
பா.ரேவதி
இந்த கவிதைகள் தனித்துவமான ஆளுமை கொண்ட மூன்று பெண் கவிஞர்களால் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை. அடக்குமுறைக்கு எதிரான புரட்சிக் குரலாகவும், சமூக மதிப்பீடுகளை உடைத்து மரபு மீறலை தங்களின் அடையாளமாக முன்நிறுத்தும் பெண்களின் குரல்களாகவும் ஒலிப்பவை. பெண் மனத்தின் நொய்மையையும். அதன் நுட்பமான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வரிகளினூடே வலுவான எதிர்ப்பையும் தெரிவிப்பவை
.
அன்ன் செக்ஸ்டன், பெரும்பாலும் அகவயமான, சுயஅனுபவங்களை சார்ந்து கவிதைகள் எழுதி வந்தவர். 1967ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதைப் பெற்றவர், தன் வாழ்நாள் முழுவதும் மனப்பிறழ்வால் அவதிப்பட்ட இவர், 1974ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு அப்பொழுது வயது நாற்பத்தி ஐந்து. “அவள் வகை பெண்கள்”( Her Kind) என்கிற இந்த கவிதை சமூக மதிப்பீடுகளில் அடங்காத மூன்று வகை பெண்களைப் பற்றி பேசுகிறது.
ஆட்ரே லோர்டு, கறுப்பினத்தை சேர்ந்த பெண் கவிஞர், சமூக செயல்பாட்டாளார். இவரின் கவிதைகள் வடிவமைப்பின் நேர்த்தியும் உணர்ச்சி பெருக்கும் ஒருங்கே நிறைந்தவை. சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுப்பட்டார்.தன் சமையலறை மேடை(The Kitchen Table) என்ற நூலுக்காக பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர். ஒரு பெண் பேசுகிறாள் (A Woman Speaks) என்ற இந்த கவிதையில் அவர் பெண்ணை ஒரு நீண்ட மரபின் நீட்சியாக, காலமற்றவளாக வாசகர் முன் வைக்கிறார். தன்பால் ஈர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆட்ரே, 1992ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோயால் காலமானார்.
எட்னா தூய வின்சென்ட் மில்லே, மற்ற இரண்டு பெண் கவிஞர்களுக்கு முந்தைய தலைமுறையை சேர்ந்தவர். பெண்ணிய செயல்பாட்டாளர், நாடக ஆசிரியரும் கூட. 1923ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதைப் பெற்றவர். “பெண்ணாய் பிறந்து” என்ற இந்த கவிதை உடல் சார்ந்த இச்சையால் மட்டுமே உறவுக்குள் அடங்க விரும்பாத பெண்ணின் குரலாக ஒலிக்கும் கவிதை, பெண்ணின் உடல் சார்ந்த உரிமையை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பேசும் தன்மையினால் இந்த கவிதை காலமற்ற ஒன்றாக நம் முன் நிற்கிறது.
அவள் வகை பெண்கள்
நான் சன்னதம் கொண்ட யட்சியைப் போல்
இருண்ட காற்றை நடுங்கச் செய்தபடி
இரவில் துணிவுகொண்டு
வீதியில் சென்றிருக்கிறேன்
தீய கனவுகளை காண்பவளாய்
ஒவ்வொரு விளக்காய் கடந்து
தனித்து அலையும் பிச்சியாய்
பன்னிரெண்டு விரல்களுடன் .
நான் எளிய வீடுகளின் மேல் பறந்திருக்கிறேன்
இவ்வகைப் பெண்களை
யாரும் பெண்களாக கருதுவதில்லை
நான் அவளாக இருந்திருக்கிறேன்.
நான் காட்டின் மத்தியில்
வெதுவெதுப்பான குகைகளை
கண்டுபிடித்தேன்.
கலயங்களையும் சிற்பங்களையும்
பேழைகளையும் பெட்டிகளையும்
பட்டுகளையும்
ஏராளமான
பண்டங்களையும் கொண்டு
அவற்றை நிரப்பினேன்.
அவை சீர் குலைந்தால்
சிணுங்கியபடி அடுக்கி வைத்தேன்
சிறு பூத கணங்களுக்கும் புழுக்களுக்கும்
அன்றாடம் இரவில் உணவு சமைத்தேன்.
இவ்வகைப் பெண்களை
யாரும் சரியாக புரிந்து கொள்ளுவதில்லை
நான் அவளாக இருந்திருக்கிறேன்.
ஓட்டுநரே,
நாம் கடந்துச்சென்ற கிராமங்களை நோக்கி
என் நிர்வாண கைகளை அசைத்தபடி
உங்களது தேரில் நான் பயணம் செய்திருக்கிறேன்.
நீங்கள் மூட்டியத் தீ
என் தொடையைப் பொசுக்க
உங்கள் வண்டியின் சக்கரங்கள்
என் எலும்பை முறிக்க
சாவிலிருந்து மீண்டவளாய்.
ஒளிரும் இறுதி பாதையை நான் கண்டடைந்தேன்,
இவ்வகைப் பெண்கள் இறப்பதற்கு அஞ்சுவதில்லை
நான் அவளாக இருந்திருக்கிறேன்.
- அன் செக்ஸ்டன்.
ஒரு பெண் பேசுகிறாள.
சூரியனால் தீண்டப்பட்டு
நிலவால் ஆட்கொள்ளப்பட்டவள் நான்
என் மாயங்கள் இன்னும் எழுதப்படாதவை
எனினும்
கடல் உள் வாங்குகையில்
என் வடிவத்தை விட்டுச் செல்லும்.
நான்
சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை
உதிரத்தால் தொடப்படாத
விடுபடமுடியா அன்பின் சாபத்தைப் போன்றவள் நான்
என் பிழைகளைப் போலவும்
என் கர்வங்களைப் போலவும்
நிரந்தரமானவள் .
காதலை இரக்கமென்றும்
வெறுப்பை வெறும் இகழ்ச்சியென்றும்
நான் புரிந்துகொள்ளுவதில்லை
என்னை
அமைதியற்றக் கடல்
அலையுறும் இடத்தில்
உங்களால் உணரமுடியும் .
நான் யார் என்பதை
என் பிறப்போ என் தெய்வங்களோ
தீர்மானிப்பதில்லை
நான் காலமற்றவள் எனினும்
முழுமையுறாதவள்
இன்னும் நான் நாடி கொண்டேயிருக்கிறேன்
டகோமேயின் மந்திரக்காரிகள்
என்றழைக்கப்பட்ட என் சகோதரிகளை
துக்கித்த தாய்மார்களைப்போல்
அவர்களின் ஆடை சுருள்களுக்குள்
என்னை சுமந்தவர்களை.
நான் நீண்டகாலமாய்
பெண்ணாகத்தான் இருக்கிறேன்
நான் புன்னகைக்கையில்
உங்கள் இதயங்களை பத்திரப்படுத்துங்கள்
என் தொன்மையான வித்தைகளைக் காட்டி
வஞ்சிப்பவள் நான்
நீங்கள் வாக்குறுதியளித்த பரந்த எதிர்காலத்தின் மேல்
மதியத்தின் புது உக்கிரத்தோடு
என் கோபம் வெடிக்கும்
நான் ஒரு பெண் ஆனால்
என் நிறம் வெள்ளை அல்ல.
- ஆட்ரே லூர்து.
பெண்ணாய் பிறந்து..
நான்
ஒரு பெண்ணாகப் பிறந்ததால்
என் இனத்தின் அனைத்து தேவைகளாலும்
நம்பிக்கைகளினாலும் துன்புற்றேன்
உன் அருகாமையினால் உந்தப்பட்டு
உன்னை அழகனென எண்ணி
உன் உடல் எடையின் அழுத்தத்தை
என் மார்பில் உணர கிளர்த்தப்பட்டேன்.
வாழ்வை வளர்க்கும் இந்தத் தீ தான்
எத்தனை வலிமையானது?
என் இதயத்துடிப்பை சுத்திகரித்து
அறிவை மழுங்கடித்து
என்னை மீண்டும் மீண்டும் நிலைகுலையச் செய்து
தன் வசப்படுத்துவதாய்.
ஆனால்
தடுமாறிக் கொண்டேயிருக்கும்
என் மூளைக்கு எதிராய்
முழு வீச்சுடன் பாயும்
என் குருதியின் துரோகத்தினால் மட்டும்
உன்னை காதலோடு நினைவுகூரவோ
என் இகழ்ச்சியை இரக்கமாக்கவோ மாட்டேன்.
இப்போதே
தெளிவாக சொல்லி விடுகிறேன்
நாம் மீண்டும் சந்திக்கையில்
உரையாடுவதற்கு
எனக்கு இந்தப் பித்து மட்டும் போதாது.
- எட்னா, தூய. வின்சென்ட் மில்லே.


