொண்டோம். சங்கத்தின் உறுப்பினர்கள் பல்வேறு வகையில் எங்களுக்கு உதவி வந்தார்கள் அவர்களது வழிகாட்டுதலின்படி, புத்தகங்களை அனுப்பிவைத்து நாங்களும் சுமந்துகொண்டு வந்துசேர்ந்தோம்.

தேசிய நூலகத்தின் வாயிலில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட அரங்குகளில் அவரவருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. கண்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, இலக்கிய உரையாடல்களை கழகம் ஒருங்கிணைத்திருந்தது. இந்தியாவிலிருந்து பதிப்பாளர்களாக – யாவரும் பதிப்பகத்துடன் டிஸ்கவரி புக் பேலஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் எதிர் வெளியீடு ஆகியோர் கலந்துகொண்டனர். மலேசியாவிலிருந்தும் சில பதிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.

முதலாவது ஆண்டு இந்தப் புத்தகக் காட்சி வெற்றி பெற்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சாத்தியமாகும் என்பதை உணர்ந்த அநேக சிங்கப்பூர் தமிழர்களும் எந்த பாரபட்சமுமின்றி இந்த மூன்று நாட்கள் திருவிழாவில் கலந்துகொண்டது இந்தத் திருவிழாவின் மாபெரும் வெற்றிக்கான அடிப்படைக் காரணம். வணிக ரீதியில் எந்தப் பதிப்பாளரும் நஷ்டமடையவில்லை என்கின்ற ஆறுதலைக் காட்டிலும் ஓரளவுக்கு லாபத்தோடு திரும்புகிறோம் என்கின்ற சந்தோஷம் கிடைத்தது முற்றிலும் எதிர்பாராதது. அதற்காக ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு பக்கம் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைக்க, மற்றொரு புறம் வெவ்வேறு வாசகர்களும் எழுத்தாளர்களும் தன்னார்வலர்களாக ஏதோ ஒருவகையில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கின்ற எங்களை உற்சாகப்படுத்தியிருந்தார்கள்.

தேசிய நூலக வாரியம் – சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஒருங்கிணைத்த இந்நிகழ்விற்கு இடம் தந்ததோடு மட்டுமல்லாமல், வருகை தந்த எல்லோரையும் வெகுவாக உபசரித்தார்கள். நூலகத்தின் அதிகாரிகள் கண்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களும் அவ்வப்போது வந்து எங்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று கேட்டறிந்தும் உதவிகள் செய்தபடியும் இருந்தார்கள். கண்காட்சியையொட்டி நடைபெற்ற சில இலக்கிய நிகழ்வுகள் தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் நடைபெற்றன. ஒரு பதிப்பாளனாக, ஓர் எழுத்தாளனாக, ஒரு வாசகனாக தேசிய நூலகத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது என்பது இந்தத் துறையில் ஏதோ ஒரு சாதனையை செய்தது போன்ற நிறைவைத் தந்தது.

நண்பன் பாண்டி, விமான நிலையம் வந்ததிலிருந்து சென்னைக்கு திரும்பும் வரை எங்களுடனேயே இருந்தது ஒருவகையில் அந்நிய நிலம் என்கிற உணர்வே இல்லாத அளவிற்கு இருந்தது. அது போலவே வேறுசில நண்பர்களும் எங்களை வெகுவாக உபசரித்தனர்.

இதுபோன்ற வெளிநாட்டுக் கண்காட்சிகளுக்காகத் தமிழ் பதிப்பாளர்களாக நாங்கள் ஒன்றாகப் பயணிப்பதும் அது வெற்றிகரமாக அமையும்போதும் வேறு சில நல்ல தொடக்கங்களுக்கும் அது அடிகோலும். அப்படியாக சிங்கப்பூரில் கலந்துகொண்ட பதிப்பகங்கள் ஒருங்கிணைந்து சில முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம். அது வெற்றிகரமாக நடந்தால் அதற்கு முழுமுதற் காரணம் இந்தப் பயணமும் இந்தப் பயணத்துக்கு காரணமாகவும் இந்தப் பயணத்திற்கு உறுதுணையாகவும் இருந்த நண்பர்களும்தான்.

எனது தனிப்பட்ட கருத்தாக, தமிழ் மொழியில் நவீன இலக்கியப் படைப்பில், ஆய்வில், வணிகத்தில் செய்ய வேண்டியிருப்பது நிறையவே இருக்கிறது. ஏனைய துறைகளைப் போல உலக அளவிலான படைப்புகளாலும், சிங்கப்பூரில் இலக்கியத்தின் முகமாகவும் தமிழ் படைப்புகளை கொண்டு செல்வதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு இது போல ஒரு சந்தையை உருவாக்கும் முயற்சி அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும். Humankind: Humankind a hopeful history (Rutger Bregman) என்கிற நூலில் நம்பிக்கையூட்டும் மனித குலத்தின் வரலாற்றை நூலாசிரியர் பேசியிருப்பார். மனித குலத்தின் மிகப்பெரிய கேடுகளாகக் கருதப்படும் தடங்கள் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் இருக்கின்றது எனில், மனித குலச் சாதனைகளின் தடங்களில் சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகம் அதில் ஒன்று. அப்பேர்ப்பட்ட வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பூர் புத்தகத் திருவிழா தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறும் என்று நம்புகிறேன். நடத்திக் காட்டியவர்களுக்கு நன்றியும்! வாழ்த்துகளும்!