(தொடர்) ஆதிமனிதனின் வேற்றுகிரக குறிப்புகள்

0
1396

வ.கீரா

சில தருணங்களை எந்த வார்த்தையில் விளக்கினால் ஒரு மனிதனோடு உரையாட முடியும் என என் மனம் எண்ணிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் நேர்கிற ஒவ்வொரு துளி புள்ளிகளிலும் புதிய ஒன்றாக அல்லது எல்லோருக்கும் அமைந்த ஒன்றாகவே வாய்க்கிற தருணங்களை ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்த முயல்கிறான். அதில் மௌனம் என்கிற பேரிரைச்சல் கூட அவனிடமிருந்து வெளிப்படும். அப்படித்தான் எனக்கு சிங்கப்பூர் போவது குறித்த மௌனம் என்னை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது. எனது மகள் சினேகா அங்கே வசிக்கிறார்.அந்த நிலத்தின் புதிய மலர் போல பிரகாசமாக அவள் வாழ்வதை எப்பொழுதேனும் சென்னை வரும்பொழுது அவளின் முகத்தில் உண்டாகும் பிசிறில்லா புன்னகையில் கண்டு உறைவேன்.

முன்னெப்போதோ வழிந்த காதலின் நினைவாக ஊடாடும் மன அலைகளை கடந்து ஒரு நட்பின் நீழுகையில் கிடைக்கிற அன்பால் அவர்கள் உலகின் நவீன பாம்பின் வாயிலிருந்து துப்பிய மாணிக்கம் போல பிரகாசிக்கும் சிங்கையை சந்திக்க மனம் அன்றுதான் துள்ளியது. அதற்கான கரணியம் பெரிதாக ஒன்றுமில்லை. கடவுச்சீட்டை எடுக்கவேண்டும் என்றால் முதலில் கியுபாவில் சேகுவேரா அலைந்து திரிந்த வயல்களையும் காஸ்ட்ரோவும் சேவும் உருவாக்கிய மானுட சமவியல் தேசத்தைக் காணவேண்டும் என்கிற கனா வெகுகாலம் நீடித்தது. இரண்டாவது தேசமாக தமிழர்களுக்கென போராடி உருவாகிக் கொண்டிருக்கும் ஈழம் என்கிற தேசம். இந்த இரண்டு தேசங்களின் கனவுகளில் இருந்து தொக்கி வேறொன்றாக வாய்த்தது சிங்கப்பூர்.

’புலிக்குட்டிகளை பிடிக்க அதன் குகைக்குள் நுழைய வேண்டும்’ என சீனர்கள் சொல்வது போலத்தான் சிங்கையை உணர சிங்கைக்குள் காலடியை நட எண்ணினேன். நீண்ட கனவிற்கு முன்பு ஒரு குட்டித் தூக்கமாவது வேண்டும் என்கிற மனஅலைவை புரிந்து கொள்ளும் காலத்தில் தான் ’குமரி ‘. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளை தனக்குள் செறித்துக் கொண்டு சென்னை புத்தக கண்காட்சியின் கடைசி வாரத்தில் வெளியானாள்.

எனது படைப்பில் வரையப்படும் எல்லா சித்திரக் குழந்தைகளுக்கும் என்  ஊறும் மார்பிலிருந்து வற்றாத பால் தந்து பழகியவன் என்றாலும் குமரியை நான் சுமக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே இவள் எனக்கானவள் அல்ல. சிறு இலக்கியக் கூட்டத்தின் சிறு தொகுதிக்குள் சிக்குண்டு இலக்கிய அல்லலுறும் அவதிக்கானவள் அல்ல. உலகின் எம்மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்களின் குழந்தையாகவும் அவள் மிளிர வேண்டும் என்கிற தணியாத ஏக்கத்தை அவளுக்குள் உரப்படித்தினேன்.

அதனால் சிங்கையில் வாழ்ந்த மகள் திருமணமும் ‘குமரி’ வெளியான நேரமும் ஒன்றாக இருந்ததால் குமரியோடு சிங்கை செல்வதென கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தேன். 25 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் ஊடாடி எனக்கான தளத்தை சரியான வகையில் பதிவு செய்திருந்தாலும் முகநூல் வழியே நண்பர்கள் சிங்கையில் இருப்பது தெரிந்தாலும் இலக்கியம் சார்ந்து அழைக்கப் படாமலே சிங்கைக்கு பயணம் செய்யும் அனுபவம் அலாதியாகத்தான் இருந்தது.

சிங்கப்பூரில் சிலகாலம் பணியாற்றி சொந்த ஊரில் கவிதை நெய்கிற கவிஞர் வேள்பாரி அவர்கள் தமிழ்நாடு அரசு சென்னையில் அயலகத் தமிழர் மாநாடு நடைபெறுகிறது. அதில் முனைவர் இரத்தினவெங்கடேசன் கலந்து கொள்ள வந்திருக்கிறார். வாருங்கள் சந்திப்போம் என்றார். சிங்கைக்கும் குமரிக்குமான ஊடாடல் இங்குதான் தொடங்கியது. சென்னையின் நட்சத்திர விடுதியில் அந்த அழகான சந்திப்பும் அன்பூறும் பிணைப்புமாக சிங்கையும் சென்னையும் கைகோர்த்தது.

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் லாரிகளிலும் பேருந்துகளிலும் தானிகளிலும் இரு சக்கர வாகனத்திலும் மகிழுந்துகளிலும் விமானத்திலும் நடையாகவும் பயணித்தவன். என் வாழ்நாளில் பெரும்பகுதி ஒரே இடத்தில் இல்லை. ஒரு யாசகனை போல, ஒரு மனப்  பிறழ்வாளன் போல ஒரு எறும்பைப் போல மழைக்கால ஈரத்தில் முளைக்கும் பவளப் பூச்சியைப் போல, நெடும்பனையில் தலைகீழாக ஊஞ்சலாடும் தூக்கணாங் குருவி போல, வான் தொடத் தோற்கும் போட்டியில் வெல்ல முயலும் காகம் போல, கிழித்தோடும் நீரில் எதிர்த்து முன்னேற துடிக்கும் மீனைப் போல எனக்குள் அடங்கா மனக்கிறுக்கை அடக்கத் துடிக்க விட்டு விடுதலையாக தாண்டாத நதியில்லை. தனித்துறங்கும் புல்லின் மீதான பனியைப்போல உலகின் வெப்பலுக்காக கிடந்த அனுபவங்கள் ஏராளம். பழங்குடிகள் தொடங்கி ஆதி உயிர்களை வரைத்தோற்றம் படிக்க கல்பதுக்கைகளை தேடியோடும் பசியை சொற்களில் கடத்த முடிவதில்லை. அப்படியாடிய நாட்களை விட இந்த பயணம் அதியற்புதமான ஒன்றாகவிருந்தது. வெளிநாட்டு வேலைக்காக சொந்தங்களைப் பிரிந்து செல்லும் பல முகங்களில் தென்பட்ட வாழ்வின் நிம்மதியைக் களையும் கண்ணீர் வழிந்தோட அனுப்பி வைக்கும் இளமகள்களின் களையும் தருசித்த வண்ணம் என்னை அனுப்ப குடும்பத்தோடு வந்திருந்த இணையர் தனலட்சுமி, மகன் வைகறையாழன், மகள் மதிவதனி, கடைக்குட்டி மாறனையும் பிரிந்து போகும் கையாட்டல்களுக்கு இடையே அவ்வப்பொழுது கவிதாவின் குறுஞ்செய்தியும் உள்வாங்கியபடி சென்னை சர்வதேச விமான பரிசோதனை இடத்திற்கு வந்தடைந்தேன்.

இணையரும் மகளும் எனக்கான உடைகளில் இருந்து பல்விலக்கி வரை கவனமாக எடுத்து அடுக்கி ஒரே பையில் அனுப்பி இருந்தார்கள். புத்தக வாசனை நிரம்பிக் கிடந்த மற்றொறு பெட்டியில் குமரி தவழ்ந்து கிடந்தாள். எல்லாச் சடங்குகளும் முடிந்து விமானத்தின் கண்ணாடி ஓர  இடதுபக்க இருக்கையில் அமர்ந்து இறக்கைகள் நீந்த மேலெழுந்தது விமானம்.

முனைவர் இரத்தின வெங்கடேசனை சந்தித்த சில தினங்களில் கவிமாலை பொறுப்பாளர் புதுமைத்தேனீ அன்பழகன் அய்யா சொன்னதன் பேரில் ‘கவிமாலையில் எங்களது கவியரங்க நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கிறோம். உங்களது ’குமரி’யை அங்கே அறிமுகப்படுத்தவும் இருக்கிறோம்’ என கவிஞர் இன்பா அவர்கள் முகநூல் செய்திப் பெட்டியில் தகவலைத் தந்தார். அதற்கடுத்துதான் சிங்கப்பூர் பயணம் குறித்து முகநூலில் எழுதி இருந்தேன்.உடனடியாக வரவேற்ற இருவர் சரவணன் சீனிவாசன் மற்றும் பாண்டித்துறை நீதிப்பாண்டி.

நீண்ட தூரப் பயணத்தில் விழிப்பும் இல்லாமல் தூக்கமும் இல்லாமல் மிதந்தபடி கிடந்த என்னை விமானப் பணிப்பெண்ணின் குயிலோசை நினைவுத் தடத்திற்கு திருப்பியது. ஓடுபாதைக்குள் விமானம் ஓடியதை வீடவும் தகித்துக் கிடந்த சிங்கையின் கனவு முன்னில் ஓடியது. இந்திய விமான நிலையங்கள் எப்போதும் ஏற்படுத்துகிற சங்கடங்கள் ஏதுமின்றி திராட்சை பழரசத்தில் துள்ளி விழுந்த மீனைப் போல சாங்கி விமான நிலையத்தின் பளபளப்பில் மிதந்து வந்தேன்.

நாளைய திருமணத்திற்கு இன்றைய பரபரப்பில் இருக்கும் கவிதாவை அழைத்தேன். வந்து இறங்கியதும் அழைத்து செல்ல யாரை அனுப்பி இருப்பார் என்று தெரியவில்லை. அழைத்தும் குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் கிடைக்காத சில துளி நேரத்தில் சிறுவயது பருவத்தில் பறந்தமரும் தட்டானை அதன் வாலை பிடித்தவுடன் துடித்த நினைவுகள் ஏனோ வந்து போனது.

விமான நிலைய அழகும் ஒழுங்கும் பிரமாண்டமும் புதிதாக பறித்த ஆப்பிள் போல சிவக்கும் சீனர்களும் மலாய்களும் சுற்றுலா வந்த ஐரோப்பியர்களும் விதவிதமான வெளுத்த மனித முகங்களுக்கு இடையே டெர்மினலில் அமெரிக்காவின் உள்ளே நுழைய முடியாமல் தவிக்கும் டாம் ஹாங்க்சைப் போல ஒரு கணம் நினைத்தேன். பொருள் தள்ளும் வண்டிகளை எங்கே கொண்டு போய் நிறுத்துவார்கள். அப்படியே நிறுத்தினாலும் நிறுத்தியதும் டாலர் காசுகள் விழ வேண்டுமே என மனம் ஏனோ படுத்தியது. ஆனால் இந்த துளி நினைவுகளின் இடையேதான் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்த எம் மொழி தமிழ் என்னை திக்குமுக்காட வைத்தது. அழைப்பு வரும் வரை காத்திருக்க விமான நிலைய அலங்காரமே போதுமானதாக இருந்தது. கவிதா அழைத்து அவரது தோழியை அனுப்பி இருப்பதாகச் சொன்னதும் அதுவரை சுற்றிப் பார்க்கலாம் என நினைத்தேன். அது தவறு. சாங்கி விமான நிலையத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கென இரண்டு முழுமையான நாட்கள் வேண்டும் என புரிந்தது.

மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் கிடைக்காத பேரின்ப தடாகம் பற்றி கதைகளில்தான் கேட்டேன். கற்பனைகளில்தான் உணர்ந்தேன். ஆனால் அதை நேரடியாக கண்டது சாங்கியில்தான். அங்கிருக்கிற எல்லோரும் துரித கதியில் தான் இயங்கினார்கள். புதிய மனிதனின் புதிய உலகத்தின் திறப்பில் மயங்கி நின்றதை ஒருவரும் பார்க்கவில்லை. விமான நிலையத்திற்குள் நுழையும் உள்வாயிலில் ஆதிமரஞ்செடிகொடிகளுக்கு இடையில் எனது குமரி நாவலில் வரும் குமரிப் பேரருவி கொட்டிக் கொண்டிருந்தது. அதன் சன்னமான இரைச்சல். தொதும் தொதும் என அருகி கொட்டும் ஓசைக்கு ஏற்றபடி யாரோ சிலர் முரசறைந்து கொண்டிருந்தார்கள். உள்ளே போகவும் வெளியே போகவும் காத்திருந்த பலரின் கண்களிலும் அருவியியின் தெறித்த நீர் விழுந்து கொண்டிருந்தது. விமான தளத்தின் எல்லா இடங்களிலும் பெயர் தெரியாத செடிகளும் கொடிகளும் பிண்ணிக் கிடந்தன. விக்கித்து நின்று கொண்டிருந்தேன். அவை உண்மையான மரங்கள் செடிகள் அருவிகள் என.

அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தின் உயிர்ப்பான பல்லாயிரம் கோடி டிஜிட்டல் செல்களால் உருவாக்கப்பட்டவை என்பது புரிந்தபொழுது ஒன்று தோன்றியது. சிங்கப்பூர் மனிதர்களும் இப்படித்தான் புதிய உயிரிகளாக இருப்பார்களோ என.

அப்பொழுது கவிதாவின் தோழி கலாவின் அழைப்பு. வெளியில் வாகன நிறுத்துமிடத்தில் காத்திருப்பதாகவும் நீண்ட நேரம் நிற்க முடியாது எனவும் உடனடியாக வெளியே வரும்படியும் அழைக்க, தொலைவில் நின்ற அவர்களை பார்த்து கையசைத்தபடி சிங்கப்பூரின் புதிய காற்றை சுவாசித்துக்கொண்டே எதிர்பட்ட சீனப் பெண்ணை பார்வையால் சிரிப்பை வீசியபடி நடந்தேன். வேற்று உலகின் வாசல் திறந்தது.

(தொடரும்)