(கட்டுரை) அகக்கிளர்ச்சி தந்தது மொழி

0
1462

கவிஞர் மகுடேசுவரன்

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டில் சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பு முன்னின்று நடத்திய தமிழ்மொழித் திங்கள் நிறைவுநாள் விழாவிற்கு நான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். அவ்வமயம் சிங்கப்பூரை நேரில் கண்டு உலாவவும், சிங்கப்பூர் மக்களைக் கண்டு அளவளாவவும் முடிந்தது. சிங்கப்பூர்வாழ் தமிழ்மக்களின் நெஞ்சக்கிடக்கை பலவற்றையும் அவ்வமயம் உணர்ந்தேன். சிங்கப்பூர் நாட்டின் நான்மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ்நலத்திற்காகச் சிங்கப்பூர் அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் செய்துவருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழித் திங்கள் விழாவும் அவற்றில் முதன்மையானது. என் வருகையானது சிங்கப்பூர் அரசினர் சார்பான நிகழ்வொன்றில் அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

அந்தப் பயணத்தில் நான் முதன்மையாகக் கண்டு பேசி மகிழ்ந்தது கவிமாலை அமைப்பினரோடுதான். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, புதுமைத்தேனீ அன்பழகனார் உள்ளிட்டோர் சிங்கப்பூரை நான் விளங்கிக்கொள்வதற்கான பல செய்திகளைச் சொன்னார்கல். கவிமாலை அமைப்பின் தலைவி கவிஞர் இன்பாவும் சிங்கப்பூரில் நிலவும் கவிதை, இலக்கியச் சூழல்கள் பற்றிக் கூறினார். சிங்கப்பூர் வருவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் செய்தவர் அவர்தான்.

நான் கலந்துகொள்ளவிருக்கும் விழாநாளுக்குச் சில நாள்கள் முன்னதாகவே சிங்கப்பூரை வந்தடைந்திருந்தேன். அவ்வமயம் எனது நகருலாவைத் தமிழ்மக்கள் மிகுதியாய் வாழும் ’தேக்காவைச்’ சுற்றியுள்ள பகுதிகளில்தான் மேற்கொண்டேன். சிங்கப்பூரில் வந்திறங்கிய முதல்நொடி முதல் எனக்கு அந்நாட்டின் பெருங்கட்டுமானங்கள்தாம் கண்விரிய வைத்தன. சாங்கி வானூர்தி நிலையமே என்னைப் பொறுத்தவரையில் மிகச்சிறந்த கட்டுமான வியப்புத்தான். அதன் நிலவறைப் பகுதிகளில அமைக்கப்பட்டிருந்த மகிழுந்து நிறுத்தகத்தின் ஒரு தளத்திற்கு ஒரு கண்மாய்ப் பரப்பினைத்தானே உவமை கூறமுடியும்? தம் மகிழுந்தினை நிறுத்திய பகுதியை மீண்டும் நினைவுகூர்ந்துகொள்வதற்காக அப்பகுதியைத் தம் கைப்பேசியில் படமெடுத்து வைத்திருந்தார் அன்பழகனார். பல சுழல்களைச் சுற்றிய பிறகு வானூர்தியகத்தினை விடுத்து நகர்ந்து கடற்கரைச் சாலையை ஏகியபோதுதான் சிங்கப்பூரின் வெளிக்காற்றினை மூச்சிழுத்தேன்.

வழியெங்கும் பன்னிற விளக்குகள் அணிவகுத்து ஒளிர சிங்கையின் கடற்கரைச் சாலையைத் தாண்டி இராபிள்சுப் பகுதியைத் தொட்டபோது வான்முட்டும் வன்மைமிகு கட்டடங்கள் வரவேற்றன. தொடக்கத்திலேயே இருட்பேரழகில் தன்னைக் காட்டிக்கொண்ட சிங்கப்பூர் பகலில் காட்டப்போகும் பகட்டழகுக்குக் கட்டியமா கூறவேண்டும் ? அதுதான் நடந்தது. அன்பழகனாரின் இல்லப் பகுதியில் அவருடைய உயரடுக்குவரை ஏறிநின்று ஒட்டுமொத்த வான்முரசு கொட்டும் கைகளில்போல் உயர்ந்து வானுரசும் கட்டடங்களைக் கண்டேன்.

மறுநாள் சிங்கப்பூரின் இராபிள்சுப் பகுதியில் பெருங்கட்டடங்களிடை உலவியபோது சாரல்மழை தூவத் தொடங்கியது. நடுக்கடல் நீர்சூழி(தீவு) நாடான சிங்கப்பூரில் திங்கள்தோறும் மும்மாரியென்ன, திங்கள்முதல் ஞாயிறு வரையிலான ஏழ்நாளுக்கொருமுறை மும்மாரி என்பதுதான் பொருந்தும். அவ்விளமழையில் நனைந்தபடி சிங்கையைப் பற்றியொரு சிறுகவிதை எழுதினேன்.

“வானம் அளப்பதைத்

தாமும் அளந்திடும்

வன்பெரு மாடங்களே!

தூய தெருக்களில்

தொடர்ந்து ஊர்கிற

துகுதுகு வண்டிகளே!

நாளும் ஒருமுறை

நான்வருவேன் என

நனைமழை நீர்வளமே!

நாவில் நற்றமிழ்

நற்பெருக்காகிய

நாடிது வாழியவே! ”

பகலில் தேக்காப் பகுதியில் ஊர்ந்தேன் இல்லையா, அங்கே தோன்றிய எண்ணங்களை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். சிங்கப்பூர் என்பது வெளிநாடு என்றே எனக்குத் தோன்றவில்லை. நன்கு முன்னேறிய கோயம்புத்தூர் எப்படி இருக்கக்கூடுமோ அப்படித்தான் எனக்குத் தென்பட்டது. நாமறியாத முகத்தவர்கள், நாமறியாத மொழியர்கள், நாமறியாத கடைகண்ணிகள் என்று இருக்கும்போதுதானே வெளிநாட்டு வேற்றுமை உணர்ச்சி தோன்றும்? இங்கே அப்படி எதனையுமே நான் உணரவில்லையே. சிராங்கூன் தெருவில் நடைபயின்றபோது இருமருங்கும் திறந்திருந்த கடைகள் தமிழ்நாட்டு நகரங்களை நினைவுபடுத்தாமல் போகுமா? ஓரிடத்தில் நீங்கள் வேற்றொருவராக உணர்வதற்கு அங்கே வேற்றுமொழி பயிலவேண்டும். எங்கே பார்த்தாலும் தமிழ் அறிவிப்புகள்! சாலையில் உள்ள இடர்ப்பாட்டினை அறிவிக்கும் இடத்தில்கூட நான்மொழிகளில் ஒன்றாகத் தமிழாலும் அறிவிக்கப்பட்டிருந்தது, Danger – அபாயம் என. அபாயம் தமிழில்லைதான் என்றாலும் அவ்வெழுத்துகள் தமிழாயிற்றே.

ஓர் இடமானது அங்கே உலவும் தன்மொழியால்தானே தாய்மடி உணர்வைத் தருகிறது? அந்த மொழி பண்மொழியாகவும் அவ்விடத்தில் விளங்கினால் எப்படி இருக்கும்? எனக்குத் ‘தேக்கா’வில் உலவியபோது நேர்ந்தது அதுதான். தொலைவிலுள்ள ஒரு கடையிலிருந்து தமிழ்த்திரைப்பாடல் ஒன்று ஒலித்தது. ‘சங்கீத வானில் சந்தோசம் பாடும் சிங்காரப் பூங்குயிலே…’ என்று அந்தப் பாடல் மிதந்து வந்து காதில் பட்டது. அவ்விடத்தில் நான் என்னை மறந்து திகைத்துப் போனேன், ஐயா! நம்மூரிலும் இப்படித்தானே கண்ணால் உடனே அடையாளங்காண முடியாத, அருகென்றும் சொல்ல முடியாத, தொலைவு என்றும் சொல்ல முடியாத ஓரிடத்திலிருந்து திரைப்பாடல் மிதந்து வரும்! இங்கேயும் அப்படித்தானே வருகிறது! இந்தச் சிங்கப்பூர் நம்மூர்போல் அல்லாது வேறு என்ன? நம்மூரேதான். இந்த அகக்கிளர்ச்சி உற்றதும் சிங்கப்பூர் என்னைத் தாய்போல் ஏந்திக்கொண்டது. வெளிநாட்டில் இருக்கிறேன் என்ற நினைவு பிறகு எப்போதும் சிறுதுரும்பளவும் ஏற்படவில்லை. மொழிதான் இத்தகு உணர்ச்சியைப் பெற்றதற்குக் காரணம். வேறு என்னவாக இருக்க முடியும்?

(இன்னும் சொல்வேன்)